NewsBlog

Friday, October 25, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?: 'மூன்றாம் அணி நாடு காக்குமா?'



'போலி கோஷங்களும், பொய்மை வேஷங்களும்' - என்னும் தலைப்பில், 25.10.2013 இன்றைய தினமணியின் தலையங்கப் பக்கத்தில் தழிழருவி மணீயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

தமிழருவி மணியனின் அரசியல் சார்ந்த முடிவுகள் கருத்து வேறுபாடுகள் கொண்டவையாக இருந்தாலும் அவர் எழுப்பும் கேள்விகளில் உள்ள நியாயத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது.

பாமரனின், 'என் கேள்விக்கு என்ன பதில்?' பகுதியில் அவரது கட்டுரையின் முக்கியப் பகுதிகள் வெளியிடுகிறோம். பதில் சொல்பவர்கள் சொல்லட்டும்; சரியான பதில்களை!

ஜெயலலிதா, முலாயம்சிங், நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், தேவகவுடா, ஜகன் மோகன் ரெட்டி போன்ற மாநிலத் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது அணிதான் நாடு காக்கும். மதச் சார்பற்ற, சிறுபான்மையினர் நலம் காக்கும் நல்லரசை உருவாக்கக் கூடியது என்று மார்க்சியர்கள் முடிவெடுத்துவிட்டனர்.

மூன்றாவது அணியில் இடம் பெற வேண்டும் காம்ரேடுகள் அடையாளம் காட்டும் மாநிலத் தலைவர்களின் கடந்த காலம் எப்படிப்பட்டது? தமிழகத்தில் பா.ஜ.க. வேர் பிடித்து வளர்வதற்கு முதலில் வேண்டிய நீர் ஊற்றியவர் ஜெயலலிதா. பின்பு அதற்கு உரமிட்டு மரமாக்கி மகிழ்ந்தவர் கருணாநிதி.

1998-இல், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரவேற்பு ராகம் வாசித்தவர் ஜெயலலிதா. அப்போது, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதவாத நச்சரவத்தைக் கொண்டு வந்து சேர்த்தவர் ஜெயலலிதா என்றும், 'பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ்' - என்றும் 'பா.ஜ.க.வில் உள்ளவர்கள் பண்டாரம், பரதேசிகள் ' - என்றும் கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர் கருணாநிதி. ஆனால், அடுத்த ஆண்டிலேயே தேர்தல் திருமணத்தில் பா.ஜ.க.வின் மாப்பிள்ளைத் தோழனாக அவர் அவதாரம் எடுத்தார்.

மோடியின் நிர்வாகத்தில் 2002-இல், முஸ்லிம் சமுதாயம் பேரழிவைச் சந்தித்தததாகக் கூறப்படும்போது, மத்திய அரசில் வாஜபாய் பக்கத்தில் ஆதரவுக் கரம் நீட்டியபடி அமர்ந்திருந்வர்தான் கருணாநிதி. குஜராத் படுகொலைகள் பற்றிய கேள்விக்கு, 'அது ஒரு மாநிலத்தின் பிரச்னை' - என்று கருத்து வழங்கி நழுவிக் கொண்டவர்கள்தான் திமுகவினர். குஜராத் படுகொலைக்குப் பின்பும் மோடியிடம் நல்லன்புடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதா, அவர் மீண்டும் முதல்வரானதும் தனிவிமானத்தில் சென்று நேரில் நல்வாழ்த்து வழங்கி மகிழ்ந்ததை 'புதிய அம்மா பக்தர்கள்' மறைக்கப் பார்க்கலாம். ஆனால், மார்க்சியர்கள் மறக்கக்கூடுமா?

மாயாவதியும், முலாயம்சிங்கும் பிறவி பா.ஜ.க. எதிர்ப்பாளார்களா? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங். அவருடைய ஆசியுடன்தான் அந்த கயமைத்தனம் அன்று அரங்கேறியது. 'பாபரி மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்பு!' - என்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பா.ஜ.க.விலிருந்து வெளியேறியபோது, பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை விரிவாக்க அவரை அரவணைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர் முலாயம்சிங். இதைவிட மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் வேறுண்டா?

பா.ஜ.க.வோடு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்த கொண்டவர் மாயாவதி. பா.ஜ.க. துணையோடு ஒடிஸா முதல்வராக வலம் வந்தவர் நவீன் பட்நாயக். பிகாரில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவோடு வெற்றிக் கனியைச் சுவைத்தவர் நிதிஷ்குமார்.

அவருக்கு மோடிதான் பிரச்சினை; பா.ஜ.க. அல்ல. 'சாறு வேண்டும்! இறைச்சி வேண்டாம்!' - என்பவர் வள்ளலார் வாரிசு என்றால்... நிதிஷ்குமாரும் வகுப்புவாத எதிர்பாளர்கள்தான்!

தேவகவுடா சந்தர்ப்பாவத அரசியலில் கருணாநிதியையும் மிஞ்சியவர். மதசார்பற்ற ஜனதாதளம் என்று பெயர் வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் பா.ஜ.க. உதவியோடு தன் மகன் குமாரசாமியை முதல்வராக்கிய 'கொள்கை வேந்தர்' அவர். 

இவர்கள்தான் மார்க்சியர்கள் திரட்டும் பரிவாரத்துக்கு வீரத்தளபதிகளாக விளங்கப் போகிறவர்கள்.

போகட்டும், இந்த மூன்றாவது அணியில் இடம்  பெறுபவர்கள் ஊழல் காங்கிரஸை வீழ்த்துவதற்கான தார்மிக தகுதியுள்ள நெறிசார்ந்த நேர்மையாளர்களா?

மாயாவதி ஒரு தபால்துறை ஊழியருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். இன்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தும் அரசியல் தலைவராக வளர்ந்து நிற்பவர்.

யாதவர்களின் சாதிவாக்கையும், இஸ்லாமியர்களின் மதவாக்கையும் பெற்றுப்  பெரிய மனிதராக அரசியலரங்கில் காட்சி தரும் முலாயம்சிங் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, லோகியா, சரண்சிங் நிழலில் வளர்ந்து இன்று குபேர வசதிகளுடன் வாழ்ந்து வருபவர். பெரியாரின் பெயர் சொல்லும் கருணாநிதியும், லோகியாவின் பெருமை பேசும் முலாயம்சிங்கும் எல்லா வகையிலும் ஒரு பறவையின் இரு சிறகுகள் என்பதுதான் உண்மை.

ஊழலில் ஊறித் திளைக்கும் தேவகவுடா, ஊழலின் மறுவடிவமான மாயாவதி, ஊழலுக்கு உற்சவம் நடத்திப் பல நூறு கோடியைத் திரட்டி வைத்த ராஜசேகர ரெட்டியின் திருமகன் ஜெகன் மோகன் ரெட்ட, பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கும் ஜெயலலிதா, தமிழகத்தையே ஊழல் மயமாக்கிய கருணாநிதி.. . இவர்கள்தான் மதவாத எதிர்ப்பாளர்களா?


( நன்றி: தினமணி)

- தமிழருவி மணியன்,
தலைவர், காந்தி மக்கள் இயக்கம்.
 
தமிழருவி மணியன்

0 comments:

Post a Comment