NewsBlog

Thursday, December 12, 2013

காலப்பெட்டகம்:ஜமாஅத் தலைவர் அப்துல் காதர் முல்லாஹ் தூக்கிலிடப்பட்டார்.

வங்கதேசத்தின் பிரதான எதிர்கட்சியான ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அப்துல் காதர் முல்லாஹ் (65) வியாழன் அன்று இரவு 10.01 மணியளவில் டாக்காவின் சிறையில் தூக்கிலிடப்பட்டார். (எங்கிருந்து அந்த ஆத்மா வந்ததோ அங்கேயே சென்றடைந்தது.)

சிறைத்துறையினரிடமிருந்து வந்த அறிவிப்பையொட்டி ஷஹீத் அப்துல் காதர் முல்லாஹ்வின் குடும்பத்தினர் இரவு 8.00 மணி அளவில் சிறையில் அவரை சந்திக்க சென்றிருந்தனர். அப்போது, தூக்கு தண்டனை குறித்து சிறைத்துறையினர் தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும், தனக்கு முறையான மருத்துவ சோதனைகள்கூட இதுவரை நடத்தப்படவில்லை என்றும் அப்போது அப்துல் காதர் முல்லாஹ் தெரிவித்திருக்கிறார். தமது குடும்பத்தினரோடு நடந்த அந்த இறுதி சந்திப்பில் ஷஹீத் அப்துல் காதர் முல்லாஹ் தெரிவித்தவை இவை:

“இதுவரை எனது குடும்பத்தாராகிய உங்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்தேன். என்னை அரசாங்கம் அநீதியான முறையில் கொலை செய்துவிட்டால், அந்த மரணம் ஷஹீத் என்ற அந்தஸ்துக்குரியதாகிவிடும். என் மரணத்துக்கு பிறகு இறைவன்தான் உங்கள் பாதுகாவலன். பாதுகாவலர்களில் அவன்தான் சிறந்த பாதுகாவலன் ஆவான். அதனால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை. 


உண்மையிலேயே நான் நிரபராதி. நான் கொல்லப்படுவதற்கு நான் இஸ்லாமிய இயக்கத்தில் உள்ளேன் என்ற ஒரே ஒரு காரணம் அன்றி வேறில்லை.  அறப்போராளி என்ற இந்த அந்தஸ்து அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. இறைவன் தனது திருப்பொருத்தத்திற்கு என்னை ஆளாக்கிக் கொண்டான் என்பதே இதன் பொருள். 

இது என் வாழ்வில் நான் பெற்றிருக்கும் பெறும் பேறாகும். இறைவன் நாடினால், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்று அநீதியாளர்களை ஆட்சி கட்டிலிலிருந்து குப்புறத் தள்ளிவிடும். என்னைக் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனது கவலையெல்லாம் இந்த நாட்டின் தலையெழுத்தைக் குறித்துதான்.

எனக்குத் தெரிந்தவரையில் நான் யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கவில்லை. எனது முழு வாழ்வையும் இயக்கத்துக்காகவும், நாட்டுக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். என்னால் ஒருநாளும், அநீதியாளர்களின் முன் சிரம் பணிய முடியாது; இறையருளால் அதை என்னால் செய்யவே முடியாது! நான் அநீதியாளர்கள் முன் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்கவும் முடியாது. 

வாழ்வையும், மரணத்தையும் தீர்மானிப்பவன் இறைவனேயாவான். இறைவன்தான் என் தலைவிதியை நிர்ணயிப்பவன். எனது வீர மரணமும் இறைவனின் தீர்ப்பின்படியே முடிவாகும். இறைவனின் தீர்ப்பே மன நிறைவு தரக்கூடியது” 

அதன் பின் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஷஹீத் அப்துல் காதில் முல்லாஹ் அறிவுறுத்தலானார்:

“நீங்கள் அனைவரும் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மேற்கொள்பவரோடுதான் இறைவனும் இருக்கிறான். மறுமையின் ஈடேற்றமே நம் அனைவரின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். 

எனது வீரமரணத்தை ஏற்றுக் கொள்ளும் மக்கள் எனக்காக பிரார்த்திக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல மக்கள் என் மீது காட்டிய அக்கறைக்கும், எனக்காக செய்த பிரார்த்தனைகளுக்கும் நான் நன்றி கலந்த பெருமிதத்துடன் சல்வியூட் செய்கிறேன்.

0 comments:

Post a Comment