NewsBlog

Saturday, December 14, 2013

சிறப்புக் கட்டுரை: 'திட்டமிட்டதாகவே இருந்தாலென்ன?'


அது ஒரு பொது நிகழ்ச்சி. அதுவும் உலகப் புகழ்பெற்ற தலைவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட சர்வதேச நாடுகளின் பிரமுகர்கள் திரண்டிருந்த நிகழ்ச்சி. தங்கள் சோகங்களைப் பரஸ்பரம் பறிமாறிக் கொள்ள வந்திருந்த ஆட்சி, அதிகார வர்க்கத்தின் ஜனத்திரள். 

கூட்டத்திலிருந்த ஒருவர் இன்னொருவரை நோக்கி நடந்தார். கைக்குலுக்கி குசலம் விசாரித்தார். அப்படி கைக்குலுக்கிக் கொண்ட அவர்கள் யாராக இருந்தாலும் அந்த சோக நிகழ்வின் சூழலையொட்டி அனைத்தும் சகஜமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

ஆனால், அந்தக் கைக்குலுக்கல் அசாதாரணமானதாக பேசப்பட்டு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்புக்குள்ளாக்கப்பட்டது. 

இத்தகைய ஊடக பரபரப்புகள், அதைத் தொடர்ந்து வந்த ஊடக கற்பனைகள் அனைத்தும் பண்பு கெட்ட செயல்களாகவே கருதப்பட வேண்டியவை.

இந்த சம்பவம் நடந்தது, நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டிருந்த கூட்டத்தில்தான்; அப்படி தாமாக முன்சென்று கைக்குலுக்கியவர், அமெரிக்க அதிபர் ஒபாமா. கைக்குலுக்கலுக்கு ஆளானவர் கியூபா அதிபர் 'ரவுஸ் காஸ்ட்ரோ'.

இது நடந்த அடுத்த நாள், 'காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைக்குலுக்கியது தற்செயலானது'- என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. 

"மண்டேலா நினைவு நிகழ்ச்சியில் மேடையேறி பேசச் செல்லும், ரவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கினார். இது தற்செயலான நிகழ்வுதான். திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. ஒபாமா, ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிவிட்டார் என்பதற்காக கியூபா தொடர்பான, அமெரிக்காவின் கொள்கை மாறிவிடும் என்பது அர்த்தமல்ல!' - என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் எதிரி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு சக மனிதர்களை எதிரிகளாக பாவிப்பது போக்கிரித்தனத்தின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை. 

அன்பும், விட்டுக் கொடுக்கும் போக்கும், தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மையும் தலைமைத்துவத்தை நோக்கி தானாகவே செலுத்தும் நற் பாதைகளாகும். அந்த பாதையை அடைந்து உலக தலைமையேற்க ஒவ்வொரு நாடும் தனது தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அதிலும் குறிப்பாக அமெரிக்கா!

0 comments:

Post a Comment