NewsBlog

Friday, January 31, 2014

விருந்தினர் பக்கம்:'காந்தி ஏன் கொல்லப்பட்டார்?'



சரியாக 65 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள்... 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்து கொண்டிருந்தபோது தேசப்பிதா கொல்லப்பட்டார். ஒரு தொண்டன் போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீயைப்போலப் பரவியது அந்தச் செய்தி: "காந்திஜயைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்..."

தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடி வந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: "காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்" அதிர்ந்து திரும்பிய மவுன்ட் பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: "நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!"

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக் கொண்டே சென்றடைந்தது: "காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள். காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்..."

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக் களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும், படேலும், மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர் பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: "காந்திஜியை சுட்டுவிட்டார்கள். காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள். காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து.."

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்:

யோசித்துப் பாருங்கள்.. காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக் கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து, முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.


அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக் களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்போ கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸீக்கு ஏன் காந்தி மீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்!' - என்பதில் காந்தி மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். 

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும், 'மத மோதல்கள் வேண்டாம். மனிதனை மனிதன் வேட்டையாடக் கூடாது!" - என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: " ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப் படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஒரு அற்புதமான செயல்!"

அந்த அற்புதமான செல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 01.09.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தப்பாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார்.

காலவரையற்ற உண்ணாவிரதம் அது, கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப் போனார்கள் யாவரும்.


மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். "குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?"- என்று கேட்டார். "குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும், மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகின்றேன்!" - என்றார் காந்தி. "சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?" - என்றார் ராஜாஜி.

"காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில், விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்!" - என்றார் காந்தி.

"ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்!" - என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: "நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச்  செய்த முடித்தவனாக இருப்பேன்!"

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.


தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது  அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.


இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத்துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் "இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர் அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் எனில், "இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல" - என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

- ஜி.ராமகிருஷ்ணன், 
தமிழ் மாநில செயலாளர்,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தொடர்புக்கு: grcpim@gmail.com


 நன்றி: தி இந்து நாளேடு (30.01.2014)
 

0 comments:

Post a Comment