NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label கொரோனா செய்திகள். Show all posts
Showing posts with label கொரோனா செய்திகள். Show all posts

Friday, September 25, 2020

வந்த இடம் சென்று சேர்ந்தாலும் எஸ்.பி.பி குரல் காற்றில் கரையாமலே ஒலிக்கும்!

 

 

இந்திய திரையுலகின் பின்னணி பாடக நட்சத்திர வரிசை நீளமானது. முஹம்மது ரஃபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்மிக்க அந்த வரிசையில் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம் அதாவது எஸ்.பி. பாலசுப்ரமணியம் முக்கிய இடத்தில் இருப்பவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டுதான் எஸ்.பி.பியின் சொந்த ஊர். தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர். 1946 ஜூன் 4ஆம் தேதி பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.
 
பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் ஆரம்பத்தில் சேர்ந்தவர், பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.

படிக்கும் நாட்களிலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் பாலசுப்ரமணியம். இந்நிலையில், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் முதல் பரிசை வென்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி மற்றும் பிரபல வெண்கல குரல் பாடகர் கண்டசாலா.

இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி. கோதண்டபாணி இசையமைத்த "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா" என்ற தெலுங்கு படத்தில் தன் முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பி. இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' என்ற பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

ஆனால், அந்தப் படம் கடைசிவரை வெளியாகவேயில்லை. இதனிடையே, கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி. தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' பாடல்தான்.

இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே 'இயற்கையெனும் இளைய கன்னி' பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது. ஆனால், "அடிமைப்பெண்" மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும், டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.

திரையுலகின் உச்சிவானிலிருந்த எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும் வேறு குரலை மாற்றி பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.

1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா - எஸ்.பி. பாலசுப்ரமணியம் - எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையது எனலாம். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பி.

1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.

தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்.பி.பி பாடியதுதான்.

எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

ஒரு சிறந்த பாடகராக அறியப்பட்டதாலோ என்னவோ, கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலரால் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து, இசைமைத்த "சிகரம்" திரைப்படம் முக்கியமானது.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால பாடக கலைஞருக்கான வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

எஸ்.பி.பி என்னும் அடையாள உடலிலிருந்து உயிர் பிரிந்து அது வந்த இடம் சென்று சேர்ந்துவிட்டாலும் அவரது இனிய குரல் காற்றில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

Saturday, August 22, 2020

'பலியாடுகளா தப்லீக் ஜமாஅத்தினர்?' போலீஸாரின் பொய் வழக்கை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, ஜிபெளடி, பெனின் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி நளவாடே மற்றும் செவ்லிகர் விசாரித்து அளித்த தீர்ப்பு இது.
 
அதன் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:
 
ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் ஒரு சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன

வெளிநாட்டவர்கள் பெற்று வந்த விசாவில், அவர்கள் மதம் சார்ந்த இடங்களுக்கோ அல்லது மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ எந்தத் தடையும் இல்லை.

‘தப்லிக் ஜமாஅத்’ என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தை சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி இந்த வெளிநாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தை பரப்பவோ முயற்சித்தார்கள எனக்கூற முடியாது.

அதோடு அவர்கள் இந்திய மொழிகளான இந்தி அல்லது உருது மொழியை பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள்.

“அதிதி தேவோ பவா" அதாவது “விருந்தினர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்!" என்பது இந்திய பண்பாடு.

நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்

2020 ஜனவரி மாதத்திற்கு முன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள். 2019 சிஏஏ சட்டம் அவர்களுக்கு எதிராக உள்ளதென போராட்டம் நடத்தினர். முஸ்லிம் அகதிகளுக்கு, குடிபெயர்பவர்களுக்கும் இந்திய பிரஜை என்ற உரிமை கிடைக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். என்ஆர்சிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது

தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்த செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது.

இந்த வழக்குக்கு பின்னால் பிறருக்கு தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

வழக்கு புனைவுக்காக போலீஸ் சொன்னது என்ன?

விசா விதிகளை மீறி தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்றதாக இவர்கள் மீது பெருந்தொற்று நோய்கள் சட்டம், மகாராஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவுகளை மீறி இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்தி வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தாகக் கூறி மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மனுதாரர்கள் இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில் மசூதிகளை பார்வையிட சென்றதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது

மேலும் இதில் ஐந்து வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வெளிநாட்டவர்களை தவிர, இவர்களுக்கு தங்குமிடம் கொடுத்த நிஜாமுதீன் மசூதியின் அறங்காவலர்கள் மற்றும் ஆறு இந்தியர்கள் மீதும் போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், உண்மை என்ன?

இந்திய அரசால் முறையாக விசா வழங்கப்பட்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உணர்வுகளின் அனுபவத்தை பெறவே தாங்கள் பயணம் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கூறினர்.

விமான நிலையத்தில் தங்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அஹமத்நகர் மாவட்டத்தை வந்தடைந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.

மார்ச் 23-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால், இவர்கள் தங்குவதற்கு வசதி இல்லாமல் போனது. இந்நிலையில் வேறு வழியில்லாத நிலையில் தங்கிக்கொள்ள மசூதி நிர்வாகம் அனுமதித்தது.

தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை

தங்கிய இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தங்கள் விசாவின் விதிமுறைகளின்படி மசூதி போன்ற மதம் சார்ந்த இடங்களை பார்வையிட எந்தத் தடையும் இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.



Sunday, July 19, 2020

"எந்த மதம் என்பது முக்கியமல்ல!": மனிதநேய சேவையில் தமுமுக


தஞ்சாவூர் மாவட்டம் பண்ணவயல் பகுதியைச் சேர்ந்தவர் 62 வயது கருணாநிதி. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவாரம் காலமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூச்சு திணறல் அதிகரித்து கடந்த வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

கொரோனாவால் இறந்த கருணாநிதி, தஞ்சாவூர் மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவரான பண்ணவயல் இளங்கோவின் உறவினர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. மருத்துவமனையின் மூலமாக இதை கேள்விப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (தமுமுக) இலவச அவசர ஊர்தி சேவை பிரிவினர் உடன் களத்தில் இறங்கினர். கருணாநிதியின் உடல் தமுமுகவினரால்  எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இறந்தவரின் உடலை பெற அவருடைய உறவினர் யாரும் முன்வரவில்லை. இது கொரோனா சம்பந்தமான பயத்தின் காரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இதில் எந்தவிதமான தயக்கமும் அச்சமும் இல்லை. இறந்தவரின் உடலுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்பதற்காக அரசின் வழிகாட்டுதல்படி உடலை நல்லடக்கம் செய்தோம்,'' என்கிறார் தமுமுகவின் மாநில செயலாளர் ஐ.பாதுஷா.

''இறந்தவர் எந்த மதம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பதை ஒரு சேவையாக தமுமுக தமிழகம் முழுவதும் செய்துவருகிறது” –என்கிறார் பாதுஷா அடக்கத்துடன்.

(படம்: தமுமுக-தஞ்சை)

கோயா அண்ணனின் பெட்டி

இன்று நாங்கள் மூவரும் சிகிக்சை முடிந்து எங்கள் அறைக்கு திரும்பினோம். ஆனால் எங்களுடன் சிகிச்சைக்கு வந்த கோயா அண்ணன் திரும்பி வரவில்லை. இனி அவர் வரவும் மாட்டார்.

அவரது நினைவுகளால் சூழப்பட்ட அந்த அறையில் எங்களுடன் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக வாங்கிய சில பொருட்கள் அடங்கிய பெட்டியும் இருந்தது.

அந்த பெட்டியை கண்ணீர் மல்கிய கண்களுடன் நீண்ட நேரம் தடவிக் கொண்டிருந்தோம். எங்கள் ஸ்பரிசத்தை அந்த பெட்டி நிச்சம் உணர்ந்திருக்கும்.

நாங்கள் நால்வரும் அந்த அறையில் ஏழு வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம். எங்கள் மூவரையும் விட கோயா அண்ணன் வயதில் மூத்தவர்.  அவர் எங்கள் அறையின் மூத்த உறுப்பினர் எனலாம்.

கொரோனா ஆரம்பம் முதலே அறையில் பெரும்பகுதி நேரமும் கோயா அண்ணனின் உடல் நலம் சம்பந்தமான வகுப்புகள் நடைபெற்று வந்தன. “கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்!” – என்று அவர் அறிவுறுத்தியவாறு இருப்பார்.

கோயா அண்ணன் தமது வாழ்வின் பெரும்பகுதியை - சுமார் கால்நூற்றாண்டு காலம் அதாவது 24 ஆண்டுகள் அரேபிய மண்ணில் செலவழித்திருந்தார். கூடிய சீக்கிரத்தில், அரேபிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தாயகம் திரும்பி கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்கு சிந்திக்கத் தொடங்கி அதற்காகத் தயாராகி கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கொரோனாவின் அச்சுறுத்தல் துவங்கி அவரது பயணத்தை தடைப்போட்டு அங்கேயே தங்க வைத்தது.

“அனைத்து பொறுப்புகளையும் முடித்து விட்டேன். இனி நான் என் குடும்பத்திற்கு ஒரு சுமையாகாமல் இருந்தாலே போதும்!" - என்று அவர் வேடிக்கையாகச் சில நேரங்களில்  சொல்வது எங்கள் காதுகளில் ஒலித்தவாறே உள்ளது.

அரேபிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது நினைத்திருந்த லட்சியங்களை எல்லாம் நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், “லட்சியத்தை அடைவதற்காக சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன்!” - என்ற துக்கம் மல்க சில நேர பேச்சுகளில் அவரை அறியாமல் வெளிப்படுவதுண்டு.

மூன்று சகோதரிகளின் திருமணம். ஒரு சிறிய வீடு. தனது திருமணம். இவைதான், அவருடைய லட்சியம். இதற்காக 24 ஆண்டுகள் ஒரு  பாலைவன பூமியில் ஏராளமான வியர்வை துளிகளை சிந்த நேரிட்டது. இதன் விளைவாய் சம்பாதித்தது விதமான நோய்களை மட்டுமே!

சொந்தமாகத் தனக்காக தான் சம்பாதித்த நோய்களுடன் ஊர் போய் சேர்ந்து விட வேண்டும்  என்பதுதான் பாவம் கோயா அண்ணனின் எண்ணம். பல நேரங்களில் இதை அவர் வாய்த்திறந்து சொல்லவும் செய்திருக்கிறார்.

எல்லாம் சகித்து ஒரு  வழியாக ஊர் செல்வதற்காக 1300 திர்ஹம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்த ஒரு வார இடைவேளையில்தான் கொரோனா அவரை பாதித்தது.

ஊர் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த நாள் முதல் ஒரு தேனீ போலவே அவர் மாறிவிட்டார். வேலை முடிந்து வரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வந்து ஊருக்கு கொண்டு செல்வதற்காக தயாராக்கி வைத்திருக்கும் பெட்டியில் வைப்பார். ஊர் செல்ல தயாராகும் புலம்பெயர்ந்து வாழும், எல்லா அரேபிய வாழ் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும்!

கோயா அண்ணனின் இந்த செயலை பார்த்து கொண்டிருக்கும் நாங்கள், “அண்ணே, போறப் போக்கைப் பார்த்தால், இந்த பெட்டியை ஒரு கிரேன் வைத்துதான் தூக்க வேண்டியிருக்கும்!” – என்று சிரித்தபடியே சொல்வோம்.

இதைக் கேட்டு வாய்விட்டு சிரிக்கும் அவர், “உயிர் இருந்தால், இந்தப்பெட்டியுடன் செல்வேன். இல்லாவிட்டால் மற்றொரு பெட்டியில் போவேன். இனி நான் எடுத்து போகாவிட்டாலும் நீங்கள் இதை என் வீட்டில் கொண்டு சென்று ஒப்படைப்பீர்கள் என்று எனக்கு தெரியும்!” – என்பார்.

ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த நாளில் இருந்து எல்லாருக்குமான உணவை, கோயா அண்ணன் தான் சமைப்பார். “நான்  ஒரு வாரம் மட்டும் தானே இருப்பேன். என் தம்பிமார்களுக்கு என் கையாலேயே சமைத்து பறிமாறுகிறேன்!” – என்பார்.

ஒரு வெள்ளிக்கிழமை.

கோயா அண்ணன் சமைத்த சுவையான பிரியாணியை சாப்பிட்டவாறு, “அண்ணே, ஊருக்கு சென்று என்ன செய்வதாக உத்தேசம்?” – என்று கேட்டோம்.

அதற்கு கோயா அண்ணன் சொன்னார்: “ஊருக்கு சென்று ஒரு சின்ன மளிகை கடை வைத்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று நினைத்துள்ளேன்!” பிறரின் நலன்நாடும் அவரது எண்ணம் சிறக்க நாங்களும் பிரார்த்தித்தோம்.

“தம்பிங்களா, பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை என் கடையிலிருந்துதான் வாங்க வேண்டும்!” – என்று சொல்ல, நாங்கள் அனைவரும் வாங்விட்டு சிரித்தோம்.

அன்று இரவு கோயா அண்ணனுக்கு லேசான காய்ச்சல். அதுதான் ஆரம்பம். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தோம். கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு கோயா அண்ணனை மருத்துவமனையில் சேர்த்து கொண்டு, எங்களை தனிமைப் படுத்தினார்கள்.

இரு நாட்களுக்குப் பிறகு எங்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது

அப்போதும், கோயா அண்ணன், “உங்களுக்கும் கொரோனாதான் தம்பிங்களா! மகிழ்ச்சியடைய வேண்டாம்!” – என்று கிண்டலடித்து சிரித்தார்.

கோயா அண்ணனின் அந்த சிரிப்பு இன்றும் நினைவில் இருக்கிறது.

அதன்பிறகு, “டிக்கெட் பணம் என்னவாகும்? அதைபற்றி விசாரிச்சு சொல்லுங்கள். நீங்கள் அந்த பணத்தை திரும்ப வாங்கி வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்!” - என்று சொல்லிவிட்டு, “எல்லாம் சரியாகிவிடும். பார்ப்போம்!” -  என்று சொல்லி போனை துண்டித்தார்.

அடுத்தடுத்த நாட்களில் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை.

அதன்பின்னர்தான் கோயா அண்ணன் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டார்! என்ற செய்தி இடியாய் வந்து இறங்கியது.

எங்களால் அழக்கூட முடியவில்லை.  ஏழு ஆண்டுகள் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றாய் வாழ்ந்த நாங்கள் கோயா அண்ணனின் நெற்றியில் முத்தமிட இயலாத நிலைக்கு ஆளானோம்.

கதறி அழவேண்டுமென்றுதான் முதலில் தோன்றியது.

அரேபிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு குடும்ப சூழல் காரணமாகவே அந்த பாலை வாழ்வை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் வெறும் பாலை வாழ்வியல் பொம்மைகள் மட்டுமே! குடும்பத்தாரின் இன்பங்களுக்காக, சுமைகளுக்காக தொலைதூரத்தில் யாருக்கும் தெரியாமல் சுமைச் சுமக்கும் சுமைத்தாங்கிகள்!

நாங்கள் அறைக்கு திரும்பி வந்தோம்.

கோயா அண்ணன் இல்லாமல் அவரது கட்டில் தனியே கிடக்கிறது. அதை வெறித்துப் பார்க்கிறோம். எங்களால் நம்ப முடியவில்லை. பாசம் நிறைந்த அந்த மனிதன் இன்று இந்த பூமியில் எங்களுடன் இல்லை. “இறைவா இது என்ன  சோதனை!” – எங்கள் விழிகள் கண்ணீரால் நிரம்புகின்றன.

கட்டிலுக்கு கீழே கோயா அண்ணனின் பெட்டியை நாங்கள் திறந்து பார்த்த போது, எங்கள் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊரிலுள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக கோயா அண்ணன் வாங்கி வைத்திருந்த, ஸ்பிரே, அத்தர் வாசனை திரவியங்கள், சோப்பு போன்ற ஏராளமான பொருட்கள் அதில் இருந்தன. அவற்றை பத்திரமாக கோயா அண்ணனின் வீட்டில் ஒப்படைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம்.

பாவம்..! கோயா அண்ணன்தான் ஊர் சேரவில்லை! அவர் ஆசையோடு சேகரித்த பெட்டியாவது ஊர் போய் சேரட்டும்!

(Credit: M.சிராஜுத்தீன் அஹ்ஸனி, இயக்குனர், மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ், திருவை)