NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Friday, January 31, 2014

பெஸ்ட் கிளிக்: 'முகமற்றவர்கள்!'






"சுரண்டலின் முகம்
கோரமானாலும்..
உழைப்புக்கோ
முகமில்லை!"

விருந்தினர் பக்கம்:'காந்தி ஏன் கொல்லப்பட்டார்?'



சரியாக 65 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள்... 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்து கொண்டிருந்தபோது தேசப்பிதா கொல்லப்பட்டார். ஒரு தொண்டன் போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீயைப்போலப் பரவியது அந்தச் செய்தி: "காந்திஜயைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்..."

தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடி வந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: "காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்" அதிர்ந்து திரும்பிய மவுன்ட் பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: "நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!"

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக் கொண்டே சென்றடைந்தது: "காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள். காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்..."

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக் களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும், படேலும், மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர் பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: "காந்திஜியை சுட்டுவிட்டார்கள். காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள். காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து.."

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்:

யோசித்துப் பாருங்கள்.. காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக் கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து, முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.


அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக் களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்போ கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸீக்கு ஏன் காந்தி மீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்!' - என்பதில் காந்தி மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். 

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும், 'மத மோதல்கள் வேண்டாம். மனிதனை மனிதன் வேட்டையாடக் கூடாது!" - என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: " ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப் படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஒரு அற்புதமான செயல்!"

அந்த அற்புதமான செல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 01.09.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தப்பாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார்.

காலவரையற்ற உண்ணாவிரதம் அது, கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப் போனார்கள் யாவரும்.


மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். "குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?"- என்று கேட்டார். "குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும், மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகின்றேன்!" - என்றார் காந்தி. "சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?" - என்றார் ராஜாஜி.

"காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில், விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்!" - என்றார் காந்தி.

"ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்!" - என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: "நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச்  செய்த முடித்தவனாக இருப்பேன்!"

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.


தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது  அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.


இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத்துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் "இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர் அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் எனில், "இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல" - என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

- ஜி.ராமகிருஷ்ணன், 
தமிழ் மாநில செயலாளர்,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தொடர்புக்கு: grcpim@gmail.com


 நன்றி: தி இந்து நாளேடு (30.01.2014)
 

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 4: 'ஆடாத காமிரா என்றால்..'


காமிரா ஆட்டம்


காமிரா ஆட்டம்


விலை உயர்ந்த காமிரா ஒன்றை வாங்கிய ஒருவர் என்னிடம் வந்தார். "இந்தக் காமிராவில் ஏதோ கோளாறு போல! படங்கள் தெளிவாக வரவில்ல!" - என்று குறைப்பட்டுக் கொண்டார். "தெளிவாகப் படம் எடுக்க உங்களுக்குத்தான் தெரியவில்லையே தவிர காமிராவுக்கல்ல!" - என்று நான் விளக்க வேண்டியதாயிற்று.

படங்கள் தெளிவில்லாமல் மங்கலாக இருப்பது எல்லாம் படமெடுப்பவர் தவறுதான். காமிராவைக் கையாளும்போது, ஏற்படும் சிறு கை நடுக்கம் கூடப் படங்களை "ஷேக்' ஆக்கிவிடும்.

எதைப் படம் எடுக்க விரும்புகிறீர்களோ அதை உங்கள் காமிரா வியூபைண்டர் மூலமாக பார்த்து சரி என்று திருப்தி அடைந்ததும் 'கிளிக்' செய்யும்போது, கை நடுங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம். 'கிளிக்' செய்யும்போது, கை சற்று ஆடினாலும் படம் 'அவுட்'டாகிவிடும். காமிரா ஆடினால், படம் 'ஷேக்'காகிவிடும்.

இன்று கடைகளில் கிடைக்கும் விலை மலிவான சாதா காமிராவில் கூடப் படம் எடுக்கும் பொழுது கை நடுக்கம் இன்றேன் தரமான படங்களைத் திருப்திகரமாக எடுக்க முடியும். எனவே காமிரா ஷேக் என்ற தவறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

'கிளிக்' செய்யும்போது இது மிக மிக முக்கியம். ஆடாத காமிரா என்றால், அற்புதப் படங்கள் என்று பொருள். 

- ஆரி மில்லர்                    (படங்கள்: இக்வான் அமீர்)
ஆரி மில்லர்
 

Tuesday, January 28, 2014

இதழியல்: அறிவுக்கு வேலை கொடு : வெட்கம்... வேதனை..!


பெரிய பெரிய கட்டுரைகள் எழுதுவது மட்டுமே எழுத்தாளரின் இதழியல் பணிகள் அல்ல; வாசகர் கடிதங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இவைதான் பத்திரிகையாளர் ஆக ஆரம்பப் பாடம்.

வளைகுடா செய்திகள்: 'பெருகிவரும் மணமுறிவுகள்! சவுதி பெண்களின் மன மாற்றங்கள்!'


விவாகரத்து வழக்குகளால் சவுதி அரசாங்கத்துக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. 2012ம் ஆண்டு மட்டும் அங்கு விவாகரத்து பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30,000 பேர். ஒரு நாளைக்கு சராசரியாக 82 பேர்; ஒரு மணி நேரத்துக்கு 3 பேர் இங்கு விவாகரத்து பெறுகிறார்கள். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் இந்த மணவிலக்கு நடைபெறுகிறது. இதுவே 2010ல் ஒரு நாளைக்கு விவாகரத்து பெற்றோரின் எண்ணிக்கை 75 பேராக இருந்தது.

அல்எக்திஸாதியா என்னும் நாளிதழ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. 15 வயதுக்கு மேற்பட்ட 1000 ஆண்களில் 2.5 பேர் விவாகரத்து பெற்றிருகிறார்கள்.

"சவுதியில், விவாகரத்துப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க திருமணத்துக்கு முன்னரே இளம் வயதினர் திருமண ஆலோசனைகளைப் பெற வேண்டும்!"- என்கிறார் ஜெத்தாவைச் சேர்ந்த டாக்டர் ஆலியா ஹானி ஹாஷிம்.  இவர் திருமணம் சம்பந்தமான ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார்.

"இளம் வயதினர் ஆலோசனை அத்தாட்சிப் பெற்ற பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் இளம் தம்பதியினரிடம் புரிதலும், பொறுப்புணர்தலும் அதிகரிக்கும்!"- என்கிறார் ஆலியா ஹானி. 

நிதியமைச்சகத்தின் அதிகாரப் பூர்வ தகவலின்படி ஆண்டுதோறும் 70,000 திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் 13,000 பேர் சட்ட ரீதியாக மண முறிவு பெற்றுக் கொள்கிறார்கள்.

சவுதியைச் சேர்ந்த மருத்துத்துறையில் பயிற்சி பெறும் 'பாஸ்மா அபூஜனாடா' இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார். 

"23 வயதிலேயே திருமண ஏற்பாடுகளில் எனது பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனது நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகளை கண்ணார கண்ட எனக்கு திருமணத்தைவிட கல்விதான் முக்கியமாகப் படுகிறது. படித்து பட்டம் பெற்று பணியிலிருக்கும் தம்பதியினர்தான் பிரச்னையில்லாமல் வாழ முடியும். அதனால், சுயமாக என் காலில் நிற்க எனக்கு பட்டப்படிப்பு அவசியம்!" -  என்கிறார் பாஸ்மா தொடர்ந்து.

"திருமணத்துக்கு முன்பே தகுந்த கணவன்மார்களை தேர்ந்தெடுப்பது முக்கியமானது!" - என்கிறார் ஷோபியா அப்துல் காதர். 26 வயதாகும் இவர் மணமுறிவு அச்சத்தாலேயே தனது திருமணத்தை ஒத்தி வைத்திருக்கிறார். 'யாம்பு'வில் எம்பிஏ படிக்கும் இவர், "நான் தொடர்ந்து கல்வி கற்கவே விரும்புகிறேன். அப்போதுதான் எனது பெற்றோரும், உற்றாரும் திருமணப் பேச்சை எடுக்க மாட்டார்கள்!" - என்கிறார். 

'வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை' (GCC Countries) சேர்ந்த நாடுகளில் சவுதிதான் பஹ்ரைனுக்கு அடுத்ததாக அதிக விவாகரத்து பெறும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

(Source: Arab News)

விருந்தினர் பக்கம்: 'ஆனைகளுக்கும் அடி சறுக்கும்!'


“தலைவர்கள் சித்தாந்தப் பின்னணியில் இருந்து உருவாகிறார்களா? அல்லது மக்கள் கூட்டத்திலிருந்து உருவாகிறார்களா” - என்னும் தலைப்பில் 26.01.2014 அன்று நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆழி செந்தில்நாதன், திருமுருகன், கிழக்குப் பதிப்பகம் பத்ரி, குமரேசன் ஐயா, ஓவியா, கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் ராமசாமி, கடற்கரய், அரவிந்த நீலகண்டன் என ஏகப்பட்ட பிரபலங்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் தரப்புக் கருத்துகளை அழகாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார்கள்.

ஆனால் கோபிநாத் உட்பட அனைவரும் ஒரே ஓர் இடத்தில் சறுக்கி விழுந்துவிட்டார்கள்.

“தலைவர்களுக்கு முகராசி தேவையா?” எனும் கேள்விக்கு ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் "தேவை!" - என்றே கூறினர்.

இந்தப் பதிலை அவர்கள் கூறும்போது அவர்கள் அனைவரின் உள்ளங்களிலும்
எம்ஜிஆரின் முகம் நிச்சயமாக நிழலாடியிருக்கும்.

கலாப்பிரியா அதை வெளிப்படையாகவே சொன்னார். முகராசி காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது என்றும் ‘முகராசி’ என்று ஒரு திரைப்படமே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இந்திய வரலாற்றிலேயே இந்த முகராசி எனும் கற்பிதம் எம்ஜிஆருக்கு மட்டும்தான் பொருந்தியது. அது ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகள் விதிகள் ஆகா.

மற்றபடி உலக வரலாறு நமக்குக் கூறுவது தலைவர்களுக்கு முகராசி என்பது பெரிய விஷயமல்ல என்பதுதான். 

  • உலக மக்களால் தலைவராகக் கொண்டாடப்பட்ட நெல்சன் மண்டேலா சாதாரணமானவர்தான். அவருக்கு அப்படியொன்றும் முகராசி இல்லை.
  • அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் முகராசிக்காரர் அல்லர்.
  • தேசிய அளவில் பார்த்தால் காந்திஜிநல்ல பேச்சாளர்கூட அல்லர். முகராசிக்காரரும் அல்லர்.
  • தமிழகத்தில் காமராஜர், அண்ணா போன்ற மகத்தான தலைவர்களை எடுத்துக் கொண்டாலும்பெரிய அழகர்கள் அல்லர்.

இவர்களுக்கு எல்லாம் மக்களின் பேராதரவு கிடைத்ததற்குக் காரணம் இவர்களுடைய தன்னலமற்ற உழைப்பும் முன்வைத்த சித்தாந்தங்களும் முன்னெடுத்த போராட்டங்களும்தாமே தவிர முகராசி அல்ல.

விதிவிலக்காக ஒரே ஒரு எம்ஜிஆருக்குக் கிடைத்த ‘முகராசி’ எனும் கற்பிதத்தைத் தலைமையின் பொதுப் பண்பாகக் குறிப்பிட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த இடத்தில் அறிஞர் பெருமக்கள் எல்லாருமே சற்று சறுக்கி விழுந்து விட்டார்கள்..!

- சிராஜுல் ஹஸன்
பொறுப்பாசிரியர்,சமரசம்' 
சிராஜுல் ஹஸன்

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 3, 'காமிராவுக்கும் வரம்பு உண்டு'


அமெச்சூர் போட்டோகிராபர் ஒருவர் ஒருமுறை அழகிய வண்ணத்துப் பூச்சிகளை மிக மோசமாக படமெடுத்து வந்து காட்டினார். வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றை எப்படி எடுக்க வேண்டும் என்பதோ, அதற்கெனத் தனிக் கருவிகள் தேவை என்பதோ, அக்கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதோ அவருக்குத்  தெரியவில்லை.

ஒரு காமிராவை எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஒரு வரம்பு உண்டு. 

நீங்கள் முதலில் ஒரு காமிரா வாங்கும்போது, அந்தக் காமிராவை எந்த வரம்புவரை கையாள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வரம்மை மீறி அதனைக் கையாளக்கூடாது. 

நீங்கள் வாங்கும் காமிராவைக் கொண்டு உங்கள் வீடு, வாசல், தோட்டந்துரவு, குடும்பத்தார்களைப் படம் எடுக்கலாம். உல்லாசப் பயணம் போனால் படமெடுத்து மகிழலாம். அத்தகைய சந்தர்பங்களில் அக்காமிராவை எப்படிக் கையாள்வது என்ற சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

- ஆரி மில்லர்
ஆரி மில்லர்

அச்சச்சோ: 'நல்ல எண்ணத்துலே சொன்னது... மாற்றிப் போட்டுட்டீங்க!'


'தி.மு.க. தோற்கும் என்று நான் சொன்னது, தி.மு.க. தோற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நான் கழகத் தலைவர் கலைஞரிடம், இப்படி பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரை மாநகர் கழகம் கலைக்கப்பட்டிருக்கிறது. திருப்பியும் மாநகர் கழகத்தைக் கொண்டு வாருங்கள். அதேபோல மதுரை மாநகரத்திலும், புறநகரிலும் கிட்டதட்ட 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை எல்லாம் மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அது மட்டுமல்ல, மதுரை மாநகரத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் பதவியில் இருந்தார்கள். வீட்டுக்கு 5 ஓட்டு என்று வைத்துக் கொண்டால்கூட, 5,000 ஓட்டு நமக்கு இழப்பு ஏற்படும். எனவே, இப்படியே நீக்கிக் கொண்டே போனால், இந்தப் படலம் தொடர்ந்து கொண் போனால் தி.மு.க. தோற்கும் என்றுதான் சொன்னேன்.

நான் என்ன எண்ணத்தில் சொன்னேன் என்றால், வீட்டிலே ஒரு பிள்ளையை, "நீ உருப்பட மாட்ட" - என்று தாயோ, தந்தையோ சொல்வது, அந்தப் பிள்ளை உருப்படாமல் போகட்டும் என்பதற்காக அல்ல. நல்லா வரணும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னேன்.

ஆசிரியர்கள், "நீ உருப்பட மாட்டடா!" - என்று கிளாஸ்ல சொல்வாங்க இல்ல; அது மாதிரி நல்ல எண்ணத்துலே சொன்னதுதான் அது. நான் அப்படித்தான் சொன்னேன். ஆனா, நீங்க (பத்திரிகைகள்) அதை கொஞ்சம் மாற்றிப் போட்டுட்டீங்க!"

"போட்டி வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும்கூட தி.மு.க. தானாகவே தோற்றுவிடும்!" - என்று சென்னையில் சொன்னீர்களே... இன்று கூடியுள்ள கூட்டத்தை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் உள்ளதா?" - என்று மதுரையில், பத்திரிகையாளர்கள்  கேட்ட கேள்விக்கு மு.க.அழகிரி சொன்ன பதில் இது.

(ஆதாரம்: தி இந்து- 28.01.2014)

Monday, January 27, 2014

பெஸ்ட் கிளிக்: 'அனுதின இயக்கம்!'

அனுதின இயக்கம்  

பெஸ்ட் கிளிக்: 'சன்னல்'

சன்னல்

பெஸ்ட் கிளிக்: உதயம்

உதயம்

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 2, 'தேவை தரமான படப்பிடிப்பாளர்'



1950களில், பம்பாயில் விளம்பரங்களுக்கான படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததேன். அப்போது என்னிடம் 'ஹாசல்பிளாடு' (Hasselblad) காமிரா இருந்தது. உலகிலேயே மிக விலை உயர்ந்த காமிரா அது. அதற்கெனத் தனி லென்ஸ் மற்றும் சில பாகங்களையும் வாங்கி வைத்திருந்தேன். அவற்றைக் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், "ஓ! மிஸ்டர் மில்லர்! என்ன அழகான காமிரா. நிச்சயம் இது அற்புதமான படங்கள் எடுக்கும்!" - என வியந்து கூறினார்.

அவர் இப்படிக் கூறியது அவரது அறியாமையைக் காட்டியதே தவிர, வேறு அல்ல. நல்ல படமெடுக்க ஆடம்பரமான அல்லது விலை உயர்ந்த காமிரா வேண்டியதில்லை. தேவை தரமான படப்பிடிப்பாளர்தான். சாதாரண காமிராவை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிந்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

- ஆரி மில்லர்


Sunday, January 26, 2014

கருத்துப்படம்: 'புலம்பல்!'

நன்றி:  iViews

சிறப்புக் கட்டுரை: 'யார் அந்த வெகுஜனம்; ஆம் ஆத்மி?'


பல ஆண்டுகளுக்கு முன் அப்போது நான்கு வயதான எனது மகள் கேட்டாள்: "அப்பா! இந்த குட்டியூண்டு ஷீக்கள் இங்கே ஏன் கிடக்கின்றன?"

அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் மலைப் போல காலணிகள் குவிக்கப்பட்டு கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய 80,000 ஜோடி காலணிகள், அவற்றில் 8,000 ஜோடிகள் குழந்தைகளுக்குரியன.

நாங்கள் அப்போது, ஜெர்மனி நாஜிக்களால் நச்சுப் புகையூட்டி கொல்லப்பட்ட அப்பாவிகளின் நினைவுகளை சுமந்தவாறு போலந்தின் 'Auschwitz-Birkenau' அருங்காட்சியகத்தில் இருந்தோம்.


நான் அவளுடைய கேள்விக்கான பதிலைத் தவிர்க்க, கேட்காதது போல வேறு பக்கம் கவனம் செலுத்துவதாய் நடிக்க வேண்டியிருந்தது.

'அவர்கள் நம்மைப் போல வெகுஜனங்கள், பாமர மக்கள் - ஆம் ஆத்மி சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டவர்கள்; தம்மைப் போலவே வெகுஜனங்களால்  நச்சுப் புகை அறைக்களில் தள்ளப்பட்டவர்கள்; வெகுஜனங்களான அவர்கள்தான் ஹிட்லரை தேர்வு செய்து அதிகாரமளித்தவர்கள்.

இத்தகைய வெகுஜனங்கள்தான் உகண்டாவில் தங்கள் தாயகத்தின் கிட்டதட்ட பத்து லட்சம் பேரை தனிமைப்படுத்தியவர்கள்.

நரோடாபாட்டியாவில் குழுமி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சொந்த அண்டை - அயலாரை உயிருடன் எரித்தவர்கள்.



ஆம் ஆத்மி வென்றபோது, நாமெல்லாம் சந்தோஷமடைந்தோம். ஆம் ஆத்மி என்றால் பொருள் என்ன? சுற்றியும் சேரிகள் சூழப்பட்டு நடுவில் கட்டுப்பட்டிருக்கும் 27 அடுக்கு குடியிருப்புகளா?

ஆம் ஆத்மியை வரையறைப்படுத்த வேண்டிய சூழல் இப்போது. எந்த வாழ்க்கைநிலை அல்லது பொருளியல் அடுக்கு வெகுஜனம் என்பது? இதற்கு விடை கண்டாலும், அடுத்ததாக எந்த விழுமியங்களை வைத்து வெகுஜனம் என்று தீர்மானிப்பது? ஏனென்றால், ஒரு தரப்பு வெகுஜனம் மற்றொரு தரப்பு வெகுஜனத்தை என்ன செய்தது? என்று நாம் ஏற்கனவே வரலாற்றில் கண்டிருக்கிறோம்.

இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல் வெறுமனே ஆம் ஆத்மி குல்லாக்களை அணிந்து கொண்டு, "நானும் ஆம் ஆத்மி" - என்று முழக்கமிடுவதால் ஒன்றும் பிரயோசனம் இல்லை.

இனம், வகுப்பு, பாலினம் என்ற அடையாளங்கள் இல்லாத தனிநபர்களாய் யாரும் இங்கு இல்லை. இந்த உண்மையை நாம் அங்கீகரிக்காவிட்டால் ஜனநாயகம் வெறும் சொத்தையானதாகிவிடும்.

மக்கள் என்பதே, ஒருவன் பலரை ஆதிக்கம் செலுத்துவதுதான் என்கிறார்கள் மைக்கேல் ஹார்ட்டும், ஆண்டனியோ நெக்ரியும்.

இத்தகைய இரும்பு கனவான்கள்தான் கூட்டமைப்பாக முடிவெடுக்கும் அதிகார வர்க்கத்தினராக, சர்வாதிகரிகளாக, கொடும் செயல்களின் செயலுருவங்களாக மாறிவிடுகிறார்கள்.

-  NISSIM MANNATHUKKAREN.
Thanks: THE HINDU (26.01.2014)

Friday, January 24, 2014

பெஸ்ட் கிளிக்: 'விடியும்.. ஆனால்.. விடியாத பரிதாபம்!'


"விடிய நினைத்தாலும்,
விடியாத காலைப் பொழுது
உபயம் அரசியல் நாயகர்கள்!"

பெஸ்ட் கிளிக்:'அம்மோனியா கொள்கலன்'

சென்னை, எண்ணூர்


"உருவம் சிறிதாயினும்..
காரம் பெரிதய்யா..!
வெடித்தால் இன்னொரு
போபால்தான்!"


பெஸ்ட் கிளிக்: 'காணாமல் போனது கடற்கரை!'


"வடசென்னைக் கடற்கரை
இனி
'பாறைக்கரை' 

என்றழைக்கப்படும்;
கடல் அரிப்பால்
காணாமல் போனது 

கரை!"

பெஸ்ட் கிளிக்:'காத்திருப்பு'

காத்திருப்பு

பெஸ்ட் கிளிக்: 'போர்க்களமானது.. வாழ்க்கை!'

போர்க்களமானது.. வாழ்க்கை

இதழியல்: 'காமிராவில் கைவண்ணம்': 1



ஒரு முறை லண்டனுக்குச் சென்றிருந்தபோது, சில புகைப்படச் சாதனங்கள் வாங்க காமிராக்கள் விற்கும் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடை லண்டனில் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருள்கள் விற்கும் பல பொருள் அங்காடித் தொகுதியில் இருந்தது.

வேறு எங்குமே கிடைக்காத காமிராவுக்கான சில பொருள்களைத் தேடித்தான் அங்கு சென்றேன். சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக்கு அருகில் ஒருவர் இருந்தார். பெரிய பணக்காரராக இருக்க வேண்டும்.

35எம்எம். காமிரா ஒன்றை அவர் வாங்கினார். அது மிகமிக விலை உயர்ந்த காமிரா. அத்துடன் அக்காமிராவுக்குத் தேவையான லென்ஸ், ஃபில்டர்கள் மற்றும் பல உதிரிப் பொருள்களையும் வாங்கினார்.


பில் எவ்வளவு வந்தது என்கிறீர்கள்? எனக்கே வியப்பாக இருந்தது. பவுண்ட் ஸ்டர்லிங்கில் நான்கு இலக்கத் தொகை! நம்மூர்ப் பணத்தில் லட்ச ரூபாய்க்கு மேல்.

பில் போட்டு முடித்ததும் விற்பனையாளர் அப்பொருள்களை பார்சல் பண்ணப் போனார். 

அதற்குள் நம் நண்பர் - பொருள்களை வாங்கியவர், "சற்றுப் பொறுங்கள்!" - என்றார். "நீங்கள் பார்சல் பண்ணும்முன் நான் வாங்கிய பொருள்களை என்ன செய்வது? எப்படிக் கையாள்வது என்றும் சொல்லி விடுகிறீர்களா?" - என்று அவர் கேட்டபோது, என் வியப்பு பல மடங்கானது.

அவர் வாங்கிய பொருள்கள் சாதாரணமாக அனுபவசாலிகளான படப்பிடிப்பாளர்கள் மட்டுமே வாங்கக்கூடியவை. அவர்களுக்கு மட்டுமே அப்பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியும். நம் நண்பர் காமிராக்களைக் கையாண்டு பழக்கம் இல்லாதவர் போலும்! யாரோ அவருக்குத் தவறாக வழிகாட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், "ஒரு சாதாரண காமிரா வாங்குங்கள்!" - என யோசனை சொல்லியிருக்க வேண்டும்.

நல்ல புகைப்படக்கலை என்பது காசு கொடுத்து வாங்கக் கூடியது அல்ல. இது என் அனுபவம்.

- ஆரி மில்லர்.

ஆரி மில்லர்



Thursday, January 23, 2014

நடப்புச் செய்தி: 'முஸ்லிமாக பிறந்ததைத்தவிர வேறென்ன பாவம் செய்தார்கள்?'



சென்ற ஞாயிறு மற்றும் திங்கள் (19.01.2014 மற்றும் 20.01.2014) இரண்டு நாட்கள் வேலூர் மற்றும் பெங்களூரு வழக்கில் சிறைப்பட்டுள்ள சகோதரர்களை காண சென்றிந்தோம்.

வேலூர் வழக்கில், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் இருவரும் தனித்தனி பிளாக்கில் உள்ளனர்.

பண்ணா இஸ்மாயில் போலிஸ் காவலில் ராமநாதபுரத்தில் உள்ளார்.

மூவரும் சந்தித்து பேச அனுமதி கிடையாது.

வழக்கறிஞர் சந்திப்பிலும் தனி தனியாகத்தான் சந்திக்க முடியும்.

தனிமை சிறையில் வைத்துள்ளனர். 

"யாருடனும் பேச முடியாமல் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது! எனது செல்லுக்கு அருகில் விஷ ஜந்துக்கள் வேறு நடமாடுகின்றன. சமீபத்தில் கூட இரண்டு பாம்புகளை அடித்தேன்!" - என்றார் போலீஸ் பக்ருதீன்

இவர் மீது குடியாத்ததில் ஒரு நகை கடையை கொள்ளயடித்தாக புதிய பொய் வழக்கு ஒன்றை போட்டுள்ளனர்.

"தடா ரஹீம் பாய் உயர் நீதி மன்றத்தில் என்னை பார்ப்பதற்காக மனு போட்டுள்ளராம். அதை தடுப்பதற்காக நான் சிறை அதிகாரிக்கு மிரட்டல் விடுததாக ஒரு புதிய வழக்கு போட்டுள்ளனர். இப்படியே வழக்குக்கு மேல் மேல் வழக்கு போட்டு எங்கள் வாழ்நாளை சிறையிலேயே கழித்து விட வேண்டும் என்பதுதான் போலீசின் எண்ணம்!" - என்றார் இவர் தொடர்ந்து.

அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, "பெங்களூருக்கு செல்கிறோம்!" - என்றவுடன், "உற்சாகமாக எல்லோருக்கும் சலாம் சொல்லுங்கள்!" என்றார். 

பெங்களூரில் உள்ள புகாரி உள்ளிட்ட எட்டு சகோதரர்களையும் சந்தித்தோம்.



புகாரி மெலிந்து போய் இருந்தார். "சிறைக்கு வந்ததில் இருந்து 20 கிலோ குறைந்து விட்டேன். போலீஸ் காவலில் அடித்தனால் ஒரு கால் நடக்கவே சிரமமாக இருக்கிறது. எனினும் சிறை வாழ்க்கை எனக்கு புதிதல்ல. சிறை வாழ்க்கைக்கு புதிதான சகோதரர் பஷீருக்கு ஆறுதல் சொல்லுங்கள். எதற்கு வந்தோம் என்றே தெரியாமல் தினந்தோறும் அழுது புலம்பியபடி இருக்கிறார்!" - என்று கூறினார்.

சமீபத்தில் இந்த வழக்கில் விடுதலையான பீர் மொய்தீன் உடைய மச்சான் தான் பஷீர். பாவம்! ஆள் மெலிந்து நீரிழிவு நோய் வந்தவர் போலிருந்தார். 

எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு கூட்டமைப்பு விரைவில் பெங்களூருக்கு வந்து சந்திக்க இருப்பதையும் சட்ட ரீதியாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையும் விளக்கி விட்டு திரும்பினோம்.

முஸ்லிமாக பிறந்ததை தவிர எந்த தவறையும் செய்யாத இந்த சகோதரர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்திக்கும்படி கேட்டக் கொள்கிறேன். 

தகவல்: வழக்குரைஞர் காஞ்சி ஜெய்னுல் ஆபிதீன்.

 


Wednesday, January 22, 2014

விருந்தினர் பக்கம்: 'ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோல்கூத்துப் பாவை!'


இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை என்னும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டடது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டின் மகத்தான மரபுகளில் ஒன்று அது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சங்கப் புலவன் 'கணியன் பூங்குன்றனாரின்' வரிகள் அன்றைய வாழ்க்கை முறையின் சாரமே ஆகும்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க நாடகக் கலைஞராக விளங்கியவர் நவாப் ராஜமாணிக்கம். சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒத்தவாடை தியேட்டரில் ஏராளமான நாடகங்கள் நடக்கும். என்னுடைய சிறுவயதில் நவாப் ராஜமாணிக்கம் அவர்களால் நடத்தப்படட 'பக்த ராமதாஸ்' என்னும் நாடகத்தை அந்த அரங்கில் பார்த்தது இன்னமும் என்னுடைய நினைவில் பசுமையாக பதிந்துள்ளது. 

இந்த நாடகத்தில் நவாப்பாக ராஜமாணிக்கம் நடித்திருப்பார். அந்த பாத்திரமாகவே அவர் மாறி நடித்ததால்தான் அதற்குப் பிறகு அவர் 'நவாப்' ராஜமாணிக்கம் என்றே அழைக்கப்பட்டார்.

இந்த கதை இன்னமும் கோதாவரி பகுதியில் கர்ண பரம்பரை கதையாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த கோவிலும் உள்ளது. மதங்களை கடந்த அன்பையும், ஒற்றுமையையும் இந்த கதை பேசுகிறது. 

இந்த கதையில் ராமபிரான் மதங்களை கடந்தவராக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்துபவராக காட்டப்படுகிறார். இதுதான் மக்களிடம் உள்ள இயல்பான நம்பிக்கை. எளி மக்கள் கடவுள்களிடையே பேதம் பார்ப்பதில்லை. இந்த கர்ண பரம்பரை கதை இதைத்தான் உணர்த்துகின்றது.

வடமொழியில் வால்மீகியும், தமிழில் கம்பனும் படைத்துள்ள ராமகாதைகளிலும் கூட ராமன் அன்புவயப்பட்டவனாகவே படைக்கப்பட்டுள்ளார். அரசகுலத்தில் பிறந்த ராமன் வேடவனாகிய குகனையும், வானரக் கூட்டத்தின் தலைவனாகிய சுக்கீரவனையும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனையும் தன்னுடைய தம்பிகளாக ஏற்றுக் கொண்டான்.


தன்னுடைய தம்பி பரதனுக்கு அரசாட்சி என்றும், தனக்கு கானகம் என்றும் தந்தை தசரதன் கூறியபோது, "பின்னவன் பெற்ற செல்வமெல்லாம் நான் பெற்றதே!"- என்று அன்றைக்கு பூத்த செந்தாமரை போன்ற முகத்துடன் கானகம் சென்றார் ராமன் என்று கம்பர் எழுதுகிறார்.

ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக வகையறா முன்னிறுத்தும் ராமன், மக்கள் மன்றத்தில் படிந்துள்ள ராமருடைய சித்திரத்தை ஒத்ததாக இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று கூறி பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தினார். இந்த கலக யாத்திரையின் முடிவாக பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையொட்டி நடந்த கலவரங்களில் ஏராளமான மக்கள்  கொல்லப்பட்டனர். அந்த ரணம் ஒரு வடுவாக இந்தய வரலாற்றில் பதிந்துவிட்டது.

அனைத்து மக்களையும், அரவணைத்து செல்வதே மக்கள் மனதில் பதிந்துள்ள ராமநெறி. அதைத்தான் அண்ணல் காந்தியும் முன்னிறுத்தினார். ஆனால், இந்துத்துவாவை முன்னிறுத்தும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் குருமார்கள் துவங்கி, இன்றைய தலைவர்கள் வரை இத்தகைய கண்ணோட்டத்தான் முன் வைக்கின்றனர்.

இன்றைக்கு பிரதமர் வேட்பாளராக பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி சிறுபான்மை மக்கள் மீது எந்தளவுக்கு வன்மம் கொண்டுள்ளார் என்பதை 2002ஆம், ஆண்டு குஜராத்தில் நடந்த வன்செயல்கள் காட்டின.

நம்முடைய நாட்டின் பன்முகப் பண்பாட்டிற்கு மாறாக ஒற்றை பண்பாட்டை இந்து தேசியம் என்ற பெயரில் திணிக்க முயல்கிறது ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பின் விரல் அசைவிற்கு ஏற்ப ஆட்டம் போடும் தோலகூத்துப் பாவையாகவே பாஜக விளங்குகிறது.

இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பன்முக பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

- டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
23.01.2014 அன்று தினமணி தலையங்கம் பக்கத்தில்
எழுதிய கட்டுரையின் முக்கியப் பகுதிகள்.