NewsBlog

Thursday, August 6, 2020

மற்றொரு பெய்ரூட் ஆகுமா வடசென்னை? அச்சத்தில் வாழும் மக்கள்!

பக்கம் பக்கத்திலேயே அமைந்துள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், கொட்டப்பட்டு கிடக்கும் உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளுக்கான வேதிப்பொருட்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மற்றும் சமையல் எரிவாயு கிடங்குகள் என்று அடர்த்தியான பேராபத்துகள் நிறைந்த பகுதி வடசென்னை ~இக்வான் அமீர்
'''''''''''''''''''
2015-ஆம் ஆண்டு கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்கு என்று கூறி 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்று சொல்லி, இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சுங்கத் துறைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளிவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான கிடங்கில் 35 கண்டெய்னர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவுசெய்யப்பட்டும் அந்த பணிகள் துவங்கவில்லை. தற்போதும் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத் துறை கிடங்கில்தான் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 137-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 5000-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

வெடிப்பு நடந்த துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்தவர் அஜீஸ். ரசாயனபொருள் வெடிப்பு நடந்த சமயத்தில் தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். குளியலறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியதில் இவர் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. "இனி அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்" என்கிறார் அச்சம் சிறிதும் விலகாமல் அஜீஸ்.

"நாங்கள் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகதான் நினைத்தோம். அதன் விளைவு சுனாமி என்பதும் தெரியும். ஏற்கெனவே இங்கு சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெடிப்பின் அதிர்வில் வீட்டின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, சுவர்கள் சரிந்தன. வெடி சத்தத்தில் கொஞ்ச நேரத்திற்கு காதே கேட்கவில்லை," என்கிறார் அஜீஸ்.

வெடிப்பின் பாதிப்பு, 15 கி.மீட்டர் தூரம் அளவுக்கு இருந்ததாக கூறும் அஜீஸ், தான் பணியாற்றும் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

இந்தப் பின்னணியில் சென்னைக்கு அருகில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்து வடசென்னைவாசிகளிடம் பெருத்த கவலைகள் எழுந்துள்ளன.

ஏனென்றால், பக்கம் பக்கத்திலேயே அமைந்துள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், கொட்டப்பட்டு கிடக்கும் உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளுக்கான வேதிப்பொருட்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் மற்றும் சமையல் எரிவாயு கிடங்குகள் என்று அடர்த்தியான பேராபத்துகள் நிறைந்த பகுதி வடசென்னை.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள சுங்கத் துறை அதிகாரிகள், அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வேதிக் கிடங்கிற்கு அருகில் குடியிருப்புப் பகுதிகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தனர்.

அவை ஏலம் விடப்படாமல் சேமித்துவைக்கப்பட்டிருப்பது ஏன் எனக் கேட்டபோது, "2019 நவம்பரில்தான் இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏல நடைமுறைகளை துவங்கும் காலத்தில் கொரோனா காரணமாக, ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அந்தப் பணிகள் முடங்கியதாகவும் விரைவில் அவற்றை மின்னணு ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்மையில், அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியைச் சுற்றிதான், கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகர், திருவெற்றியூர், மாதாவரம், மணலி, மணலி புதுநகர், எர்ணாவூர், எண்ணூர் போன்ற முக்கிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிப்போர் அனைவரும் மீனவ மக்களும், உழைக்கும் சாமான்யருமே ஆவார்கள். எதேச்சையாக ஏதாவது விபத்துகள் நடந்தாலும் தப்பிக்க நிலபரப்பின்றி சுற்றியும் வேதிப்பொருள் ஆபத்து சூழ் பகுதியில் வசிப்பவர்கள்.

அதனால்தான், வடசென்னை மற்றொரு பெய்ரூட் ஆகிவிடக்கூடாதென்று கவலையில் வடசென்னைவாசிகள் அஞ்சிகொண்டிருக்கிறார்கள்.

லெபனான் பெய்ரூட் வெடிப்பு நிகழ்வுக்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என்று பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment