NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Wednesday, November 25, 2020

எச்சரிக்கை கூண்டு ஏற்றுவதன் பொருள் என்ன?

புயல் ஏற்படும் காலங்களில் துறைமுகங்கள், கடலோர பகுதி மக்கள், கப்பல்களை எச்சரிக்கும் வகையில் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். அதில் புயலின் அபாய நிலையை உணர்த்தும் எண்கள் குறிப்பிடப்படும். இந்த பணியை வானிலை ஆய்வு மைய தரவுகள் அடிப்படையில் துறைமுக நிர்வாகம் மேற்கொள்ளும்.

சில நாடுகள் புயல் அபாய எச்சரிக்கையை வண்ண கொடிகள் மூலம் உணர்த்தும். இந்தியாவில் புயல் அபாய எச்சரிக்கை, எண்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

1864ஆம் ஆண்டில் அப்போதைய கல்கத்தா (தற்போது கொல்கத்தா) மச்சிலிப்பட்டினம் இடையே பலத்த புயல் ஏற்பட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது முதல் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றும் வழக்கத்தை இந்திய துறைமுகங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கின. அந்த வகையில், புயல் அபாய எச்சரிக்கை கூண்டு முதன் முதலாக கொல்கத்தா துறைமுகத்தில் ஏற்றப்பட்டது.

இந்த வகை எச்சரிக்கை எண்கள் 11 வகைப்படும். அது பற்றிய எளிய விளக்கத்தை பார்க்கலாம்.

எண். 1 என்பது, தூர முன்னறிவிப்பை குறிக்கும். அது புயல் உருவாகக் கூடிய திடீர் காற்றோடுகூடிய மழையுள்ள வானிலைப் பகுதியை குறிக்கிறது. இது கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுவதையும், மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் புயல் வருவதையும் குறிக்கும். ஆனால், இது காற்றின் வேகம் பற்றிய எச்சரிக்கையாக மட்டுமே கருதப்படும். கரைக்கு ஆபத்தில்லை.

எண். 2 என்பது தூர எச்சரிக்கையை குறிக்கும். புயல் உருவாகியுள்ளதை குறிக்க இந்த எண் பயன்படுத்தப்படுகிறது. இது கடலில் ஏற்படும் அழுத்தம் மற்றும் மணிக்கு சுமார் 60 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும் காற்றை குறிக்கும். இந்த நேரத்தில் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் புறப்பட அனுமதிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

எண் 3 என்பது உள்ளூர் முன்னறிவிப்பாகும். திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்படுவதை இது குறிக்கிறது. இது கடலில் அழுத்தம் உருவாகி துறைமுகத்துக்கும் ஆபத்தை தோற்றுவிக்கலாம். கரையை நோக்கி மணிக்கு சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் என்ற எச்சரிக்கையை இது உணர்த்தும்.

எண் 4 என்பது உள்ளூர் எச்சரிக்கை. இது துறைமுகம் புயலால் அச்சுறுத்தப்படலாம். ஆனால், அது மிகவும் அதிகமான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு தீங்கை விளைவிக்கும் என்று தோன்றவில்லை என்பதை குறிக்கிறது. கடலில் ஏற்படும் ஆழமான அழுத்தத்தால் துறைமுகத்துக்கு பிந்தைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தை எச்சரிப்பதாக இது அமையும். மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி காற்று வீசும் என்பதால் இது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய எச்சரிக்கையாக அமையும்.

எண். 5 என்பது அபாய நிலையை குறிக்கிறது. துறைமுகத்தின் இடது பக்கமாகப் புய.ல் கரையைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது. இது கடலில் ஏற்பட்ட ஆழமான அழுத்தம், புயலாக உருப்பெற்று கரையை கடப்பதை குறிக்கும். இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

எண் 6 என்பது அபாய நிலையை குறிக்கிறது. துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது. எண் 5 போலவே இது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இது துறைமுகத்தின் வலப்பக்கத்தில் நிகழும்.

எண் 7 என்பது அபாய நிலையை குறிக்கிறது. இது துறைமுகத்தை நெருங்குகிற அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் புயலால் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிக்கிறது. இது புயல் கரையை கடப்பதையோ துறைமுகத்துக்கு அருகே கடப்பதையோ குறிக்கும். மொத்தத்தில் எண் 5,67 ஆகியவை துறைமுகங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கையாகும்.

எண் 8 என்பது பெரிய அபாயத்தை குறிக்கிறது. துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். புயல் கரையை கடக்கும்போது தரைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகம் வரை இருக்கும். எனவே இதை மிக ஆபத்தானதாக கருத வேண்டும்.

எண் 9 என்பது பெரிய அபாயம். இது துறைமுகத்தின் வலது புறமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். இது புயல் கடுமையான நிலையில் இருந்து மிகக் கடுமையான நிலைக்கு செல்வதை குறிக்கும் என்பதால் இதுவும் மிக, மிக ஆபத்தானது.

எண் 10 என்பது பெரிய அபாயம். இத்துறைமுகத்தை அல்லது அதன் அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும். இது மிகவும் கடுமையான புயலாக துறைமுகத்தை கடந்தோ அதன் அருகேயே கடக்கலாம் என்பதை உணர்த்தும். இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 220 கி.மீட்டருக்குமான வேகத்தில் சூறைக்காற்று வீசும்.

எண் 11 என்பது தகவல் தொடர்பற்ற நிலையை குறிப்பது. இது வானிலை எச்சரிக்கை மையத்தோடு தகவல் தொடர்பற்றுப் போன நிலையில் மோசமான வானிலையால் கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர் கருதுவதை குறிக்கிறது. இதுதான் இருக்கும் ஆபத்துகளை எல்லாம் விஞ்சக்கூடிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும்.

தற்போது அதி தீவிர புயலின் மிக அதிக ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை எண் 10-ஐ குறிக்கும் சமிக்ஞை புதுச்சேரி துறைமுக பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதல் இரண்டு புயல் கவலை தரக்கூடியதாக இருக்காது. வேறு எங்கோ தொலைதூரத்தில் புயல் ஏற்பட்டிருப்பதை அவை குறிக்கும்.

3,4 ஆகியவை உள்ளூரில் நிலவும் மோசமான வானிலை கணிப்பை குறிக்கும்.

5,6,7 ஆகியவை அபாய நிலையை குறிப்பதாகும். துறைமுகத்தின் எந்த பகுதியிலும் புயல் கடந்து போவதை இது உணர்த்தும்.

8,9,10 ஆகியவை மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடன் புயல்சீற்றம் இருப்பதை உணர்த்தும்.

இதில் புயல் அதி தீவிர நிலையாக மாறும்போது 8ஆம் எண் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணை குறிக்கும் கூண்டு ஏற்றப்படும்.

உச்சகட்டமான ஆபத்தை குறிப்பதுதான் 11ஆம் எண் கூண்டு. இதுதான் மிக, மிக கவலை தரக்கூடிய பேரழிவை ஏற்படுத்தும் புயல் சீற்றத்தை குறிக்கிறது.



நிவர் புயலும், அடுத்து வரும் புயல்களும்!

 

பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.
 
அவ்வகையில், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து அதி தீவிர புயலாக உருப்பெற்றிருக்கிறது.

இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான்.

இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு ‘உம்பான்’ என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து.

இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு ‘நிஷாக்ரா’ என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம்.

இரு தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த ‘கடி’ (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா.

இப்படி பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது.

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது.

உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.

டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றது.

இந்த வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது,

•அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணுவது
•அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது
• ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது
• ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது
• மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.

சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.

இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு ஒன்பது நிபந்தனைகள் உள்ளன.

1.புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது
2. உலக அளவில் வாழும் மக்களில் எவ்விதத்தவரின் உணர்வை காயப்படுத்தும்படி பெயர் இருக்கக் கூடாது
3.   மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக் கூடாது
4.  சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையில் பெயர் இருக்க வேண்டும்
5.பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்
6.பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்
7.பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு
8.பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாக கூட அதை மறுஆய்வுக்கு உள்படுத்த அந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு;
9.ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.

இந்தியா பரிந்துரைத்துள்ள பெயர்கள் வரிசையில், கதி, தேஜ், முரசு, ஆக் ஆகியவை உள்ளன. இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுக்கு இறுதி செய்த பட்டியலில் மொத்தமாக 169 பெயர்கள் உள்ளன. இதில் இருந்தே ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைப்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்படுகிறது.

முந்தைய புயலுக்கு இந்தியா கதி என பரிந்துரை செய்தது. அதற்கு இந்தி மொழியில் வேகம் என பொருள். அதுபோல, தற்போதைய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த நிவர் என்ற வைக்கப்பட்டிருக்கிறது அதாவது, ‘வெளிச்சம்’  மற்றும் ‘வருமுன் காப்பது’ என்றும் பொருள்.

சுழற்சி முறையில் வரும் இந்த பெயர்களில் தமிழ் பெயரான ‘முரசு’ இடம் பெற்றிருக்கிறது.

இது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர்.

அதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.

நிவர் புயலைத் தொடர்ந்து, அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைப்படி ‘புரேவி’ என்ற பெயர் வைக்கப்படும்.

இதுபோல, அடுத்த 25 வருடங்களில் ஏற்படும் புயல்களுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட்டு எப்போது புயல் வந்தாலும் அவற்றை சூட்டுவதற்கான தயார் நிலையில் நாடுகள் இருக்கின்றன.

'''''''''''''''''

Source: BBC

படம்: யூஸீஃப் கனி



 

Saturday, October 10, 2020

பனையோடு நான்..!

 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 

ஒருநாள் தம்பி குமார் - விஜயகுமார் வேல்முருகன்,  எங்கள் வீட்டின் மாடி தோட்டத்திற்கு வந்திருந்தபோது, எதேச்சையாக எடுத்த முடிவுதான் அது – ‘பனை விதைகள் நடுவது என்று’

அதற்கு முன்னர் பனை மரத்தின் பலன்களை இருவருமே அறிந்து வைத்திருந்ததும் கூடுதல் பயனாக அமைந்தது.

60-களின் துவக்கத்தில், நான் மூன்றாவது நான்காவது வகுப்புப் படிக்கும்போதே அறிமுகமாகியிந்த தோழன்தான் பனை மரம். எனது வீட்டிற்கு மிக அருகில் இருந்த பள்ளிக்கு பத்து, பதினைந்து பாதுகாவலர்களாக வரிசைக்கட்டி நின்றிருந்தார்கள் அந்த பனைத் தோழர்கள். வீட்டில் மின்சாரம் இல்லாத காலத்தில் இரவின் கும்மிருட்டில் வீசும் பலத்த காற்றில் பனை ஓலைகளின் உரசல்கள் பயம் தந்த காலம் அது.

இருள் விலகாத அந்த கருக்கலில் யார் முந்தி செல்கிறார்களோ அவர்கள் நிச்சயம் சில பனம்பழத்துடன் திரும்புவது திண்ணம். அநேகமாக அந்தப் போட்டியில் அதிகமாக வெல்வது நானாகவே இருக்கும். ஏழ்மையின் பசியும், பனம்பழத்தின் சுவையும் பல இரவுகளை உறங்காத இரவுகளாக்க பனம் பழம் சேகரிப்புப் போட்டியில் நான் வெல், எந்தத் தடையுமிருக்காது! விறகடுப்பில் பனம் பழத்தைச் சுட்டு, முகமெல்லாம் பழச்சாற்றைப் பூசிக்கொண்டு, 'பனம்புலி'யாக வளர்ந்த நாட்கள் அவை.

இதைத் தொடர்ந்து, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்த எனது பாட்டியை பள்ளி விடுமுறையில் சந்திக்க செல்லும்போதெல்லாம் சரியான பேருந்து வசதியில்லாமல் நடந்து செலல வேண்டியிருக்கும். ஒரு பத்து கிலோ மீட்டருக்கும் குறையாத அந்த கிராமப்பகுதிகளைக் கடந்து செம்மண் சாலையில் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் வழி நெடுக காணப்படும் இதே பனைமரங்கள்தான் 'சல சல' பனை ஓலை உரசல் ஒலியால், தோழமையாக தனிமையைப்  போக்கி பாட்டியின் கிராமத்துக்கு சலிப்பில்லாமல் கொண்டு சேர்க்கும்.

இத்தகைய ஒரு சூழலில்தான் ஒருமுறை பாட்டி, “(சுவரை ஒட்டியிருந்த திறந்தவெளி) குளியலறையில், செம்மண் பாறைகளுக்கிடையில் ஒரு பனம் மரம் வளர்வதாக” - சொன்னாள்.

“அதை பிடுங்க வேண்டாம்..!” – என்ற எனது சொல்லை, வேத வாக்காக ஏற்ற அவள், கிழங்கு நிலையில் இருந்த அந்த பிஞ்சு மரத்தை பிடுங்கிடாமல் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

 

ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும், அந்த ஒற்றைப் பனை மரத்தின் வளர்ச்சி என்னை ஒத்ததாகவே இருந்தது. என்னோடு பனையும் வளர்ந்து, சில ஆண்டுகளில் நெடுமரமாக.. இளைஞியாகிவிட்டது. 

ஒற்றைப் பனைமரம் அந்த கிராமத்தில் முதன்முறையாக ஒரு வீட்டில் வளர்ந்து காய்த்து நின்ற அதிசயமும் நடந்தது.

அந்த பனைமரத்தின் ஒய்யாரமும், சலசலப்பும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதனுடனான எனது பரிச்சயம் எனது பாட்டியின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது.

தனது ஒரே மகனை அந்த ஒற்றைப் பனைமரத்துடன் ஒப்பிட்டு புலம்பிவந்த எனது பாட்டியின் ஆசையை எனது தந்தை புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான், அந்த குக்கிராமத்து வீட்டை சொற்ப விலைக்கு விற்றுவிட்டார். அந்நிலையில் மீண்டும் அந்த வீட்டையும் பனை மரத்தையும் பார்க்க நான் சென்றிருந்தேன். வானளாவி கம்பீரமாக வளர்ந்து நூங்குகளாக பனைமரம் காய்த்திருந்தது. அதன் பிறகு நான் மேற்கொண்ட பயணத்தில் அந்தப் பனைமரம் கொல்லப்பட்டிருந்தது ஒரு சோகமான வரலாறு.  

எனது இளம் பிராயம்தொட்டு பனைமரத்துடன் எனக்கிருந்த தொடர்பு மீண்டும் வடசென்னை காட்டுப்பள்ளி வனத்துக்கு நான் ஒளிப்படங்கள் எடுக்கவும், காட்டுயிரி ஆய்வுக்காக செல்லும்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நூற்றுக் கணக்கான பனைமரங்களும், சவுக்கும், முந்திரியும் அடர்ந்த காடு அது.

அனல் மின்சாரம் என்ற பெயரில் பல ஏக்கர் வனங்கள் கையகப்படுத்தப்பட்டு https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg அழிக்கப்படும் வேளையில்தான் எனது மாடி தோட்டத்தில் குமாருடன் அந்த சந்திப்பு நடந்தது. ஒரு லட்சம் பனை விதை நடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே நமது நாட்டின் பாரம்பர்ய வேளாண்முறைகள் பக்கம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த https://www.youtube.com/watch?v=JtvoDYT_KH4&t=15s எனது கவனமும் தீவிரமானது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட சிரத்தைகள் பலருக்கு வேலையற்றவனாக என்னைக் காட்ட எனக்குக் கிடைத்த ஒரே துணை குமாரின் உதவிகளோடு, Pasumai Kudaram  பசுமைக் கூடாரம் https://www.facebook.com/Pasumai-Kudaram-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1820117441612952/?ref=br_tf மூலமாக ஆக்கப் பூர்வமான பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, October 6, 2020

தற்சார்பு என்பது இதுதான்!

 

 திருமூர்த்தி
'''''''''''''''''''''''''''''''''''''
தக்காளி, கத்திரி, சின்ன வெங்காயம், மிளகா, கொஞ்சம் முள்ளங்கி சோதனை முறையில் வெள்ளைபூண்டு, துவரை இப்படி எல்லாமே மஞ்சள்காட்டுக்குள்ளேயே ஊடுபயிரா வீட்டுக்கு தேவையான அளவு நடவி விடுவோம். அடுத்த சில மாதங்களிலேயே அறுவடைக்கு வந்திடும். 
 
கத்திரிக்கா செடிக்கு மட்டும் புழு  வரும். அதற்கு அடுப்பு சாம்பல் இரைத்துவிடும் வைத்தியமே போதும். 
 
தற்சார்புனா இப்படிதான் பார்கிறோம். 
 
மூன்று வருடத்திற்கு முன்பே இருக்கிற மஞ்சளை கிலோ 250 ரூபாய் விலைக்கு நாங்களே கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்துவிடுகிறோம்னு மொத்த மஞ்சளையும் கேட்டாங்க. 
 
ஆனா நா ஒத்துக்கல. 
 
கஷ்டபட்டு விளைய வச்சதே நம்ம மக்கள் சாப்பிடதானே தவிர வெளிநாட்டில் இருக்கும் வெள்ளைக்காரனுக்கு இல்லைனு தீர்கமான சொல்லீட்டேன். 
 
மாசம் நூறு கிலோ, இருநூறு கிலோ அரைச்சு விற்பதற்கு பதிலா மொத்தமா ஒரு விலையை வாங்கீட்டு கொடுத்திடலாமேனு மூளை சலவை செஞ்சும் பார்த்தாங்க. 
 
ம்ம்ஹூம்..! 
 
ஒரே பிடிவாதம் கொடுப்பதில்லைனு. 
 
பின்னே இந்த பிடிவாதம் மட்டும் இல்லைனா ஏறி நசுக்கிவிட்டு போயிட்டே இருப்பாங்களே..! 
 
பெருமைக்காக சொல்றேனு நினைக்காதீங்க. 
 
முதல் வருடத்தில் முன்னூறு கிலோ மஞ்சள்தூள் விற்று  இப்போ மாதம் முன்னூறு கிலோ விற்க்கிறதுனு. 
 
அதற்கு முக்கிய காரணம் எத்தனை தேவை அதிகரித்தாலும், கலப்படம் மற்றும் நச்சை தெளிப்பதில்லைங்கிற சமரசமாகாதா என்னோட இந்த பிடிவாதம்தாங்க..! 
 
ஐயாயிரம் பேரை நண்பர்களா முகநூலில் சேர்த்து வச்சுக்கிட்டு பாதி பேரை ஏமாற்றி கல்லா கட்டுறவங்க இங்க நிறையா இருக்கங்னு நேற்று என்னை ஒரு நண்பர் 2014 பகிர்ந்த ஒரு பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தார். 
 
அப்படி எல்லாம் யாரையும் ஏமாற்ற முடியாது ராசா..! 
 
அப்படி ஏமாற்ற வேண்டி அவசியம் எங்களுக்கு இல்ல. 
 
அது எங்க வேலையும் இல்ல. 
 
நீங்க இப்படியே எங்களை உமிழ்ந்திட்டே இருங்க. 
 
அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு எங்களால் நகர முடியும்..!
 
''''''''''''''''''''''''''''''''''''''''''
நன்றி: திருமூர்த்தி, இயற்கை விவசாயி, சத்தியமங்கலம்
https://www.facebook.com/thiru.murthy.568

வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பில்லை!

 பரிமளா தேவி

'''''''''''''''''''''''''''''''''''''''''

நான் மஞ்சள் விவசாயி அல்ல.

இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பெரியது ஹைபிரிட் ரகம். நாட்டுரகம் சின்னதாகத்தான் இருக்கும்.

பிசு பிசுனு இருக்குங்கறீங்க.! பின்னே, அதிலுள்ள நீர்சத்து எங்க போகும்.?!

தை-மாசில இருந்து அறுவடை ரெண்டு மூணு மாசம் மட்டுமே நடக்கும்.

விதைக்காக நிழல்ல ஒரு அம்பது நாள் வெச்சிருக்கலாம்.

அப்பவே முளைப்பு வந்துரும்.

வருஷம் 365 நாளும் பச்சை மஞ்சள் வேணும்னா சீதோஷ்ணநிலைக்கு தகுந்தமாதிரி தானே விளையும்.!? அதுபோக நிலஅமைப்பு மண்ணுக்கு மண். அதிலுள்ள சத்துக்களுக்கு தகுந்தபடிதான் விளைச்சல் இருக்கும்.

மஞ்சள்தூள் அரைக்கறவங்களுக்கு பொடி மஞ்சள். பெரிய மஞ்சள் வேறுபாடெல்லாம் இல்லை. பெரிச விட பொடிதான் சீக்கிரம் அரைபடும்.

பசு மஞ்சளை வேகவைத்து பங்குனி சித்திரை வெயிலிலேயே முப்பது நாட்கள் போல் கடும் வெயிலில் காயவைத்து  கைகளால் உடைக்க முடியாத அளவு கெட்டியான பின்தான் மூட்டை பிடிப்பார்கள்!

கிலோ 90 ரூபான்னு விலை சொல்றாங்கனு சொல்றீங்க.

பல்க்கா ஒரு ஏக்கர் மஞ்சளையும் எடுத்துகிட்டா 15 ரூபாக்கே கொடுப்பாங்க!

வாங்கறது ஒருகிலோ ரெண்டுகிலோ. அதுக்கு தினம் கொஞ்சமா அறுவடை செஞ்சு கொரியருக்கு பேக் பண்ற வேலையெல்லாம் விவசாயிக்கு சாத்தியமில்லாதது! இன்று பெண் வேலையாட்கள் கூலி தினம் 300 ரூபாய். நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் யாரும் இப்ப வேலை செய்யறதே இல்லை.!

நீர்சத்து குறைஞ்சா மஞ்சள் சுருங்கத்தானே செய்யும்.!

யோசிங்க.ப்ளீஸ்.

நுகர்வோர் காசை வாங்கி எந்த விவசாயியும் ஏமாத்தி கடனை கட்டப் போறதில்லை. கோடீஸ்வரனும் ஆகப்போறதில்லை!

முப்பது ‘குரோ பேக்’ வாங்கி சித்திரை வைகாசில ஒவ்வொரு பேக்லேயும் ஒரு விதைமஞ்சள் ஊணி வைங்க. ஒரு வருஷம் அதுக்கு வேலை செய்ங்க. உங்க உழைப்புக்கான கூலிய போடுங்க. மஞ்சள் விளைவிக்கறதுல உள்ள பிரச்சனைய பாருங்க.

அப்படி விளைந்ததை மாதத்திற்கு இரண்டு பைகளாக அறுவடை செய்து ப்ரெஷ்ஷா சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்க!

வேளாண் மசோதா நிறைவேறி கார்ப்பரேட் மரபணு மாற்றிய மஞ்சள் கொடுப்பான். நாங்களும் ஒரே சைஸ்ல விளைய வெச்சு குடுப்போம்.

அப்பவும் உங்களுக்கு நேரடியா கொடுக்கமுடியாது.

அவனுக்கு 50 ரூபாய்க்கு விப்போம். அவன் இந்தக் கமெண்ட்டையெல்லாம் படிச்சுப்பாத்துட்டு முகம் சுருங்காம இருக்க பண்ணும் (மேக்அப்) வைத்தியத்தையெல்லாம் மஞ்சள்ல ஏத்தி கிலோ 500 ரூபாய்னு விப்பான்.

நீங்களும் ‘குர்குமின்’ 6% இருக்குதுன்னு கேள்வியே கேக்காம வாங்கி சாப்பிடுவீங்க. ஆறாவது மாசமே கேன்சர் வரும்!

தயவுசெய்து யாரும் தவறாக நினைக்கவேண்டாம். இதுனாலேயேதான் நான் எந்தப் பொருளும் தற்போது விற்பதில்லைங்க.

இவ்ளோ பெரிய விளக்கம்  உங்களுக்கு புரியற மாதிரி சொல்ல என்னால முடியுது. ஒரு மணிநேரம் அவுட். அதுக்குள்ள அஞ்சுதடவை போனை வெச்சுட்டு போய்வேலைய பாத்துட்டு வந்தேன்.

எல்லோருக்கும் அது சாத்தியமுமில்லை. நேரமுமிருக்காதுங்க.!

Dry ஆன பொருளா இருந்தா கெட்டுப்போகாது.

பச்சையான பொருள்களெல்லாம் அழுகறது. பூசணம் பிடிப்பதுனு எல்லா பிரச்சனையும் இருக்கும்!

சகவிவசாயியா விவசாயத்துல இருக்கற அதை மார்க்கெட்டிங் பண்றதுல இருக்கற சிக்கலை சொன்னேன்!

இதுக்கும் மேல மாடு-கன்னு பிரச்சனை. மோட்டார் பிரச்சனை. அதுக்கு சரிபண்ண ஆட்கள் கிடைக்காமனு ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம்.

ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க எல்லோரும்!

கட்டுபடியே ஆகாத விலையில் போடற முதலீட்டை எடுக்க முடியாத நிலையிலும் இன்னும் விவசாயம் செய்யறவங்க நல்லாருக்கணும்னு வேண்டிக்குங்க.

ஏன்னா இன்றுவரை விவசாயத்தில் நீடிப்பதே பெரும் சாதனையாத்தான் நினைக்கிறோம். ஏதோ ஒரு 5% பேர் பணக்கார விவசாயிகளா இருக்கலாம். எல்லோரும் அப்படி அல்ல. பணக்காரனா இருக்கறவன் இந்த நோண்டு வேலையெல்லாம் செய்யமாட்டான்.

அத்தனை ரசாயன மருந்தையும் ஊத்தி விளையவைப்பான். வேகவைப்பான். மூட்டை போட்டு குடோன்ல ஸ்டாக் வெச்சு மாதம் ஒருமுறை செல்பாஸ் வெச்சு விலையேறும் வரை பத்து வருஷமானாலும் ஸ்டாக் வெச்சிருந்து வித்துட்டு போயிருவாங்க.

அவங்க பார்வைல அறம் வழுவாம இருக்கணும்னு இயற்கையை விவசாயம் செய்யறவங்க எல்லாம் பொழைக்கத் தெரியாத லூசுக.

விவசாயம் மட்டுமே செய்பவர்கள் இப்பவும் காட்டை வித்துதான் கடன் கட்டறோம்..!

பூமாரி. ஹெர்பீ இவங்கெல்லாம் யாருன்னே எனக்குத்தெரியாது.

திருமூர்த்தியும் அல்லி அக்காவையும் வேணா தெரியும்.

கார்ப்பரேட் ஆசுபத்திரில. மால்ல நகைக்கடைல ஜவுளிக்கடைல.. வாழ்வியலுக்கு பத்துகாசு பிரயோனம் இல்லாத தற்கால கல்விக்கூடங்களுக்கு லட்சலட்சமா செலவழிப்பீங்க!

ஆனா, ஆரோக்கியத்துக்கு செலவழிக்க இத்தனை கணக்கா.?!

அங்கங்க இருக்கற விவசாயிகளை தத்தெடுத்துகிட்டு உங்க தேவைகளை சொல்லி விளைய வெச்சு சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க.!

உங்களுக்காவது இந்தவாய்ப்பு கிடைச்சிருக்கு பயன் படுத்திக்குங்க.

உங்க வாரிசுகளுக்கு நோ சான்ஸ்.! 

ஆமாம்.. வாய்ப்பில்லை ராசா..! வாய்ப்பேயில்லை!!

 (நன்றி: Parimala Devi - https://www.facebook.com/parimala.devi.7777)

Monday, September 28, 2020

அடி ஆத்தி! நீர் நிலைக‌ளில் இத்தனை வகைக‌ளா...?


(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18)  குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தகவல்: G.V. Varadharajan,  திருவாரூர் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்

https://www.facebook.com/groups/572874246100629/user/100000019619177

Thursday, August 27, 2020

அந்த இரண்டு இளம் மீட்பாளரும், தூக்கணாம் குருவி குஞ்சுகளும்

 

மித்ரன் மற்றும் வர்சா எப்போதும் போல் தங்கள் ஊரை சுற்றி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மழை நீர் தேங்கிய சதுப்பு நிலத்தில் வளர்ந்திருந்த யானைத்தட்டை புற்கள் செழித்த புதர் காட்டின் கரையோரம் அநாதரவாக தரையில் கிடந்த தூக்கணாங்குருவி கூடு ஒன்றை கண்டனர்.

யாரோ மாட்டுக்கு புல் அறுத்தவர்கள் உச்சிப் புல்லை வளைத்து, கோர்த்து, இணைத்து கட்டியிருந்த கூட்டை அகற்றி பொருட்படுத்தாமல் தரையில் வீசிச்சென்றுள்ளனர்.

கீழே கிடந்த கூட்டை அந்த இரண்டு சிறுவர்கள் கையில் எடுத்து சோதனை செய்ததில் உள்ளே நான்கு இளம் குஞ்சுகள் இருந்துள்ளன.

சரி நமக்கென்ன கவலை என்று அப்படியே கிடத்திவிட்டு கடக்கவில்லை அந்த குழந்தைகள்.

மித்ரன் மற்றும் வர்சா நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுவர்கள். நண்பர்கள் இருவரும் அந்த குஞ்சுகளை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை விவரித்தனர்.

மாலையில் மீட்கப்பட்ட இளம் குஞ்சுகள் இரவு முழுதும் அந்த குழந்தைகள் அரவணைப்பில். குஞ்சுகள் பசியால் வாடும் என்று அந்த குழந்தைகள் புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்து உணவாக கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் குழந்தைகளின் பெற்றோர்கள் 'ஊர்வனம்' குழுவினரை அண்ணன் இறகுகள் ரவீந்திரன் மூலம் நம்மை தொடர்பு கொண்டனர்.

ஊர்வனம் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு குழந்தைகள் மித்ரன் மற்றும் வர்சா உடன் விரைந்து சென்றனர். குஞ்சுகள் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

உயர்ந்த வசதியான பெரும் குடியிருப்புகளுக்கு நடுவே யானைத்தட்டை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் அது. 

அங்கு பெரும் கூட்டமாக தூக்கணாங்குருவிகள் குடியேறி இருந்தன. ஆங்காங்கே கூடுகள் கட்டப்பட்டிருந்ததையும் பெற்றோர்கள் கூட்டுக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. கூடுகளில் இருந்து வெளிவரும் அழகிய இசையில் உள்ளே குஞ்சுகள் உள்ளது உணரப்பட்டது.

கரையோரம் இருந்த புற்கள் அறுக்கப்பட்டிருந்தன. அறுபட்ட புல்லில் கட்டப்பட்டிருந்த கூட்டை அகற்றி கீழே வீசிச்சென்று புற்களை எடுத்து சென்றுள்ளனர்.

சரி குஞ்சுகளை நாம் எடுத்து சென்று இரையை ஊட்டி வளர்க்கும், ஒரு சவாலான, ஆபத்தான பணியைவிட, அதை காணாது தவிக்கும் பெற்றோர்களுடன் சேர்ப்பதுதான் சிறப்பானது.

கூடு கீழே கிடந்த சரியான இடம் கண்டறியப்பட்டது. அதன் அருகில் உயரே வளர்ந்து இருந்த புல்லின் சதுப்பு நிலப் பகுதியில் மீட்புக்குழுவினர் இறங்கினர். வேறு வழியில்லாததால், தூக்கணாங்குருவி போல் அருகருகே இருந்த வெவ்வேறு புல்லின் உயர்ந்து வளர்ந்த நுனிப்பகுதியை வளைத்து, இணைத்து கூடு மீண்டும் உயரே நான்கு குஞ்சுகளுடன் கட்டி விடப்பட்டது.

மித்ரன், வர்சா என்ற இரண்டு இளம் மீட்பாளர்கள் குருவியின் குடும்பத்தை இணைக்க மேற்கொண்ட சிரமங்கள், அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக "பல்லுயிர் ஓம்புதல மாந்தர் இயல்பு" என்ற கருத்தை உணர்த்துகிறது.

வாழ்த்துகள் மித்ரன் மற்றும் வர்சா...

படம், தகவல்: Vishwa Wishtohelp - https://www.facebook.com/vishwanath.vishwa.507
ஊர்வனம் :: Urvanam
விலங்குகள் மீட்புக்கு
8608700088

'''''''''''''''''''''''''

தூக்கணாம்குருவிகளின் வாழ்வியலை அறிய இணைப்புக்கு: https://www.youtube.com/watch?v=on__YmwEm1U&t=14s

Thursday, August 20, 2020

எண்ணூர் உப்பங்கழியும், அரங்கேற்றப்படும் அத்துமீறல்களும்!

பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின
>>> இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''

வடசென்னை மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி, முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை. பள்ளி நாட்களில் மாணவர்களாகிய நாங்கள் பளிங்கு போல தோற்றமளிக்கும் இந்த நதியில்தான் நீந்தக் கற்றுக் கொண்டோம். சுவை மிகுந்த மீன்களை விடுமுறை நாட்களில் இங்குதான் வேட்டையாடி உண்டோம். வெண்குவியல்களாய் கொட்டப்பட்டிருக்கும் உப்பைச் சுமந்த உப்பளங்கள் பிரமிப்பூட்டும். உப்பையும், சவுக்குச் சுள்ளிகளையும் சுமந்த பாய்மர படகுகள் கம்பீரமாக பயணிக்கும். அந்தக் கால கோலிவுட்டின் வெளிப்புற படக்காட்சிகளின் முக்கிய இடமாக இருந்த நதி இது. பரிந்துரைக்கப்பட்ட சுற்றலாதலங்களில் ஒன்றாக விளங்கிய இடம்.

உப்பங்கழியின் பளீர் நீல நிற கரையோரத்தில், வண்ணமய சிறு நண்டுகள் தங்கள் தடித்த ஒற்றைக் காலால் வரவேற்கும். இருபுறமும், அடர்த்தியான அலையாத்திக் காடுகள் பசுமைப் பூச்சுடன் செழித்து வளர்ந்து ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உறைவிடமாக இருந்த நதி. 

இந்த நதி அதாவது எண்ணூர் உப்பங்கழி தனது அத்தனை சிறப்புகளையும், அழகையும் இழந்து பொலிவிழந்த விதவைப் பெண்ணாய் தற்போது காட்சியளிக்கிறது.  ஏற்கனவே எண்ணூர் அனல் மின்நிலையம் இருந்தது போதாதென்று அழகிய உப்பளங்கள் இருந்த இடத்தில் இன்னும் ஒன்றுக்கு இரண்டாய், வல்லூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம் என்று மூன்று அனல் மின்நிலையங்கள் நதியை சின்னாபின்மாக்கிவிட்டன. சாம்பல் மயமாய், நிலக்கரி கழிவுகளாய் உப்பங்கழியை நிரப்பிவிட்டன. 

அத்தோடு தனியாருக்குச் சொந்தமான வாகன உற்பத்தி நிறுவனங்களின் எண்ணெய் கழிவுகள், இரசாயன ஆலைகளின் கழிவுகள் என்று கரு நிறத்தில் எண்ணெய் பிசகாய் உருமாற்றிவிட்டன. அரிய வகை பச்சை ஆலி போன்ற நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், மீன்பிடித் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துவிட்டன.

சூழல்மாசுவால் சீரழிக்கப்பட்ட எண்ணூர் உப்பங்கழி குறித்து விரிவாக தெரிந்து கொள்வதுதான் பிரச்னையின் பிரதானத்தை உணர முடியும். மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் மொத்த பரப்பளவு கொண்ட உப்பங்கழி என்பது ஒரு நீரேற்ற நீர்நிலைப் பகுதி என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆங்கிலத்தில் புலிகாட் என்று வழங்கப்படும், பழவேற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி நதி, உப்பங்கழிக்கு வந்தடைந்து, தெற்கு திசையில் பாய்ந்து எண்ணூர் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அத்துடன், தெற்குப்பக்கம் கொசஸ்தலை நதி இந்த உப்பங்கழியில் இணைந்து, முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கொசஸ்தலை, ஆரணி நதிகளின் நீர் சமுத்திரமுனையில் சந்திக்கும் நீர்நிலை அமைப்பு. இதுத் தவிர, பக்கிங்காம் கால்வாயும், சென்ட்ரல் ரயில்நிலையம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவு நீர் எண்ணூர் முகத்துவாரத்துக்கு வந்தடைகிறது.
 
முன்பு, இந்த நதியின் இரு பக்கங்களிலும் அலையாத்திக் காடுகளும், ஆற்றுப்படுகைகளில் அலையேற்ற சதுப்பு நிலங்களும், மண்மேடுகளும், உப்பு நீரில் வளரும் தாவரங்களும் ஏராளமாக இருந்தன. பிரதான கால்வாய் ஆழமாக இருந்ததால், நீரின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. முகத்துவாரம் இயற்கையாகவே திறந்திருந்ததால், ஒவ்வொரு பருவநிலை அலையேற்றத்தின்போதும், கடலிலிருந்து மீன்களும், இறால்களும் உப்பங்கழிக்கு புலன்பெயர்ந்து, அதி பாதுகாப்பான சதுப்பு நிலக்காடுகளில் முட்டைகளை இட்டன. இனப்பெருக்கம் நடந்தது. சுவை மிகுந்த நீர் வாழ் உயிரினங்களால் மீனவ மக்களின் வாழ்வும் செழித்தது. நதியைச் சுற்றியிருந்த உப்பளங்களால், சவுக்குக் காடுகளால் பொருளியலும் பெருகியது. 
 
பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின. https://www.youtube.com/watch?v=I2zClBfZh-0 https://www.youtube.com/watch?v=4pdprvBSwIo 
 
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னைவாசிகளின் அறியாமையைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய திட்டங்களின் விளைவுகள்தான் இவை. https://www.youtube.com/watch?v=4TflFDj74l0

சென்னை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக இந்த உப்பங்கழிக்கு வந்து சேர்கிறது. 
 
மணலி தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் கழிவுகள் இந்த உப்பங்கழியிலும் கொசஸ்தலை ஆற்றிலும் கலக்கின்றன. https://www.youtube.com/watch?v=9MZxhPcfj4k 
 
எண்ணூர் அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல் எண்ணெய் நிறுவனங்கள், காமராஜர் துறைமுகம் போன்றவை இந்த நீர்நிலைப் பகுதியின் ஆயிரம் ஏக்கருக்கும்  அதிகமான இடத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளன.  இதன் விளைவாக மீன், இறால் போன்ற நீர்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இங்குள்ள செழிப்பான மண் மேடுகள் மற்றும் சதுப்புநிலப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. https://www.youtube.com/watch?v=miF_9v9fi1I  https://www.youtube.com/watch?v=7zKaqaL-P6o

இந்த அத்துமீறிய ஊடுருவல்களாலும், குழாய்களிலிருந்து கசியும் நிலக்கரி சாம்பலும் இந்த நதியின் ஆழத்தை வெகுவாக குறைத்துவிட்டன.  இதன் விளைவாக, ஆழமற்ற நீர் வெகு வேகமாக வெப்பமடைந்தது. மீன்கள், இறால்கள் போன்ற நீர் வாழ் உயிரிகளின் உயிர்வாழ்க்கை சிக்கலானது. https://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ  வடப்பகுதியில் இருக்கும் மீன்பிடி இடங்களில் சேறு அல்லது நிலக்கரி சாம்பல் சூழ்ந்து கொண்டது. இதனால், மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொள்வதால் அந்த மீன்பிடி இடங்களுக்குப் போவதில் சிக்கல் ஏற்பட்டது. https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg

அதேபோல, வடசென்னை அனல் மின் நிலையம் நேரடியாக முகத்துவாரப்பகுதிக்கு அதன் வெப்ப நீரை வெளியேற்றுகிறது. உயர் அலையேற்ற கால நிலையில்கூட, வெப்ப நீர் காரணமாக உப்பங்கழிக்கு கடலிலிருந்து மீன்கள் புலன் பெயர முடியாமல் போனது. https://www.youtube.com/watch?v=TUSV_c8s7ns 
 
இவ்வளவு மோசமான அரசு அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்தி எண்ணூர் கடற்கழியைக் காத்து ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நமது நாட்டில் எந்த சட்டப் பிரிவுகளும் இல்லையா என்ற கேள்வி எழுவதும் இயல்புதான்! 
 
இந்திய நாட்டில் ஏட்டளவில் குறைவில்லாத சட்டங்களும் உள்ளன. அவற்றில் ஒட்டகம் நுழையும் அளவுக்கு ஓட்டைகளும் உள்ளன. சட்டங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களும், விழிப்புணர்வற்ற மக்களும் உள்ளனர். 
 
எண்ணூர் உப்பங்கழியை மட்டும் எடுத்துக் கொண்டால் அது 6 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த 6 ஆயிரத்து 500 ஏக்கர்  பகுதியைப் பாதுகாக்க கோரி அரசே பரிந்துரைத்துள்ளது முக்கியமானது. அந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பகுதிக்குக் கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சட்ட ரீதியாக முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 16 கி.மீ. நீளம் கொண்ட கருங்காலி நதிப் பகுதியின் முகத்துவாரத்திலிருந்து (சிந்தாமணி முகத்துவாரம்) எண்ணூர் முகத்துவாரம் வரையிலான பகுதி, 1996ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆர்.இசட்) வரைபடத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே  அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.ஆர்.இசட். அறிவிப்பு குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது. இதன்படி, மீன்பிடி பகுதிகள் எவை என்று அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. அதேபோல, நதியின் நிலப்பரப்பை கையகப்படுத்த, நிலக்கரி சாம்பல், மணல் அல்லது கழிவுகளை நதியில் கொட்டுவதும், உப்பங்கழியில் வெப்ப நீரை வெளியேற்றுவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதாவது காரணங்களுக்காக நதியின் போக்கைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்குக்கூட இந்த சட்டத்தின்படி யாருக்கும் அனுமதி கிடையாது எனலாம். 
 
இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தும், இந்த நதி தற்போது ஏன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது? என்ற கேள்வி எழுவதும் சகஜம்தான்!

வெறும் சட்டங்களால் மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என்றால் நாம் புழல் சிறையைக் கட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதேபோல, சட்டங்களால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் பாராபட்சமின்றி மக்களல் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தங்களும் தர வேண்டியது மக்கள்தான்..! 
 
அதோடு மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை மீறாமல் அமல்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் ஆர்வம் கொண்டுள்ள வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. 
 
சீர்கெட்டுவிட்ட எண்ணூர் உப்பங்கழி சம்பந்தமாக மீனவ பெருமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்தனர். ஆனால், அந்த எதிர்ப்பை சட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. மேலும், தகுந்த நேரத்தில் தங்கள் கருத்துக்களை அவர்கள் பதிவு செய்யவில்லை அல்லது பெரும்பான்மையினர் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

வல்லூர் அனல் மின்நிலையம், ஹெச்.பி.சி.எல்லின் எண்ணெய் சேமிப்பு முனையம் முன்மொழியப்பட்டபோது பொதுமக்களின் கருத்துகளை அறிய கண்துடைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது உண்மைதான்! இவற்றில் தங்களது கவலையைப் பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மண்ணையும், காற்றையும், காட்டையும், சக உயிர்களையும் காத்தல் வருங்கால தலைமுறையைக் காப்பது என்ற தொலை நோக்கு பார்வையில்லாமல் ஒரு சிலர் இதில் வேலைவாய்ப்பை நாடிச் சென்றனர். இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சூழலைச் சீரழிக்க வந்த நிறுவனங்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை எந்தவிதமான உத்திரவாதமும் தராமல், அதைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லாமல், ஒப்புக்கு தலையாட்டிவிட்டு இந்த நதிப்பகுதியில் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தன. 
 
அரசு ஏஜென்சிகளை இதற்குப் பொறுப்பாளிகள் ஆக்குவதற்கு மக்கள் போதுமான முனைப்புக் காட்டவில்லை. எண்ணூர் உப்பங்கழி பகுதி அபிவிருத்தி மண்டலம் கிடையாது என்ற சட்டம் அமலாக்கப்படுவதையும், இந்தப் பகுதியின் 1996ஆம் ஆண்டின் வரைபடம் அறிவிப்பின்படி எண்ணூர் உப்பங்கழி பகுதியின் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இருப்பதையும் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கும் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

2017 ஜூலை மாதம் இந்த ஆணையம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணூர் பகுதியின் சி.ஆர்.இசட். வரைபடம் என்று கூறி மோசடியான ஒரு வரைபடத்தை வெளியிட்டதாகவும், இந்த வரைப்படத்தின்படி எண்ணூர் உப்பங்கழி என்ற ஒன்று இருப்பதையே மறுப்பதாகவும் சூழலியலாளர்களால் சொல்லப்படுகிறது.  காளாஞ்சி அருகே உள்ள சிந்தாமணி முகத்துவாரத்துக்கும், சமுத்திரமுனைக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த பகுதியும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக (நீர் அல்ல நிலம்) காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
 
ஜூன் மாதம் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட இந்த வரைப்படத்தைப் பயன்படுத்தி இந்த நதியின் ஆயிரம் ஏக்கர் பகுதியை காமராஜர் துறைமுகத்துக்கு ஒதுக்கீடு செய்தது. அந்தத் துறைமுகம் நதியின் மேல் ஒரு கார் நிற்கும் முனையம், நிலக்கரி கிடங்கும் ஆகியவற்றை கட்ட விரும்புவதாக சொல்லப்படுகிறது.
 
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிக மோசமான அரசு மோசடி இது என்றால் மிகையில்லை..!

 
வெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்ட வரலாற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு பயனும் இல்லை. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நெடுவாசல்கள், கதிராமங்கலங்கள் அவலங்களைவிட வடசென்னைவாசிகளின் வாழ்வியலுக்கு கவனம் செலுத்துவதும் முக்கியமானது. 

தனது தவறுகளுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க செய்வதற்கும், வளர்ச்சி என்ற பெயரால் வருங்கால தலைமுறையினரின் வாழ்வியலையும், சக உயிரிகளின் உயிர்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்தவும் ஆக பொறுப்பு அவர்களை அரியணையில் அமர்த்தும் மக்களின் அதிகாரத்துக்கே உள்ளது. மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதும், இதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஆணையத்தில் தவறாக நடந்துகொள்பவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டியதும் பொது மக்களின் தார்மீகப் பொறுப்பாகும். 

நாளை எண்ணூர் என்ற ஒரு பகுதி இல்லவே இல்லை என்று சுயநல வரைப்படம் உருவாவதற்கு முன் பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாளைய இளந்தலைமுறையினர் சுயநல ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சமூகத்தின் வாரிசுகள் தாங்கள் என்ற அவப் பெயரை வரலாற்றில் காலமெல்லாம், சுமக்க வேண்டியிருக்கும். சூழல்மாசுவால் மொத்த வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, சொந்த நிலத்தில் மனித உருமாறி அகதிகளாக வலம் வர வேண்டியிருக்கும்.


Thursday, August 6, 2020

மற்றொரு பெய்ரூட் ஆகுமா வடசென்னை? அச்சத்தில் வாழும் மக்கள்!

பக்கம் பக்கத்திலேயே அமைந்துள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், கொட்டப்பட்டு கிடக்கும் உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளுக்கான வேதிப்பொருட்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மற்றும் சமையல் எரிவாயு கிடங்குகள் என்று அடர்த்தியான பேராபத்துகள் நிறைந்த பகுதி வடசென்னை ~இக்வான் அமீர்
'''''''''''''''''''
2015-ஆம் ஆண்டு கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்கு என்று கூறி 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்று சொல்லி, இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சுங்கத் துறைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளிவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான கிடங்கில் 35 கண்டெய்னர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவுசெய்யப்பட்டும் அந்த பணிகள் துவங்கவில்லை. தற்போதும் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத் துறை கிடங்கில்தான் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 137-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 5000-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

வெடிப்பு நடந்த துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்தவர் அஜீஸ். ரசாயனபொருள் வெடிப்பு நடந்த சமயத்தில் தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். குளியலறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியதில் இவர் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. "இனி அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்" என்கிறார் அச்சம் சிறிதும் விலகாமல் அஜீஸ்.

"நாங்கள் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகதான் நினைத்தோம். அதன் விளைவு சுனாமி என்பதும் தெரியும். ஏற்கெனவே இங்கு சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெடிப்பின் அதிர்வில் வீட்டின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, சுவர்கள் சரிந்தன. வெடி சத்தத்தில் கொஞ்ச நேரத்திற்கு காதே கேட்கவில்லை," என்கிறார் அஜீஸ்.

வெடிப்பின் பாதிப்பு, 15 கி.மீட்டர் தூரம் அளவுக்கு இருந்ததாக கூறும் அஜீஸ், தான் பணியாற்றும் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

இந்தப் பின்னணியில் சென்னைக்கு அருகில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்து வடசென்னைவாசிகளிடம் பெருத்த கவலைகள் எழுந்துள்ளன.

ஏனென்றால், பக்கம் பக்கத்திலேயே அமைந்துள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், கொட்டப்பட்டு கிடக்கும் உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளுக்கான வேதிப்பொருட்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மற்றும் சமையல் எரிவாயு கிடங்குகள் என்று அடர்த்தியான பேராபத்துகள் நிறைந்த பகுதி வடசென்னை.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள சுங்கத் துறை அதிகாரிகள், அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வேதிக் கிடங்கிற்கு அருகில் குடியிருப்புப் பகுதிகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தனர்.

அவை ஏலம் விடப்படாமல் சேமித்துவைக்கப்பட்டிருப்பது ஏன் எனக் கேட்டபோது, "2019 நவம்பரில்தான் இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏல நடைமுறைகளை துவங்கும் காலத்தில் கொரோனா காரணமாக, ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அந்தப் பணிகள் முடங்கியதாகவும் விரைவில் அவற்றை மின்னணு ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்மையில், அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியைச் சுற்றிதான், கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகர், திருவெற்றியூர், மாதாவரம், மணலி, மணலி புதுநகர், எர்ணாவூர், எண்ணூர் போன்ற முக்கிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிப்போர் அனைவரும் மீனவ மக்களும், உழைக்கும் சாமான்யருமே ஆவார்கள். எதேச்சையாக ஏதாவது விபத்துகள் நடந்தாலும் தப்பிக்க நிலபரப்பின்றி சுற்றியும் வேதிப்பொருள் ஆபத்து சூழ் பகுதியில் வசிப்பவர்கள்.

அதனால்தான், வடசென்னை மற்றொரு பெய்ரூட் ஆகிவிடக்கூடாதென்று கவலையில் வடசென்னைவாசிகள் அஞ்சிகொண்டிருக்கிறார்கள்.

லெபனான் பெய்ரூட் வெடிப்பு நிகழ்வுக்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என்று பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 4, 2015

வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்


வடசென்னை அனல் மின் நிலையத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 

அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 660 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக வாயலூர் உள்ளிட்ட பகுதிகளில் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதின் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் வாயலூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Wednesday, February 19, 2014

சுற்றுச் சூழல்: ‘சூழலால் மாறிப் போனது வாழ்க்கை!’

 
இடம்: சென்னை, எண்ணூர் கடற்கரை சாலை. படம்: இக்வான் அமீர்.
மைனா: என்ன பொறுக்கிட்டிருக்கீங்க கொக்கக்கா? குளத்துப் பக்கம் போகலியா?

கொக்கு: குளம் எங்கேயிருக்கு? வயல் எங்கே இருக்கு? எல்லாம் பிளாட் போட்டில்லே வித்திட்றாங்க!

காக்கா: கவலைப்படாதீங்க பிரண்டஸ்! மனுஷன் இருக்கிறவரைக்கும் குப்பையும் இருக்கும். நீங்க எங்க கட்சியிலே சேர்ந்திருங்க.. இப்படி குப்பைகளைக் கிளறி வயிறு நிறைய சாப்பிடலாம்.
குளங்களைப் பறிக்கொடுத்து, குப்பைகளைக் கிளறிக் கொண்டிருக்கும் கொக்குகள்.               
ஹாஸ்யமாக இது இருந்தாலும், எவ்வளவு துரதிஷ்டவசமானது!  நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மாறுதலுக்கேற்ப  தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மனிதன்?

“சொந்த பணத்தாலேயே சூனியம் வைத்துக் கொள்கிறான்!” – என்று வேடிக்கையாக சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஆனால், சொந்த கரங்களாலேயே மனிதன் தன் வாழ்க்கைக்கு உலை வைத்துக் கொள்வது என்னவோ உண்மை.

சுற்றுச் சூழலை கெடுத்துவிட்டு… உலகை மயானமாக்கிவிட்டு சந்ததிகளுக்கு எதை விட்டுப் போகப் போகிறான் மனிதன்? மரணத்தை அன்றி!

Wednesday, December 18, 2013

சுற்றுச்சூழல்:'சொரி கொட்டாய் குடிநீர்'


வட சென்னையை உருக்காலை, வாகன உற்பத்தி தொழிற்சாலை, அனல் மின் நிலையங்கள், உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக்  கொண்டது போதாதென்று கண்டெய்னர் போக்குவரத்துகளால் ஏக சூழல் மாசுவால் போர்த்தப்பட்ட பரிதாபமான நகரமாகும் இது. 

இங்கு காற்று, நிலத்தடி நீர் கடும் மாசுபட்டிருக்கும் நேரத்தில் எண்ணூர், முகத்துவாரக் குப்பத்தில் அமைந்துள்ள இந்த 'சொரி கொட்டாய்' (சொரி மீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்கள் சேகரிக்கப்பட்ட கொட்டகை) அருகே சுவையும், சுத்தமுமான நீர் கிடைக்கிறது. பக்கத்திலேயே உப்பு நீர் கொண்ட எண்ணூர்  கடற்கழி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Monday, December 16, 2013

சுற்றுச் சூழல்: ''மனித வாழ்வு இருண்ட பின்.. ஒளி தந்து என்ன பயன்?'



சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையம் போதாதென்று அத்திப்பட்டிலும் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களால் (வெளியேற்றும் சாம்பல் கழிவுகளால்) காற்றும், நீரும் மாசடைந்து இருண்டு வரும் வடசென்னை வாழ் மனித வாழ்கை.

Wednesday, June 26, 2013

சுற்றுச்சூழல்: ‘சுற்றுச்சூழலை கெடுக்கும் தெர்மகோல்...!’


பாலிஸ்ட்ரெயின் என்ற வேதியல் பெயர் கொண்ட தெர்மகோல் ஒரு பாலிமர்தான்! பிளாஸ்டிக்கின் எல்லா தன்மைகளும் கொண்ட அபாயகர மானது இது.
தெர்மொகோல் எல்லா துறையினராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இது பிரதானமாக பாக்கிங் செய்ய அதிகதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அதுவும் பழம் முதற்கொண்டு செல்போன் மற்றும் தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சந்தைக்கு அனுப்ப இது பெரிதும் கையாளப்படுகிறது. உணவு பொருள்கள்களுக்காகவும் இது பயனாகிறது. தெர்மகோல் மிகவும் லேசானது என்பதே இதன் ஆபத்துக்கு அதி தீவிரமாக உள்ளது.
நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடும் இது நமது நீர் நிலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீட்டு சாக்கடையிலிருந்து பாதாள கழிவுநீர் குழாய்கள் வரை அடைப்பு ஏற்படுத்துவதில் வல்லவை. மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை அற்றவை. ஆதலால் பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும்.
பிளாஸ்டிக் பொருட்கள் போல மக்காத தன்மை கொண்டதுதான் தெர்மகோல். இன்னும் சொல்லப்போனால்.. பிளாஸ்டிக் கூட சில நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது. ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு மக்கும் தன்மையே கிடையாது என்பதே இதன் ஆபத்தை உணர போதுமானதாகும். 
வெளி நாடுகளில் தெர்மகோல் அழிக்கபடாமல் சேகரித்து வைத்து மறு சுழற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கழிவுகளை சேகரிக்க தனியான துறை இயங்குகிறது.
குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சியின் மூலம் உற்பத்தி  செய்யப்பட்டவைதான்!
தெர்மகோல் என்னும் அசுரனிடமிருந்து நாளை தலைமுறையைக் காக்க..
  • முடிந்த மட்டும் சேகரித்து வைத்து (எளிதில் தீப்பற்றக் கூடியவை. எச்சரிக்கை) மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
  • கைவினை பொருட்களுக்கான மூலப் பொருளாகவும் இவற்றை பயன்படுத்தலாம்.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்.
  • தெர்மகோல் மிகவும் ஆபத்தானது. ஆகையால், இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல்) கொண்ட வாயுக்கள் வெளியேறும். ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிவிடும்.
  • முக்கியமாக குழந்தைகள் இதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால் ஒரு புனல் போன்ற தகரத்தில் கரியை  நிரப்பி அதில் தெர்மகோலை எரிய விட்டலாம்.

Wednesday, March 6, 2013

சுற்றுச்சூழல்: பெய்யென்றால் .. பெய்யும் அமில மழை!



மாணவப் பருவத்தில் தந்தையாருடன் பொழுதுபோக்காக மீன் பிடிக்கச் செல்லும்போது ஏற்பட்டது அந்த நண்டுசிண்டுகளோடான பரிச்சயம்.

சென்னை எண்ணூர் கடற்கழியைத் தாண்டி அத்திப்பட்டு குருவிமேடு பகுதி கால்வாய் ஓரமாக கலர் கலராய் மஞ்சள், சிவப்பு, நீலம் என்று கண் கொள்ளா காட்சியாக வலைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் நூற்றுக் கணக்கான நண்டுகள். ராணுவ வீரனைப் போல தடித்த ஒரு கொடுக்குடன் அவை கையாட்டி கையாட்டி அவற்றுக்குள் தகவல் பறிமாறிக் கொள்ளும் அழகே தனி! 

இது முடிந்து பொதிகை தொலைக்காட்சிக்காக 'கல்ஃப் ஆசியா' தரப்பில் குறும்படங்களைத் தயாரிக்க (உப்பளம் சம்பந்தமாக) அந்தப் பக்கம் போனபோது அதே நண்டுசிண்டுகள் எண்ணிக்கையில் குறைந்திருந்திருப்பதை காண முடிந்தது.

 ஆனால், தற்போது அதே பால்ய கால சிநேகிதர்களைத் தேடிப் போனபோது.. அவர்களைக் காணாமல் சுற்றி.. சுற்றி தேட வேண்டியிருந்தது. கண் கவரும் வண்ணங்கள் இல்லை. கருத்துப் போய் கால நிலைக்கேற்ப அந்த நண்டுகளும் மாறுதல் அடைந்திருந்தது அதிர்ச்சியளித்தது.

 பெருகிவரும் தொழிலகங்களும், அவற்றின் மாசுகளும் நம்மைச் சுற்றி வசிக்கும்.. நமக்காக உயிர் வாழும் உயிரினங்களை கொன்றுவருவது சகிக்க முடியாதது. 

சக ஜீவன்களை அழித்துவிட்டு என்னதான் சாதிக்கப் போகிறோம் நாம்? வருத்தமே மிஞ்சுகிறது. வேதனை நெஞ்சைப் பிளக்கிறது. 

பூமியைத் தாண்டி புதிய குடியிருப்புகளைத் தேடி மனிதன் சிறகு விரித்துப் பறக்கும் சமயமிது. கற்பனைகளையெல்லாம் நிஜமாக்கும் அறிவியல் சோதனைகள், அற்புதக் கண்டுபிடிப்புகள் என்று மனிதனின் சாதனைகள் விண்ணளாவியது. ஆனால், இந்த வளர்ச்சிகளின் மற்றொரு பக்கம் மனித வாழ்வுக்கு எமனாக மாறிவருவது கதிகலங்க வைக்கும் உண்மை.

மின்னுற்பத்தி, வாகன உற்பத்தி  ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மற்றும் டீஸல் எண்ணெய்யால் வெளிப்படும் மாசுக்களான கார்பன் மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு போன்றவை பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. இந்த நச்சு வாயுக்கள் வான மண்டலத்தில் மேகங்களில் கலந்து வருகின்றன. இதனால், சில இடங்களில் அமில மழையும், இன்னும் சில இடங்களில் மிகக் குறைந்தளவு மழையும் பொழியும் ஆபத்து உண்டு; இந்தியாவும் அதைச் சார்ந்த சில நாடுகளும் பாதிக்க வாய்ப்புண்டு!-“ என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
நச்சு வாயுக்களால் ஏற்பட்ட மேகத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க சைஸ்!

இந்த கோதுமை நிற மேகம் தற்போது, இந்து மகா சமுத்திரத்தின் மீது மிதப்பதாய் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் கார்காலத்தில் இந்தியா, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு மேலாக குடை விரித்திரிருந்த நச்சு மேகம் தற்போது சற்று நகர்ந்து அமில மழைப் பொழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்யும் மழையால் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டாகும். இந்த மேகங்கள் 10 விழுக்காடு சூரிய ஒளியைத் தடுத்துவிடுவதால்.. குறைந்தளவு நீரே ஆவியாகும். அதனால், மழையின் அளவும் குறைந்துவிடும்

இப்படி 99 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள நச்சு மேகம் விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

மோட்டார் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீஸல்தான்  இந்தப் பிரச்னைகளுக்கு மூலகாரணம்! பெட்ரோலுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் டீஸல் 7 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தரம் குறைந்த டீஸலில் கந்தகம் மிகைத்திருக்கும். இதனால் அதிகமாக புகை வெளிப்படும்.
சென்டர் ஃபர் சைன்ஸ் அண்ட் என்விராண்மென்டின் (சி.எஸ்.இ) இயக்குனர் பேராசிரியர் வி.ராமநாதன், “இண்டியன் ஓஷன் எக்ஸ்பெரிமெண்ட்’ (இண்டோ எக்ஸ்) தலைமை விஞ்ஞானி ஏ.பி.மித்ரா ஆகியோர் நடத்திய ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம் மற்றும் பல பகுதிகளில் அமில மழை பொழியும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆலைகளாலும், அனல் மின் நிலையங்களாலும் அதிகளவு கந்தக நுண் துகள்கள் சுற்றுச் சூழலில் பரவுகின்றன. காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து கந்தக அமிலமாக உருமாறுகின்றன. இப்படி வெளிப்படும் கந்தகத்தின் அளவு 2000 ஆம், ஆண்டில் 6,500 கிலோ டன்னிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் 10,900 கி.லோ டன்கள் வரை அதிகரிக்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மின்னுற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் கலக்கும் கந்தகத்தின் அளவு 30 விழுக்காடு அதிகரிக்கும்!

நீரில் கலந்திருக்கும் பி.ஹெச். அளவு (நீரில் கலந்திருக்கும் ஹைட்டிரஜன் அயனிகள் அளவு) 5.6 க்கும் கீழாக குறைந்துவிட்டால்… அதை அமில கலப்புள்ளதாகவே கருத முடியும்.

பெங்களுரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் ஓர் ஆய்வில் நிபுணர் குழுவாக இணைந்து 1996-1998 இடைப்பட்ட காலத்தில் நகரின் பத்து இடங்களில் 561 மழை நீர் மாதிரிகளை (சாம்பிள்ஸ்) சேகரித்து சோதித்தார்கள். அப்போது, சராசரியாக பி.ஹெச்சின் அளவு 5.22 ஆக இருப்பதைக் கண்டார்கள். இதே நிலைமை நீடித்தால் 2012 க்கு மேல் பெங்களுரு மிக மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்கள்.

இந்த அமில மழைக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றும் பொறுப்புடையவை என்று உறுதியுடன் கூறலாம்.

1993 இல், மட்டும் அமெரிக்கா 90 மில்லியன் பவுண்ட் எடையுள்ள சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடுகளை வெளியேற்றியுள்ளது. இந்த நச்சுக் கழிவு காற்றில் கலந்து மேகக் கூட்டத்தை அடைந்ததையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். மழை வழியே பூமியை அடையும் இந்தக் கொடிய அமிலம் நீர் நிலைகளை மாசு அடையச் செய்து மீன் போன்ற கடல்வாழ் உயிரிகளை பேரழிவு ஏற்படுத்தும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டும் எந்தவிதமான எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருப்பது வேதனையிலும் வேதனையாகும். 

ஆசியாவை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள நிலை நீடித்தால்.. சல்பர் டை ஆக்ஸைடின் அளவு 1990 ஆம், ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்னும் 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆசியாவில் 1990 இல், காற்றில் கலந்த சல்பர்-டை - ஆக்ஸைடின் அளவு 34 மில்லியன்  மெட்ரிக் டன்கள்!
தென் கிழக்கு சீனா, கிழக்கு இந்தியா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை அதி தீவிரமாக உருவெடுக்கும் என்று 'வொர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்,' 'யு.என்.டி.பி', 'யு.என்.இ.பி' மற்றும் 'உலக வங்கி' ஆகியவை பிரசுரித்த 'வொர்ல்ட் ரிசோர்ஸ் (1998-1999) அறிக்கை தெரிவிக்கிறது. 

உண்மையில். மனித குலத்தைச் சுற்றியும் நச்சு வாயுக்களால் நிரப்ப்பட்ட மாசு மேகங்கள் சூழ்ந்துள்ள விபரீதம் இது. அதனால், இதற்கான தீர்வு மிக முக்கியமானது.

  • அதிகமான புகையை வெளியிடாத வண்ணம் வாகனங்களை வடிவமைக்க வேண்டும்.
  • வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலை கெடுக்காத எரிப்பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், ஆசியாவில் 1990 இலிருந்து 2020 க்குள் எரிபொருள் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரிக்க இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கடந்த முப்பதாண்டுகளில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மூன்று மடங்குக்கும் அதிகமாகப் பெருகியுள்ளது. இதன் காரணமாக ஏற்படும் நோய்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் ரூபாய் 4,500 கோடி செலவழிக்கிறார்கள் என்று உலக வங்கியின் அறிக்கைக் கூறுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுவின் கோரப்பிடியில் சிக்கி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருவர் பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
காற்று, நீர், உணவு ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். இந்த மூன்றும் மாசாகிப் போனதால்.. உலகமே மயானமாகிப்  போகும் விபரீதம் உண்டு. இது சம்பந்தமாக நீதி மன்றங்களின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன. நீதிபதிகளான வி.ஆர். கிருஷ்ணய்யர், ஜஸ்டீஸ் தேசாய் போன்றவர்கள் சட்ட ரீதியாக அரசுகள் மீது நிர்பந்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 

1970 ஆம், ஆண்டு கணக்கின்படி காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்கள் 23 விழுக்காடு வகித்துள்ளன. நமது நாட்டிலுள்ள 22 நகரங்கள் சூழல்மாசு பூதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது. ஆனால், இது சம்பந்தமாக அது எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.

மனித குலத்துக்குப் பேராபத்து விளைவிக்க உலகைச் சூழ்ந்துவரும் சூழல் கேட்டைப் பாதியாக குறைக்கலாம் என்று உலக வங்கி கூறினாலும், அதற்காக ஆகும்  செலவு சுமார் 3,87,000  கோடிகள்! இது வளர்முக நாடுகளின் தலையில் விழும் என்பது முக்கியமானது. 
இந்த அதி தீவிரமான நிலையை குபேர நாடுகள் உணர்ந்து இதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். சூழல் மாசுவை நீக்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். அவை அனைத்து நாடுகளுக்கும் கிழைக்கும்படி செய்ய வேண்டும்.

இந்த பூமிப் பந்து அனைவருக்கும் பொதுவானது. வருங்காலச் சந்ததிகளுக்கும் சொந்தமானது என்ற உணர்வோடு நடந்து கொள்வது ஒவ்வொரு தனிநபர் மீதுள்ள பொறுப்பாகும். 

இல்லையென்றால்.. உயிரினம் வாழ தகுதியற்றதாகி நாளைய அயல்கிரகவாசிகளுக்கு அருங்காட்சியகப் பொருளாகிவிடும் பூமி.