NewsBlog

Tuesday, December 24, 2013

முக்கிய செய்திகள் - வாசிப்பது மிஸ்டர் பாமரன்: 'மாணவர் கைது நடவடிக்கைக்கு எதிராய் மனித உரிமை ஆணையத்திடம் புகார்'


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 20 தேதி சென்னை வருகைத் தந்தார். அவருக்கு எதிராய் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி, கல்லூரி மாணவர்கள் ஜோதி லிங்கம், ரமேஷ், மோகன சந்திரன், லாமன்,  மற்றும் தமிழ் இனியன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இயக்குனர் கவுதமனும் சூளைமேட்டிலுள்ள அவரது வீட்டிலிருந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இது சம்பந்தமாக அடையாறில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் இயக்குனர் கவுதமன் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: 

நள்ளிரவில் போலீஸார் அத்துமீறி கைது செய்ததுடன், அவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதற்கு காரணமான காவல் உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் ஶ்ரீகாந்த் ஆகியோர் மீதும் இவர்களுக்கு உத்திரவிட்ட காவல ஆணையர் ஜார்ஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - என்று கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் வருகையைக் கண்டித்து போராட்டம் நடத்தலாமா என்று மாணவர்கள் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அந்த கூட்டத்தின் முடிவில் போராட்டம் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கூட்டம் நடத்தியதை அறிந்து காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.

அதிகாலை 2 மணியளவில், மாணவர்களின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும் காரணம் கேட்ட வீட்டு உறுப்பினர்களை அநாகரிகமாக திட்டுயும் உள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருந்த நிலையில், தகவல் பத்திரிகைகளுக்கு கசிந்ததும் அங்கிருந்து வேறொரு இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். 

அந்த நடவடிக்கையின் போது சூளைமேட்டைச் சேர்ந்த தமிழ் இனியனை ஆய்வாளர் ஶ்ரீகாந்த் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, மனித உரிமை ஆணையத்துக்கு புகார் சென்றுள்ளதால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment