NewsBlog

Wednesday, August 19, 2020

ஒளியே கதை எழுது..1 - நெஞ்சோடு கொஞ்சம்

பிரியத்துக்குரிய தோழர், தோழியரே.. வாழ்த்துகள்!

நான் இக்வான் அமீர். தமிழ் இலக்கியம், இதழியல் மற்றும் மனித உரிமைகள் என்று மூன்று மேல்நிலை பட்டப்படிப்புகளை முடித்து 40 ஆண்டுகளாய் பல்வேறு வெகுஜன ஊடகங்களில் சுதந்திர இதழியலாளனாக எழுதி கொண்டிருப்பவன். பல்வேறு பத்திரிகைகளுக்கு சிறப்பு செய்தியாளராக பணியாற்றியவன். குழந்தை எழுத்தாளனாக 15 புத்தகங்களை எழுதியிருப்பவன். ஒளிப்படக்காரன். முழுநேர பணியாளனாக சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 1975-ல், சாதாரண பயிற்சியாளனாக சேர்ந்து 40 ஆண்டுகளில் பல்வேறு பணி நிலைகளைக் கடந்து மூத்த அதிகாரியாக விருப்ப ஓய்வு பெற்றவன்.  வடசென்னைவாசி. புகழனைத்தும் இறைவனுக்கே!

நண்பர்களே!

'ஒளியே கதை எழுது.!' - என்னும் இந்த ஒளிப்பட தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்தது எனது வாசிப்பு. தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்து அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்தது. அத்தகைய அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை எனக்களித்திருக்கிறது.

மாலை நேரத்தில், எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் இந்த சிறுவயதில் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.

சிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்தது நினைவில் எழுகிறது. ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலவைத்தது. அப்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடுகிறது.

எத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு நான் புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் மோப்பம் பிடித்து வந்து விடுவார். புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்ற ஒரே காரணத்துக்காக “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே!” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்.

இன்று இறையருளால் வீட்டிலேயே எனக்கான ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.

இந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எழுத்தாளனாய் ஆன அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.

ஆக, ஒவ்வொருவரும், ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒளிப்பதிவாளராய் இருக்கும் சமூக ஊடக பிரளயத்தில், மிஸ்டர் பாமரன் வலைப்பூவில் நான் சொல்லவிருப்பது என்ன?

இந்தக் கேள்வி சுருக்கமான பதில் இதுதான்: “அனுபவங்கள் அன்றி வேறில்லை! ஆம்.. அனுபவங்களே ஆசான்கள்!

உண்மை!

எனதருமை சகோதரர் ஸ்டில்ஸ் அரவிந்தனோடு, தொலைபேசி உரையாடலில் அவரது படமொன்றை பாராட்டிவிட்டு பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு ‘ஒளியே கதை எழுது’ பக்கம் திரும்பியது. அதைக் குறித்து அரவிந்தன் சிலாகித்தபோது, நான் சொன்னேன்: “அய்யா, ஒரு கத்துக்குட்டியின் தட்டுத் தடுமாறல் நடையே இந்தத் தொடரில் நான் சொல்லவருவது!”

உண்மைதான் தோழர்களே,

‘ஒளியே கதை எழுது’ என்ற இந்தத் தொடர் அனுபவங்களின் பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல என்பதை நான் முதலிலேயே தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகின்றேன்.

என்னிலும் மூத்த ஒளிப்பட ஜாம்பவான்கள் எல்லாம் இருக்க ஒரு மாணவனாய் நான் மலங்க.. மலங்க விழிக்கின்றேன்.

நான் பெற்ற அறிவை.. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நான் மாணவனாய் அனுதினமும் கற்றுக் கொண்டிருக்கும் அறிவை… பகிரும் ஒரு முயற்சிதான் இது.

அனுபவசாலிகள், மூத்தவர்களின் கரும்பலகையாய் நான் இருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

எனது அனுபவ எழுத்துக்களிலிருந்து ஒரு கட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிதான் எனது ஒளிப்பதிவுகள். இது எனது அறிவோட்டத்தை இன்னும் விசாலமாக்கியது.

கோடானு கோடி கோள்கள் துணைக்கோள்கள் கொண்ட இந்த அண்ட வெளியின் சிறு துகள் … அதுவும் கடற்கரை மணற்பரப்பின் ஒரு சிறு மணல் துகளாம் பூமி.  இந்த பூமியில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளை கொண்டு நான் ஒளிப்படங்களாய் பதிவு செய்து வருகிறேன்.

நுண்மை, அழகியல், வாழ்வியல் கலந்த பார்வைதான் எனது சிறப்புக்குரிய களங்கள். இவையே எனக்குப் பின்னர் நான் விட்டுச் செல்லும் ஆவணங்கள். மனித வரலாறுகள். இயற்கையின் விந்தைகள். சொத்து-பத்துகள் எல்லாமே..!

சிறப்பான படங்கள் என்று முற்றே இல்லாத ஒரு மகா சமுத்திரத்தின் ஒரு துளியாய் நான் கற்றதை பறிமாறும் ஒரு வாய்ப்புதான் இது.

அறிவைப் பெற்று அதை பரப்புவர்தான் உங்களில் சிறந்தவர் என்று அண்ணல் நபியின் அருளுரையை நிறைவேற்றிய பாக்கியசாலியாக மட்டுமே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

இறைவன் நாடினால், இனி வாரந்தோறும் ஒளியே கதை எழுது தொடரில் என்னோடு நீங்களும் பயணிப்பீர்கள். ஒளியால் சூழப்பட்ட இந்த உலகைக் கண்டு என்னைப் போலவே பிரமிக்கப் போகிறீர்கள்! சிலிர்ப்பும், சில்லிப்பும், குதுகலமும், துள்ளலும், சில நேரம் சோகமுமாய் உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கிறீர்கள்.

அவை எதுவானாலும், வாரந்தோறும் என்னுடனான இந்தப் பயணத்தில் ஏற்படும் சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள்.

சிலபோது, இந்தப் பயணம் ஏற்கனவே நீங்கள் சென்ற இடமாக அதாவது தெரிந்த விடயங்களாக இருக்கும் என்றால் கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். உங்களுக்கான புதிய வழித்தடம் வரும். அந்த நேரத்தில் என்னோடு இணைந்து அந்தப் பயணத்தை நீங்களும் தொடரலாம். அப்போது உங்கள் சந்தேகங்களுக்கு நிச்சயம் பதில் கிடைத்துவிடும்.  

இறைவன் நாடினால், 'ஒளியே கதை எழுது!' என்ற இந்தத் தொடரில் ஒளிப்படக் கலையின் அத்தனை நுணுக்கங்களையும், பிரிவுகளையும் தொட்டுக் காட்டிட ஆசைப்படுகிறேன். இதற்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்த வாரம்..  

சிறந்த ஒளிப்படங்களைத் தீர்மானிப்பவை விலையுயர்ந்த காமிராக்களா..?  கையளவு நீண்ட லென்ஸ்களா?  அல்லது  ஃபில்டர்களா? இவற்றில் எவை என்பதை பார்ப்போம்.

001 ஒளியே கதை எழுது 1, நெஞ்சோடு கொஞ்சம்: 

0 comments:

Post a Comment