NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label குறுந்தொடர். Show all posts
Showing posts with label குறுந்தொடர். Show all posts

Monday, August 10, 2020

பாலம் 3

தெலுங்கு மூலம்: கே.கே.மேனன் - தமிழில் : இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''
நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அரசாங்க ஜீப் வந்தது. அதிலிருந்து நான்கு பேர் இறங்கினார்கள். நிலத்தை அளக்கும் சங்கிலியுடன் மற்றொருவரும் இறங்கினார்.

“அய்யா யாருங்க?” என்று மோட்டா நாயக் கேட்டான்.

“சர்வேகாகாரர்கள். இந்த நிலத்தை அளப்பதற்கு வந்திருக்கிறோம்!” – என்றார் அவர்களில் ஒருவர்.

அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வகித்த பதவி எதுவாக இருந்தாலும் அதில் மோட்டாவுக்கு அக்கறையில்லை. அதுபற்றி ஞானமும் அவனுக்குக் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம்… தெளிவாய் புரிந்ததெல்லாம்.. ஒன்றே ஒன்றுதான்! அவர்கள் அங்கே செய்து கொண்டிருந்தது சித்திரவதைப்படலம்.

நன்றாக வளர்ந்திருந்த கத்திரி செடிகளின் இடையிலிருந்து சங்கிலியை இழத்துச் சென்றதால், அதில் சிக்கிக் கொண்டு பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்து கொண்டிருந்தன. சில செடிகள் ஒடிந்து நிலத்தில் சாய்ந்துவிட்டன. இந்தக் காட்சியை கண்டு குடும்பத்தார் அனைவரும் அழுதார்கள். அதன்பின்னர், நடந்த கொடுமை தாள முடியாமலிருந்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த வயலில் சங்கிலியை இழுத்துச் சென்றதால் முற்றியிருந்த கதிர்கள் எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தன.

சின்னவன் வந்ததும், நடந்ததை எல்லாம் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தான்.

“குழந்தை இறந்ததைப் போல், எண்ணி நாங்கள் அழுது கொண்டிருக்கிறோம்! நீ வாயே திறக்காமலிருக்கிறாயேடா!” – எரிந்து விழுந்தான் மோட்டா நாயக்.

அப்போதும் அவன் ஏதும் பேசவில்லை. சட்டென்று வீட்டிலிருந்து எழுந்து போய்விட்டான். அவ்வளவுதான். நான்கு நாட்களுக்கு அவனை காணவில்லை. எங்கே போனான்? என்ன செய்கிறான்? என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஐந்தாவது நாள் பத்து பேருடன் வந்தான். அவர்களுக்கு வயற்காட்டைச் சுற்றிக் காட்டினான். பூக்கள் கொட்டிப் போன கத்திரித் தோட்டத்தையும், கதிர்கள் உதிந்து போன நெற்பயிரையும் வந்தவர்கள் பார்த்தார்கள். அதன்பிறகு எல்லோரும் மோட்டா நாயக்கின் வீட்டிற்கு வந்தார்கள். மோட்டா நாயக்கின் குடும்பத்தார் அவர்கள் முன் கைக்கட்டி நின்றார்கள்.

அப்போதும், மோட்டா நாயக்கின் சின்ன மகன் வாய் திறந்து பேசவில்லை. வந்தவர்கள் மட்டும், “நாங்கள் அனைவரும் எதிர்கட்சித் தலைவர்கள். நாளை நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் உங்களுக்காக குரல் எழுப்ப இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓய மாட்டோம்!” – என்று ஆறுதல் சொன்னார்கள்.

எதிர்க்கட்சிகாரர்களின் உறுதிமொழி ஆளும்கட்சிக்காரர்களின் உறுதிமொழியைப் போலவே இருந்தது. அவர்களின் எதிர்ப்பை முதல்வர் சட்டைச் செய்யவே இல்லை.

“அநீதிக்கு வளையாத ஏழை மக்களின் அரசு இது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் யாராக இருந்தாலும் அந்த அநீதியைப் பார்த்துக் கொண்டு இந்த அரசால் பேசாமலிருக்க முடியாது!” – என்று திட்டவட்டமாக சட்டசபையில் முதல்வர் அறிவித்துவிட்டார்.

அரசியல்வாதிகளில் பலபேர், நகரின் முக்கிய இடங்களில் அரசு நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது முதல்வரின் திட்டவட்டமான இத்தகைய தீர்மானத்தால்தான் போலும் என்று எண்ணி மௌனமாகிவிட்டனர் எதிர்க்கட்சிக்காரர்கள்.

அரசு அதிகாரிகள் அளித்திருந்த பத்து நாள் கெடு முடிவடைந்தது.

மோட்டா நாயக் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தான். இடத்தை காலி  செய்யாவிட்டால், புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளி பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்தது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பாதி இரவு கழிந்தது.

சின்னவன் இன்னும் வீடு திரும்பவில்லை.

வீட்டில் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

யாரும் உணவு உண்ணவில்லை.

இருண்ட அந்த இரவில், சுவர்க்கோழிகளின் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அரைமணி நேரத்திற்கு பிறகு, திடீரென ஏதோ சத்தம் கேட்க ஆரம்பித்தது. கோடாரியால் விறகுகளை பிளக்கும் சத்தம் போல அது இருந்தது. அதை யாரும் சட்டை செய்யும் நிலையில் அவர்கள் இல்லை.

பொழுது புலர்ந்தது.

மோடா நாயக்கின் பூர்வீகச் சொத்தை பறித்துக் கொள்வதற்காக அதிகார வர்க்கத்தினர் புறப்பட்டுவிட்டார்கள். முதலில், புல்டோசர், அதன் பின்னால் லாரி நிறைய போலீஸ் படையினர், அதன் பின்னால் அரசு ஜீப், அதில் வெள்ளையும், சொள்ளையுமாய் அதிகாரிகள்.. ஊர்வலம் அதிகார ஊர்வலம் புறப்பட்டது.

உயரமான மலை மீதிருந்த உன்னதமான பங்களாக்களின் மத்தியிலிருந்த சிமெண்ட் தரையைப் போல அமைக்கப்பட்டிருந்த தார் ரோடிலிருந்து பள்ளத்தாக்கில் அணிவகுப்பு இறங்கியது.

சற்று தூரம் முன்னேறியதும் சட்டென்று புல்டோசர் நின்றுவிட்டது. அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் அதை பின்தொடர்ந்து வந்த ஜீப்பும் நின்றது. மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த சம்பவத்தால் என்ன? ஏது? என்று அறியாமல் அலறி அடித்துக் கொண்டு இறங்கினார்கள். லாரியிலிருந்த போலீஸ்பட்டாளம் எகிறி குதித்த்து.

அதிகாரிகளின் நெஞ்சம் படபடத்தது.

“என்ன இது? ஏதோ விபரீதம் நடந்ததை போலிருக்கிறதே! யாரோ தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தியதைப் போலிருக்கிறதே!” – என்று ஒரு அதிகாரி பயத்துடன் சொன்னார்.

ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சில அரசு அதிகாரிகள் கடத்தப்பட்டிருந்தனர். அது நினைவுக்கு வந்ததும், அதிகாரிகளிடம் பயம் அதிகரித்தது.

“நகரத்தின் மத்தியில் அத்தகைய அசம்பாவிதம் நடக்கும் வாய்ப்பில்லை!” – என்றார் மற்றொரு அதிகாரி.

அதற்குள் புல்டோசர் டிரைவர் ஓடிவந்தார்.

“என்ன? என்ன நடந்தது?” – அதிகாரிகள் பதட்டத்துடன் கேட்டார்கள்.

“வண்டி இனி ஒரு அடிகூட நகராது சார்?’ – என்றார்.

“ஏன்?

“நமக்கு முன்னால் ஒரு பெரிய கால்வாய் இருக்கிறது சார்!”

“இருக்கட்டும். அதை கடக்கதான் பாலம் இருக்கிறதே!”

“பாலமெல்லாம் இல்லை. வெறும் கால்வாய்தான் இருக்கு சார்!”

டிரைவர் சொன்னதை நம்பாமல் ஒரு அதிகாரி முன்னால் நடந்து போய் பார்த்தார்.

அங்கே,

பாலம் இல்லை.

பாலத்தை இணைக்கும் வெறும் தூண்கள் மட்டுமே இருந்தன.

(முடிந்தது)

முதல் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/1.html
இரண்டாம் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/2.html

(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு ஞாயிறு மலர், டிசம்பர் 3, 1995 - பக்கம் 10 மற்றும் 11)



Monday, July 20, 2020

பாலம் 2


தெலுங்கு மூலம்: கே.கே.மேனன் - தமிழில் : இக்வான் அமீர்
 '''''''''''''''''''''''''''''''''''''
யாராவது மலையிலிருந்து இறங்கி மோடா நாயக்கின் வீட்டிற்கு வரவேண்டும் என்றால், கால்வாயைப் போன்ற அந்த நீர்ப்பகுதியை கடந்துதான் வர வேண்டும். அதற்கு வசதியாய் கால்வாய் மீது ஒரு பழைய மரப்பாலம் இருந்தது. அதை கட்டியது யார்? எப்போது கட்டினார்கள்? என்பதெல்லாம் மோட்டா நாயக்கும் தெரியாது. தற்போது இரண்டு மூன்று பலகைகள் தவிர பாலத்தின் மீது ஒன்றுமில்லை. அப்படி இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் யார்?

விழுதில் சாய்ந்தவாறு மோடா நாயக் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக பாலத்தின் பக்கத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. எழுந்து நின்று காதுகளை கூர்மையாக்கி கவனித்தான் மோட்டா நாயக்.

“டக்.. டக்..” _ என்று யாரோ மரப்பலகைகளை தட்டும் சத்தம் அது. அங்கிருந்து பார்த்தால் எதுவும் தெரியவில்லை.

வீட்டிலிருந்த மோத்தியை அழைத்தான் மோட்டா நாயக்.

“மகளே, கவனி! அதோ அந்தப் பக்கம் ஏதோ சத்தம் வருவது போல் இல்லை?” – என்று கேட்டான்.

“ஆமாம். அங்கே யாரோ இரண்டு பேர் கட்டைகளை அடிக்கிறார்களப்பா”

“எதன் மீது?”

“பாலத்தில்தான்!” – சொல்லிவிட்டு மோத்தி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அந்த நேரம் பார்த்து பெரியவன் பசுக்களை ஓட்டிக் கொண்டு அந்தப் பக்கம் வர, அவனை அழைத்து மோட்டா கேட்டான்: “ என்னடா அங்கே சத்தம்?”

“பாலத்தை பழுது பார்க்கிறார்களப்பா” – என்று சொன்னான். அதற்கு மேல் அவனுக்கு ஒன்றும் தெரியாது.

பாலத்தை யார் பழுது பார்க்கிறார்கள்? ஏன் பழுது பார்க்கிறார்கள்?” – என்று மோட்டா நாயக்குக்கு புரியவில்லை. ஒரு காலத்தில், அந்த மலை மீது லம்பாடிகள் இருந்தபோது பயன்படுத்திய பாலம் அது. அவர்கள் அங்கிருந்து வெளியேறியபின், அந்த பாலத்தை யாரும் பயன்படுத்துவது இல்லை. இத்தனை நாள் கழித்து அதை பழுதுபார்க்க அவசியம் என்ன? இந்த சந்தேகத்தை தீர்ப்பவர் யார்?”

கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவன் சின்ன மகன் ஒருவனே! இரவில் அவன் வீட்டுக்குத் திரும்பியதும் மோட்டா கேட்டான்: “பாலத்தை பழுது பார்க்கிறார்களாமே.. யாரது?”

“யாராக இருந்தால் என்ன? பாலத்தை பழுது பார்ப்பது என்னவோ உண்மைதான்! நம் பிழைப்பிற்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது” – என்றான் கவலையுடன்.

பாலம் பழுது பார்க்கப்படுவதற்கும், தங்கள் பிழைப்பிற்கு ஆபத்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? என்பது அவர்கள் யாருக்கும் புரியவில்லை.

ஒருவழியாக, பலகைகளைத் தட்டும் சத்தம் நின்றுவிட்டது. பாலம் பழுது பார்க்கும் பணி முடிவடைந்துவிட்டது என்று பொருள்.

அதன்பிறகு இரண்டு நாள் கழித்து, அரசு வாகனம் ஒன்று மோட்டா நாயக்கின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அவன் வழக்கம் போலவே ஆலமரத்தின் விழுதில் சாய்ந்து அமர்ந்திருந்தான். ஜீப்பை பார்த்து பதறியவாறு எழுந்து நின்றான்.

அந்த ஜீப்பிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர், “இங்கே மோட்டா நாயக் யார்?” என்று கேட்டார்.

“நான்தான் அய்யா!” – கைகளை கூப்பியவாறே சொன்னான் மோட்டா.

“நாங்கள் ரெவின்யூ அதிகாரிகள்”

“புரியவில்லை அய்யா!”   

“அதாவது நாங்கள் அரசாங்கத்தின் வருவாய்த்துறை அதிகாரிகள்”

“அப்படியா அய்யா. தாங்கள் இங்கு வந்திருப்பது?”

உன்னையும், உன் குடும்பத்தையும் இந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வந்திருக்கிறோம். இது அரசாங்கத்தின் ஆணை”

மோடா நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

தனது நிலத்திலிருந்து, தன்னையும், தன் குடும்பத்தையும் அப்புறப்படுத்த வந்தார்களாமே இவர்கள்! ஏன்? எப்படி?” – குழம்பி நின்றான்.

“தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை அய்யா” – அவர்களிடம் வெள்ளந்தியாய் கேட்கவும் செய்தான் மோட்டா.

இந்த நிலம் உன்னுடையது கிடையாது. அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதனால்தான் இங்கிருந்து வெளியேறச் சொல்கிறோம்”

“அதெப்படி அய்யா? எங்கள் தாத்தா, முப்பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். இதுவரை யாரும் எங்களை போக சொல்லவில்லையே?”

“அப்போது இந்த இடம், அரசாங்கத்திற்கு தேவைப்படவில்லை. இப்போது தேவைப்படுகிறது”

“இப்போது அரசாங்கத்திற்கு எங்கள் நிலம் எதற்கு தேவைப்படுகிறதாம்?” – மோட்டா நாயக் அப்பாவியாய் கேட்டான்.

“நீ கேட்டதற்காக சொல்கிறோம். அதோ அந்த மலை மீது பங்களாக்களில் வசிக்கிறார்களே பெரியய்யாமார்கள், அவர்களுக்கும், அவர்களது மனைவி, மக்களுக்கும் ஓய்வெடுக்கவும், பொழுதைப் போக்கவும் இடம் தேவையாம். அதனால், அரசாங்கம் இங்கே அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவிருக்கிறது”

“ஒன்றும் புரியவில்லை அய்யா!” – தலையை சொரிந்து நின்றான் மோட்டா.

“அதை எல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் எங்களிடம் கிடையாது. பத்து நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்!” – என்று எச்சரித்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

இதையெல்லாம் குடிசையின் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மோட்டா நாயக்கின் மனைவி அங்கிருந்து ஜீப் புறப்பட்டு சென்றதும் தரையில் புரண்டு கதறி அழலானாள். ஏற்கனவே உள்ளுக்குள் குமைந்து அழுதுக் கொண்டிருந்த மோட்டாவால் மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை.

அந்த பருவத்து பயிர் நன்கு விளைந்திருந்ததால், அறுவடைக்கு பிறகு மகளின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று அவர்களின் திட்டம். காய்கறித் தோட்டமும் பூவும், பிஞ்சுமாய் தழைத்து வளர்ந்திருந்தது.

சிறிது நேரம் கழித்து வயலிலிருந்து பெரியவன் திரும்பினான். நடந்ததை தெரிந்து கொண்டு துவண்டு போனான்.

இதில் எதுவும் பாதிக்காதவன் போல நடந்து கொண்டது சின்னவன் மட்டுமே! அவன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான்.

-     இறைவன் நாடினால் தொடரும்

முதல் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/1.html

(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு டிசம்பர் 3, 1995)

Sunday, July 19, 2020

பாலம் - 1


தெலுங்கு மூலம்: கே.கே.மேனன்-தமிழில் : இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அவன் ஆழமான பள்ளத்தாக்கு சமவெளியில் இருந்தான். எதிரே, உயரமான மலைகள். மலையிலிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கு எப்படி காட்சியளிக்கும் என்பது அவனுக்குத் தெரியாது. பள்ளத்தாக்கிலிருந்து அண்ணாந்து பார்த்தால் அந்த மலை மிக உயரமாக இருப்பது மட்டும் தெரியும். இன்னும் அதிக நேரம் பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவு உயரமாய் .. தலைப்பாகை சரிந்து விழுந்துவிடும் அளவு உயரமாய இருப்பது தெரியும்.

மலையின் மீது கட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய மாளிகைள்கள், சற்றுத்தள்ளி உள்ளே இருக்கும் மாளிகைகளின் சிகரங்கள் தவிர, மலையின் மீதோ, மலைக்கு அந்தப் பக்கமாய் உள்ளதைப் பற்றியோ அவனுக்குத் தெரியாது.

மலையை ஒட்டியவாறு ஒரு பெயரி ஆலமரம் இருந்தது. அம்மரத்தின் விழுதுகள் பூமியில் இறங்கி மரத்தின் தண்டைப் போலவே பருத்து வளர்ந்திருந்தன. அந்த மரத்தின் வயது என்னவென்று யாருக்கும் தெரியாது.

ஆலமரத்தின்  அருகிலேயே அவனுடைய வீடு இருந்தது. அது அழகாய் வேயப்பட்ட பெரிய குடிசை.

அந்த வீட்டின் முன், ஆலமரத்தின் நிழலில், ஒரு பெரிய விழுதில் முதுகு சாய்ந்து அமர்ந்திருந்தான் மோடா நாயக். அவன் தடியாக இருக்க மாட்டான். ஒல்லியாகவே இருப்பான். ஒரு காலத்தில் அதாவது இளைஞனாக இருக்கும்போது, குண்டாக இருந்தானோ என்னவோ?

மோடா நாயக் விழுதில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனது மடியில் தலையை சாய்த்துக் கொண்டு மகள் மோத்தி படுத்திருந்தாள். அவளது பார்வை எப்போதும் பக்கத்திலுள்ள மலை மீதே  இருக்கும்.

“அந்த மலை மீது என்னப்பா இருக்கிறது?” - என்று கேட்டாள் மோத்தி.

“என்னவோ மகளே, எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? யாரோ பெரிய மனிதர்கள் இருப்பார்கள் போல. ஒரு காலத்தில் நம்மாட்கள்தான் அங்கு வசித்தார்களாம்” – என்று பதிலளித்தான் மோட்டா நாயக்.

அதை மோத்தி நம்பவில்லை.

“பொய்! அப்படி வசித்தால் அவர்கள் இப்போது எங்கு போனார்களாம்?” – ஆச்சர்யத்துடன் கேட்டாள் மோத்தி.

ஆமாம். எங்கே போனார்களோ?

அவன் மட்டும் அந்த பூமியை விட்டுப் போக மனம் வராமல் அங்கேயே தங்கிவிட்டான். அதுவே அவனது சாம்ராஜ்யம். தசைகள். எலும்புகள்.. வாழ்க்கை எல்லாமே அந்த நிலம்தான்!

மலையிலிருந்து மெல்லிய நீர்த்தாரை பூரான் பூச்சியைப் போல நீண்டு கீழே கொட்டியது.

“அந்த தண்ணீர் எங்கிருந்து கொட்டுகிறதப்பா?” – மோத்தியிடமிருந்து மற்றொரு கேள்வி எழுந்தது.

“என்னமோ மகளே! எனக்குத் தெரியாது. ஆனால், அந்த நீர்தான் நமக்கு உணவளிக்கிறது!” – என்று அவன் சொன்னான்.

இதை கேட்டுக் கொண்டிருந்த மோத்தி, ‘எப்படி?’ என்று கேட்கவில்லை. அப்படி கேட்க யோசிக்கவுமில்லை. இவை இரண்டிற்கும் இடைப்பட்டது அவளது வயது. மெதுவாக எழுந்து தாயிடம் சென்று விட்டாள்.

மலையிலிருந்து கொட்டும் அந்த நீர் கீழே விழுந்து வீணாகிக் கொண்டிருந்தது. அப்படி வீணாகாமலிருக்க தனது தந்தையாரின் காலம் தொட்டே மூன்றுபுறமும் மண் அணைத்து ஏரியைப் போல நீரைத் தேக்கி வைத்துக் கொண்டார்கள் அவர்கள். அந்த நீரைக் கொண்டே விவசாயம் செய்தார்கள். ஆண்டு முழுக்க நீர் தொடர்ந்து கிடைக்காது. குளிர்காலத்தின் பாதி நாட்கள்வரையே மலையிலிருந்து நீர் கொட்டும். அதன் பிறகு சொட்டு தண்ணீர் கூட வராது.

அந்த சிறிய ஏரிக்குத் தாழ்வாக சிறிது சமமான நிலம் இருந்தது. அது மேற்குபுறமாக கொஞ்சம் வளைந்து இருக்கும். அந்தப் பக்கத்திலிருந்த நிலம் வளமானது. அவர்களின் தாத்தா முப்பாட்டன் காலத்திலிருந்து கற்களைக் கொட்டி மேடு பள்ளங்களை சீர் செய்த நிலம் அது. அங்கு காய்கறிகள் பயிரிடுவார்கள். இதுபோக மீதமிருந்த இடத்தில் தண்ணீர் நிற்கும். அதனால், அங்கே நெல் பயிரிடுவார்கள்.

மோட்டா நாயக்கின் மனைவி பெயர் கேட்கவே வித்யாசமாக இருக்கும். அவள் சிவப்பாக, ஒல்லியாக, உயரமாக இருப்பாள். ஆறு குழந்தைகளுக்குத் தாய். உயிருடனிருப்பது இரண்டு ஆண், ஒரு பெண் என்று மூவர் மட்டுமே!

‘லம்பாடி’ இனத்தாரில், குடும்பத்தார் அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்பார்கள்.

ஆனால், இங்கோ கடின உழைப்பாளி பெரியவன் மட்டுமே!

இரண்டாமவன் விவசாயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அவன் என்ன வேலை செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது. அதேசமயம் அவனை வெட்டியாய் வீட்டில் பார்க்கவும் முடியாது. எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டே இருப்பான். வீட்டில் அவனை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் இளையவன் என்பதாலோ அல்லது சோம்பேறி என்பதாலோ அப்படி நடந்து கொண்டார்கள்.

-    இறைவன் நாடினால் தொடரும்

(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு டிசம்பர் 3, 1995)