எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சியிலிருந்த முஹம்மது மோர்சி ராணுவ சர்வாதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நாட்டின் ஜனநாயக அமைப்பை சிதைத்து ராணுவம் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள நிலையில் மக்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி சிறையிலிருந்த 'கொடுங்கோலன்' முபாரக் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் எகிப்தில் ஜனநாயகம் வேண்டி அறவழியிலான மக்களால் நடத்தப்படும் அனுதினப் போராட்டங்கள் இரும்பு கரங்களால் ஒடுக்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக் கணக்கான மக்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகிறார்கள். முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்கள் எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் ராணுவ ஆட்சியாளர்களால் ஆயிரக் கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக அண்மையில், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் வேண்டி போராடிய 21 இளம்பெண்கள் ராணுவ ஆட்சியாளார்களால் கைது செய்யப்பட்டு அதன்பின் 07.12.2013 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.
எகிப்தின் வரலாறு நெடுகிலும் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வருபவர்களை சர்வாதிகார ஆட்சியாளார்கள் இரும்பு கரங்களால் ஒடுக்கிக் கொண்டிருப்பதை தொடர்ந்து காணலாம்.
1954 இல், நாஸரை கொலை செய்ய முயற்சித்த சதியை இஃவான்கள் மீது சுமத்தி ஆயிரக் கணக்கான இஃவான்களை நாஸரின் அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று குவித்தது. அவர்கள் செய்த ஒரே குற்றம், எகிப்தில் ஏற்பட்ட அனைத்து சவால்களையும், எதிர்கொள்ளும் மனவலிமையை பெற்றிருந்தார்கள்; தீவிரவாத போக்கை கையாளாமல் மிதவாதிகளாக இருந்தார்கள். திடீர் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றி இரவோடிரவாக சமூக மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்பதில் நம்பிக்கையில்லாமல் இருந்தார்கள்.
'இஃவானுல் முஸ்லிமீன்' எனப்படும் 'முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் ஷஹீத் ஹஸனுல் பன்னாஹ் சொல்கிறார்: " திருக்குர்ஆன் நமது அரசின் சட்டமாக ஆகும்வரை நாம் மௌனமாக முடங்கிக் கிடக்கப் போவதில்லை. ஓய்வெடுக்கப் போவதுமில்லை. நாம் இதற்காகவே வாழ்வோம் அல்லது இதற்கான முயற்சியில் வீழ்வோம்!'
மற்றொரு முறை சம காலத்து அரசியல் தலைவர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக, "நாங்கள் உங்களை, இஸ்லாத்தின் பக்கம் அதன் போதனைகளின் பக்கம், அதன் சட்ட - திட்டங்களின் பக்கம், அதன் வழிகாட்டுதலின் பக்கமே அழைக்கிறோம். இதை நீங்கள் அரசியல் என்று கூறினால், 'ஆம்.. இதுதான் எங்கள் அரசியல்!' - என்று நாங்கள் ஆமோதிக்க வேண்டியிருக்கும்!" - என்று உறுதிபட சொன்னார் ஷஹீத் ஹஸனுல் பன்னாஹ்.
ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில்தான் வரவேண்டும் என்று இஃவான்கள் பிடிவாதமாக இருந்ததில்லை. மாறாக, இஸ்லாமிய சட்ட, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் எந்தவொரு அரசாங்கத்தையும் தாங்கள் ஆதரிக்கத் தயார் என்றே கூறி வந்தனர். ஆனால், சர்வாதிகார ராணுவத் தலைமை இன்று போலவே அன்றும் நிராகரித்துவிட்டது. அன்றைய ஆட்சியாளார் நாஸர் இது குறித்து இப்படி சொல்கிறார்:
"இஃவான்களின் தலைவரான அல் பன்னாவை சந்தித்தேன். அப்போது, அவர் என்னிடம் சில வேண்டுகோள்களை முன் வைத்தார். அதில் முதலாவது, பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என்பதாகும். அதன்பின், 'திரைப்படம் மற்றும் நாடக அரங்குகளை மூடிட வேண்டும் என்ற கோரிக்கைகளாகும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், "வாழ்க்கையை இருள்மயமாகவும், ஏக்கம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும் என்றே பன்னா சொல்கிறார். இந்த கோரிக்கைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது!"
உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய சட்ட அறிஞரான அஷ்ஷேக் அப்துல் காதிர் அவ்தா உட்பட முக்கியத் தலைவர்கள் ஆறு பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.
இதன் பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு, முழு முஸ்லிம் உலகின் எதிர்ப்புக்கு மத்தியிலும், 1966 ஆம், ஆண்டு சைய்யித் குதுப் தூக்கிலிடப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பல்வேறு கொடும் சித்திரவதைகளுக்கு ஆளான சகோதரி ஸைனப் அல் கஸ்ஸாலியின் வரலாற்று சம்பவம் ஒன்று நெஞ்சில் நிழலாடுகிறது. அந்த சகோதரி தனது வாயாலே பதிவு செய்கிறார் இப்படி:
"என்னுடைய இரு கரங்களும் தடிமனான சங்கிலியாய் இருகக்கட்டப்பட்ட நிலையில், அதன் முனையை இரு கருநிறத்து மனிதர்கள் ஏந்தியவாறு அறை எண் 24 க்கு, அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சிறைச்சாலையை சுற்றிப் போகும்படி செய்தார்கள். அந்த வழியே செல்லும்போது, கொடும் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்த இஃவான்களைக் கண்டேன்.
சிலர் தூண்களில் கட்டப்பட்டு பலமான சவக்கடிக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர், வேட்டை நாய்களுக்கு முன்னால் வீசப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலரோ இந்த கொடுமைகளை அனுபவிக்க தங்கள் முறையை எதிர் நோக்கி அமைதியாக காத்திருந்தார்கள்.
அங்கே கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறையச்சமுள்ள நல்ல பண்பாளர்கள். தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்தவரையில், அவர்கள் எல்லாம் இறைவழியில் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். நான் அவர்களுடன் பல்வேறு இயக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். நாங்கள் அனைவரும் திருக்குர்ஆனையும், திரு நபிகளாரின் பொன்மொழிகளையும் ஒன்றாக ஆய்வு செய்திருக்கிறோம்.
அங்கே சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையோரை அடையாளம் கண்டுக் கொண்டேன். அந்தக் கொடுமைகளை காண வேண்டும் என்பது என் விதி போலும்.! இறைவனின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மிருகத்தனமாக கொடூரமான முறையில் சித்திரவதைகளை அனுபவிப்பதை நான் பார்க்க வேண்டியிருக்கிறதே!
அந்தக் காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை. சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த அவர்களின் சகிப்புத்தன்மையையும், பொறுமையையும் கண்டு நான் பொறாமைக் கொண்டேன். அவர்களில் சிலர் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள். மற்றவர்கள் இளம் பெண்கள் மற்றும் மூதாட்டிகள். அவர்களின் முகங்கள் சித்திரவதைகளின் கொடுமைகளால் துன்பமயமாய் இருந்தன. அவர்களைச் சுற்றி ரத்தம் ஆறு போல காட்சியளித்தது. கிழிந்த ஆடைகளைப் பிளந்து கொண்டு காயங்கள் படு கோரமாய் காட்சி அளித்தன.
அந்த சூழலிலும் அவர்கள் நிலைகுலையாதவர்களாகவும், அமைதியோடும் காட்சி அளித்தார்கள். சிலர் தலைக்கீழாக தொங்க விடப்பட்டிருந்தார்கள். அப்படி தொங்கிக் கொண்டு ரத்த சகதியாய் இருந்த ஓர் இளைஞன் என்னைக் கண்டதும், தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல், "எனது அன்பு தாயே! இறைவன் உங்களுக்கு பொறுமையை தந்தருள்வானாக! மன உறுதியோடு இருக்கச் செய்வானாக!" - என்று உரத்துச் சத்திமிட்டார். அதற்கு நான் மறுமொழியாக, "என் பிரியத்துக்குரிய குழந்தைகளே! என் அன்பு தோழர்களே! இறைவன் உங்களுக்கு மன உறுதியையும், நிலைகுலையாத இறைநம்பிக்கையையும் தந்தருள்வானாக! நிச்சயமாக உங்களின் உறைவிடம் சுவனமின்றி வேறில்லை!" - என்று உறுதியுடன் பதில் அளித்தேன்.
இதைக் கேட்டதும், என்னை அழைத்து சென்று கொண்டிருந்தவர்கள், கடுமையாக தாக்க ஆரம்பித்தார்கள். உயர் அழுத்த மின் கம்பியை தொட்டுவிட்டாற் போல என் உடல் முழுக்க வேதனையால் வலித்தது. இருந்தபோதும் அந்த வேதனைகள், துன்பங்கள் எல்லாம் இறைவழியில்தான் என்பதை நினைவு படுத்திக் கொண்டேன். அந்த சவுக்கடிகள் பலமானவையாக இருந்தாலும், என் இறைநம்பிக்கையை அதைவிட பலமாக நான் ஆக்கிக் கொண்டேன். "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை, துணை யாருமில்லை!" - என்று யாரோ வானத்திலிருந்து அழைக்கும் ஓசை மீண்டும்.. மீண்டும் கேட்டது.
தொடர்ந்து என்னை அடித்துக் கொண்டேயிருந்தார்கள். நானோ, "இறைவன் மிகப் பெரியவன்! இறைவனுக்கே எல்லா புகழும்!" - என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.
"எங்கள் இறைவனே! உனதருளை எங்கள் மீது பொழிந்திருப்பதற்காக உனக்கு எங்கள் நன்றி உரித்தாகுக! இஸ்லாத்திலும், ஈமானிலும், ஜிஹாதிலும், போரிடுவதற்காக எங்களைப் பிரத்யேகமாக தேர்வு செய்த உனதருளுக்காக நன்றி செலுத்துகிறோம்!" - என்று நான் பிராத்தித்தவாறே இருந்தேன்.
அதன் பின் நான் ஓர் இருண்ட கூண்டினுள் தள்ளப்பட்டேன்.
0 comments:
Post a Comment