NewsBlog

Friday, December 13, 2013

விருந்தினர் பக்கம்:'சொல்லுங்க மோடி சொல்லுங்க!'



1) 2004 ஜூன் 15 அன்று அகமதாபாத் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதி என பட்டம் சூட்டி 19 வயது இளம்பெண் இஷ்ரத் ஜகானை மற்ற நான்கு இளைஞர்களுடன் டி.ஐ.ஜி வன்சரா என்கவுண்டர் செய்தது சட்டபடி தவறு என 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், 2011ல் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு என்கவுண்டர் நாடகத்திற்கு முன்தினமே அவர்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்து வெளி கொண்டு வந்தது மோடிக்கு தெரியாதா?


2) 2005 நவம்பர் 23ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்த ஷொராபுதீன் அவரது மனைவி கவுசர்பீயும் குஜராத் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் கழித்து அகமதாபாத் அருகே துப்பாக்கியால் துளைக்கப்பட்ட ஷொராபுதீன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுவும் சட்டவிரோத என்கவுண்டர்தான். பிறகு டிஜிபி வன்சரா கிராமத்தில் கவுசர்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையா?


3) இந்த என்கவுண்டர் படுகொலைகளை நடத்திய டிஜிபி வன்சரா இப்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து இந்த கொலைகளை முதல்வர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்தோம் என சொன்னது மோடியின் லட்சணத்தை காட்டவில்லையா?

4) குஜராத் மாநிலம் பிரிக்கட்ட 1960 முதலே ஜவுளி, உரம், இரும்பு போன்றவை அங்கு பிரபலம். பிஜேபி கட்சியே துவக்கபடாத காலத்தில் துவக்கப்பட்ட குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும், மோடி பிறக்காததன் முன்பே துவக்கபட்ட அமுல் கம்பெனியும் குஜராத் வளர்ச்சியில் மக்களுக்கு சேவை செய்வதும், மோடியின் ஆட்சிகாலத்தில் புதுப்புது முதலாளிகள் வளர்ந்ததும், அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்ததும் யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா மோடிஜி?


5) எஸ்ஸார், ரிலையன்ஸ், எல்.டி, போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தண்ணீர், மின்சரம், சாலை வசதி ஆகியவை கொடுக்கப் படுகிறது. மோடிக்கு நெருக்கமான அம்பானி குழுமத்திற்கு 7500 கோடி மதிப்புள்ள 5 கோடி சதுர மீட்டர் நிலத்தை வெறும் 160 கோடிக்கு கொடுத்து கார்ப்பரேட் சேவை செய்ததும், அந்த இடத்தை அந்நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான். ஆக மோடியின் குஜராத் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மாடல் என்பது சரிதானா? 

6) இரண்டே ஆண்டுகளில் இப்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு மோடி காட்டிய சட்டவிரோத சலுகைகளால் அங்குள்ள மக்களுக்கு சேரவேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேரவில்லை என மத்திய தணிக்கைக்குழு சுட்டிகாட்டியதை தீர்க்கதரிசியான மோடியின் கள்ள மவுனம் செரித்துவிடவில்லையா? 


7) கடந்த 8 ஆண்டுகளில் குஜராத்துக்கு 87 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு பெற்றதாக மோடி புளுக, 'இல்லை இக்காலத்தில் வந்த முதலீடு வெறும் 720 கோடிதான்!' - என அந்த புளுகு எட்டே நாளில் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளுத்ததை காவிக் கூட்டம் சொல்ல மறந்தது ஏன்? 

8) நர்மதா ஆற்றின் தண்ணீரையும், நிலத்தடி நீரையும் பெருமுதலாளிக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்த்து அங்கு விவசாயிகள் போராடுவதையும், அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளையும் ஊடகங்கள் மூடி மறைப்பதும், பல லட்சம் விவசாயிகள் பலனடையும் சர்தார் சரோவர் அணை திட்டத்தை அமலாக்காமல் ஏமாற்றுவதை எழுதாமல் இருப்பதும் மோடி அரசின் விளம்பரங்களுக்காகதானே? 


9) ஆண் பெண் விகிதாசாரத்தில் மிகவும் மோசமான இடத்தில் குஜராத் இருக்கிறது. 1000க்கு 919 பெண்களே உள்ளனர். ஊட்டசத்து குறைந்த பெண்கள் நிறைந்த மாநிலமும் இதுவே. இதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நகர் புறத்து பெண்கள் சாப்பாட்டைவிட மேக்கப்பில்தான் கவனம் செலுத்துகிறார்கள் அதற்குதான் செலவு செய்கிறார்கள்” என்று நக்கல் அடித்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பல்டி அடித்ததும் மோடியின் குரூர புத்தியின் ஒரு துளி அல்லவா?



10) கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மின்மிகை மாநிலமாய் இருக்கும் குஜராத்தில் இன்றுவரை 11 லட்சம் வீடுகள்மின் இணைப்பு இல்லாமல் இருகிறது. அதுமட்டுமா 1 கோடியே 20 லட்சம் குடும்பங்களில் 63 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருப்பதும், பல லட்சம் மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் அலைவதும் வளர்ச்சியின் குறியீடா மிஸ்டர் மோடி?


11) மனுநீதியை அமலாக்க ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சியை குடிநீர் கொடுப்பதில்கூடவா காட்டவேண்டும். பாவ்லா தாலுகா தன்வாடா கிராமத்தில் எந்த எந்த சாதியினருக்கு எப்போது தண்ணீர் விடப்படும் என பம்பு செட்டு சுவற்றில் பட்டியல் எழுதிவைக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. கடைசியாக தண்ணீர் இருந்தால் தலித் மக்களுக்கு கிடைக்கும் நிலைதான். வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இதை ரசித்தபடியே மோடி பவனி வருவது நியாயமா?

12) “பூரண மதுவிலக்கு அமலாக்கப்பட்ட குஜராத்தில் போன் செய்தால் சாராயம் வீடுதேடிவரும்” இது தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.. சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் குழாய் மூலம் சாரயம் விற்றவர்கள் இப்போது டோர் டெலிவரி செய்கிறார்கள். மோடி அவர்களே தாங்கள் வித்தியாசமான தலைவர்தானா?

13) வறுமை ஒழிப்பில் குஜராத் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் ஆகியேரின் வறுமையை ஒழிப்பதிலும் நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத்தான். குழந்தை இறப்பை தடுப்பதில் தோல்வி, பொது விநியோக முறை சீரழிந்த நிலை. மக்களின் சுகாதார நலன் புறக்கணிக்கப்படுவது அதாவது கிராமப்புறத்தில் 67 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை போன்றவை திட்ட கமிஷன் அறிக்கையின் ஆதாரங்கள். வெறும் வாய் சவடால் மூலம் இதை மூட முயற்சிப்பது நியாமதானா மோடி? 

 14) கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு 2 லட்சம் வேலை வாய்ப்புகளை வெட்டிச் சுருக்கிவிட்டது., அனைத்து துறைகளிலும் 2500 ரூபாய் சம்பளத்தில் அத்துக்கூலிகளாக இளைஞர்களை அலையவிடுவதுதான் இந்தியாவுகான முன் மாதிரியா? 
 
ஜசோதாபென்
 15) ஜசோதாபென் என்கிற பெண்ணை உங்களுக்கு தெரியுமா? 14 வயதான சிறுமியை 17 வயதில் திருமணம் செய்த தாங்கள் இன்றுவரை அவரை நிம்மதியாய் வாழவிடாமல், கண்காணிப்புடன் வெளியே பேசவிடமல் வைத்திருப்பது யாருக்குத் தெரியும்? ஓப்பன் என்கிற பத்திரிகை இச்சம்பவத்தை வெளியே சொல்லும் வரை. ஏனெனில் நீங்கள் பிரம்மச்சாரி என்ற பிம்பத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள் அப்படிதானே? தன்னை நம்பிவந்த பெண்ணை காப்பாற்றாத எந்த ஒரு மனிதனும் தன் நாட்டை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்? 

Ashish Khetan

16) ஆசிஷ் கேத்தானை தெரியுமா மோடி? எப்படி மறப்பீர்கள்! உங்கள் அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனையும், பாபு பஜ்ராங்கிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தெகல்கா நிருபர் அவர். 2002 ல் நீங்கள் செய்த இன அழிப்பில் உங்கள் கையில் படிந்த இரத்த கரையின் சாட்சி அவர். நீங்களும் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது. ஆகவே கார்ப்ரேட் கைகளில் தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு சேவகம் புரிந்து, இந்த நாட்டின் உச்ச பதவியை அடைய கனவு காண்கிறீர்கள். கனவு காண்பது அனைவருக்கும் உரிமை! உங்களுக்கு என்ன தடை? 

17) நவீன ஊடகங்களான இணையத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கூலிப்பட்டாளத்தை வைத்து உங்களை பின்தொடர்பவர்கள் 18 லட்சம் பேர் என ஆகாசபுளுகை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தீர்கள், கூலிக்கு மார் அடிக்கும் ஐ.டி கம்பெனிகளை நீங்கள் வாடகைக்கு வைத்துதான் இணைய உலகை ஏமாற்றுகிறீர்கள் என்பதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திவிட்டது. உண்மையை ஒருநாளும் நீங்கள் நம்பப் போவதில்லையா மோடி? (http://mrpamaran.blogspot.in/2013/12/blog-post_1285.html)

18) உங்கள் காவி கட்சியில் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், தொலைகாட்சியின் முன் லஞ்சம் வாங்கியது பழைய சம்பவமாக இருக்கட்டும். சமீபத்தில் லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த பாபு போக்கிரியாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததாகட்டும் எதற்காகவாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா? சொல்லுங்க மோடி... சொல்லுங்க! 

 (கேள்விகளுக்கு உதவிய ஆதார நூல்: நரேந்திர மோடி நாமம் - கோவி.லெனின்)

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

(தகவல் பகிர்வு: சு.பொ. அகத்திய லிங்கம்) 
 

0 comments:

Post a Comment