முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வலியுத்தி செவ்வாய் அன்று ஜெய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் முஸ்லிம் தலைவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
என்னைக் கேட்டால் இது தேவையற்ற சர்ச்சையாகவே படுகிறது.
மாநாட்டில் 'ஜம்மியதுல் உலமா - ஏ - ஹிந்த்' அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலானா முஹம்மத் மதானி கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில் முக்கியமாக குறிப்பிட்டது,
"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் மக்களிடம் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி வாக்கு வேட்டையாடுகின்றன.
மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டுமென்றால்.. இதுவரை செய்த சாதனைகள், வாக்குறுதிகளின் அடிப்படையில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலின்போது, அளித்த வாக்குறுதிகளில் என்னென்ன செய்துள்ளோம். எதெல்லாம் விடுபட்டுள்ளன என்பதை அளவிட்டு அதற்கேற்ப செயல்படலாம்.
அதைவிடுத்து மோடியை முன்நிறுத்தி தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தக்கூடாது!" - என்பதுதான்.
இதை இன்னும் ஒற்றை வரியில் சுருக்க வேண்டுமென்றால், "காங்கிரஸ், 'மோடி பூச்சாண்டி' காட்ட வேண்டாம்!" - என்றும் கூறலாம்.
என்னைக் கேட்டால் மௌலானா முஹம்மத் மதானி சொன்னதில் தவறிருப்பதாக தெரியவில்லை!
மோடி ஒரு கொடும் கொலையாளி.. குஜராத்தில் ஆயிரக் கணக்கில் அப்பாவி பொதுமக்கள் .. இந்திய பெருமக்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அந்த கொடூர கொலைகளைத் தடுக்க விடாமல் அரசு எந்திரத்தின் கைகளை கட்டிவிட்டவர். அவர் மீது முறையான நீதி விசாரணை பாரபட்சமில்லாமல் நடைபெற வேண்டும். நாட்டை ஆள எந்தவிதமான அடிப்படை தகுதியும் இல்லாத நபர் அவர் என்பதெல்லாம் சரிதான்!
ஆனால், இவை மட்டுமே தேர்தல் பிரச்சாரத்துக்கு போதுமானவையாக இருக்க முடியாது. இனப்படுகொலை பாதிப்பு என்பது ஒரு சாரருக்கு மட்டுமே. இந்தப் பிரச்சாரமும் மனசாட்சி உள்ளவர்களின் வாக்குகளை வேண்டுமானால் பெற்றுத் தரலாம். இனவாதம் கொழுந்து விட்டெறியும் ஒரு பெரும்பான்மை சமூகத்தில் இந்த பிரச்சாரமெல்லாம் எடுபடாது.
- 'குஜராத் ஜொலிக்கிறது!' என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும்.
- குஜராத் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி போலியாக உயர்த்திக் காட்டப்படுகிறது. அதன் உண்மையான மறுபக்கம் எப்படி உள்ளது என்ற நிஜங்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
- 'வறுமையும், கல்வியின்மையும், வேலை வாய்ப்பு பிரச்னைகள் மற்றும் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்சனைகளும் எப்படி பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன!' - என்று தோலுரித்திக் காட்ட வேண்டும்.
- 'குஜராத்தின் உண்மை வடிவம் வெறும் இருள்மயம்தான்!' - என்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி நிரூபிக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நரேந்திர மோடியை 'கார்ப்பரேட்' செல்வந்தர்கள் எப்படியெல்லாம் முட்டுக் கொடுத்து தூக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற யாதார்த்தங்களையும் சொல்ல வேண்டும்.
இவற்றையெல்லாம் சொல்வதற்கு காங்கிரஸ் அருகதை உள்ள கட்சியா? என்று எழும் கேள்வி தவிர்க்க முடியாதது.
ஏனென்றால் இந்திய நாட்டில் இதுவரை நடைபெற்ற வகுப்பு கலவரங்கள், சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளுக்கான இழப்புகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தவை என்பதை வரலாறுகளைப் புரட்டினால் தெரிந்து கொள்ளலாம். வரலாற்று சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் காங்கிரஸ்ஸின் தலைமைத்துவம் அதிகாரத்தில் இருந்தபோதுதான்.
மோடிக்கும், காங்கிரஸீக்கும் உள்ள வித்யாசம் கொலைக்காரனுக்கும், கொலைகள் கண்ணெதிரே நடைபெறும் போது எல்லாவிதமான அதிகாரம் இருந்தும் அவற்றைத் தடுக்கத் தவறியவனுக்கும் உள்ள வித்யாசம் அன்றி வேறென்ன?
இவ்வளவு இருந்தும் வேறு வழியில்லாமல்தான் ஒரு பெருந்தீமைக்கு எதிராக மற்றொரு சிறு தீமைக்கு சிறுபான்மையினர் ஆதரவளிக்கின்றனர் என்பதே உண்மை!
இது ஒரு துரதிஷ்டமின்றி வேறென்ன?
காங்கிரஸ் ஒன்றும் யோக்கியமான அமைப்பு அல்ல என்பதை மவ்லானா அவர்கள் ஆனித் தரமாக கூறி இருப்பது வரவேற்கத் தக்கது.என்றாலும் அவர்கள் கூறிய விதம் பாஜக'வுக்கு சாதகமாக பேசியது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
ReplyDeleteபிஜேபிக்கு சாதகமாக மதானி அவர்களின் கருத்து அமையாமல் இருந்தால் அதுவே போதுமான ஒன்று
Delete