NewsBlog

Monday, August 10, 2020

பாலம் 3

தெலுங்கு மூலம்: கே.கே.மேனன் - தமிழில் : இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''
நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அரசாங்க ஜீப் வந்தது. அதிலிருந்து நான்கு பேர் இறங்கினார்கள். நிலத்தை அளக்கும் சங்கிலியுடன் மற்றொருவரும் இறங்கினார்.

“அய்யா யாருங்க?” என்று மோட்டா நாயக் கேட்டான்.

“சர்வேகாகாரர்கள். இந்த நிலத்தை அளப்பதற்கு வந்திருக்கிறோம்!” – என்றார் அவர்களில் ஒருவர்.

அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வகித்த பதவி எதுவாக இருந்தாலும் அதில் மோட்டாவுக்கு அக்கறையில்லை. அதுபற்றி ஞானமும் அவனுக்குக் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம்… தெளிவாய் புரிந்ததெல்லாம்.. ஒன்றே ஒன்றுதான்! அவர்கள் அங்கே செய்து கொண்டிருந்தது சித்திரவதைப்படலம்.

நன்றாக வளர்ந்திருந்த கத்திரி செடிகளின் இடையிலிருந்து சங்கிலியை இழத்துச் சென்றதால், அதில் சிக்கிக் கொண்டு பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்து கொண்டிருந்தன. சில செடிகள் ஒடிந்து நிலத்தில் சாய்ந்துவிட்டன. இந்தக் காட்சியை கண்டு குடும்பத்தார் அனைவரும் அழுதார்கள். அதன்பின்னர், நடந்த கொடுமை தாள முடியாமலிருந்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த வயலில் சங்கிலியை இழுத்துச் சென்றதால் முற்றியிருந்த கதிர்கள் எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தன.

சின்னவன் வந்ததும், நடந்ததை எல்லாம் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தான்.

“குழந்தை இறந்ததைப் போல், எண்ணி நாங்கள் அழுது கொண்டிருக்கிறோம்! நீ வாயே திறக்காமலிருக்கிறாயேடா!” – எரிந்து விழுந்தான் மோட்டா நாயக்.

அப்போதும் அவன் ஏதும் பேசவில்லை. சட்டென்று வீட்டிலிருந்து எழுந்து போய்விட்டான். அவ்வளவுதான். நான்கு நாட்களுக்கு அவனை காணவில்லை. எங்கே போனான்? என்ன செய்கிறான்? என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஐந்தாவது நாள் பத்து பேருடன் வந்தான். அவர்களுக்கு வயற்காட்டைச் சுற்றிக் காட்டினான். பூக்கள் கொட்டிப் போன கத்திரித் தோட்டத்தையும், கதிர்கள் உதிந்து போன நெற்பயிரையும் வந்தவர்கள் பார்த்தார்கள். அதன்பிறகு எல்லோரும் மோட்டா நாயக்கின் வீட்டிற்கு வந்தார்கள். மோட்டா நாயக்கின் குடும்பத்தார் அவர்கள் முன் கைக்கட்டி நின்றார்கள்.

அப்போதும், மோட்டா நாயக்கின் சின்ன மகன் வாய் திறந்து பேசவில்லை. வந்தவர்கள் மட்டும், “நாங்கள் அனைவரும் எதிர்கட்சித் தலைவர்கள். நாளை நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் உங்களுக்காக குரல் எழுப்ப இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓய மாட்டோம்!” – என்று ஆறுதல் சொன்னார்கள்.

எதிர்க்கட்சிகாரர்களின் உறுதிமொழி ஆளும்கட்சிக்காரர்களின் உறுதிமொழியைப் போலவே இருந்தது. அவர்களின் எதிர்ப்பை முதல்வர் சட்டைச் செய்யவே இல்லை.

“அநீதிக்கு வளையாத ஏழை மக்களின் அரசு இது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் யாராக இருந்தாலும் அந்த அநீதியைப் பார்த்துக் கொண்டு இந்த அரசால் பேசாமலிருக்க முடியாது!” – என்று திட்டவட்டமாக சட்டசபையில் முதல்வர் அறிவித்துவிட்டார்.

அரசியல்வாதிகளில் பலபேர், நகரின் முக்கிய இடங்களில் அரசு நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது முதல்வரின் திட்டவட்டமான இத்தகைய தீர்மானத்தால்தான் போலும் என்று எண்ணி மௌனமாகிவிட்டனர் எதிர்க்கட்சிக்காரர்கள்.

அரசு அதிகாரிகள் அளித்திருந்த பத்து நாள் கெடு முடிவடைந்தது.

மோட்டா நாயக் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தான். இடத்தை காலி  செய்யாவிட்டால், புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளி பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்தது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பாதி இரவு கழிந்தது.

சின்னவன் இன்னும் வீடு திரும்பவில்லை.

வீட்டில் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

யாரும் உணவு உண்ணவில்லை.

இருண்ட அந்த இரவில், சுவர்க்கோழிகளின் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அரைமணி நேரத்திற்கு பிறகு, திடீரென ஏதோ சத்தம் கேட்க ஆரம்பித்தது. கோடாரியால் விறகுகளை பிளக்கும் சத்தம் போல அது இருந்தது. அதை யாரும் சட்டை செய்யும் நிலையில் அவர்கள் இல்லை.

பொழுது புலர்ந்தது.

மோடா நாயக்கின் பூர்வீகச் சொத்தை பறித்துக் கொள்வதற்காக அதிகார வர்க்கத்தினர் புறப்பட்டுவிட்டார்கள். முதலில், புல்டோசர், அதன் பின்னால் லாரி நிறைய போலீஸ் படையினர், அதன் பின்னால் அரசு ஜீப், அதில் வெள்ளையும், சொள்ளையுமாய் அதிகாரிகள்.. ஊர்வலம் அதிகார ஊர்வலம் புறப்பட்டது.

உயரமான மலை மீதிருந்த உன்னதமான பங்களாக்களின் மத்தியிலிருந்த சிமெண்ட் தரையைப் போல அமைக்கப்பட்டிருந்த தார் ரோடிலிருந்து பள்ளத்தாக்கில் அணிவகுப்பு இறங்கியது.

சற்று தூரம் முன்னேறியதும் சட்டென்று புல்டோசர் நின்றுவிட்டது. அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் அதை பின்தொடர்ந்து வந்த ஜீப்பும் நின்றது. மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த சம்பவத்தால் என்ன? ஏது? என்று அறியாமல் அலறி அடித்துக் கொண்டு இறங்கினார்கள். லாரியிலிருந்த போலீஸ்பட்டாளம் எகிறி குதித்த்து.

அதிகாரிகளின் நெஞ்சம் படபடத்தது.

“என்ன இது? ஏதோ விபரீதம் நடந்ததை போலிருக்கிறதே! யாரோ தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தியதைப் போலிருக்கிறதே!” – என்று ஒரு அதிகாரி பயத்துடன் சொன்னார்.

ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சில அரசு அதிகாரிகள் கடத்தப்பட்டிருந்தனர். அது நினைவுக்கு வந்ததும், அதிகாரிகளிடம் பயம் அதிகரித்தது.

“நகரத்தின் மத்தியில் அத்தகைய அசம்பாவிதம் நடக்கும் வாய்ப்பில்லை!” – என்றார் மற்றொரு அதிகாரி.

அதற்குள் புல்டோசர் டிரைவர் ஓடிவந்தார்.

“என்ன? என்ன நடந்தது?” – அதிகாரிகள் பதட்டத்துடன் கேட்டார்கள்.

“வண்டி இனி ஒரு அடிகூட நகராது சார்?’ – என்றார்.

“ஏன்?

“நமக்கு முன்னால் ஒரு பெரிய கால்வாய் இருக்கிறது சார்!”

“இருக்கட்டும். அதை கடக்கதான் பாலம் இருக்கிறதே!”

“பாலமெல்லாம் இல்லை. வெறும் கால்வாய்தான் இருக்கு சார்!”

டிரைவர் சொன்னதை நம்பாமல் ஒரு அதிகாரி முன்னால் நடந்து போய் பார்த்தார்.

அங்கே,

பாலம் இல்லை.

பாலத்தை இணைக்கும் வெறும் தூண்கள் மட்டுமே இருந்தன.

(முடிந்தது)

முதல் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/1.html
இரண்டாம் பகுதியை வாசிக்க இணைப்பு: https://mrpamaran.blogspot.com/2020/07/2.html

(ஜுலை 16-31, 1996 சமரசம் இதழில் பிரசுரமானது. மூலமொழி: தெலுங்கு - நன்றி: ஈநாடு ஞாயிறு மலர், டிசம்பர் 3, 1995 - பக்கம் 10 மற்றும் 11)



0 comments:

Post a Comment