NewsBlog

Wednesday, December 25, 2013

விருந்தினர் பக்கம்:' இந்திய கிருஸ்துமஸ் கதை!'

குழந்தை யேசுவும், அவரது தாயார் கன்னி மேரியும் உலக மக்களை ரட்சிப்பவர்களாக உண்மையிலேயே இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அவர்களை 'பெத்லஹேமின்' இடையர் குடும்பத்து முக்கிய கதாப் பாத்திரமாகவே பார்க்கிறேன். கன்னி மேரிக்கு பிறகு அந்த குடும்பத்தார் மட்டுமே பரலோகத்தின் தடபுடலான உபசரிப்புகளை கண்டிருப்பார்கள். விண்ணுலகத்தின் பேரொளியில் குளிக்கும் பாக்கியத்தையும் பெற்றிருப்பார்கள். அதன் பிறகு, "ஏழை, எளியோர் பாக்கியவான்கள்; அவர்களின் இருப்பிடம் சுவனமாகும்!" - என்று உபதேசிக்க யேசுவுக்கு 32 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 

ஒரு மேய்ப்பனைவிட ஏழையை எங்கும் காண முடியாது. அதேபோல, ஒரு இடையனைவிட கடினமான வாழ்க்கையை வாழ்பவர் வேறு யாராகவும் இருக்க இயலாது. குறிப்பாக பண்டைய நாட்களில் இன்றைய இஸ்ரேல், பலஸ்தீனம் போன்ற பகுதிகளில் வசித்த இடையர்களுக்கென்று சொந்தமாக மேய்ச்சல் பிராணிகளை கொண்டிருந்தது மிகவும் சொற்பம்தான். செல்வந்தர்களின் பிராணிகளைதான் அவர்கள் குழுக்களாக இருந்து மேய்ப்பார்கள். அவற்றின் ரோமம் வெட்டி எடுக்கும் பருவம்வரை அல்லது அந்த பிராணிகள் விற்கப்படும்வரை மேய்க்கும் தொழில் அவர்களைச் சார்ந்ததாகவே இருந்தது. தங்கள் உயிரினும் மேலாக, உடலை உறையச் செய்யும் குளிரில் அந்த மந்தைகளை பாதுகாத்து வந்தார்கள்.

ஜான் தயாள்
இந்தியாவின் 5 லட்சம் கிராமங்களைச் சார்ந்த பழங்குடியினரை பைபிளின் இந்த மேய்ப்பர்களாகவே அடையாளம் காணலாம். உடலை மறைப்பதற்கும்கூட ஒழுங்காய் அணியும் ஆடைக் கூட இல்லாத அவலநிலையில் வசிப்பவர்கள் இவர்கள். ஒதுங்க வீடில்லை. அடுத்த வேளை உணவு எங்கே என்பதும் நிச்சயம் இல்லை. 

தலைவர்களின் பொய்யான வாக்குறுதிகளும், நிறைவேற்ற முயன்று முடியாத வாக்குறுதிகளுமாய் இந்த தலித்துகள், பழங்குடியினர், மீனவர்கள் மற்றும் நிலமற்ற ஏழைகள் மிகக் குறைந்த கூலிக்கு இடுப்பொடிய வேலை செய்ய வேண்டிய நிர்பந்தமான வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவின் வளர்ச்சி என்னும் கதை இதுவரை இவர்களைப் புறக்கணித்தே புனையப்பட்டிருக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், வறுமைக்கோட்டுக்குக் கீழே அல்லாடும் இவர்ககள் அனுதினமும் எதிர்கொள்ளும் வாழ்க்கை, காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், அரசும் அதன் நிர்வாகத்துறையும் காட்டும் மகிழ்ச்சி பொங்கும் முகங்களைவிட்டும் வெகுதூரத்தில் உள்ளது. பெரு நகரங்களின் மேல்தட்டு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை விட்டும் மிக மிக விலகி... யாருடைய மனசாட்சியும் உறுத்தாமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமையானது.

செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பலாம், சந்திரனில் மனிதர்களை குடியேற வைக்கலாம். ஆனால், உலகளவில் இந்தியாவோ வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும்  சமூக சமத்துவம் ஆகியவற்றின் பட்டியல் வரிசையில் பின்தங்கியே உள்ளது. சிசு மரணங்கள், இளம் பெண்களின் பேறுகால சாவுகள் மற்றும் சிசு-தாய் ஆகியோரின் ஊட்டச் சத்து குறைபாடு மரணங்கள் ஆகியவற்றில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தொழில் வளர்ச்சியில் பெரும் சாதனைப் படைப்பதாக சொல்லப்படும் குஜராத்தில் இந்த கொடுமைகளின் புள்ளிவிவரம் இன்னும் மோசமாக இருக்கிறது. 

சொந்த அரசாங்கத்தாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் தங்கள் நிலமும், காடுகளும், நீராதாரமும் சுரண்டப்படுவதை கண்டு தலித்துகளும், பழங்குடியினரும் வாழ்வின் கடைக்கோடிக்கே தள்ளப்பட்டு நிராசையில் இருக்கிறார்கள். அவர்களின் அற்புதமான மலைவளம் கனிமவளத்துக்காகவும், எண்ணெய் வளத்துக்காகவும் சமதளமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆறுகளின் குறுக்கே அணைகள் எழுப்பப்பட்டு அவர்களின் வசிப்பிடங்கள் எல்லாம் ஜலசமாதியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அப்படி உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சாரத்தை அவர்களின் கிராமங்கள் ஒரு நாளும் பயன்படுத்தியதில்லை; அதற்கான வசதியும் அரசாங்கத்தால் செய்துதரப்படவில்லை. அவர்களில் ஓரிருவருக்கு மட்டும் வேலைவாய்ப்புகள், பெரும்பான்மையினர் வேலையின்மையின் உழல அதிலும் பெரும்பான்மையினர் கொத்தடிமைகளாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கான பதுமைகளாக பயன்பட, இளந்தலைமுறையினரோ கல்லாதவர்களாக வளர்கிறார்கள்.

ஒடுக்கப்படுவோரின் கனவுகள் கனவுகளாகவே இருக்கின்றன. எளிமையான கனவுகள்தான் அவை. பசியற்ற வயிறுகளும், நோயற்ற உடல்களுமான கனவுகள்; எல்லோருக்கும் குடிக்க சுத்தமான குடிநீர், இருக்க ஒரு இடம் வேண்டிய கனவுகள். இதற்கும் மேலாக மானத்தோடும், கண்ணியத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற கனவுகள்!

இந்த கனவுகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரையும் தென்படவில்லை! 

நம்பிக்கையற்ற ஒரு சூழல்; கைவிடப்பட்ட மக்கள் அனைவரும் ஒரு 'மீட்பருக்காக' யேசுவின் வாக்களிக்கப்பட்ட இரட்சிப்பு போன்ற ஒன்றுக்காக  எதிர்நோக்கி காத்திருக்கும் வேளை இது.

கிருஸ்துமஸின் நோக்கும், மேய்ப்பர்களுக்கான அந்த மீட்சிக்கான வாக்கும் நமக்கும் சேர்த்துதான்.

அனைவருக்கும் சந்தோஷம் பொங்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

- ஜான் தயாள்,
(Secretary-General of the All India Christian Council)

(Source: TwoCirlces.net)


0 comments:

Post a Comment