NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label விருந்தினர் பக்கம். Show all posts
Showing posts with label விருந்தினர் பக்கம். Show all posts

Saturday, December 5, 2020

பேசாம நாட்டை குத்தகைக்கு கொடுத்திடலாம் போல!

 


சுரேசுகுமார் நாகராசன்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ரசினி ரசிகனுக அவரோட பதாகைக்குதான் பால் ஊத்துனானுங்க, ஆனா இந்த அரசியல் வியாபாரிங்க ரசினிக்கு உசுரோட இருக்கும்போதே பால் ஊத்தாம விட மாட்டாங்க போல இருக்கு!

இவனுகளை எப்படி காறி துப்பினாலும் பின்வாசல் வழியா, எப்படியாவது, எவனையாவது தொத்திக்கிட்டு தமிழ்நாட்டுக்கு வரணும்னுகிட்டு இருக்காணுவ... சரி அது கிடக்கட்டும்.

எவனை பார்த்தாலும், சாதி, மதம் கடந்து நேர்மையான, ஊழலற்றன்னு எல்லா பயலும் பீத்தி கிட்டு திரியிரானுவ! அடேய் இந்தியாவில் எவன் அரசியல் பண்ணாலும் ஊழலை ஒழிக்க முடியாதுடா வெண்ணெய்ங்களா!

ஏன்னா நம்ம பண்ணி வச்சிருக்க சிஸ்டம் அப்படி.... எவன் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தலுக்கு செலவு செஞ்ச கும்பணிகளுக்கு தான் ஜெயிச்சவன் விசுவாசமா இருப்பானுங்களே ஒழிய ஓட்டு போடுற சனங்களுக்கு அல்ல...! இது புரியாம ஜனநாயகம், சமத்துவ வெங்காயம்னு பேசிக்கிட்டு.

எனக்கு தெரிஞ்சு சாதி இல்லாத, சாதி பார்க்காத ஒரே மனுசங்க, காசுக்கு உடம்பை விக்கிற பாலியல் தொழிலாளிகள் மட்டும்தான். அவிங்க கிட்டவும் புடுங்கி ஏப்பம் விடுற வெங்கம் பயலுவ உலாவுற நாட்டுல, இப்போ ஒருத்தர் புதுசா நாத்து நட வந்திருக்கார். என்னத்த சொல்ல...?

அதுசரி! வாழத்தெரியாதவன் பெரும்பான்மையா வாழ்ற நாட்டுல, ஆளத் தெரியாதவந்தானே ஆட்சிக்கு வருவான்! இங்க எவனுக்கும் ஒழுங்கா ஆன்மீகமும் தெரியாது! அரசியலும் தெரியாது! இந்த லட்சணத்துல ஒவ்வொருத்தனுக்கும் பரம்பரை பெருமை, நாட்டு பெருமை வேற!

எனக்கு எல்லா கோவமும் இந்த பாழாய் போன கோரோனா மேலதான்... அதாவது ஒழுங்கா தன் வேலையை செஞ்சிருந்தா, பாதி நாடாவது சுத்தமாயிருக்கும்!

அட்லீஸ்ட் பார்லிமெண்டுக்கு உள்ளேயாவது கோரோனா போயிருந்தா நாடு தப்பிச்சிருக்கும்.

அதுனாலதான் ரசினி இப்போ வந்து சொல்றார்; ‘ஒழுங்கா இப்பவாவது தப்பிச்சிருங்க. இல்லைண்ணா எப்பவும் தப்பிக்க முடியாதுன்னு!’ நமக்கு கடைசி சான்சு கொடுத்திருக்காப்புல.... நம்ம ஆளுங்கதான் விவரம் தெரியாம ஆடு மாதிரி தலையை நீட்டி கிட்டு இருக்காணுங்க!

ஆனா நம்ம பயலுவ, கிழவி ஆயிட்டு சமஞ்சாலும், கல்யாணம் பண்ணி வைக்காம விடமாட்டோம்னு அவரை புடிச்சி டார்ச்சர் பண்ணி இழுத்துட்டு வந்துட்டானுங்க...!

ரசினியும் விவரமா... பேசுறது நான்தான்,  ஆனா  நான் பேசுறதுக்கு எழுதி கொடுத்தது இன்னொருத்தர்ன்னு சாடையா சொன்னாலும், ரசிக குஞ்சுகளுக்கு புரியமாட்டேங்கு....!

இங்க திராவிடமும் சரியில்லை; தேசியமும் சரியில்லை! நடிகனும் சரியில்லை; கொடி புடிச்சவனும் சரி இல்லை! ஏன்னா எல்லா பயலுகளும் ஆட்சிக்கு வந்த உடனே ஒன்னு முதலாளி பயலுக்கு வேலை பாக்குறானுங்க! இல்லாட்டி அவங்களே முதலாளி ஆயிடுறாங்க.

அதனால, பேசாம நாட்டை கும்பணி காரங்க கிட்டையே இன்னும் ஒரு ஐநூறு வருஷத்துக்கு குத்தகைக்கு கொடுத்திருங்க. India Private Limted னு பேர் வச்சுக்கலாம்.

என்ன நான் சொல்றது?

(நன்றி: https://www.facebook.com/sureshkumar.nagarajan.5)

Tuesday, October 6, 2020

தற்சார்பு என்பது இதுதான்!

 

 திருமூர்த்தி
'''''''''''''''''''''''''''''''''''''
தக்காளி, கத்திரி, சின்ன வெங்காயம், மிளகா, கொஞ்சம் முள்ளங்கி சோதனை முறையில் வெள்ளைபூண்டு, துவரை இப்படி எல்லாமே மஞ்சள்காட்டுக்குள்ளேயே ஊடுபயிரா வீட்டுக்கு தேவையான அளவு நடவி விடுவோம். அடுத்த சில மாதங்களிலேயே அறுவடைக்கு வந்திடும். 
 
கத்திரிக்கா செடிக்கு மட்டும் புழு  வரும். அதற்கு அடுப்பு சாம்பல் இரைத்துவிடும் வைத்தியமே போதும். 
 
தற்சார்புனா இப்படிதான் பார்கிறோம். 
 
மூன்று வருடத்திற்கு முன்பே இருக்கிற மஞ்சளை கிலோ 250 ரூபாய் விலைக்கு நாங்களே கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்துவிடுகிறோம்னு மொத்த மஞ்சளையும் கேட்டாங்க. 
 
ஆனா நா ஒத்துக்கல. 
 
கஷ்டபட்டு விளைய வச்சதே நம்ம மக்கள் சாப்பிடதானே தவிர வெளிநாட்டில் இருக்கும் வெள்ளைக்காரனுக்கு இல்லைனு தீர்கமான சொல்லீட்டேன். 
 
மாசம் நூறு கிலோ, இருநூறு கிலோ அரைச்சு விற்பதற்கு பதிலா மொத்தமா ஒரு விலையை வாங்கீட்டு கொடுத்திடலாமேனு மூளை சலவை செஞ்சும் பார்த்தாங்க. 
 
ம்ம்ஹூம்..! 
 
ஒரே பிடிவாதம் கொடுப்பதில்லைனு. 
 
பின்னே இந்த பிடிவாதம் மட்டும் இல்லைனா ஏறி நசுக்கிவிட்டு போயிட்டே இருப்பாங்களே..! 
 
பெருமைக்காக சொல்றேனு நினைக்காதீங்க. 
 
முதல் வருடத்தில் முன்னூறு கிலோ மஞ்சள்தூள் விற்று  இப்போ மாதம் முன்னூறு கிலோ விற்க்கிறதுனு. 
 
அதற்கு முக்கிய காரணம் எத்தனை தேவை அதிகரித்தாலும், கலப்படம் மற்றும் நச்சை தெளிப்பதில்லைங்கிற சமரசமாகாதா என்னோட இந்த பிடிவாதம்தாங்க..! 
 
ஐயாயிரம் பேரை நண்பர்களா முகநூலில் சேர்த்து வச்சுக்கிட்டு பாதி பேரை ஏமாற்றி கல்லா கட்டுறவங்க இங்க நிறையா இருக்கங்னு நேற்று என்னை ஒரு நண்பர் 2014 பகிர்ந்த ஒரு பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தார். 
 
அப்படி எல்லாம் யாரையும் ஏமாற்ற முடியாது ராசா..! 
 
அப்படி ஏமாற்ற வேண்டி அவசியம் எங்களுக்கு இல்ல. 
 
அது எங்க வேலையும் இல்ல. 
 
நீங்க இப்படியே எங்களை உமிழ்ந்திட்டே இருங்க. 
 
அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு எங்களால் நகர முடியும்..!
 
''''''''''''''''''''''''''''''''''''''''''
நன்றி: திருமூர்த்தி, இயற்கை விவசாயி, சத்தியமங்கலம்
https://www.facebook.com/thiru.murthy.568

வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பில்லை!

 பரிமளா தேவி

'''''''''''''''''''''''''''''''''''''''''

நான் மஞ்சள் விவசாயி அல்ல.

இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பெரியது ஹைபிரிட் ரகம். நாட்டுரகம் சின்னதாகத்தான் இருக்கும்.

பிசு பிசுனு இருக்குங்கறீங்க.! பின்னே, அதிலுள்ள நீர்சத்து எங்க போகும்.?!

தை-மாசில இருந்து அறுவடை ரெண்டு மூணு மாசம் மட்டுமே நடக்கும்.

விதைக்காக நிழல்ல ஒரு அம்பது நாள் வெச்சிருக்கலாம்.

அப்பவே முளைப்பு வந்துரும்.

வருஷம் 365 நாளும் பச்சை மஞ்சள் வேணும்னா சீதோஷ்ணநிலைக்கு தகுந்தமாதிரி தானே விளையும்.!? அதுபோக நிலஅமைப்பு மண்ணுக்கு மண். அதிலுள்ள சத்துக்களுக்கு தகுந்தபடிதான் விளைச்சல் இருக்கும்.

மஞ்சள்தூள் அரைக்கறவங்களுக்கு பொடி மஞ்சள். பெரிய மஞ்சள் வேறுபாடெல்லாம் இல்லை. பெரிச விட பொடிதான் சீக்கிரம் அரைபடும்.

பசு மஞ்சளை வேகவைத்து பங்குனி சித்திரை வெயிலிலேயே முப்பது நாட்கள் போல் கடும் வெயிலில் காயவைத்து  கைகளால் உடைக்க முடியாத அளவு கெட்டியான பின்தான் மூட்டை பிடிப்பார்கள்!

கிலோ 90 ரூபான்னு விலை சொல்றாங்கனு சொல்றீங்க.

பல்க்கா ஒரு ஏக்கர் மஞ்சளையும் எடுத்துகிட்டா 15 ரூபாக்கே கொடுப்பாங்க!

வாங்கறது ஒருகிலோ ரெண்டுகிலோ. அதுக்கு தினம் கொஞ்சமா அறுவடை செஞ்சு கொரியருக்கு பேக் பண்ற வேலையெல்லாம் விவசாயிக்கு சாத்தியமில்லாதது! இன்று பெண் வேலையாட்கள் கூலி தினம் 300 ரூபாய். நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் யாரும் இப்ப வேலை செய்யறதே இல்லை.!

நீர்சத்து குறைஞ்சா மஞ்சள் சுருங்கத்தானே செய்யும்.!

யோசிங்க.ப்ளீஸ்.

நுகர்வோர் காசை வாங்கி எந்த விவசாயியும் ஏமாத்தி கடனை கட்டப் போறதில்லை. கோடீஸ்வரனும் ஆகப்போறதில்லை!

முப்பது ‘குரோ பேக்’ வாங்கி சித்திரை வைகாசில ஒவ்வொரு பேக்லேயும் ஒரு விதைமஞ்சள் ஊணி வைங்க. ஒரு வருஷம் அதுக்கு வேலை செய்ங்க. உங்க உழைப்புக்கான கூலிய போடுங்க. மஞ்சள் விளைவிக்கறதுல உள்ள பிரச்சனைய பாருங்க.

அப்படி விளைந்ததை மாதத்திற்கு இரண்டு பைகளாக அறுவடை செய்து ப்ரெஷ்ஷா சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்க!

வேளாண் மசோதா நிறைவேறி கார்ப்பரேட் மரபணு மாற்றிய மஞ்சள் கொடுப்பான். நாங்களும் ஒரே சைஸ்ல விளைய வெச்சு குடுப்போம்.

அப்பவும் உங்களுக்கு நேரடியா கொடுக்கமுடியாது.

அவனுக்கு 50 ரூபாய்க்கு விப்போம். அவன் இந்தக் கமெண்ட்டையெல்லாம் படிச்சுப்பாத்துட்டு முகம் சுருங்காம இருக்க பண்ணும் (மேக்அப்) வைத்தியத்தையெல்லாம் மஞ்சள்ல ஏத்தி கிலோ 500 ரூபாய்னு விப்பான்.

நீங்களும் ‘குர்குமின்’ 6% இருக்குதுன்னு கேள்வியே கேக்காம வாங்கி சாப்பிடுவீங்க. ஆறாவது மாசமே கேன்சர் வரும்!

தயவுசெய்து யாரும் தவறாக நினைக்கவேண்டாம். இதுனாலேயேதான் நான் எந்தப் பொருளும் தற்போது விற்பதில்லைங்க.

இவ்ளோ பெரிய விளக்கம்  உங்களுக்கு புரியற மாதிரி சொல்ல என்னால முடியுது. ஒரு மணிநேரம் அவுட். அதுக்குள்ள அஞ்சுதடவை போனை வெச்சுட்டு போய்வேலைய பாத்துட்டு வந்தேன்.

எல்லோருக்கும் அது சாத்தியமுமில்லை. நேரமுமிருக்காதுங்க.!

Dry ஆன பொருளா இருந்தா கெட்டுப்போகாது.

பச்சையான பொருள்களெல்லாம் அழுகறது. பூசணம் பிடிப்பதுனு எல்லா பிரச்சனையும் இருக்கும்!

சகவிவசாயியா விவசாயத்துல இருக்கற அதை மார்க்கெட்டிங் பண்றதுல இருக்கற சிக்கலை சொன்னேன்!

இதுக்கும் மேல மாடு-கன்னு பிரச்சனை. மோட்டார் பிரச்சனை. அதுக்கு சரிபண்ண ஆட்கள் கிடைக்காமனு ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம்.

ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க எல்லோரும்!

கட்டுபடியே ஆகாத விலையில் போடற முதலீட்டை எடுக்க முடியாத நிலையிலும் இன்னும் விவசாயம் செய்யறவங்க நல்லாருக்கணும்னு வேண்டிக்குங்க.

ஏன்னா இன்றுவரை விவசாயத்தில் நீடிப்பதே பெரும் சாதனையாத்தான் நினைக்கிறோம். ஏதோ ஒரு 5% பேர் பணக்கார விவசாயிகளா இருக்கலாம். எல்லோரும் அப்படி அல்ல. பணக்காரனா இருக்கறவன் இந்த நோண்டு வேலையெல்லாம் செய்யமாட்டான்.

அத்தனை ரசாயன மருந்தையும் ஊத்தி விளையவைப்பான். வேகவைப்பான். மூட்டை போட்டு குடோன்ல ஸ்டாக் வெச்சு மாதம் ஒருமுறை செல்பாஸ் வெச்சு விலையேறும் வரை பத்து வருஷமானாலும் ஸ்டாக் வெச்சிருந்து வித்துட்டு போயிருவாங்க.

அவங்க பார்வைல அறம் வழுவாம இருக்கணும்னு இயற்கையை விவசாயம் செய்யறவங்க எல்லாம் பொழைக்கத் தெரியாத லூசுக.

விவசாயம் மட்டுமே செய்பவர்கள் இப்பவும் காட்டை வித்துதான் கடன் கட்டறோம்..!

பூமாரி. ஹெர்பீ இவங்கெல்லாம் யாருன்னே எனக்குத்தெரியாது.

திருமூர்த்தியும் அல்லி அக்காவையும் வேணா தெரியும்.

கார்ப்பரேட் ஆசுபத்திரில. மால்ல நகைக்கடைல ஜவுளிக்கடைல.. வாழ்வியலுக்கு பத்துகாசு பிரயோனம் இல்லாத தற்கால கல்விக்கூடங்களுக்கு லட்சலட்சமா செலவழிப்பீங்க!

ஆனா, ஆரோக்கியத்துக்கு செலவழிக்க இத்தனை கணக்கா.?!

அங்கங்க இருக்கற விவசாயிகளை தத்தெடுத்துகிட்டு உங்க தேவைகளை சொல்லி விளைய வெச்சு சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க.!

உங்களுக்காவது இந்தவாய்ப்பு கிடைச்சிருக்கு பயன் படுத்திக்குங்க.

உங்க வாரிசுகளுக்கு நோ சான்ஸ்.! 

ஆமாம்.. வாய்ப்பில்லை ராசா..! வாய்ப்பேயில்லை!!

 (நன்றி: Parimala Devi - https://www.facebook.com/parimala.devi.7777)

Monday, September 28, 2020

அடி ஆத்தி! நீர் நிலைக‌ளில் இத்தனை வகைக‌ளா...?


(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18)  குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தகவல்: G.V. Varadharajan,  திருவாரூர் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்

https://www.facebook.com/groups/572874246100629/user/100000019619177

Sunday, August 30, 2020

நல்லவன் வாழ்வான்

நேற்றைய பத்திரிகைகளில் வசந்தகுமாருக்கான அஞ்சலிச் செய்திகளே பெரும் பகுதியாய் இடம் பெற்றிருந்தன. அவர் இருக்கும்போது நாம் நினைத்துப் பார்க்காத அவரது வியாபார ஆளுமைத் திறனை அவர் இறந்த பிறகுதான் பலரும் சொல்ல கேட்டு, நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.

நிஜமாகவே அவர் ஒரு வியாபார சக்கரவர்த்தி என்பது இப்போது நமக்குப் புரிகிறது. அவர் நடத்திய அந்த சாம்ராஜ்யம் அவரது மகனால் விரிவடைய வேண்டும்.

தகப்பனுக்கு பிள்ளை செய்யக்கூடிய உதவியே தகப்பனின் பெயரை காப்பாற்றுவதுதான். அதுமட்டுமல்ல வசந்தகுமார் சாதிமத பேதமில்லாமல் எல்லா மக்களோடும் எளிமையாக பழகியவர். இத்தகைய அருங்குணம் அவரது மகனுக்கும் வரவேண்டும். காங்கிரஸ் பேரியக்கத்தில் அவர் காட்டிய பாரம்பரிய பாசம் பட்டுப் போய்விடாமல் அவர் மகன் அதைத் தொடர வேண்டும்.

பாசிசத்தின் கதை முடித்த கதநாயகன் அண்ணாச்சி வசந்தகுமார். அவரது வழியில் அவர் மகனும் நடைபோட வேண்டும் .

வரவிருக்கும், இடைத்தேர்தலிலும் வசந்தகுமார் மகனுக்கே நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதே தொகுதிமக்களின் பேராவல். அது எனது விருப்பமும்கூட. அதனால், நிலைமையை இப்போதே நான் சொல்லி வைக்கிறேன்.

வசந்தகுமார் அண்ணாச்சிக்கும் எனக்கும் சொல்லிக்கொள்ளும் விதமான பழக்கம் கிடையாது. ஒரு பெருநாள் தொழுகையின்போது ஈத்கா  (சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்) மைதானத்திற்கு வந்திருந்த அவரோடு ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி.  உருவத்தைப் பார்த்தோ என்னவோ அவருடைய விஷேச புன்னகையுடன் ரொம்ப கண்ணியமாக என்னை விசாரித்து மரியாதை தந்தார் அப்போது.

அண்மையில், அருமை அண்ணன் தக்கலை அப்துல் வாகித் மறைந்த செய்தியறிந்து அவரது உடலை பார்க்கச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு நான் வீட்டுக்கு வரும் வழியில் எதிரே வசந்தகுமார் அண்ணாச்சி காரில் வந்து கொண்டிருந்தார். அவரும் வாகித் அண்ணன் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தார்.

என்னைக் கண்டதும் காரின் வேகத்தைக் குறைத்து, என்னிடம் அதே விஷேசச் சிரிப்போடு, “நல்லா இருக்கீங்களா?” - என்று விசாரித்துச் சென்றார்.

ஒரே ஒருமுறை சந்தித்த சந்திப்பை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று நினைத்து எனக்கு வியப்பாக இருந்தது.

நேற்று நண்பர் ‘சித்திக் ஹஸன்’ (Siddique Hassan),

“ரொம்ப நல்லவனா இருக்குறதே தப்பு. வசந்தகுமார் அண்ணாச்சி ரொம்ப நல்லவனா இருந்தாரு. இப்போ எதிர்பாராத நிலையில இறந்துட்டாரு. மனசு தாங்கலே"ன்னு சொல்லி புலம்பினாரு.

வசந்தகுமார் அண்ணாச்சி, நல்லவனாக இருந்ததால்தான் இன்றைக்கும் நாம் அவரை பாராட்டுகிறோம். இத்தகைய சாதனையாளர்களின் சிறப்பே அவர்கள் மறைந்த பிறகும் அவர்களை நினைவு கொள்ள சிலவற்றை விட்டுச் செல்வார்கள்.

வசந்தகுமார் அண்ணாச்சியும் அத்தகைய பல நினைவுகளை நிச்சயம் விட்டு சென்றிருக்கிறார். வீடுதோறும், அவரது ஷவசந்த் அண்ட் கோ’வில் வாங்கிய பொருட்கள் ஏதாவது இல்லாமல் இருக்காது. எங்கள் வீட்டிலும் அவரது கடையில் வாங்கிய  ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன.

ஆமாம்! மதிப்பான பொருட்கள்தான்.

ஒரு சாதாரண எளிய பணியாளராய் வாழ்க்கையைத் தொடங்கி, உழைப்பை மூலதனமாக்கி வாழ்வில் உயர்ந்து காட்டிய ஒரு மதிப்புமிக்க மனிதரின் மதிப்புமிக்க பொருட்கள் அவை.

அண்ணாச்சி வசந்தகுமாரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

''''''''''''''''''''''''' 

ஆக்கம்: அபு ஹாஷிமா (Abu Haashima-https://www.facebook.com/abuhaashima)

Saturday, August 29, 2020

விமர்சனங்களைத் தாண்டி சாதனைப் படைத்த 'அரே ஓ சம்பா!' - ஷோலே

 

இந்த மாதம் 45-ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது என்றும் பசுமையான இந்திப் படமான "ஷோலே" (Cult movie).

கமல், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ வெளிவந்த ஆகஸ்ட் 15, 1975-ஆம் ஆண்டில்தான் இந்தப் படமும் வெளிவந்தது.

அப்பா தயாரிப்பில் மகன் ரமேஷ் சிப்பி இயக்க,  ஆர்.டி.பர்மன், சலீம்-ஜாவேத் கூட்டணி அமைந்திருந்தனர்.

‘அந்தாஸ்’ (1971), ‘சீதா அவர் கீதா’ (1972) போன்ற படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ரமேஷ் சிப்பி ஹாலிவுட் பாணியில் ஒரு படம் எடுக்க எண்ணி அதனை ஜாவேத் அக்தரிடம் தெரிவித்தார். சலீம் ஜாவேத் இரட்டையர்கள் ‘ஷோலே’யின் ஒரு வரிக்கதையை ரமேஷ் சிப்பியிடம் சொல்ல, பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களுடன் திரைக்கதை உருவானது.  நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 1973-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதியில் படப்பிடிப்பு தொடங்கியது.

1950-களில் குவாலியர், ராம்கார் (Ramgarh) பகுதியில் இருந்து கொண்டு பக்கத்துக் கிராமங்களில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன் கப்பர் சிங். தன்னிடம் பிடிபடும் காவலர்களின் காது, மூக்குகளை வெட்டிக் காவலர்களை நடுச்சாலைகளில் போட்டுவிடும் அளவு கொடியவன் அவன்.

இந்த உண்மைச் சம்பவமும், திலீப்குமார் கொள்ளையனாக நடித்து வெற்றி பெற்ற ‘கங்கா ஜமுனா’ (Gunga Jumna -1961) மற்றும் பாக்கிஸ்தானியப் படைப்பாளர் இப்னே ஷபியின் (Ibn-e-Safi ) உருது நாவலின் பாத்திரங்களும் இயக்குநர் ரமேஷ் சிப்பிக்கு உள்ளூக்கம் தந்தன. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நூறு விழுக்காடு வில்லனாக உருப்பெற்றதுதான் கப்பர் சிங் பாத்திரப் படைப்பு.

இந்தப் படத்தின் சக்திவாய்ந்த, கொடூரமானக் கொள்ளைக்காரன் பாத்திரமான கப்பர் சிங் வேடத்தில் நடிக்க முதலில் டேனியை (Danny Denzongpa) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இயக்குநர் சங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு  வில்லனாக டாக்டர் போரா பாத்திரத்தில் நடித்த அதே டேனிதான் அவர்)

அந்த நேரத்தில் டேனி ஏற்கனவே இயக்குநர் ஃபெரோஸ்கானின் ‘தர்மாத்மா’ படத்திற்குக் கால்ஷீட் கொடுத்திருந்ததால் ‘ஷோலே’ ஒப்பந்த்த்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், தர்மேந்திரா, அமிதாப் இருவரும் கப்பர் சிங் பாத்திரத்தில் நடிக்க விரும்பினார்கள். பின்னர் வில்லன் பாத்திரம் தங்களது இமேஜைப் பாதிக்கலாமென எண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டனர் என்பதை ‘ஷோலே’ நாற்பதாவது ஆண்டு விழாவில் இயக்குநர் ரமேஷ் சிப்பி நினைவு கூர்ந்தார்.

இயக்குநர் ரமேஷ் சிப்பி வழக்கமான வில்லன்களிலிருந்து கப்பர் சிங்கை மாற்றிக் காட்ட விரும்பினார். அதற்காக வில்லனின் உடை மற்றும் வழக்கு மொழிகளில் மாற்றம் கொண்டு வந்தார். 'கப்பர் சிங்'கிற்கு ராணுவ உடை அணிவித்தார். வில்லனின் மொழியை வட இந்தியாவில் புகழ்பெற்ற  காரிபோலி (Khariboli) மொழியுடன், இந்தியைக் கலந்து பேச வைத்தார்.

இத்தகைய ஒரு சூழலில்தான் நாடக மேடைகளில் வளரிளம் பருவ நடிகராக வலம்வந்து, ‘ஹிந்துஸ்தான் கி கசம்’ (1973) படத்தில் அறிமுகமாகியிருந்த அம்ஜத்கானைக் கப்பர் சிங் பாத்திரத்திற்குச் சிபாரிசு செய்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள்.

தாடி வளர்க்கவிட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தியதில், அச்சு அசலாக இயக்குநரின் 'கப்பர் சிங்' பாத்திரத்திற்குப் பொருந்திப் போனார் அம்ஜத்கான்.

வில்லனாகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, ‘சம்பல் கொள்ளையர்கள்’ குறித்து ஜெயபாதுரியின் (ஜெயாபச்சன்) தந்தை தருண்குமார் பாதுரி எழுதி வெளிவந்த நூலான ‘அபிஹ்ஷாப்த் சம்பல்’ (Abhishapth Chambal) படித்துத் தனது பாத்திரத்திற்கு மெருகேற்றினார் அம்ஜத்கான்.

‘ஷோலே’ யின் முக்கியமான இரயில் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏழு வாரங்கள் நீடித்தது. அப்போதெல்லாம், ஏழு வாரங்களில் ஒரு படமே எடுத்துவிடுவார்கள். இப்போதிருப்பது போல் VFX தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல், கிடைத்த தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஸ்டண்ட் நடிகர்கள், குதிரைகள் என ஏற்பாடு செய்து, ரயில் சண்டைக் காட்சியை எடுத்து முடித்தார்கள் என்பது வியப்பானது.

யே தோஸ்தி ஹம் நஹி தோடெங்கே,
தோடெங்கே தம்-மகர்,
தேரா சாத் னா சோடெங்கே .....

(We will never break our friendship
Till my last breath
I will not leave your side ..)


என்ற நட்பின் பெருமை பேசும் பாடலில் தர்மேந்திரா பைக் ஓட்டுவார். பைக்கின் 'சைட் கார்' படுக்கை வசதிகளுடன் தனியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். தர்மேந்திரா அமிதாப் என மாறி மாறி அதில் அமர்ந்திருப்பார்கள்.

பாடலின் முடிவில் அமிதாப் தோள் மீது தர்மேந்திரா அமர்ந்திருந்து 'மௌத் ஆர்கன்' வாசிக்க, அமிதாப் விசிலடிக்க, பைக் பறக்க கிஷோர்குமாரும் மன்னாடேயும் தங்கள் மந்திரக் குரலால் அசத்தியிருப்பார்கள். இந்தக் காட்டசி 21 நாள் எடுக்கப்பட்டது.

படப்பிடிப்பினூடேதான் ஜெயா பாதுரி தன் முதல் குழந்தை ஸ்வேதாவைப் பெற்றெடுத்தார். அந்த ஸ்வேதாதான் இப்போது, மாடலாக, படைப்பாளராக, பத்திரிகையாளராக டெலி நடிகராக தூள் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

‘ஷோலே' படப்பிடிப்பின்போது, ஜெயா பச்சன், நான்குமாதக் கருவாக அபிஷேக் பச்சனைச் சுமந்து கொண்டிருந்தார். இதுவும் படம் விரைந்து வெளியிட முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றானது.

'ஷோலே' திரைப்படம் ஒட்டு மொத்தமாக உருவாகி வெளியிட 500 நாட்களாயின.

குரோசாவா அகிராவின் (Akira Kurosawa) வின் பிரசித்திபெற்ற ஜப்பானியத்  திரைப்படம் ‘Seven Samurai’ (1954). 16-ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் (1586) நடந்த ஜப்பானிய வரலாற்றின் நிகழ்வைக் கொண்டு எடுத்த திரைப்படம்.

ஒரு மலைக்கிராமத்தின் அறுவடைக்குக் காத்திருக்கும் மொத்தப் பயிர்களையும் கொள்ளையடிப்பார்கள் கொள்ளையர்கள். அந்தக் கொள்ளையிலிருந்து, பயிரைக்  காப்பாற்றுவதற்காக ஏழு சாமுராய்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர் மலைக்கிராம விவசாயிகள். இந்த மூலக் கதையிலிருந்துதான் ‘ஷோலே’ திரைப்படமானது.

ரயில் சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டால், 1903 ஆம் ஆண்டு வெளிவந்த பேசாபடமான ‘The Great Train Robbery’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதாகும்.

‘ஷோலே’யில் பயங்கர ஆயுதங்களோடு யாருக்கும் அடங்காத கொள்ளைக்காரன் கப்பர் சிங்கைப் (அம்ஜத்கான்) பிடிக்க இரண்டு கிரிமினல்களை (தர்மேந்திரா, அமிதாப்பச்சன்) கூலிக்கு அமர்த்துகிறார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஞ்சீவ் குமார். இதுதான் திரைப்படத்தின் கரு

‘மெஹ்பூபா மெஹ்பூபா,
குல்ஷன் மெய்ன் குல் கில்தே ஹே,
ஜப் செஹ்ரா மெய்ன் மில்தே ஹே,
மெய்ன் அவுர் தூ’ 

- என்ற புகழ்பெற்ற ‘ஷோலே’ பாடல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனித்த கிரேக்கப் பாடகர் டெமிஸ் ரூசோஸின் (Demis Roussos)

‘Say You Love Me
Of all the things you're telling me,
I ever heard you say’ 

-என்ற பாடலிலுள்ள ராகத்தின்  அப்பட்டமான ஜிராக்ஸ் பிரதிதான் என அப்போது விமர்ச்சனமும் எழுந்தது. ஆனால், ‘மெஹ்பூபா’ பாடலுடன் நில்லாமல், ஒரு சரித்திரமும் சொல்லும்.

கப்பர் சிங்கிற்கு ஆயுதம் வழங்கும் ஜிப்ஸிகள் கப்பர் சிங் தங்கள் பகுதிக்கு வருவதைத் தாக்கூருக்குத் (சஞ்சீவ் குமார்) தெரிவிக்க, வீருவும் (தர்மேந்திரா) ஜெய்யும் (அமிதாப்) கப்பர் சிங்கைப்பிடிக்க ஜிப்ஸிகள் பகுதிக்கு வருகை தருவார்கள். அப்போது, ஆடலர் ஹெலனும், ஜலால் ஆகாவும் பிரத்யேக தோற்றத்தில் ஆடிப் பாடுவார்கள். இந்த பாடலுக்கு ஃபில்ம் ஃபேரின் சிறந்த பாடகர் விருது, பாடகர் ஆர்.டி. பர்மனுக்குக் கிடைத்த்து. பின்னாளில் இந்த பாடலின் ராகம், பாடகர் மகேஷ் குமாரினால் மும்பையின் திருமண மண்டபங்களில், ‘லட்டு லா லட்டு லா, மிர்சிஸ் மூ ஜல்தா ஹை’ என்ற வரிகளோடு  வரலாறானது. ஆர்டி பர்மனும், ஆனந்த் பக்சியும் கலை ரசிகர்களின் உள்ளங்களை இதுவரையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதும் உண்மை.

107 நிமிடத்திற்குப் பிறகுதான் கப்பர் சிங் திரையில் தோன்றுவார். அதுவரை அவரைச்சுற்றியே கதை இயங்கிக் கொண்டிருக்கும்.

தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத்கான், ஹேமமாலினி, அமிதாப் பச்சன், ஜெயபாதுரி, அஸ்ரானி, ஜெக்தீப், ஹெலன் என நடிகர் பட்டாளம் அணிவகுத்து நிற்கும்.

படத்துக்கு முன்பதிவு பிரமாதமாக இருந்தது. ஆனால், சொல்லி வைத்தார் போல, எல்லா பத்திரிகைகளும் ‘படம் தேறாது’’ என்று விமர்சனம் எழுதியதால், மொத்த திரைப்பட யூனிட்டும் அதிர்ச்சிக்கு ஆளானது.

முதல் வாரத்தில் இயக்குநர் ரமேஷ் சிப்பி குழம்பித்தான் போனார். பம்பாய் மினர்வா அரங்கம் நிறைந்த இருக்கைகளுடன் நிசப்தமாகவே இருந்தது. விநியோகிஸ்தர்கள், விளம்பரதாரர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் ‘இது தங்கள் பேரழிவின் தொடக்கமோ?’ என்று அச்சப்பட்டதாக பின்னாளில் அறிவிக்கிறார்கள்.

இந்தியா டுடே (India Today) இதழின் புகழ்பெற்ற திரை விமர்ச்சகர், கே.எம்.அல்மாதி, "எல்லாமே முடிந்துவிட்டது. சக்திவாய்ந்த உரையாடல்களால் கூட ஒரு கைதட்டலையோ, விசில் சத்தத்தையோ ரசிகர்களிடமிருந்து பெறமுடியவில்லை!" - என்று எழுதினார்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. அகன்ற திரையிடலும், ஸ்டீரியோ ஃபோபோனிக் ஒலி அமைப்பின் தன்மையும் ரசிகர்களை இருக்கைகளுடன் கட்டிப் போட்டுவிட்டதே உண்மை. பம்பாய மினர்வா அரங்கின் கைதட்டல், விசில் சத்த ஒலிகள், அமிதாப் தர்மேந்திராவின் மரணக் கணங்கள சிதறடிக்க, ஜெயபாதுரி வருகை அரங்கில் கண்ணீரால் நிறைத்த்து.

இரண்டு ஆண்டுகள் ஓடிய ‘பர்சாத்’,  (Barsaat-1949), மூன்று ஆண்டுகள் ஓடிய ‘முகல்லே ஆஸம்’, (Mughal-e-Azem- 1960), மூன்றரை ஆண்டுகள் ஓடிய ‘கிஸ்மத்’ (Kismet-1943) இவைகளின் சாதனைகளை ஷோலே முறியடித்தது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஓடி சரித்திரச் சாதனை புரிந்தது.

சென்னை சத்யம் திரையரங்கில் ஓராண்டிற்கும் அதிகமாக வழக்கமான திரையிடலில் (ரெகுலர் காட்சிகளாக) ஓடிய முதல் தமிழல்லாத படம் ‘ஷோலேவாகத்தான் இருக்கும்!

வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவான ‘ஷோலே’ 30 கோடி வசூலை அள்ளித் தந்த்து. ரஷ்யாவில் மட்டும் ஆறு கோடி ரசிகர்கள் ‘ஷோலே’ படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார்களாம்.

கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் மனம் கவர்ந்த மிகப் பெரிய வில்லன்கள் பட்டியலில் அம்ரீஸ் பூரி (Mr India), ராமதிர் சிங் (Gangs Of Wasseypur),  பிரேம்நாத் (Bobby),  ரன்வீர் சிங் (Padmaavat), சஞ்சய் தத் (Kancha Cheena) போன்றோரைப் பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தில் 'கப்பர் சிங்' அம்ஜத்கான்தான் அமர்ந்துவிட்டார்.

‘ஷோலே’ திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், கதை சொன்னவிதம், முதன் முறையாக ஸ்டீரியோஃபோனிக் ஒலி அமைப்பில் அசத்திய பிரம்மாண்டக் காட்சிகள், இந்தியாவின் முதல் அகன்ற 70 எம். எம். திரையிடல், பாடல்கள், காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்கள், இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள், புதுமையான அமிதாப்பின் மேனரிஸங்கள், கப்பர் சிங் வில்லன் பாத்திரம், சாதாரண ரசிகனைத் திருப்திப்படுத்தும் விதங்கள் எனச் சொல்லிக் கொண்டேபோகலாம்.

முதன்முறையாக இந்தியத் திரைப்பட வரலாற்றில் 100 திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் ‘ஷோலே’. அத்துடன் 60 திரையரங்குகளில் பொன்விழாவும் கண்ட படம் அது.

2002 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த 10 திரைப்படங்களில் ‘ஷோலே’ முதலிடத்தைப் பிடித்தது. 2005 ஆம் ஆண்டு நடந்த 50-ஆம் ஃபில்ம்-ஃபேர் விருது விழாவில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த படமாகவும் ‘ஷோலே’ விருதுபெற்றது.

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் 3 D வடிவிலும் ‘ஷோலே’ மறுவெளியீடு செய்யப்பட்டது. படத்தின் ஒலிச்சித்திரம் மற்றும் உரையாடல்கள் தனித்தனி  இசைத்தட்டுகாளாக வெளியாகிச் சாதனைகள் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் வெளியீட்டிற்கு முன், வெற்றிபெறுமா, பெறாதா என்பது பற்றிய முடிவை எந்தக் கொம்பனாலும் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு, ‘எதனால் படம் வெற்றி பெற்றது?’ அல்லது ‘தோல்வியுற்றது?’ என்பதனை விளக்க ஒரு கோஷ்டியே வரிசைகட்டும் என்பார் சுஜாதா.

ஷோலே’ வெற்றிக்குப் பிறகு அப்படித்தான் எண்ணற்ற கட்டுரைகள், விமர்ச்சனங்கள் வந்தன. அவற்றில் சுவாரஸ்யமான விசயங்கள் இவை:

‘ஷோலே’ வெற்றிக்குப் பிறகு இந்தித் திரைப்படங்களின் வில்லன் பாத்திரங்களில் அம்ஜத்கானின் கப்பர் சிங் மேனரிஸங்கள், உரையாடல் பாணிகள் எனப் பாலிவுட் மாறத் தொடங்கியது.

பாலிவுட.டின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்க, ‘இப்ப தூங்கலன்னா கப்பர் சிங் வந்துருவான்’ (soja beta warna gabbar jaigea -sleep baby else Gabbar will come) என்பது போன்ற வசனங்களைப் பேசத் தொடங்கினார்கள்.

ஒரு வில்லன் விளம்பரப் படத்தில் நடிப்பதைத் தொடங்கி வைத்தவர் அம்ஜத்கான். ‘கப்பர் சிங்’ பாத்திரமாகவே பிரிட்டானியா குளுகோஸ் பிஸ்கட் விளம்பரப் படத்தில் ஒருவர் நடித்தார் (Popularly known as Gabbar Ki Asli Pasand)

இந்த அம்ஜத்கானைத்தான் சுஜாதாவின் கதையில் உருவான ‘விக்ரம்’ (1986) படத்திற்குச்  சலாமியா நாட்டின் சுல்தானாகக் கொண்டுவந்தார் கமல்ஹாஸன்.

‘ஷோலே’யின், பிரம்மாண்ட வெற்றியின் 16 ஆண்டுகள் கழித்து, மீண்டும் 1991-ஆம் ஆண்டு, அம்ஜத்கானைக் கதாநாயகனாக வைத்து ‘ராம்கர் கி ஷோலே’, (Ramgarh Ke Sholay) என்ற பகடிப் படம் ஒன்றும் வெளிவந்த்து.

‘ஷோலே’ படம் பற்றிய சில புத்தகங்கள்கூட வெளியாகியிகியுள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், பென்குவின் வெளியீடாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Sholay : The Making of a Classic’ என்ற நூலை சொல்லலாம்.

‘ஷோலே’ குறித்து இந்தியா முழுவதும் நிறைய விவாதங்கள், ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இரட்டையர்களில் ஓருவரான ஜாவேத் அக்தர், ஒரு நேர்காணலில் ‘ஷோலே’ படத்தின் கதை பல வரலாறுகளைக் கண்டது என்று கூறியிருக்கிறார்.

‘ஷோலே’ திரைப்படத்தில் மேற்கத்தியப் படங்களின் சாயல் இருப்பது விமர்ச்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டன.

உலகத் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற இயக்குநர்களுள் குறிப்பிடத் தக்கவர் இத்தாலியின் செர்ஜியோ லியோன்.

இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஒன்ஸப்பான் ஏ டைம்’ பட வரிசையில், ஹென்றி ஃபான்டா, சார்ல்ஸ் ப்ரான்ஸன் என நட்சத்திரப் பட்டாளம் கலக்கிய ‘ஒன்ஸப்பான்ய  டைமின்தி வெஸ்ட்’ (Once Upon a Time in the West)- படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது. அதில் முதன் முறையாக வில்லன் பாத்திரத்தில் ஹென்றி ஃபான்டா கலக்கியிருப்பார்.

அந்தப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் பார்த்துவிட்டதாக ஒரு நேர்காணலில்  குறிப்பிட்டார் ஜாவேத் அக்தர். அதன் பாதிப்பை ‘ஷோலே’யின் பல காட்சிகளில் காணலாம்.

‘ஷோலே’ படத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விமர்ச்சிக்கும் கட்டுரை ஒன்றைச் சாகித்ய விருதாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2005 ஆம் ஆண்டு எழுதும்போது, ‘ஷோலே’ திரைப்படம் பத்து ஆங்கிலப் படங்களின் காட்சிகள், கதை வடிவங்களைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘The Great Train Robbery (1903), ‘Seven Samurai ( 1954), ‘Garden Of Evil’ (1954), ‘The Searchers’ (1956), ‘One-Eyed Jacks’ (1961), ‘Once Upon a Time in the West’ ( 1968), ‘Butch Cassidy and the Sundance Kid’ (1969), ‘The Wild Bunch’ (1969) என்று பட்டியல் நீள்கிறது.

இத்தனை படங்களிலிருந்து காட்சிகள், பாத்திரங்களின் மேனரிஸங்கள், பாடல்களின் பாணி, உருவி எடுக்கபட்டிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தனையும் தங்களது படத்திற்கு தேவையான முறையில் உருமாற்றித் திரைக்கதையை உருவாக்கியவர்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் (சலீம் அப்துல் ரஷீத்கான், ஜாவேத் அக்தர்) என்கிறார்கள் அவர்கள்.

‘ஷோலே’ படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் திடுக்கிட வைக்கின்றன.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது. ‘படத்தில் வந்த சில காட்சிகள் சாதாரண கற்பனையில் தோன்றக்கூடியவை அல்ல’ - என்கிறார், சாகித்ய விருதாளர் அசோகமித்திரன்.

உலகத்தின் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்து, மக்கள் அதிகமாகப் பேசத் தொடங்கினால், அதுகுறித்து கருத்துச் சொல்லி ஒரு கட்டுரை எழுதும் பழக்கமுடையவர் இவர். 2008 ஆம் ஆண்டு ஜூலை 21-இல், ‘ஷோலே’ திரைப்படம் பற்றியும் எழுதினார்.

‘கப்பர் சிங்கின் நக்கலான வசன உச்சரிப்பும் சட் சட்டென்று மாறும் முகபாவனைகளும் கவர்ந்திருக்கின்றன. ஆனால், ‘ஷோலே’யின் பெருவெற்றிக்கு அமிதாப்பின் உடல்மொழி முக்கியமான காரணம் - என்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும், ‘ஷோலே’ எழுபத்தெட்டில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன்.  அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு மாணவன்’ - என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மை என்னவென்று பார்ப்போம்.

1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள்  இந்தியா முழுவதும் வெளியான ‘ஷோலே’ திரைப்படம், அதே நாளில் சென்னையில் சத்யம், காசினோ, பைலட் திரையரங்குகளில் வெளிவந்தது, மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதைப் பதிவுசெய்கிறார் இந்தியத் திரைப்பட வரலாற்றாய்வாளரும் தமிழ் சினிமாவின் நடமாடும் தகவல் களஞ்சியமுமான ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்.

இதுவரை சொல்லப்படாத மிகச்சிறப்பான கதை என ‘ஷோலே’ திரைப்படம் புகழப்பட்டாலும், அதன் திரைக்கதாசிரியர்கள் சலீம் – ஜாவேத் மீது சில விமர்ச்சனங்களும் வந்தன.

1.’பானி அன்ட் க்லைட்’ (1967):

‘க்லைட் பாரோ’ (Clyde Barrow) மற்றும்   எலிஸபெத் பார்க்கர் (Bonnie Elizabeth Parker) - இருவரும் கிரிமினல் இணையர்கள். வங்கிக் கொள்ளைக்குப் புகழ்பெற்றவர்கள். இவர்களின் வாழ்க்கை நிகழ்வைச் சித்தரிக்கும் படம்தான் ’பானி அன்ட் க்லைட் (Bonnie and Clyde’) 1967 ஆம் ஆண்டு வெளியாகி, புதிய ஹாலிவுட் கலாச்சாரத்தை உருவாக்கிய படம் இது. செக்ஸ், வன்முறை, கொடுமையான மரணம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கும் புதிய திரைப்படங்களுக்கு மூலப்படமாக அமைந்த படம். விருதுகளைக் குவித்ததோடு, கலாச்சார, வரலாற்று ரீதியான அழகியல் படமென்று 1992-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில்  பதிவுசெய்யப்பட்ட படம்.

2.’புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’ ( 1969) :

வங்கி மற்றும் ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு, மரணித்த பின்பும் பல கொள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையைத் திணறடித்த இரட்டைக் கொள்ளையர்களான புச் கேசிடி மற்றும் சன்டேன்ஸ் கிட் ஆகிய இருவரின் வாழ்க்கையைப் பிரதிபலித்த படம் இது.

பால் நியூமனும் ராபர்ட் ரெட்ஃபோர்டும் இரட்டைக் கொள்ளையர்களாகக் கலக்கிய படம். பல விருதுகளையும் பெற்றது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்க நூலகக் காங்கிரஸின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில் (National Film Registry) பதிவுசெய்யப்பட்ட திரைப்படம் ‘புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’, (Butch Cassidy and the Sundance Kid-1969) இந்த இரண்டு படங்களையும் உல்டா பண்ணி ‘ஷோலே’ திரைப்படத்தில்  தெளித்திருக்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் என்ற விமர்ச்சனம் அது.

இந்த விமர்ச்சனம் ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ‘ஷோலே’யின் அற்புதக் கேமிராக் கோணங்கள், இயக்கம், மக்களோடு ஒன்றெனக் கலந்திட்ட வசனங்கள், நடிகர்களின் இயல்பான நடிப்பு, பாடல்கள், தர்மேந்திரா - அமிதாப் வசனங்களில் தெறிக்கும் நட்பின் மேன்மை போன்றவை சினிமா இதயங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

படத்தில் கப்பர் சிங்கின் வசனமொன்று வரும், "கப்பர் கே டாப் சே தும்ஹே ஏக் ஹை ஆத்மி பச்சா சக்தா ஹை, ஏக் ஹை ஆத்மி ... குட் கப்பர்" (There is only one man who can save you from Gabbar's heat, only one man...Gabbar himself.) இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்:

‘உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் உங்களைக் காப்பற்றிக் கொள்ளவேண்டும். தற்போதயக் கொரோனா தீநுண்மி கிருமித் தொற்றும் அதைத்தான் நமக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறது.

'''''''''''''''''''''''

விமர்சகர்: பென்ஸி. (Kadayanallur Benzy - https://www.facebook.com/kadayanallur.benzy)

Thursday, August 27, 2020

அந்த இரண்டு இளம் மீட்பாளரும், தூக்கணாம் குருவி குஞ்சுகளும்

 

மித்ரன் மற்றும் வர்சா எப்போதும் போல் தங்கள் ஊரை சுற்றி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மழை நீர் தேங்கிய சதுப்பு நிலத்தில் வளர்ந்திருந்த யானைத்தட்டை புற்கள் செழித்த புதர் காட்டின் கரையோரம் அநாதரவாக தரையில் கிடந்த தூக்கணாங்குருவி கூடு ஒன்றை கண்டனர்.

யாரோ மாட்டுக்கு புல் அறுத்தவர்கள் உச்சிப் புல்லை வளைத்து, கோர்த்து, இணைத்து கட்டியிருந்த கூட்டை அகற்றி பொருட்படுத்தாமல் தரையில் வீசிச்சென்றுள்ளனர்.

கீழே கிடந்த கூட்டை அந்த இரண்டு சிறுவர்கள் கையில் எடுத்து சோதனை செய்ததில் உள்ளே நான்கு இளம் குஞ்சுகள் இருந்துள்ளன.

சரி நமக்கென்ன கவலை என்று அப்படியே கிடத்திவிட்டு கடக்கவில்லை அந்த குழந்தைகள்.

மித்ரன் மற்றும் வர்சா நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுவர்கள். நண்பர்கள் இருவரும் அந்த குஞ்சுகளை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை விவரித்தனர்.

மாலையில் மீட்கப்பட்ட இளம் குஞ்சுகள் இரவு முழுதும் அந்த குழந்தைகள் அரவணைப்பில். குஞ்சுகள் பசியால் வாடும் என்று அந்த குழந்தைகள் புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்து உணவாக கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் குழந்தைகளின் பெற்றோர்கள் 'ஊர்வனம்' குழுவினரை அண்ணன் இறகுகள் ரவீந்திரன் மூலம் நம்மை தொடர்பு கொண்டனர்.

ஊர்வனம் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு குழந்தைகள் மித்ரன் மற்றும் வர்சா உடன் விரைந்து சென்றனர். குஞ்சுகள் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

உயர்ந்த வசதியான பெரும் குடியிருப்புகளுக்கு நடுவே யானைத்தட்டை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் அது. 

அங்கு பெரும் கூட்டமாக தூக்கணாங்குருவிகள் குடியேறி இருந்தன. ஆங்காங்கே கூடுகள் கட்டப்பட்டிருந்ததையும் பெற்றோர்கள் கூட்டுக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. கூடுகளில் இருந்து வெளிவரும் அழகிய இசையில் உள்ளே குஞ்சுகள் உள்ளது உணரப்பட்டது.

கரையோரம் இருந்த புற்கள் அறுக்கப்பட்டிருந்தன. அறுபட்ட புல்லில் கட்டப்பட்டிருந்த கூட்டை அகற்றி கீழே வீசிச்சென்று புற்களை எடுத்து சென்றுள்ளனர்.

சரி குஞ்சுகளை நாம் எடுத்து சென்று இரையை ஊட்டி வளர்க்கும், ஒரு சவாலான, ஆபத்தான பணியைவிட, அதை காணாது தவிக்கும் பெற்றோர்களுடன் சேர்ப்பதுதான் சிறப்பானது.

கூடு கீழே கிடந்த சரியான இடம் கண்டறியப்பட்டது. அதன் அருகில் உயரே வளர்ந்து இருந்த புல்லின் சதுப்பு நிலப் பகுதியில் மீட்புக்குழுவினர் இறங்கினர். வேறு வழியில்லாததால், தூக்கணாங்குருவி போல் அருகருகே இருந்த வெவ்வேறு புல்லின் உயர்ந்து வளர்ந்த நுனிப்பகுதியை வளைத்து, இணைத்து கூடு மீண்டும் உயரே நான்கு குஞ்சுகளுடன் கட்டி விடப்பட்டது.

மித்ரன், வர்சா என்ற இரண்டு இளம் மீட்பாளர்கள் குருவியின் குடும்பத்தை இணைக்க மேற்கொண்ட சிரமங்கள், அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக "பல்லுயிர் ஓம்புதல மாந்தர் இயல்பு" என்ற கருத்தை உணர்த்துகிறது.

வாழ்த்துகள் மித்ரன் மற்றும் வர்சா...

படம், தகவல்: Vishwa Wishtohelp - https://www.facebook.com/vishwanath.vishwa.507
ஊர்வனம் :: Urvanam
விலங்குகள் மீட்புக்கு
8608700088

'''''''''''''''''''''''''

தூக்கணாம்குருவிகளின் வாழ்வியலை அறிய இணைப்புக்கு: https://www.youtube.com/watch?v=on__YmwEm1U&t=14s

Wednesday, August 26, 2020

பையன்னா பரவாயில்ல; பொண்ணுன்னா செலவா?

 

"யார் மூன்று பெண் குழந்தைகள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறினார். அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா? இறைவனின் திருத்தூதரே?” – என்று கேள்வி எழுப்ப, ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார். இத்தகைய உயரிய பெற்றோரின் சுவனச்சீட்டுகளாக இருக்கும் பெண் குழந்தைகள் நடப்பைக் குறித்து விளக்கியிருக்கிறார் புளியங்குடி சையத் அலி 
 
''''''''''''''''''''''''
என்னங்க நாலாவதும் பொண்ணா?"

"நாலும் பொட்டப்புள்ளையா பெத்து வெச்சுருக்கீங்க கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா யார் உங்கள பாத்துக்குவா, இதுக்குத்தான் பையன் வேணும்ங்கறது"

"என்ன இருந்தாலும் குடும்பத்துக்கு வாரிசு வேணாமா?"

"பொம்பளப் புள்ளைக வேணுந்தான் ஆனாலும் கடைசி வரைக்கும் பசங்க தான் வருவாங்க"

இந்த சொல்லாடல்கள் எல்லாம் கிராமப்புறங்களைத் தாண்டி, ஹைடெக் சிட்டிகளான பெருநகரங்களில் பேசப்படுகின்றன.

கொஞ்ச நாள் முன்னாடி கூட விஜய் டிவி ‘நீயா நானால’ "பெண்களுக்கு சொத்து பிரிச்சு குடுக்கறது" சம்பந்தமா தலைப்பில விவாதம் நடந்துச்சு. வீட்டுல மூத்த ஆம்பளைங்கனு பேசுன பசங்கள்ள பாதி பேர் "அதான் கல்யாணத்துக்கு செய்றோம்ல அப்பறம் வந்து சொத்துல பங்கு கேக்கக் கூடாதுனு பேசுனாங்க".

“அப்ப உன் பொண்டாட்டிக்கும் இதே பார்முலாவை அப்ளை பண்ணிடலாம்லனு யாராச்சும் கேட்ருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.

ஆனா, யாரும் கேட்கல.

பெண் குழந்தைகள் எல்லாம் இவங்களப் பொறுத்த வரைக்கும் பாரம், வீண்செலவு, தண்டச் செலவுனு சொன்னா சரியாருக்கும்.

இதுவே ஆம்பளப் பயலுகளுக்குனா அது முதலீடு, ஃபிக்ஸ்ட் டெபாசிட் மாதிரி. இப்ப செலவு பண்ணாலும் பின்னாடி அவன வெச்சு ஒரு வியாபாரம் பாத்து, விட்ட காசப் பிடிச்சர்லாம்னு ‘காம்பிளிங்’ (Gambling) கணக்கா பேசுவாங்க. பேசறதோட மட்டுமில்ல; அதுதான் இப்ப வரைக்கும் நடைமுறையிலும் இருக்கு.

என் மகனுகென்ன கொறச்சல்? 50 பவுன் நகை கூட இல்லாம ஏன் கல்யாணம் பண்ணனும்னு? - பேசற தாய்மார்கள்,

“ஒன்னும் இல்லாத இடத்துல கல்யாண பண்ணா குறை இருக்குனு நெனச்சுருவாங்க. ஒத்தப் புள்ளைய வெச்சுருக்கேன் அவனுக்கு இல்லாததா? அவனுக்கு செய்யாததா?” அப்டினு மடில போட்டு தாலாட்டுவாங்க.

சரிதான்! இதெல்லாம் தாய்மார்கள் டிபார்ட்மெண்ட்.

"நான் படிக்காதத என் மகன் படிக்கணும்!”

“எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கணும்!”

“சொத்து சேக்கணும்"

இந்த தாறு-மாறு கனவுகள் எல்லாம் தகப்பன்களோட டிபார்ட்மெண்ட்.

ரெண்டாவது படிநிலைகள் நான் சொல்றது. இதுவே வீட்ல ஒரு பொண்ணு ஒரு பையன்னா, அந்தப் புள்ள பெருசோ, சிறுசோ இவன் சொல்றதக் கேட்டுத்தான் நடக்கணும். அவனுக்கு தெரியாததா உனக்கு தெரிஞ்சுடும்? அவன் நாலு இடத்துல சஞ்சரிப்பவன்னு வசனம் பேசுவாங்க.

ஒரு காலத்துல பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊத்தி கொல்றதையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. இப்போ, அந்தளவுக்கு சீரியஸா இல்லனா கூட, இவங்க பொம்பளப் புள்ளைகள ட்ரீட் பண்ற விதத்துக்கே முதல்ல கேஸ் போட்டு உள்ள தள்ளணும்.

படிக்காதவன் தான் இப்படியெல்லாம் பண்ணுவான்னு நீங்க தீவிரமா நம்புனீங்கன்னா, கடைசி வரைக்கும் அப்டியே தான் நம்பணும். ஏன்னா படிச்சவங்க கொஞ்சம் டீசன்ட்டா சுத்துவாங்க இதோ இப்படி: “கஷ்டப்பட்டு ஒரு டிகிரி படிக்க வெச்சுட்டேன்; கட்டிக் குடுத்தா போதும்னு”

கள்ளிப்பால் கொடுத்து கொன்ன காலகட்டத்துல இருந்து வெளிய வந்துட்டோம்னு சந்தோஷப்பட்டுக்கலாம் தான். ஆனா இப்பவரைக்கும் பையன்னா பரவால்ல; பொண்ணுனா செலவளிக்கனும்னு யோசிக்கிற 80% பேர் இருக்கத்தான் செய்றாங்க.

குழந்தைகள் உங்க கௌரவத்துக்கான அடையாளம் இல்ல. அது உங்களால் இந்த உலகத்துக்கு வந்த ஒரு உயிர் அவ்வளவுதான்! பெத்துட்டீங்கங்கறதுக்காக உங்க கௌரவத்தையெல்லாம் அவங்க தலைல கட்டாதீங்க! உங்க ஆசையெல்லாம் அவங்க மேல திணிக்காதீங்க! எல்லாத்தையும் தாண்டி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் ஒண்ணுதான்! தராசுல வெச்சு இது ஒசத்தியான புள்ள; இது மட்டமான புள்ளன்னு எடை போடாதீங்க!
''''''''''''''''''''''''''''''

நன்றி:  புளியங்குடி சையத் அலி (https://www.facebook.com/puliangudiseyad.ali)


Monday, August 17, 2020

இப்படிதான் யானை கவுணி 'மினி ராஜஸ்தான் ஆனது!

 
ஒரு காலத்தில், யானை கவுணியில்தான், அநேக பிராமணர்கள் வசித்தனர். இவர்கள் பெரும்பாலும், ஆற்காடு, ஆரணி, வந்தவாசி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். கொச்சையான கிராமிய தமிழுக்கு சொந்தக்காரர்கள். கரிய நிறங்கொண்டவரகளாக (பிராமணரா என்று யூகிக்கும் வகையில்) இருப்பினும், தீர்க்கமான கருட மூக்கு கொண்டவர்கள்.

அப்போதெல்லாம் அனுமாருக்கு சாத்தப்படும் வெங்காய நிறத்தில் ஶ்ரீசுர்ணம் தான் இட்டுக் கொள்வார்கள்.

ஒரு பக்கம் கோமுட்டிகளும், இன்னொரு பக்கம் செட்டியார்களும், மறுபக்கம் முதலியார்களும் வாழ்ந்த இடம். கணிசமாக மார்வாரிகளும் இருந்தனர்.

உலகப்புகழ் பெற்ற வால்டாக்ஸ் ரோடில் திருப்பதி குடை அழகு.

நாயுடு சமூகத்தினரின், ஆத்மார்த்த பெருமாள் பஜனை, நம்முடலில் புது ரத்தம் பாய்ச்சும்.

தமிழ் மொழியில் ‘ல, ள, ன, ண, ழ’ வித்தியாசத்தைக் காதுக் கொடுத்துக் கேட்கலாம்.

பைராகி மடம் கோயில் மினி திருப்பதி. வைகுண்ட ஏகாதசியன்று, மார்வாடி உபயத்தில், நாட்டுச் சர்க்கரை. அது தேவாமிருதம்.

விடிய விடிய பரம்பத விளையாட்டுக்கள்தான்.

பிரம்மோற்சவம் நடக்கும் தருவாயில், பாண்ட் வாத்தியத்தோடு, கிளாரிநெட் மற்றும் சாக்ஸ்போன் (clarinet & saxophone) வாசிப்பு நாடி நரம்புகளை என்னமோ செய்யும்.

மூங்கிபாய் ஸ்கூல்தான், மேல்தட்டு பெண்கள் படிக்கும் பள்ளி. இந்து தியாலஜிகல் (Hindu theological) ஆண்களுக்கான பள்ளி. ஜிஎம்டிடிவியில் (GMTTV) முதலியார்கள் பரவலாக படித்தார்கள். ரிக்ஷாவில் செல்பவர்கள் மார்வாரிகள் மற்றும் மேல் தட்டு மக்கள். மின்ட் தெருவில், உள்ள டாக்டர் PT.ராமலிங்கம் ஒரு ஊசி போட்டா கொரானாவே காலியாகும் அவ்வளவு ராசியான டாக்டர்.  

சென்னை தமிழ் அழகு. "நீ வா சார்" என்று ரிக்ஷாவாலா பேசுவது, ஜெல்லாஸ்பத்திரி என்று GHஐ சொல்வது, பால் மாறாம, ஜல்ப்பு (ஜலதோஷம்), பழுப்பு (pipe), இட்னு, கவுச்சி, குந்திக்குனு, நாஸ்தா, நோவு இப்படி தமிழ் அழகு.

பிராமணர்கள் திராபை, ஜபர்தஸ்து என்கிற வார்த்தைகளை பிரோயிகித்தனர்.

ஆண்டாள் பாசுரம் அநேகருக்கு அத்துப்படி. அருணாசலேஸ்வரர் கோயில்தான் எங்களுக்கு திருவண்ணாமலை. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மகாசிவராத்திரி எல்லாம் யாருக்கும் தெரியாது. செவ்வாய் வெள்ளி மட்டும் காளிகாம்பாள் கோயிலில் கூட்டம். இப்போதெல்லாம் திருவேற்காடு எங்களுக்கு தூரதேசம், "திருவேற்காடா போயாந்தே" எம்மாந் தொலவுன்னு வெகுளியாக சென்னை தமிழில் கேட்பது கொள்ளை அழகு.

டவ்டனை, டfton என்பதும், புரசைவாக்கத்தை, பொரஷவாக்கம் என்பதும், விருகம்பாக்கத்தை விரியம்பாக்கம் என்பதும், ஃபேனைத் துடை என்பதற்கு ஃபேனைத் தொடி என்பதும், குன்சா என்று சொல்வதும் பேஜார், பேமானி, கசுமாலம் என்கிற வார்த்தைகள் எங்கே?

சென்ட்ரல் ரெயில் நிலையம், எங்களுக்கே சொந்தமானது போல் ஒரு அந்நியோநியம்.

அரிசி போடுவதற்கு, நெல்லூரிலிருந்து, நடிகர் ரங்காராவ் போல கம்பீரமாய் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு 6 அடி மனிதர் வீட்டிற்கே வருவார். பக்கத்தாத்து வக்கீல் பாட்டிதான், நம் பிள்ளைகளுக்கு பெயரே சூட்டுவார். “மைதிலி, இப்பத்தான்டி, நான் ஸ்ரீவில்லிபுத்தூர் போய் ஆண்டாளை சேவிச்சிட்டு வரேன். உன் பொண்ணுக்கு ஆண்டாள்ன்னு பேர் வைடி!”- என்று சொல்ல, மகிழ்ச்சியோடு ‘ஆண்டாள்’ என்று பெயர் சூட்டப்பட்டது என் தங்கைக்கு.

பிராமணர்களில் அநேகம் பேர் அப்போது சீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், பெண்களாக இருந்தால் நப்பின்னை, கோதை, லட்சுமி என்று பேர் வைத்தார்கள். பிராமணர் அல்லாதார் எத்திராஜ், ராஜேந்திரன், கபாலி, சிங்காரம், பழனி, சபாபதி, மலைச்சாமி, பெண்களாக இருந்தால், கயல்விழி, மோகன சுந்தரி, சுகந்தி, சாந்தி, விஜயலட்சுமி, உமா.

அப்போதெல்லாம், உடுப்பி ஹோட்டல்தான்! ஆனால் சுவை அதன் நறுமணம் நாலு தெருக்களுக்கு வீசும். அசைவம் என்றால், மதுரை முனியாண்டி விலாஸ்தான். எங்கு பார்த்தாலும் போக்குவரத்து கிடங்கிகள்தான் (transport godown)

கொத்தவால் சாவடி தான் அன்றைய கோயம்பேடு. நெய் வாங்கனும்னா கிரி டிரேடர்ஸ் என்கிற பெருமாள் செட்டி அண்ட் கோ. தாமரை இலையில் கட்டிக் கொடுப்பார்.ராயபுரம் கல்மண்டபம் அருகே அரிசி பருப்பு கிடைக்கும். அப்பவே “ஹோட்டல்க்கா?”, “வீட்டுக்கான்னு?” கேட்டார்கள். 

அவ்வளவு நேர்மை?

வருஷத்திற்கு ஒரு தபா, எல்லோருக்கும் டைபாயிட் (typhoid) வரும்.

விநாயக சதுர்த்தி, திருப்பதி குடை மற்றும் ஆடி மாதம் லைட் மியூசிக் ரொம்ப பிரபலம். எம்எஸ்வி, மாஸ்டீரியோ, சங்கர் கணேஷ் (MSV, MAESTERO, SHANKAR GANESH) ஆரம்ப கால டிஆர் (TR) பாடல்கள்தான் அப்போ ஹைலைட்.

சின்னகடம்மன் கோயிலில், எல்ஆர். ஈஸ்வரி செல்லத்தா, செல்ல மாரியத்தான்னு ஆடி மாதம், லைட் மியூசிக்ல பாடும் போது ஒட்டுமொத்த மக்களையும் சாமியாட வைத்தது கின்னஸ் சாதனைதான்.

திருவிளையாடல் ஒலிச்சித்திரம் எத்தனை முறை மகிழ்வித்தது!

புரட்சி செய்த வெளி மொழிப் படங்கள் சங்கராபரணம் 500 daysக்கு மேல் சத்யம் தியேட்டரில் ஓடியது. இந்த படம் வந்த போது, ரிக்ஷா வாலாகூட சங்கரா என்று ரம்மியமாக பாடினார். எஸ்பிபி பெருமளவில் ஈர்க்கப்பட்டார்.

என்டர்’ தி டிராகன் (ENTER THE DRAGON) ஆனந்த் தியேட்டரில் 365 நாட்கள், மரோசரித்ரா சபையர் (SAPPHIRE) தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், ஜாக்கி ஷரூப் (JACKIE SHEROF) நடித்த ஹீரோ இந்திப் படம் பத்மம் தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், 36 சாம்பர் ஆஃப் ஷாலின் (36 CHAMBER OF SHAOLIN) சபையர் (SAPPHIRE) தியேட்டர்ல 365 நாட்கள், இறுதியில் கியாமத்-ஸே, கியாமத்-தக் (QUATMAT SE QUATMAT TAK) எமரால்ட் (EMERALD) தியேட்டரில் 700 நாட்கள்.

மினர்வா (MINERVA) தியேட்டரும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரும், அற்புதமான ஹாலிவுட் படங்களை கீழ் தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்தது.

ஆங்கிலப் படங்களைப் பற்றிய அதீத அறிவு, கீழ்த்தட்டு மக்களுக்கு உண்டு.

ஒருமுறை, ஐ ஆஃப் தி நீடில் (eye of the needle) படம் பார்க்கும் போது, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த, ஒரு ரிக்ஷாகாரர், என்னைப் பார்த்து, இதில் வரும் ஹீரோ பேர் தெரியுமான்னார், தெரியலன்னேன். அவர் டொனால்ட் சுதர்லண்ட்ன்னார் (Donald Sutherland). அடுத்து இந்த ஹீரோவை பார்த்தா, யார் மாதிரி இருக்கு சொல்லுன்னார், மறுபடியும் தெரியலன்னேன், அந்த நபர், என்னைப் பார்த்து, உனக்கொன்னியும் தெர்லன்னு சொல்லி, நம்ம கமல் மாதிரி இருக்கான் பாருன்னு சொன்னார், அதே மாதிரி கண், நடிப்பு பாருன்னார். அந்த ரிக்ஷாகாரரை பார்த்து வியந்தேன் ஏனெனில் அந்த நடிகர் அப்படியே இருந்தார்.

ஒரே நேரத்தில், தீபாவளி ரிலீஸ், கிருஷ்ணா தியேட்டர்ல, கமலின் தூங்காதே தம்பி தூங்காதே, பாண்டியன் தியேட்டர்ல ரஜினியின் தங்க மகன். எப்புடி? கமல் ஸ்ரீதேவிதான் ஃபேமஸ்.

திமுக கோட்டை வடசென்னை என்பதால், என்விஎன் சோமு, டாக்டர் கலாநிதி (NVN SOMU, Dr.KALANIDHI) எல்லாம் தொகுதி பக்கம் வராமல் ஒவ்வொரு முறையும் ஜெயித்தனர்.

ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பொருள் பிரத்யேகம். ஆதியப்ப நாயக்கன் தெருவில், மளிகை சாமான்கள், நாராயண முதலி தெருவில், பிளாஸ்டிக், செம்பு தாஸ் தெருவில் இரும்பு சாமான்கள், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், எலக்ட்ரிக் பொருட்கள், பந்தர் தெருவில் (BUNDER STREET) எழுதுப்பொருட்கள். இப்படி ஒரே இடத்தில், எல்லா பொருட்களும் சகாய விலையில்.

பக்த பிரகலாதன் படம் பார்க்க டிவியில்தான்; ஒரு வீட்டில் நாலணா அதாவது 25 காசு கேட்கப்பட்டது. ஆனா என் ஹவுஸ் ஓனர் வீட்டில், தெருவே டிவி பார்த்து, மணிக்கணக்காக சிவாஜியின் நடிப்பை ஆராய்ச்சி செய்யும். அப்போது என்ன ஒரு குதூகலம் என்றால், “இந்த படத்துல சண்டை இருக்கா?”, “ஹை, ஜாலி!”- என்று சொல்வது.

ரேடியோ மாதிரி ஒரு சொர்க்கம் உண்டா? விவதபாரதியில், பாடல்கள் ஒலிக்கும் போது, நாளை இந்த வேளை என்று பாடும் போது ஆண்கள் கூட வாணிஸ்ரீ ஆகி அதே அபிநயம் செய்தனர்.

70 களில், மிகப்பெரும் மாற்றம் நடந்தது, ஒரு பக்கம், எம்எஸ்வி, டிஎம்எஸ். இன்னொரு பக்கம், டப்பாங்குத்து மியூசிக் டைரக்டர் என்று பேசப்பட்ட இளையராஜா வாழையில் ஊசி போல் நம் மனதில் கால் மேல் கால் போட்டுக் கொண்டார்.

சங்கர் கணேஷின், நான் கட்டில் மீது கண்டேன், டிஆர்ரின் வாசமில்லா மலரிது, சந்திரபோஸின் மாம்பூவே சிறு மைனாவே, மாஸ்டீரியோவின் இளைய நிலாவும் ஆக்கிரமித்தன.

அகஸ்தியா தியேட்டர், பைலட் தியேட்டர் மற்றும் தேவி தியேட்டர்களின் அகண்ட திரைகள் பிரபலமானவை.
 
மூர் மார்க்கெட் எங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்.

வண்டலூர் உயிரியல் பூங்கா யானை கவணிலதான் இருந்ததுன்னா, யாராவது நம்புவாங்களா? காலையில் சிங்கம் உறுமுவது எங்கள் வீட்டு மாடியில் கேட்கும். பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையத்திலிருந்து வரும் கரும்புகையை தினமும் சுவாசித்து வந்தோம்.

அப்போதே எங்களுக்கு, சாலையில், ‘இயேசுவின் ரத்தம் ஜெயம்!’ - என்று சொல்லி, புத்தகங்களையும், படங்களையும் விநியோகித்தனர். அதை வாங்கிக் கொண்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழித்தோம்.

கொண்டித்தோப்பில்தான், பாம்பு பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது.

சீனப் பல் மருத்துவர்கள் கணிசமாக ஈவினிங் பஜார் பகுதியில் இருந்தனர். அவர்கள் எங்கே என்று தெரியவில்லை.

அடிப்பட்டால், புத்தூர் கட்டுத்தான். மூலகொத்தளம் பஸ் ஸ்டாண்டில் வலிக்க வலிக்க ஆந்திரா பஸ்ஸில் ஏற்றி, புத்தூருக்குச் சென்று வெற்றிகரமாக கட்டுப் போட்டு, ஒரு சில வாரங்களில் சரியாகிவிடுவோம்.

கல்யாணம் என்றால், நாரயணமுதலி தெரு கோமிட்டி மண்டபங்கள்தான் சகாய வாடகையில்! கொஞ்சம் வசதியிருந்தால், கோவிந்தப்ப நாயக்கன் தெரு பெரிய மண்டபம்.

ஒரு முறை நடிகை பத்மப்ரியாவை (மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்) பார்த்தேன், தூரத்து சொந்தம்.

குலதெய்வம் கோயிலுக்கு போறாங்களோ இல்லையோ, திருப்பதி பெருமாள்தான் ஒட்டு மொத்த வடசென்னைவாசிகளுக்கு பேவரிட். வருடத்திற்கு என்ன, மாதாமாதம் விசிட் அடித்தவர்கள். சம்மரில் (SUMMER) திருப்பதியோ அல்லது திருத்தணி மொட்டை தலையரை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

மெல்ல மெல்ல பிராமணர்கள், நங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர் என்று வெகுஜனங்களோடு இடம் பெயர்ந்தனர். ஆகையால், இப்போது யானை கவுணி ‘மினி ராஜஸ்தான்’ ஆகிவிட்டது.

''''''''''''''''''''''''''''''''''''' 

(70 & 80களில் வடசென்னையில் (யானை கவுணி) பிறந்து வசித்த ஒரு சாமான்ய பிராமணரின் பதிவு இது. அவரது பெயர் குறிப்பிடவில்லை நண்பர் ரசூல் மொய்தீன் https://www.facebook.com/amrasoolmohideen பதிவில்)


Wednesday, August 12, 2020

முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி மறைந்தார்.

 முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி உடல்நலக் குறைவால் தனது 102 ஆம் வயதில் இன்று காலமானார்.

மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?

சின்னச் சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து

- போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியவர்தான் இந்த வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.

கண்களுக்குக் கண்ணாடி ஏதுமின்றி, 102 வயதைத் தொட்டும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக, அவரே சமைத்துச் சாப்பிட்டுத் தான் பெற்ற விருதுகளோடு சிறிய வீட்டில் வாழந்து வந்த  கவிஞரின் மரணம் அக்கிராமத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடத்துக்குள் ஒளிரும் குத்துவிளக்கு வறுமை வளாகத்தில் உலாவும் பெரியார், கொள்கைச் சிங்கம் கவிஞர் பி.கே.முத்துசாமி.

“இவரது பாடலுக்கு நான் அந்த நாள் ரசிகன்”-என்று கவிஞர் சுரதா வார இதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

"வெண்பா வேந்தர்", "இந்த நுாற்றாண்டின் புகழேந்தி"-போன்ற விருதுகளும் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகத் திரைப்படங்களிலிருந்து இந்தியப் படங்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு அடையாளம் திரைப்பாடல்கள். கிராம ஃபோன் - LP - SP  இசைத்தட்டுகளிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுத் திரையிசைப் பாடல்கள் வெகுவாக முன்னேறியிருந்தாலும் பாடல்கள் இல்லாமல் படங்கள் வெளிவருவது மிகமிகச் சொற்பமே.

சில படங்களின் பெயர்களோ, பாட்டிற்கு நடித்த நடிக, நடிகையர் பெயர்கள் கூட ஞாபகமில்லாமல் பாடல்களை முணுமுணுக்கும் பெரியவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒரு சிலர் காட்சிகளின் கோணங்களைக் கூடச் சொல்லுமளவிற்குத் திறமை பெற்றிருப்பார்கள்.

பாடல்களை உருவாக்குவதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், வாயசைக்கும் நடிக நடிகையர் எனப் பலரின் பங்களிப்புகள் இருப்பினும் சில பாடலாசிரியர்களே மக்களின் நெஞ்சங் கவர்ந்தவர்களாக வலம் வருகிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களை இயற்றிய பாடலாசிரியர்களுள் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் சுரதா ஆகியோரைக் குறிப்பிட்டுச்  சொல்லலாம்.

இவர்களுக்கு மத்தியில், பல வெற்றிப்பாடல்களை எழுதிப் பொதுவெளியில் அடையாளங் காணப்படாத பாடலாசிரியர்களுள் ஒருவர்தான் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.

கவிஞர் முத்துசாமி
கவிஞர் பி.கே. முத்துசாமி, ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அவரது படைப்புகளைப் பாதுகாக்க போதிய இட வசதி இல்லாததால், மூட்டைகளில் கட்டி வைத்துள்ளார். தன்னை சந்திக்க வருவோரிடம் வெகு ஆவலாக அந்த மூட்டையில் உள்ள படைப்புகளை எடுத்துக் காண்பித்து, அவை உருவான விதம் குறித்து விளக்குகிறார் வெளிச்சம் படாத கவிஞர் முத்துசாமி  

கவிஞர் பி.கே. முத்துசாமி திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர். தி.மு.க. வில் தன்னை இணைத்துக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோருக்கு மிகவும் பரிச்சயமானவராகவும் இருந்திருக்கிறார்.

"அண்ணா அறுபது", "பெரியார் புரட்சிக் காப்பியம்", ஜெயலலிதா பற்றிய "புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்" போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.  மேலும் 15, 000 வெண்பாக்களும் 1000 கவிதைகளும் அடங்கும். "புரட்சித்தலைவி அந்தாதி" என்ற நூலையும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர்.,  போன்றோரைப் பாராட்டித் தனித்தனியே வெண்பாக்களையும் எழுதியுள்ளார்.

"பொன்னித் திருநாள்" படத்தில் ( 1960 ) கே.வி. மகாதேவன் இசையில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடும், ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து? உன் எழில்தனை பாடவா  தமிழைச் சேர்த்து என்ற பாடலையும்,

"காவேரியின் கணவன்" படத்தில் மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே பொண்ணு வந்தா பொண்ணு  வந்தா பொட்டி வண்டியிலே .... போன்ற பாடல்கள் இன்னும் மக்களால் முணுமுணுக்கப்படும் பாடல்களாக அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்தவர் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி. இவர் பள்ளிக்கல்வி மட்டுமே படித்துள்ளார். தமிழ், இலக்கியம் மீது கொண்ட காதலால் ஆயிரக்கணக்கான வெண்பாக்களை எழுதி உள்ளார். அந்தக் காலத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தவர்களின் அறிமுகத்தால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்.

இவரது தந்தையார் எஸ்.பி. கருப்பண்ணன், தாயார் காளியம்மாள். விவசாயத்தைப் பார்த்துக் கொண்டே மிதிவண்டி நிலையக் கடைப் பணியில் ஈடுபட்டவர். திரைப்படம் மீது கொண்ட பேரார்வத்தால் தனது நிலத்தை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணம் மூலம் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற திரைப்படத்தை எடுக்க முயற்சித்தார். அவரின் திரைப பட முயற்சி வெற்றிபெறவில்லை. அந்தத் திரைப்படத்தை அப்போதய பிரபல இயக்குநர் ஏ.கே. வேலனிடம் ஒப்படைத்தார். அந்தப் படத்தில் பாடல் ஆசிரியராக மட்டுமே பணிபுரிந்துள்ளார் - (மண்ணுக்கு மரம் பாரமா) "காவேரியின் கணவன்" ஏ.கே. வேலன் இயக்கிய படத்தில் இடம்பெற்ற "சின்னநடை நடந்து வா" - பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பி.கே.முத்துசாமியின் மகன் ஒரு ஒளிப்பதிவாளர். மகள் கலையரசி ஆர். புதுப்பட்டியில் உள்ளார்.

2003 ஆம் ஆண்டு, தன்னுடைய மனைவியை இழந்த பின், மீண்டும் நாமக்கலுக்கே சென்ற கவிஞர் அங்கு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார்.

இவர் படைப்பில் உருவான புத்தகங்களின் உரிமையை கூட, சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இவர், கடைசி வரை தனக்கு அரசால் வழங்கப்பட்ட ரூ.1500/- பணத்தை கொண்டே வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இவர் எழுதிய ஒரு நாடகத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திரைப்படப் பாடல்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமிக்கு ( 20 அக்டோபர், 1918 - 11 ஆகஸ்ட், 2020 ) அஞ்சலி செலுத்துவோம்.

மதுரையிலிருந்து
பென்ஸி.

நன்றி: Kadayanallur Benzy   (https://www.facebook.com/kadayanallur.benzy)


Saturday, July 25, 2020

என் வள்ளம் கரைக்கு திரும்பாத அந்த நாள்!




உப்புக்கரிக்கும் கடல். திரண்டு உருண்டு வந்து மணல் போர்வை போற்றிய கரையை மெல்ல சீண்டிப்பார்க்கும் அலைகள். ஒட்டுப் போட்டு என் போன்று தள்ளாத வயதில் காலம் கழிக்கும் ஒரு வள்ளம், என் துதிக்கையாய் எப்போதும் என்னுடன் இருக்கும் உக்கிப்போன ஒரு மரத்துடுப்பு,ஆசை தீர கட்டி அணைத்துக் கொள்ளும் அளவுக்கு சின்ன கண்கொண்ட வலைகள். இவைதான் என் பூர்வீக சொத்துக்கள்.

எல்லோரும் காற்றை சுவாசிப்பதாய் சொல்வார்கள். ஆனால் நானோ இந்த மீன் வாடையை சுவாசிப்பதால்தான் இன்னும் உயிர் வாழ்வதாய் உணர்கிறேன்.

மீனவனுக்கு உப்புக்காற்றும் அதில் திரண்டுவரும் புலால் வாசனையையும் ஒரு நாள் நுகர முடியாவிட்டாலும் பித்துப் பிடித்து விடும். அதனை  நாற்றம் என மொழிபெயர்ப்பவர்களை அருவருப்பாய் நான் பார்ப்பதும் உண்டு. என்னைப்  போன்ற மீனவர்களுக்கு பண நோட்டுக்களில் வீசும் வாசனையை விட இந்த மீன்களின் வாடையில்தான் மோகம் அதிகம்.

அனேக பண்டிதர்கள் மீனவனின் ஏழ்மை வாழ்க்கை பற்றி கூடுதலாக கிறங்குவதை பார்த்திருக்கிறேன். ஆனால்  ஒருபோதும் என்னை நான் ஏழையாக உணர்ந்து கொண்டது கிடையாது.

பரந்து விரிந்த சமுத்திரம் முழுவதும் எனக்கு சொந்தமாக இருக்கையில் எப்படி என்னை ஏழ்மையானவனாக உணர்ந்து கொள்ள முடியும்?

“வா.. வா.. ஓடிவா.. மீனவா ..! என்னுள் இருக்கும் செல்வங்களை எடுத்துக்கொள்!” - என்று அலைகள் மூலம் இந்த பெருங்கடல் எப்போதும் எனக்கு செய்தி அனுப்புகையில் எப்படி என்னை ஏழ்மையானவனாக உணர்ந்து கொள்ள முடியும். பரந்துவிரிந்தகடலின் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் போது வரும் மிடுக்கு மீனவனை தவிர வேறு யாருக்கு வரமுடியும்.

கடலில் துடுப்பு வலிப்பதற்கு  என் கைகள் ஒருபோதும் அலுத்துக் கொண்டது கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒற்றை ஆளாய் துடுப்பு வலித்து கடலினுள் சங்கமிக்கும் போது ஆழி பெருங்கடல் என்னை ஆரத்தழுவுவதாய் உணர்ந்து கொள்கிறேன். அது ஒரு இனம் புரியாத அன்பு. மீனவனின் ஆன்மா மட்டுமே உணரும் பேரன்பு அது

ஆழிப் பெருங்கடலில் என் வலைகளை வீசுகையில் கூடவே என் மனதின் பாரங்கள் அனைத்தையும் இந்தப் பெருங்கடலினுள் வீசி விடுகிறேன். வலையில் சிக்கிய மீன்களை சிக்கெடுக்கும் போது என் வாழ்வில் உள்ள சிக்கல்களும் தீர்ந்து போவதாய் உணர்ந்து கொள்கிறேன். கிடைத்த செல்வங்களை அள்ளிக்கொண்டு கரையை தொடும்போது வெற்றிவாகை சூடிய வீரனாய் களி கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் கடலை தழுவி கரையை திரும்பும்போது கவலைகளின் ரேகைகள் அற்ற மனதில் பாரங்கள் அற்று புத்துணர்ச்சி பெற்ற மனிதனாக  வீடு திரும்புகிறேன்.

மாலை மங்கும் நேரத்தில் பேராழியுடன் சங்கமித்திருக்கும் வேளைகளில் தொடு வானத்தில் நிகழும் வர்ண மாயா ஜாலத்தில் நான் எப்போதும் மூழ்கிப் போவதுண்டு. அச்சமயம் என்னையே மறந்து  தொடுவானத்தை தொட்டுவிடும்  வேட்கையில் துடுப்பை வீரியம் கொண்டு தொடுக்க எண்ணுகையில்  கரையில் நமக்காக காத்துநிற்கும் உறவுகள் இடையில் குறுக்கிட்டு மீண்டும் படகை கரையை நோக்கி திரும்பச் செய்துவிடும்.

நான் எண்ணிக் கொள்வதுண்டு... ‘என்றாவது ஒரு நாள் அந்தி மாலையில், தொடு வானில் வர்ணஜாலங்கள் ஊற்றெடுக்கும் வேளையில் அதனை நோக்கி என் துடுப்புகளை இயலுமான வலிமை கொண்டு  தொடுக்க வேண்டும். அன்றைய நாள் என் வள்ளம் ஒருபோதும் கரையை நோக்கி திரும்பாது. தொடு வானத்தை தொட்டு  முத்தமிட்டு அந்த மாய வர்ணங்கள் அனைத்தையும் என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்!’

கடலில் மடியில் தவழ்ந்து, உப்பு காற்றில் உடலை ஒத்தடம் எடுத்து, தொடரும் இரவின் பவுர்ணமியை ரசித்திட வேண்டும். இந்த உலகம் காணாத அதிசயங்களை காண ஆழியின் அலைகள் விரும்பும் திசையில்  என்னை அழைத்து செல்ல வேண்டும். இங்கு நானும் கடலும்  வானும் அலையும்.... ஈற்றில் அலைகளில் மிதந்தவாறு  இந்த உப்பு காற்றிலேயே  என் இறுதி மூச்சு நிரந்தரமாய் கலந்து விடவேண்டும். இந்த உப்புக் கடலிலேயே உக்கிப்போன  இந்த உடலும் கரைந்துவிட வேண்டும். 

(ஆக்கம்: MKM Rikkaz, இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், வாழைச் சேனையைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்)

படங்கள் - Ikhwan Ameer இந்தியா