NewsBlog

Friday, August 7, 2020

கேரளா விமான விபத்து: நூற்றுக்கணக்கான பயணிகள் கதி என்ன? விமானநிலைய பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகள்

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையிலிருந்து சுமார் 191 பேருடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் இன்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள் 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர் என்று இந்திய விமான போக்குவரத்துத்துறை ஊடகப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ஓடுபாதையைவிட்டு விலகிய விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதாக இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கும் அது உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் கோழிக்கோடு விமான நிலைய பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

கோழிக்கோடு விமான நிலையம் அகலமான விமானங்களை இயக்குவதற்கு ஏதுவான விமான நிலையம் இல்லை என்கிறார் விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போராடிவரும் ஷெனாய்.

கோழிக்கோடு விமான நிலையம் மலையின் மீது அமைந்துள்ள விமான நிலையமாகும். கடந்த காலங்களில் இந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து இதுசம்பந்தமான வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அகலமான அமைப்பு கொண்ட விமானங்களை இயக்குவது அதிக ஆபத்து என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாடு ஆணையம், கோழிக்கோடு விமானநிலையத்தின் ஓடுபாதையைச் சுற்றி பாதுகாப்பு வேலியை அமைத்தது. ஆனால் அது போதுமானதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

"எந்த ஒரு விமான நிலையத்திற்கும் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும், 150 மீட்டர் இடம் இருக்க வேண்டும். ஆனால் கோழிக்கோடில் அது கிடையாது. மேலும் இது, அகலமான விமானங்கள் இயக்குவதற்கு ஏற்ற விமான நிலையமும் அல்ல. இத்தகைய விமான நிலையத்தில் விமானங்களை இயக்குவது மிகவும் ஆபத்தானது.

ஹஜ் பயணத்திற்கான விமானங்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து நான், இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்திற்கு பலமுறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே இந்த விபத்து எனக்கு வியப்பளிக்கவில்லை. இந்த விபத்தால் இந்திய போக்குவரத்துத் துறையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து உலகிற்கு தெரியவந்துள்ளது" - என்கிறார் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போராடிவரும் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான யஷ்வந்த் ஷெனாய். 

கடந்த 2010-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி, துபையில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நொறுங்கி விபத்துக்குள்ளானது. போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த விமான விபத்தில், 152 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அதில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

அந்த விமானமும் தரையிறங்க இருந்த சில நிமிடங்களில் மலைப்பகுதி அருகே விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment