கடந்தாண்டு செப்.26. நள்ளிரவு. பெரம்பூர் மதுரைசாமி மடம் தெரு. 68 ஆவது வட்டம் - 'சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியத்தின்' மூன்று ஊழியர்கள் சாக்கடை அடைப்பை நீக்க தீவிரமாக பாடுபட்டுக் கொண்டிருந்தனர். வாசுதேவன் தெரு, மரியநாயகம் தெரு என்று முக்கிய தெருக்களின் 4 சாக்கடை அடைப்புகளை சீர் செய்தாகிவிட்டது. கடைசியாக, மூன்று தெருக்கள் சந்திக்கும் அந்த முச்சந்தியின் அடைப்பு சரி செய்து விட்டால் மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு ஒரு விடிவு கண்ட திருப்தி ஏற்படும். பிறகு ஏற்கனவே மாற்றல் உத்திரவு வந்த புதிய பகுதிக்கு மன நிறைவோடு செல்லலாம் என்று இளநிலை பொறியாளர் வெங்கடராமன் பணியாளர்களின் தோளோடு தோள் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. சாக்கடைக்குள் இறங்கிய பணியாளர் விஷ வாயு தாக்குதலுக்கு ஆளாகி மயங்கி விழுந்தார். அதை மேலிருந்து சக பணியாளர்கள் கவனித்தும் அவரைக் காக்க எந்த முனைப்பும் காட்டவில்லை. பதறிப் போன வெங்கடராமன் குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்தவரைக் காக்க முயன்றார். ஆனால், அந்த மனிதாபிமான முயற்சி பலனளிக்கவில்லை. கடைசியில் அவரும் விஷ வாயு தாக்குதலுக்கு ஆளாகி மரணம் தழுவினார்.
அரசு அதிகாரியான வெங்கடராமனின் செல் எண் தெரியாதவர்கள் அந்தப் பகுதியில் யாரும் இருக்க முடியாது. கூப்பிட்டக் குரலுக்கு ஆஜராவார். அரசுத்துறையில் ஒரு வித்யாசமான களப் பணியாளராக அவர் செயல்பட்டு வந்தார்.
வெங்கடராமனின் குடியிருப்பு தி.நகர். அங்கிருந்து பெரம்பூர் பகுதிக்கு காலை 8 மணிக்கே வந்துவிடுவார். ஒரு தெருவும் விடாமல் மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைப்பார். தேவையில்லாமல் யாரும் காத்து நிற்பதும் அவருக்குப் பிடிக்காது. அதனால், தனது வருகையை துல்லியமாக தெரிவித்துவிடுவார்.
"50 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் நான் வசித்து வருகிறேன். இவரைப் போன்ற பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் அதிகாரிகளை நான் கண்டதில்லை!" - என்கிறார் சபாபதி தெரு மக்கள் நலச் சங்கத்தின் தலைவரான ஜி. தரணிசிங்.
பொதுச் சேவையில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மறைந்த அரசு அதிகாரி பி.வெங்கடராமனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அப்பகுதி வாழ் மக்கள் அவரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பதாகையை வைத்துள்ளனர்.
- ஆதாரம்: தி இந்து (30.10.2013)
0 comments:
Post a Comment