NewsBlog

Monday, October 7, 2013

கவிதை:'முடியாத முடிவுகள்!'




சென்ற முறை
ஊருக்குப்போய் திரும்புகையிலே - அவள்
தன் சிரம் தாழ்த்தி
கை அசைத்தாள்...
சோகத்தில்!
சைகையில் கேட்டேன் ...
ஏனம்மா கலங்குகிறாய்?

என் தோழி புளியம்மாள் இல்லை!
அவள் தோழி அரசம்மாளும் இல்லை! - இனி
நீங்கள் திரும்பி வரும்போது
நானுமிருப்பேனோ தெரியவில்லை
அதான் ... சொல்லியவள் அழுதாள்
பாவி மகளவள்..!
கண்ணீர் சிந்தும்போதும்
கருணை நிழல் தர மறக்கவில்லை!

நன்றாய் புரிகிறது ...
கால ஓட்டத்தில்
புண்ணியங்களும் கறைந்து விடும்!
நன்மைகளும் மறைந்துவிடும்!
அதுபோல்.. நீயும் ஒருநாள்..
காணாமல் போய்விடுவாய்..
என்பதை நான் 
அவளிடம் எப்படி சொல்ல? 

யாவற்றிற்கும்.. 
முடிவே முடிவாகிப் 
போகும்போது..
கண்ணீர் துடைக்கத்தான்
யார் வருவாரோ  
தெரியவில்லை!

பேதை அவளின் 
அழுகை நின்ற பாடில்லை!
கையறுப் பெண்ணாய் அவள்
தலைவிரிக் கோலமாய்
அழுதழுது புலம்பி நிற்பதை
சகிக்கவும் முடியவில்லை! 

புளியம்மாள் .............புளிய மரம்
அரசம்மாள் ...............அரசமரம்
அழுது நின்ற அவளோ ...
சாலையோர நிழல்தரும்
மிச்சமுள்ள மரம்! 
வெட்ட காத்திருக்கும் 
மிச்சமுள்ள ஒரு மரம்
Iskandar Barak


0 comments:

Post a Comment