தெலுங்கு மூலம்: கே.கே.மேனன் - தமிழில் : இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''
யாராவது மலையிலிருந்து இறங்கி மோடா
நாயக்கின் வீட்டிற்கு வரவேண்டும் என்றால்,
கால்வாயைப் போன்ற அந்த நீர்ப்பகுதியை கடந்துதான் வர வேண்டும். அதற்கு வசதியாய்
கால்வாய் மீது ஒரு பழைய மரப்பாலம் இருந்தது. அதை கட்டியது யார்? எப்போது
கட்டினார்கள்? என்பதெல்லாம்
மோட்டா நாயக்கும் தெரியாது. தற்போது இரண்டு மூன்று பலகைகள் தவிர பாலத்தின் மீது
ஒன்றுமில்லை. அப்படி இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் யார்?
விழுதில் சாய்ந்தவாறு மோடா நாயக் ஏதோ
யோசித்துக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக பாலத்தின் பக்கத்திலிருந்து ஏதோ
சத்தம் கேட்டது. எழுந்து நின்று காதுகளை கூர்மையாக்கி கவனித்தான் மோட்டா நாயக்.
“டக்..
டக்..” _ என்று யாரோ
மரப்பலகைகளை தட்டும் சத்தம் அது. அங்கிருந்து பார்த்தால் எதுவும் தெரியவில்லை.
வீட்டிலிருந்த மோத்தியை அழைத்தான்
மோட்டா நாயக்.
“மகளே, கவனி! அதோ அந்தப்
பக்கம் ஏதோ சத்தம் வருவது போல் இல்லை?”
– என்று கேட்டான்.
“ஆமாம்.
அங்கே யாரோ இரண்டு பேர் கட்டைகளை அடிக்கிறார்களப்பா”
“எதன் மீது?”
“பாலத்தில்தான்!”
– சொல்லிவிட்டு மோத்தி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அந்த நேரம் பார்த்து பெரியவன்
பசுக்களை ஓட்டிக் கொண்டு அந்தப் பக்கம் வர,
அவனை அழைத்து மோட்டா கேட்டான்: “
என்னடா அங்கே சத்தம்?”
“பாலத்தை
பழுது பார்க்கிறார்களப்பா” – என்று சொன்னான்.
அதற்கு மேல் அவனுக்கு ஒன்றும் தெரியாது.
பாலத்தை யார் பழுது பார்க்கிறார்கள்? ஏன் பழுது
பார்க்கிறார்கள்?”
– என்று மோட்டா நாயக்குக்கு புரியவில்லை. ஒரு காலத்தில், அந்த மலை மீது
லம்பாடிகள் இருந்தபோது பயன்படுத்திய பாலம் அது. அவர்கள் அங்கிருந்து வெளியேறியபின், அந்த பாலத்தை
யாரும் பயன்படுத்துவது இல்லை. இத்தனை நாள் கழித்து அதை பழுதுபார்க்க அவசியம் என்ன? இந்த சந்தேகத்தை
தீர்ப்பவர் யார்?”
கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவன் சின்ன
மகன் ஒருவனே! இரவில் அவன் வீட்டுக்குத் திரும்பியதும் மோட்டா கேட்டான்: “பாலத்தை பழுது
பார்க்கிறார்களாமே.. யாரது?”
“யாராக
இருந்தால் என்ன? பாலத்தை
பழுது பார்ப்பது என்னவோ உண்மைதான்! நம் பிழைப்பிற்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது”
– என்றான் கவலையுடன்.
பாலம் பழுது பார்க்கப்படுவதற்கும், தங்கள்
பிழைப்பிற்கு ஆபத்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? என்பது அவர்கள் யாருக்கும் புரியவில்லை.
ஒருவழியாக, பலகைகளைத் தட்டும்
சத்தம் நின்றுவிட்டது. பாலம் பழுது பார்க்கும் பணி முடிவடைந்துவிட்டது என்று
பொருள்.
அதன்பிறகு இரண்டு நாள் கழித்து, அரசு வாகனம் ஒன்று
மோட்டா நாயக்கின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அவன் வழக்கம் போலவே ஆலமரத்தின்
விழுதில் சாய்ந்து அமர்ந்திருந்தான். ஜீப்பை பார்த்து பதறியவாறு எழுந்து நின்றான்.
அந்த ஜீப்பிலிருந்து இரண்டு பேர்
இறங்கினார்கள். அவர்களில் ஒருவர்,
“இங்கே மோட்டா நாயக் யார்?”
என்று கேட்டார்.
“நான்தான்
அய்யா!” – கைகளை கூப்பியவாறே
சொன்னான் மோட்டா.
“நாங்கள்
ரெவின்யூ அதிகாரிகள்”
“புரியவில்லை
அய்யா!”
“அதாவது
நாங்கள் அரசாங்கத்தின் வருவாய்த்துறை அதிகாரிகள்”
“அப்படியா
அய்யா. தாங்கள் இங்கு வந்திருப்பது?”
உன்னையும், உன்
குடும்பத்தையும் இந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வந்திருக்கிறோம். இது
அரசாங்கத்தின் ஆணை”
மோடா நாயக்கிற்கு ஒன்றும்
புரியவில்லை.
தனது நிலத்திலிருந்து, தன்னையும், தன்
குடும்பத்தையும் அப்புறப்படுத்த வந்தார்களாமே இவர்கள்! ஏன்? எப்படி?” – குழம்பி நின்றான்.
“தாங்கள்
சொல்வது எனக்கு விளங்கவில்லை அய்யா” – அவர்களிடம்
வெள்ளந்தியாய் கேட்கவும் செய்தான் மோட்டா.
இந்த நிலம் உன்னுடையது கிடையாது.
அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதனால்தான் இங்கிருந்து வெளியேறச் சொல்கிறோம்”
“அதெப்படி
அய்யா? எங்கள்
தாத்தா, முப்பாட்டன், பூட்டன்
காலத்திலிருந்தே நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். இதுவரை யாரும் எங்களை போக
சொல்லவில்லையே?”
“அப்போது
இந்த இடம், அரசாங்கத்திற்கு
தேவைப்படவில்லை. இப்போது தேவைப்படுகிறது”
“இப்போது
அரசாங்கத்திற்கு எங்கள் நிலம் எதற்கு தேவைப்படுகிறதாம்?” – மோட்டா நாயக்
அப்பாவியாய் கேட்டான்.
“நீ
கேட்டதற்காக சொல்கிறோம். அதோ அந்த மலை மீது பங்களாக்களில் வசிக்கிறார்களே
பெரியய்யாமார்கள், அவர்களுக்கும், அவர்களது மனைவி, மக்களுக்கும்
ஓய்வெடுக்கவும், பொழுதைப்
போக்கவும் இடம் தேவையாம். அதனால்,
அரசாங்கம் இங்கே அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு பூங்கா
அமைக்கவிருக்கிறது”
“ஒன்றும்
புரியவில்லை அய்யா!” – தலையை சொரிந்து
நின்றான் மோட்டா.
“அதை
எல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் எங்களிடம் கிடையாது.
பத்து நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் இங்கிருந்து வெளியேறி விட
வேண்டும்!” – என்று
எச்சரித்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
இதையெல்லாம் குடிசையின் வாசலில்
நின்று கேட்டுக் கொண்டிருந்த மோட்டா நாயக்கின் மனைவி அங்கிருந்து ஜீப் புறப்பட்டு
சென்றதும் தரையில் புரண்டு கதறி அழலானாள். ஏற்கனவே உள்ளுக்குள் குமைந்து அழுதுக்
கொண்டிருந்த மோட்டாவால் மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை.
அந்த பருவத்து பயிர் நன்கு
விளைந்திருந்ததால், அறுவடைக்கு
பிறகு மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று அவர்களின் திட்டம். காய்கறித்
தோட்டமும் பூவும், பிஞ்சுமாய்
தழைத்து வளர்ந்திருந்தது.
சிறிது நேரம் கழித்து வயலிலிருந்து
பெரியவன் திரும்பினான். நடந்ததை தெரிந்து கொண்டு துவண்டு போனான்.
இதில் எதுவும் பாதிக்காதவன் போல
நடந்து கொண்டது சின்னவன் மட்டுமே! அவன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக
ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான்.
- இறைவன்
நாடினால் தொடரும்
முதல் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/1.html
முதல் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/1.html
(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு டிசம்பர் 3, 1995)
0 comments:
Post a Comment