NewsBlog

Monday, December 9, 2013

கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் குரல்'


அச்சுறுத்தப்படும் தாய் நாட்டில்..
சுக்கலான இதயத்தோடு நான்!

எடுங்கள் வாளை..
வீசுங்கள் என்னைக் காக்க..
கனவுகளைத் தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரை துடைப்பீரோ?

காப்பாற்றுங்கள்..!
காப்பாற்றுங்கள்..!!
என் குரல் கேட்கிறதா?
என் தேவை வாழும் உரிமை!
தாக்குதலை நிறுத்துங்கள்
வாழ அனுமதியுங்கள்!

'குற்றவாளி.. குற்றவாளி..!'
என்று சொல்வோர்
இன்னும் குற்றத்தை
நிரூபிக்க காணோம்!
நாங்கள்
ஒப்புக் கொள்ளாதோரை
தடுத்து நிறுத்துவது எப்படி?

சோகமும், கோபமும்
பொங்கி வந்து
என்ன லாபம்?
மன உணர்வுகள்
கொடுமைகளைத்தான்
தடுக்குமா?




நீதியும் சமாதானமும்
வார்த்தைத் தோரணமா?
குருதிப் பொங்கும் உலகில்
மனித நேயம் வாழுமா?
அப்பா சொல்கிறார்
நிகழ்வுகள்
நான் அறியா வயசென்று!















ஆய்வுகளும், அனுமதிகளும்
கட்டுப்படுத்துமா
என் நாட்டை?
எங்கள் எண்ணெய் வளம் சுரண்டி
மாற்றம்தான் சாத்தியமா?
சர்வதேச சட்டமாவது
மண்ணாங்கட்டியாவது
சட்டாம் பிள்ளையிடம்!

என் வயதுக்கு மிஞ்சி
இன்னும் பல பிரச்னைகள்!
போரின் அச்சம்தான்
புதைந்துள்ளது; சதா எனக்குள்!
நான் என்ன செய்ய?
விண்ணைத் தொடுகின்றன வினாக்கள்!













என் சூரியன் அஸ்தமிக்க
அவர்கள் வானத்தில் இருட்டடிக்கிறார்கள்!
என் பிஞ்சு மனம் நிரம்பியுள்ளது; பேரச்சத்தால்!
என் அப்பாவி
முகம் முழுக்க
கண்ணீர் ஓடைகள்!

என் மனதின் ஓலம்
"காப்பாற்ற வாருங்கள்!"
என் கனவுகளின்
அமைதி தேவதை
சதா சிரித்துக் கொண்டு!
என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்டும்
நம்பிக்கையில் இன்னும் நான்!

முழு உலகின்
ஒரே அரியணைக்காக
ஜனநாயக முகமூடியில்
ஒரு சர்வாதிகரியின்
'கிறுக்குத்தனம்' போர் இது!
யார் காப்பது ..
எனது மனித உரிமைகளை!
எல்லாம் இழந்த பின் ..
காத்திருந்து என்ன பயன்?














இராக்கிய குழந்தை
உங்கள் முன்
இதோ நான்!
அச்சுறுத்தப்படும்
தாய் நாட்டில்....
சுக்கலான இதயத்தோடு!
எடுங்கள் வாளை..
வீசுங்கள்
என்னைக் காக்க..

கனவுகளை தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரைத் துடைப்பீரோ?
காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..!
என் குரல் கேட்கிறதா?

மூலம்:  'மாய் ஹம்தி அலி டெசவ்கி'
(இராக்கிலிருந்து கண்ணீர் கவிதை)
 
தமிழில் : இக்வான் அமீர்

(வெளிச்சம் 2004 இல், சிறப்பு மலரில் வெளியானது)

0 comments:

Post a Comment