டிசம்பர் 2 மற்றும் 3, 1984.
அந்த இரவுகள் மறக்கவே முடியாதவை. காட்டமான ஏதோ ஒன்று மூக்கின் சுவாசமாய் நுரையீரல்களை துளைத்தெடுத்து மரணத்தை தூக்கத்திலேயே தந்த இருள் படிந்த சோகமான இரவுகள் அவை. ஆம்..! மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து வெளிப்பட்ட நச்சு வாயு ஆயிரக்க கணக்கான மனித உயிர்களைப் பலி கொண்ட நாள்; ஆயிரமாயிரம் மனிதர்களை வாழ்க்கையின் முடவர்களாக்கிய அந்த இரவுகளை யாராலும் மறக்க முடியாதுதான்.
ஆனால், பரிதாபமான இந்த மரணங்களைவிட கொடிய செய்தி என்னவென்றால், கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆன பின்பும் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதுதான்.
பாதிக்கப்பட்ட போபால்வாசிகள் தகுந்த இழப்பீடுகள் வேண்டியும், விபத்தால் நடை பிணங்களாய் உயிர் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு போதிய சிகிச்சை கேட்டும், விபத்து நடந்த நிறுவனத்தின் நச்சுக் கழிவுகளை நீக்கும்படியும், குடும்ப உறுப்பினர்களை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு வேலை கேட்டும் போராடிவருபவர்களின் வாழ்க்கையின் சோகம் இன்னும் நீதி தேவதையின் காதுகளில் எட்டுவதாய் இல்லை.
இந்நிலையில், உலகின் மிகவும் மோசமான விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து செல்லும் விதமாக பல்வேறு சமூக சேவை அமைப்புகளோடு கைக்கோர்த்துக் கொண்டு செவ்வாய் அன்று நீதிக்கான ஒரு கூட்டத்தை நடத்தவிருக்கிறார்கள்.
மத்திய அரசும், மாநில அரசும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது என்கிறார்கள் பெரும் பகுதி மக்கள்.
29 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு வகைகளில் எங்களால் முடிந்தளவு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், எந்தவிதமான பலனும் கிடைப்பதாக இல்லை. மத்திய - மாநில அரசுகள் உலகின் பார்வையிலிருந்து இந்த விபத்தை மூடி மறைக்கவே பார்க்கின்றன!" - என்கிறார் 'போபால் குரூப் பஃர் இன்பர்மேஷன் அண்ட் ஆக்ஷன்' அமைப்பைச் சேர்ந்த ரசனா திங்கரா.
"..இதுவரை நீக்கப்பட்ட 350 டன் கழிவுகள் 25,000 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாமலேயே மூடப்பட்டிருக்கும் நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எப்போது அகற்றுவார்கள்? யார் அகற்றுவார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வாரில்லை!" - என்கிறார் ரசனா தொடர்ந்து.
போபால் நச்சு வாயு விபத்தால் ஒரே ஒரு இரவில் 3,500 பேர் கொல்லப்பட்டனர். நச்சு வாயுவின் பாதிப்பால் 25,000 க்கும் மேற்பட்டோர் தகுந்த மருத்துவ வசதி இல்லாமல் நாள்தோறும் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.
"இந்த கொடும் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்பாவிகளின் உயிரைப் பறித்த இந்த கொடியவர்களை அரசாங்கம் இதுவரையும் தண்டிக்கவில்லை! என்பது வேதனையானது என்கிறார் சங்கர்ஷ் சமிதி என்னும் அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணா நாம்தியோ.
"29 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக, பல்வேறு குறைபாடுகள் கொண்டவர்களாகவே பிறக்கிறார்கள்!" - என்கிறார் ரஷீத் பீவி.
அரியணை சிம்மாசனங்களும், வாழ்வின் மோகங்களும் லட்சியமாய் போன அரசியல் தலைவர்களிடம் வேறு எதைதான் எதிர்பார்க்க முடியும்?
சமூகத்துகான நல்ல தலைவர்களும், அத்தகைய தலைவர்களை உருவாக்கும் நற்சமூக அமைப்பும் உருவெடுக்கும்வரை இந்த நிலைமை நூறாண்டுகளானாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஊமையரும், செவிடரும், குருடருமாய் போன மக்கள் இதை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
0 comments:
Post a Comment