ஒவ்வொரு பகுதியிலும் முக்கிய பிரச்னையாக உருவெடுப்பது இது. அதாவது இறந்தோரின் உடலைக் குளிப்பாட்டி அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி சம்பந்தப்பட்டது. இப்பணியில் ஆண்கள் நிறைய பேர் கிடைக்கின்றனர்.
இறப்பு செய்தியை முஹல்லாவின் மசூதியிலிருந்து கேள்விப்பட்டதும் அந்த நிர்வாகம் சார்பாகவே அவர்கள் இறந்தவரின் இல்லம் சென்று 'மைய்யத்தின்' கசப்பு துணிகளை மாற்றி அதன் பிறகு குளிப்பாட்டி அடக்கத்துக்குத் தேவையான அத்தனைப் பணிகளையும் செய்கிறார்கள்.
ஆனால், பெண்கள் இறப்பெய்தும் போது மைய்யத்தை குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யும் பணிகளுக்கான பெண்கள் அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
எங்கள் பகுதியில் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருக்குமான மரண சடங்குகள்
சம்பந்தமான பயிற்சிகளை (முதல் நிலை உடை மாற்றுதல், குளிப்பாட்டுதல்,
கபனிடுதல், ஜனாஸா தொழுகை உட்பட நல்லடக்கம் செய்யும்வரையிலான அத்தனைப்
பயிற்சிகளையும்) ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே கொடுத்துள்ளோம்.
துரதிஷ்டவசமாக மைய்யித்தை நல்லடக்கம் செய்வதற்கான பணிகளை அவரவர் குடும்ப உறுப்பினர்கள் செய்வதில்லை! அப்படி செய்ய நினைத்தாலும் அவர்களை செய்யவிடாமல் ஆதாரமற்ற சட்டங்களைக் காட்டி தடுத்து மூலையில் இருத்தி விடுவோரும் உண்டு.
உண்மையில், ஒருவர் உயிருடனிருக்கும் போது கொடுக்கும் கண்ணியத்தையும், மரியாதையையும் இறந்தவருக்கும் கொடுத்தாக வேண்டும். உயிருடனிருக்கும்போது, அரை நிர்வாண நிலை உடலைக்கூட வெளியார்க்கு காட்ட பெரும்பாலோர் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது யாரோ அந்நியர் தொழில் ரீதியாக முன்வந்து அடுத்தவர் உடலை தொடுவது என்ன நியாயம்?
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் என்று அந்தந்த குடும்ப உறுப்பினர்களே இறந்தவருக்கான அத்தனை சடங்குகளையும் செய்ய சொல்கிறது இஸ்லாம். அதற்கான குறைந்தளவு அறிவையும் பெற அது ஊக்குவிக்கிறது.
யதார்த்தங்கள் இவ்வாறு இல்லாத நிலையில் பெண் மய்யித்துக்களை குளிப்பாட்டும் பணிகளை ஒரு சேவையாக செய்து வருகிறார் சகோதரி ஃபாத்திமா தாஹிரா. தான் செய்வது மட்டுமல்லாமல் பிற பெண்கள் கற்றுக் கொள்ளவும் பயிற்சிகளையும் அவர் தருகிறார். இப்படி சுமார் 5 ஆயிரம் பெண்களுக்கு இவர் கற்பித்ததாக சொல்கிறார். சென்னை மதுராவாயில் பகுதியில் வசிக்கும் இவரது அத்தனை நற்பணிகளுக்கும் தோள் கொடுத்து வருகிறார் இவரது கணவர்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, மரணடைந்தோருக்கான அத்தனை சடங்குகளையும் அவரது நெருங்கிய உறவினர்கள்தான் நிறைவேற்ற வேண்டும். இவை இறந்தோருக்கான உரிமைகள் என்று கூட இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும்.
கற்றலும், கற்பித்தலுமே வாழ்வின் அனைத்துத்துறை வளர்ச்சிக்கும் வழிகோலும். சக மனிதர்களிடையே மதிப்பச்சத்தைப் பெற்றுத் தரும்.
0 comments:
Post a Comment