தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக வேளாண் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் இந்தியா நிறுவனத்தின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் 4 வார காலம் தடை விதித்துள்ளது.
வேளாண் நிலங்களில் எரிவாயுக் குழாய் கொண்டு செல்வதை அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் கொண்ட அமர்வு முன் 17.01.2014 அன்று விசாரணைக்கு வந்தது.
கெயில் சார்பிலான வாதம்: "குழாய் பதிப்பு வேலை மிகவும் அவசரம். இப்போது விட்டால், உரிய காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நெடுஞ்சாலை வழியே குழாய் பதிப்பது இயலாத காரியம். தனியார் நிலத்தில் விவசாயத்துக்கோ, விவசாயிகளுக்கோ எந்த இடையூறும் இல்லை. எனவே தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது. குழாய்கள் பதிக்க அனுமதிக்க வேண்டும்."
இதற்கு நீதிபதிகள், "எதற்காக இத்திட்டத்துக்கு விவசாயிகளின் வீடுகளும், நிலங்களும்தான் வேண்டும் என்று கேட்கிறீர்கள்? இது முறையற்ற செயல். நெடுஞ்சாலைகளில் குழாய்களை பதிக்க முடியாது என்பதை அறைகளில் இருந்துகொண்டு முடிவு செய்யாதீர்கள். குறிப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு நடத்துங்கள். தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் எவ்வளவு நிலம் வேண்டும் என்பதை கூறுங்கள்" - என்று கூறினர்.
இதையடுத்து வழக்கு விசாரணை பிப். 17ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை இத்திட்டத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்திரவிட்டனர்.
0 comments:
Post a Comment