NewsBlog

Wednesday, October 9, 2013

காலப்பெட்டகம்:"மக்களே எச்சரிக்கையாக இருங்கள்!"

 

நபிகளாரின் இறுதி ஹஜ் பேருரையின் சுருக்கம் இது: 

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

மக்களே, இறைவனுக்கு அஞ்சியும், கீழ்ப்படிந்தும் வாழ்ந்து கொள்ளுங்கள்.

மக்களே, உங்களின் இறைவன் ஒருவனே. உங்களுடைய தந்தையும் ஒருவரே! நீங்கள் அனைவரும், ஆதமின் வழித்தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர். உங்களில் எவர் இறையச்சத்துடன் வாழ்கிறாரோ அவரே இறைவனின் பார்வையில் சிறந்தவர் ஆவார்.

அராபியரைவிட அராபியார் அல்லாதவரோ, அராபியர் அல்லாதவரைவிட அராபியரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ, கருப்பரைவிட வெள்ளையரோ சிறந்தவர் அல்ல. இறையச்சமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும், உங்கள் மீது பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன.

கடன் திரும்பக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இரவல் பொருளும் திரும்பத் தரப்பட வேண்டியதாகும்.

உங்களிடம் எவராவது எதனையாவது அமானிதமாக (அடைக்கலப் பொருளாக) கொடுத்தால்.. அதனை பாதுகாப்பாக வைத்திருந்து கொடுத்தவரிடமே அதை பாதுகாப்பாக திரும்பத் தர வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.


குற்றம் செய்தவர்தான் குற்றத்துக்காகப் பொறுப்பேற்க வேண்டும். மகனுக்குப் பதிலாக தந்தையோ, தந்தைக்குப் பதிலாக மகனோ பொறுப்பாக மாட்டார்.

இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் கண்ணியத்துக்குரியவை. நீங்கள் அனைவரும் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும். 

உங்கள் பணியாட்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் உரிமைகளைக் பேணிக் காப்பதில் கண்ணுங்கருத்துமாய் இருங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணியக் கொடுங்கள்.

மக்களே, கேளுங்கள்.. மூக்குச் சிறுத்து சப்பையான ஒரு பணியாள் உங்களுடைய தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றும்வரை அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.

மக்களே, நான் இறைவனின் செய்தியை முழுமையாக எடுத்துரைத்து என்னுடைய கடமையை நிறைவேற்றிவிட்டேன். 

இப்போது நான் உங்களிடையே இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்வரை வழி தவறிப் போக மாட்டீர்கள். அவற்றில் ஒன்று இறைவனின் திருவேதம். இரண்டாவது என்னுடைய வழிமுறை.

0 comments:

Post a Comment