கடந்தாண்டு மே மாதம், உலகின் மிக உயர இமயத்தின் எவரெஸ்ட் சிகரங்களைத் தொட்ட அந்த 24 வயது சாதனையாளர் 'ராம் லால்' இன்று பதேஹேபாத் மாவட்டத்து, டொஹனா நகரில், தெரு தெருவாய் தள்ளு வண்டியில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கிறார். வேறு என்ன செய்ய? படுத்தப் படுக்கையாய் கிடக்கும் தந்தையாரையும், குடும்பத்தாரையும் காக்க வேண்டுமே? வாழ்க்கை வண்டியைத் தள்ளுவது எப்படி?
நமது தேசிய கொடி மூவர்ணங்களில் பட்டொளி வீசி இமயத்தின் சிகரங்களில் பறந்த போது ஹரியானாவின் முதல்வர் பூபேந்தர் சிங் ஹோடாவால் 5 லட்சம் பரிசளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டார். ஆனால், அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள் பொய்யான வாக்குறுதி களாகிவிட்டன; வழக்கம் போல!
அண்மையில்தான், மற்றொரு எவரெஸ்ட் சாதனையாளர் 'மம்தா சோதஹா' இணை கமிஷ்னராக பணி நியமனம் பெற்று, 21 லட்சங்கள் பரிசளிக்கப்பட்ட நிலையில், ராம் லால் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
"சில அரசு சாராத அமைப்புகள், தனிநபர்கள் இவர்களின் உதவிகள் மற்றும் கடன் என்று என் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது. படுத்தப் படுக்கையாக கிடக்கும் என் தந்தையாரின் மருத்துவ செலவுகளுக்கும் காய்கறிகளை விற்பனை செய்தாக வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது!" - என்கிறார் ராம் லால் வேதனையோடு.
"நான் அதிகப்படியாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு முன்னால் எவரெஸ்ட் சிகரங்களில் ஏறி சாதனைப்படைத்தவர்கள் நடத்தப்பட்டதைப் போலவே நானும் நடத்தப்பட வேண்டும் என்றே விரும்புகின்றேன்" - என்கிறார் ராம் லால்.
இந்நிலையில், ஹரியானாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் டைரக்டர் ஜெனரல் சுதிர் ராஜ்பால், "ராம் லால் சாதனைகள் சரிபார்க்கப்படுகின்றன. விரைவிலேயே அவருக்கு சேர வேண்டியவைகள் முறையாக வழங்கப்படும்!" - என்கிறார்.
"பணி நியமனங்கள் என்பவை விளையாட்டுத்துறையில் பதக்கங்களை வெல்பவர்களுக்குத்தான் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதைக் குறித்து ராம் லாலிடம் பேசும்படி பதேஹேபாத்தின் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி பணிக்கப்பட்டிருக்கிறார்!"- என்கிறார் தொடர்ந்து ராஜ்பால்.
எது எப்படியாயினும், ராம் லாலின் சாதனை மதிக்கப்பட வேண்டும். அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க வேண்டும். ஏனெனில் அவர் படைத்த சாதனை நாட்டின் பெருமையை உலகறிய பறைச்சாற்றும் சாதனையாகும்.
(ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா,31.12.2013, அஹ்மதாபாத் பதிப்பு)
0 comments:
Post a Comment