தெலுங்கு மூலம்: கே.கே.மேனன்-தமிழில் : இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அவன் ஆழமான பள்ளத்தாக்கு சமவெளியில் இருந்தான். எதிரே, உயரமான மலைகள். மலையிலிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கு எப்படி காட்சியளிக்கும் என்பது அவனுக்குத் தெரியாது. பள்ளத்தாக்கிலிருந்து அண்ணாந்து பார்த்தால் அந்த மலை மிக உயரமாக இருப்பது மட்டும் தெரியும். இன்னும் அதிக நேரம் பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவு உயரமாய் .. தலைப்பாகை சரிந்து விழுந்துவிடும் அளவு உயரமாய இருப்பது தெரியும்.
மலையின் மீது கட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய மாளிகைள்கள், சற்றுத்தள்ளி உள்ளே இருக்கும் மாளிகைகளின் சிகரங்கள் தவிர, மலையின் மீதோ, மலைக்கு அந்தப் பக்கமாய் உள்ளதைப் பற்றியோ அவனுக்குத் தெரியாது.
மலையை ஒட்டியவாறு ஒரு பெயரி ஆலமரம் இருந்தது. அம்மரத்தின் விழுதுகள் பூமியில் இறங்கி மரத்தின் தண்டைப் போலவே பருத்து வளர்ந்திருந்தன. அந்த மரத்தின் வயது என்னவென்று யாருக்கும் தெரியாது.
ஆலமரத்தின் அருகிலேயே அவனுடைய வீடு இருந்தது. அது அழகாய் வேயப்பட்ட பெரிய குடிசை.
அந்த வீட்டின் முன், ஆலமரத்தின் நிழலில், ஒரு பெரிய விழுதில் முதுகு சாய்ந்து அமர்ந்திருந்தான் மோடா நாயக். அவன் தடியாக இருக்க மாட்டான். ஒல்லியாகவே இருப்பான். ஒரு காலத்தில் அதாவது இளைஞனாக இருக்கும்போது, குண்டாக இருந்தானோ என்னவோ?
மோடா நாயக் விழுதில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனது மடியில் தலையை சாய்த்துக் கொண்டு மகள் மோத்தி படுத்திருந்தாள். அவளது பார்வை எப்போதும் பக்கத்திலுள்ள மலை மீதே இருக்கும்.
“அந்த மலை மீது என்னப்பா இருக்கிறது?” - என்று கேட்டாள் மோத்தி.
“என்னவோ மகளே, எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? யாரோ பெரிய மனிதர்கள் இருப்பார்கள் போல. ஒரு காலத்தில் நம்மாட்கள்தான் அங்கு வசித்தார்களாம்” – என்று பதிலளித்தான் மோட்டா நாயக்.
அதை மோத்தி நம்பவில்லை.
“பொய்! அப்படி வசித்தால் அவர்கள் இப்போது எங்கு போனார்களாம்?” – ஆச்சர்யத்துடன் கேட்டாள் மோத்தி.
ஆமாம். எங்கே போனார்களோ?
அவன் மட்டும் அந்த பூமியை விட்டுப் போக மனம் வராமல் அங்கேயே தங்கிவிட்டான். அதுவே அவனது சாம்ராஜ்யம். தசைகள். எலும்புகள்.. வாழ்க்கை எல்லாமே அந்த நிலம்தான்!
மலையிலிருந்து மெல்லிய நீர்த்தாரை பூரான் பூச்சியைப் போல நீண்டு கீழே கொட்டியது.
“அந்த தண்ணீர் எங்கிருந்து கொட்டுகிறதப்பா?” – மோத்தியிடமிருந்து மற்றொரு கேள்வி எழுந்தது.
“என்னமோ மகளே! எனக்குத் தெரியாது. ஆனால், அந்த நீர்தான் நமக்கு உணவளிக்கிறது!” – என்று அவன் சொன்னான்.
இதை கேட்டுக் கொண்டிருந்த மோத்தி, ‘எப்படி?’ என்று கேட்கவில்லை. அப்படி கேட்க யோசிக்கவுமில்லை. இவை இரண்டிற்கும் இடைப்பட்டது அவளது வயது. மெதுவாக எழுந்து தாயிடம் சென்று விட்டாள்.
மலையிலிருந்து கொட்டும் அந்த நீர் கீழே விழுந்து வீணாகிக் கொண்டிருந்தது. அப்படி வீணாகாமலிருக்க தனது தந்தையாரின் காலம் தொட்டே மூன்றுபுறமும் மண் அணைத்து ஏரியைப் போல நீரைத் தேக்கி வைத்துக் கொண்டார்கள் அவர்கள். அந்த நீரைக் கொண்டே விவசாயம் செய்தார்கள். ஆண்டு முழுக்க நீர் தொடர்ந்து கிடைக்காது. குளிர்காலத்தின் பாதி நாட்கள்வரையே மலையிலிருந்து நீர் கொட்டும். அதன் பிறகு சொட்டு தண்ணீர் கூட வராது.
அந்த சிறிய ஏரிக்குத் தாழ்வாக சிறிது சமமான நிலம் இருந்தது. அது மேற்குபுறமாக கொஞ்சம் வளைந்து இருக்கும். அந்தப் பக்கத்திலிருந்த நிலம் வளமானது. அவர்களின் தாத்தா முப்பாட்டன் காலத்திலிருந்து கற்களைக் கொட்டி மேடு பள்ளங்களை சீர் செய்த நிலம் அது. அங்கு காய்கறிகள் பயிரிடுவார்கள். இதுபோக மீதமிருந்த இடத்தில் தண்ணீர் நிற்கும். அதனால், அங்கே நெல் பயிரிடுவார்கள்.
மோட்டா நாயக்கின் மனைவி பெயர் கேட்கவே வித்யாசமாக இருக்கும். அவள் சிவப்பாக, ஒல்லியாக, உயரமாக இருப்பாள். ஆறு குழந்தைகளுக்குத் தாய். உயிருடனிருப்பது இரண்டு ஆண், ஒரு பெண் என்று மூவர் மட்டுமே!
‘லம்பாடி’ இனத்தாரில், குடும்பத்தார் அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்பார்கள்.
ஆனால், இங்கோ கடின உழைப்பாளி பெரியவன் மட்டுமே!
இரண்டாமவன் விவசாயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அவன் என்ன வேலை செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது. அதேசமயம் அவனை வெட்டியாய் வீட்டில் பார்க்கவும் முடியாது. எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டே இருப்பான். வீட்டில் அவனை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் இளையவன் என்பதாலோ அல்லது சோம்பேறி என்பதாலோ அப்படி நடந்து கொண்டார்கள்.
- இறைவன் நாடினால் தொடரும்
(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு டிசம்பர் 3, 1995)
Thodarum... Waiting
ReplyDelete