'மா, கொய்யா, சப்போட்டா' போன்ற மரங்களில் ஒட்டு
மர வீரிய செடிகளை உருவாக்குவது போலவே அறிவியலும் மனிதனின் உடற்கூறுகள் சம்பந்தமாக
அபரீத வளர்ச்சி அடைந்துள்ளதற்கு இந்த உண்மை சம்பவம் ஒரு உதாரணம்.
சீனாவில் நடந்தது இது. தொழிற்சாலையில் துண்டான
கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி
டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாணம். அதில் ஷாங்டே என்ற
ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள
தொழிற்சாலையில் வேலை செய்பவர்.
கடந்த நவம்பர் 10ம் தேதி அன்றுதான் அந்த
அசம்பாவிதம் நடந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபத்து நடந்துவிட்டது.
வேலை செய்து கொண்டிருந்த எந்திரத்தில் ஜியாவோ
வெய்யின் வலது கை
சிக்கிக் கொண்டு துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர்.
மணிக்கட்டு வரை துண்டான கையின் விரல் பகுதி
இயந்திரத்துக்குள் விழுந்து விட்டது. அதை எடுத்துக் கொண்டு ஷாங்டேவில் உள்ள
மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஜியாவோ வெய்யைப் பரிசோதித்த
மருத்துவர்கள் அவரது கையை அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒட்ட வைப்பது கடினம்
என்று கைவிரித்து விட்டனர். மேல் சிகிச்சைக்காக மண்டல மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும்படி அறிவுறுத்தினர். அந்த மருத்துவமனையை அடைய கிட்டதட்ட இரண்டு மணி நேரம்
ஆனது.
ஜியாவோ வெய்யின் நிலையை கண்ட மருத்துவர்கள், நிலைமை
உண்மையிலேயே கடினமானதாக இருப்பதைக் கண்டார்கள். சக மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை
செய்தார்கள். நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது என்பதால், வேறு
மாதிரியான முயற்சியில் இறங்கினார்கள். அது ஒரு பரிட்சார்த்தமான முயற்சிதான். அதில்
வெற்றியும் இருக்கலாம். தோல்வியடைந்தும் போகலாம்.
அதன்பின் மருத்துவர் குழு துண்டான ஜியாவோ
வெய்யின் கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே அறுவைச் சிகிச்சையின் மூலமாக
ஒட்டுச் செடியை ஒட்ட வைப்பது போல வைத்து பொருத்தினார்கள். சிதைந்துபோய் இருந்த
திசுக்களும், செல்களும் உயிர் பெற வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை
விபத்தில் பாதிக்கப்பட்ட வலது கரத்தை தகுந்த மருந்துகள் மூலம் பாதுகாத்தனர்.
ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து
செல்களும் உயிர் பெற்றன.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மருத்துவர்கள், காலில்
வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றி வலது கையில்
பொருத்தினர்.
தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம்
போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கை திரும்ப கிடைத்த
மகிழ்ச்சியில் கண்ணீரோடு
அவர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து இங்கிலாந்து மருத்துவர்கள்
கருத்து தெரிவிக்கையில், "உண்மையில் இது ஒரு மருத்துவ அதிசயம்! மருத்துவ
உலகின் மிகவும் அரிதான சாதனை இது. இதை செய்த சீன மருத்துவர்கள்
போற்றுதலுக்குரியவர்கள்!"- என்கிறார்கள்.
(Source: The Independent)
0 comments:
Post a Comment