NewsBlog

Tuesday, December 17, 2013

சிறப்புக் கட்டுரை: 'சோகத்தின் நறுமணம் அனு தின வாழ்கையாகிப் போனவர்கள்!'


உடலை உறைய வைக்கும் பனி பொழிவு மனித வாழ்கையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சராசரி மனித வாழ்க்கையே பெரும் தள்ளாட்டமாக இருக்கும்போது, வெட்ட வெளியில் வாழ்வைக் கழிக்கும் அவர்கள் நிச்சயமாக வானவர்கள் அல்ல! வேண்டுமானால் இப்படி சொல்லலாம்: 'நாளை பிணங்களாகப் போகும் இன்றைய நடை பிணங்கள்!' ஏற்கனவே இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் அவர்கள் கண் எதிரிலேயே கண்ணின் கருமணிகள் கடும் குளிர்தாளாமல் இறப்பெய்திக் கொண்டிருக்கிறன. முறையான முகாம்களும், மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லாத திடல்களில் புதிய புதிய மண்ணறைகள் நாள்தோறும் பிஞ்சு ஆத்மாக்களின் இழப்பால் பூத்துக்  கொண்டிருக்கின்றன! ஆம்.. சோகத்தின் நறுமணம்  அனுதின வாழ்க்கையாகிப் போன துரதிஷ்டசாலிகளின் ஷாம்லி மாவட்டத்தின் முகாம்கள் அவை. முஸாபர்நகர் கலவரத்தால் வாழ்க்கை நிலைகுலைந்து போனவர்களின் துக்கமும், துயரமும் நிறைந்த முகாம்கள்!

முஸாபர்நகர் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம்களில் இறப்பெய்தி கொண்டிருக்கும் குழந்தைகள் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில் உ.பி மாநில அரசோ எதற்கும் அசைந்து கொடுக்காத 'டெர்மினேட்டர்' ரோபோவாக உள்ளது. இந்த உதாரணம் கூட பொருத்தமாக இருக்காது! ஏனென்றால் டெர்மினேட்டர் ரோபோ ஒரு குழந்தையின் உயிர்காக்கும் வேற்றுலகவாசியாக வருகிறது. அதை விட மட்டமாக மனம் கல்லாகிப் போயிருக்கிறது உபி அரசு. 


மேற்கு உபியின் முக்கிய நகரமும், கரும்பு மற்றும் வெல்ல உற்பத்திக்கு பேர் போனதுமான மாவட்டம் ஷாம்லி. இந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முஸாபர்நகர் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் முகாம்களின் பரிதாபகரமான நிலைமைதான் இது.  இதுவரை 50 குழந்தைகள் இறப்பெய்திருக்கிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த மருத்துவ வசதிகளைச் செய்து தர ஒரே ஒரு மருத்துவர்கூட இதுவரை மாநில அரசு நியமிக்கவில்லை என்பது பரிதாபமானது.

முஸாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களைச் சேர்ந்த கிட்ட தட்ட 4500 பேர் மலக்பூரின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உபியின் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த டைரக்டர் ஜெனரல், டாக்டர் ஏ.எஸ்.ரதோர் மிகவும் அரிதினும் அரிதாக மலக்பூர் முகாம்களுக்கு செல்கிறார். அப்படி சென்றும் இறப்பெய்திக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மரணங்களின் உண்மையான தகவலை சொல்ல மறுக்கிறார். மலக்பூரில் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு மரணமுற்ற 16 குழந்தைகளை அடக்கம் செய்துள்ள புதிய மண்ணறைகளை காணக்கூட அவர் விரும்பவில்லை.

டாக்டர் ராதோரின் நிலைதான் இப்படி என்றால், ஷாம்லி மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் லோகேஷ் குமார் குப்தாவோ மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். ஸீனைதி முகாம் பக்கம் வந்த அவர் காரிலிருந்து இறங்கி முகாம்களில் இருப்போரின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை. ஆக, அரசு எந்திரம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளை காது கொடுத்தும் கேட்க மறுத்து வருகிறது. அவர்களின் துன்பங்கள், துயரங்கள் சில்லிடும் பனிக்காற்றில் உறைந்து புதையுண்டு கொண்டிருக்கின்றன.


ஸீனைதி முகாம், மலக்பூர் முகாமிலிருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 6 பச்சிளம் குழந்தைகள் குளிரைத் தாளாமல் இறப்பெய்தின. இந்த மரணங்களையும் சுகாதாரத் துறை கணக்கில் எடுக்க மறுத்து வருகிறது. 

"என்னுடைய குழந்தை நச்சு பாம்புக் கடியால் இறந்துவிட்டது!" - என்கிறார் கலங்கிய கண்களோடு அக்பரி. இவரது குழந்தை 'ஸாதில்'தான் பாம்பு கடிக்கு பலியானது. இன்னும் ஐந்து குழந்தைகள், நான்கு வயதான ஃபாத்திமா, ஆறு வயது பிர்தௌவ்ஸ், ஐந்து வயது ஜோயா, இருபதே நாள் கைக் குழந்தையான பைரோஸ், பிறந்து வெறும் ஒன்பதே நாளான உமர் பலியானோர் பட்டியலில் அடங்குவர். 

இதேபோல, ஷாம்லியின் மூன்றாவது முகாமான 'நூர்பூர் - புர்கான்' முகாமிலும் மலக்பூர் மற்றும் ஸீனைதி முகாம்களின் நிலைமைதான். 1300 பேர் தவியாய் தவிக்கும் இந்த முகாமில் இதுவரை ஐந்து குழந்தைகள் குளிரைத் தாங்க முடியாமல் இறப்பெய்தின என்பது சோகமானது.

சமத்துவம், பாதுகாப்பு, நல்லாட்சி என்று போலியான முழக்கங்கள் மூலம் முலாயம் சிங்கும் முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார் என்பதையே இந்த மரணங்களும், மனிதர்களின் அடிப்படை தேவைகளுக்குக் காட்டும் அலட்சியங்களும் நினைக்கத் தோன்றுகின்றன.

    (Source: Twocircles.net)








0 comments:

Post a Comment