NewsBlog

Sunday, July 7, 2013

விருந்தினர் பக்கம்: 'ஓர் இந்துவாகச் சொல்கிறேன்!'


பல நாட்கள் வீட்டில் சாப்பாடு இருக்காது. காலை உணவு என்பது அரிதானது தான். மதியம் பள்ளியில் சத்துணவு. இரவு எப்படியும் சாப்பாடு கிடைத்துவிடும். ரம்ஜான் நோன்பு ஆரம்பித்துவிட்டால் எங்களுக்கு உற்சாகம் வந்துவிடும்.

மாலையானால் சுடச்சுட மூன்று, நான்கு இஸ்லாமியர்களின் வீடுகளில் நானும் அண்ணனும் நோன்புக் கஞ்சி வாங்கி வருவோம். சில சமயம் கஞ்சியோடு வடையும் சமோசாவும்கூட எங்களுக்குக் கிடைப்பது உண்டு. எப்போதாவது யாரேனும் பள்ளிவாசலில் கறிக்கஞ்சி போடுவார்கள். சின்னச்சின்ன கறித்துண்டுகள் மெல்லிசாகக் கஞ்சியில் கிடைக்கும். அந்தக் கஞ்சியை அப்படியே வாய்க்குள் கவிழ்த்து, கறித் துண்டுகளை மென்றுகொண்டே கஞ்சி குடிப்பது அற்புதமாக இருக்கும். அதிலும் நோன்புக் கஞ்சி வாளியைத் திறந்தவுடனே கமகம என்று ஒரு மணம் வரும். இன்னமும் என் மூளைக்குள் அந்த வாசனை மணக்கத் தான் செய்கிறது. அது பசியின் வாசனை. ருசியின் வாசனை.

ஒரு நாள் நான் ஆமினா அக்கா வீட்டுக்கு நோன்புக் கஞ்சி வாங்கப் போயிருந்தேன். கையில் பெரிய வாளி. எனக்கு அப்போது எட்டு, ஒன்பது வயதிருக்கும்.

"எல்லாரும் சொம்புல தானே வாங்குவாங்க... நீ ஏன் இவ்வளவு பெரிய வாளி கொண்டாந்திருக்கே?" என்று என்னிடம் கேட்டாராம் ஆமினா அக்கா. "இதைத் தான எங்க வீட்டுல குடிப்பாங்க. எங்க வீட்டுல சாப்பாடு கிடையாது" என்று சொன்னேனாம் நான். ரொம்பவே சின்னப் பையனாக இருந்ததால் பொய் சொல்லாமல் உண்மை சொல்லியிருக்கிறேன் போல. நான் சொன்ன பதிலைக் கேட்டு ஆமினா அக்கா கண்ணீர் வடித்துவிட்டார். ஒரு எட்டு வயதுச் சிறுவனின் வாயிலிருந்து பசி பற்றிய வார்த்தைகளைக் கேட்க எத்தனை பேருக்குப் பொறுக்கும்?


இந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கும் 'நசீர் அண்ணன்' என்கிற சிறுகதையில் தான் மேற்படி பகுதி வருகிறது . சுகுணா திவாகர் எழுதியது. சுற்றிலும் இஸ்லாமியர்கள் வசிக்கும் ஒரு ஏரியாவில் வசிக்க நேர்ந்த ஒரு ஏழை இந்துக் குடும்பத்துக்கும், நசீர் அண்ணன் குடும்பத்தும் இருந்து வருகிற மூன்று தலைமுறையான பிணைப்பைச் சொல்லும் அருமையான கதை. 

கதையில் குறிப்பிட்டது போல் பசிப்பிணியை யார் பொறுத்தாலும் ஒரு இஸ்லாமியர் பொறுப்பதில்லைதான். பசியின் கொடுமையை அறிய வேண்டும் என்பதற்குத் தான் நோன்பே இருக்கிறார்கள், பலபேர் பல மாதிரி சொன்னாலும் உண்மை இது தான். எனக்கு இருக்கிற இஸ்லாமிய நண்பர்கள் பழக்கத்தில் நான் உணர்ந்த விஷயங்களில், அவர்களின் நினைத்துப் பார்க்க முடியாத உதவி செய்யும் குணமும் ஒன்று. 

ஆண்டவனுக்கு பயப்படுதல், கடன் வாங்காதிருத்தல், ஐந்து வேளைத் தொழுதல் இதெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவர்கள் தானத்திற்காக எடுத்து வைத்தாக வேண்டும் tax மாதிரி!

அந்தளவிற்கு வசதி இருக்கிறது அதனால் செய்கிறார்கள் என்பதை முற்றிலும் ஏற்க முடியாது, மாறாக முற்றிலும் மறுக்க முடியும். அதைவிட வசதி படைத்தவர்கள் கூட இந்த ஜீவ காருண்யத்துடன் இல்லாமல் இருப்பதைத் தான் நான் வெகுவாகக் கண்டிருக்கிறேன். 



எனக்குத் தெரிந்து இஸ்லாமியர்களில் நாத்திகர்கள் இல்லை. ஆண்டவன் இருக்கிறான் என்பதை அவர்கள் குறுக்குக் கேள்வி கேட்காமல் நம்புகிறார்கள்.

ஒரு எறும்பு எப்படி முயற்சித்தாலும் மனிதனை முழுசாகப் பார்க்க முடியாது. முழுமையாக மனிதனை உணர முடியாது. அது நம்மைக் கடிப்பது கூட வேறு எதையும் கடிப்பது போல ருசி பார்க்கத் தான். மனிதனைக் கடித்து வைப்போம் என்று அது நினைக்க வாய்ப்பில்லை. அதைப் போலத் தான் ஒரு மனிதன் எப்படி முயற்சித்தாலும் ஆண்டவன் என்பவன் முழுதாக உணரமுடியாதவன், கற்பனைக்கு அப்பாற்பட்டவன், முழுதாக நம்பப் படவேண்டியவன் என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். 



நாமெல்லாம் சித்தெறும்பு என்றால், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எல்லாம் கட்டெறும்பு அவ்வளவு தான். பிரபஞ்சத்தில் மனிதன் இல்லை என கட்டெறும்பு சொன்னால் சித்தெறும்பு நம்பலாம். மனிதன் இரண்டையும் பார்த்துச் சிரிக்க முடியும்.

அடுத்தவர்களுக்கு உதவுவது என்ற உன்னதமான எண்ணத்திற்கு அடிப்படையாக அமைவது இறை நம்பிக்கைதான். ஒரு இஸ்லாமியனுக்கு இந்த இரண்டு எண்ணமும் பிறவியிலேயே இயற்கையாக அமைந்துவிடுகிறது. சாதாரணமாக ஒரே ஒரு நாள் கூட இருக்கமுடியாத, எச்சில் கூட விழுங்காமல் இருக்கும் அந்த விரதமானது அவர்களுக்கு சாத்தியப்படுவது வைராக்கியத்தினால் அல்ல... அசைக்க முடியாத நம்பிக்கையினால்.

ஓர் இந்துவாகச் சொல்கிறேன்.. ஒர் இஸ்லாமியன் அவன் சார்ந்த மதம் குறித்து ஆயுள் முழுதும் பெருமைப் பட்டுக்கொள்ள ரம்ஜான் நோன்பு ஒன்று போதும்.

      
-சிவக்குமார் அசோகன்













-சிவக்குமார் அசோகன்

0 comments:

Post a Comment