"கறிச்சோறு தின்னு கொஞ்ச நாளாச்சு " - ஆறு வயசு சின்னப் புள்ளே என் கழுத்தைக் கட்டி சொன்னபோது மனசு கனத்துப் போச்சு!
" நாளைக்கு சாப்பிடலாம் பிள்ளே" ன்னு சமாதானமா சொல்லி வெச்சேன்!
பொண்டாட்டி கைமணத்தோட சமைச்சு, புள்ளைங்களோட உக்காந்து, அதுகளுக்கு ஊட்டிவிட்டு, உண்ணுற சந்தோசம் வேறே எதிலே கெடைக்கும்?
பொண்டாட்டி கைமணத்தோட சமைச்சு, புள்ளைங்களோட உக்காந்து, அதுகளுக்கு ஊட்டிவிட்டு, உண்ணுற சந்தோசம் வேறே எதிலே கெடைக்கும்?
ராத்திரி போட்ட மப்புலே நேரங்கழிச்சு எந்திரிச்சாலும் கறிக் கடை பீருபாயி பழக்கத்தை மறக்காமே, பணத்தக்கூட வாங்காமே, தந்த கறியை வீட்டுலே கொடுத்துபுட்டு, வயக்கரைப் பக்கம் போயி நேரங்கழிச்சி திரும்பி வந்தா, தெரு பூரா கறி வாசம்!
சாணம் பூசுன தரையிலே, வாழை எலயைப் போட்டு மணக்க மணக்க சோறு கறியை எடுத்து வச்சு பெரிய பொண்ணு சாப்பிடச்சொன்னா !
இப்போ வேண்டாமுன்னு சொல்லிபுட்டு பொண்டாட்டி, புள்ளையை உண்ணச் சொல்லி, அதுங்க உண்ணுற அழகை கொஞ்ச நேரம் ரசிச்சுப் பார்த்தேன் !
அப்புறமா துண்டை எடுத்து தோளிலே போட்டுக்கிட்டு திண்ணையிலே போயி உக்காந்தா, எரிமலை கொழம்பு போலே நெஞ்செல்லாம் வெடிச்சு போச்சு!
சத்தம் கேக்காத அழுகையிலே உசுரே கரைஞ்சு போச்சு!
மனசுக்குள்ளே கசிஞ்ச ரத்தம் கண்ணீரா கண்ணுக்குள்ளே முட்டிரெண்டு கண்ணும் மறஞ்சு போச்சு !
போனவருசம் என்புள்ளையைபோல நான் படுத்த திண்ணைக்கு பக்கத்திலே படுத்துக் கிடந்த மாடு, செத்து ஒரு வருசமாச்சு !
மாட்டுக்கு பொங்கல் வச்ச என் வீட்டுக்குள்ளே இன்னிக்கு மாடு இல்ல ... மாட்டுக்கறி பொங்கல் !
- Abu Haashima Vaver
0 comments:
Post a Comment