விவாகரத்து வழக்குகளால் சவுதி அரசாங்கத்துக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. 2012ம் ஆண்டு மட்டும் அங்கு விவாகரத்து பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 30,000 பேர். ஒரு நாளைக்கு சராசரியாக 82 பேர்; ஒரு மணி நேரத்துக்கு 3 பேர் இங்கு விவாகரத்து பெறுகிறார்கள். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் இந்த மணவிலக்கு நடைபெறுகிறது. இதுவே 2010ல் ஒரு நாளைக்கு விவாகரத்து பெற்றோரின் எண்ணிக்கை 75 பேராக இருந்தது.
அல்எக்திஸாதியா என்னும் நாளிதழ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. 15 வயதுக்கு மேற்பட்ட 1000 ஆண்களில் 2.5 பேர் விவாகரத்து பெற்றிருகிறார்கள்.
"சவுதியில், விவாகரத்துப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க திருமணத்துக்கு முன்னரே இளம் வயதினர் திருமண ஆலோசனைகளைப் பெற வேண்டும்!"- என்கிறார் ஜெத்தாவைச் சேர்ந்த டாக்டர் ஆலியா ஹானி ஹாஷிம். இவர் திருமணம் சம்பந்தமான ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார்.
"இளம் வயதினர் ஆலோசனை அத்தாட்சிப் பெற்ற பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலம் இளம் தம்பதியினரிடம் புரிதலும், பொறுப்புணர்தலும் அதிகரிக்கும்!"- என்கிறார் ஆலியா ஹானி.
நிதியமைச்சகத்தின் அதிகாரப் பூர்வ தகவலின்படி ஆண்டுதோறும் 70,000 திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் 13,000 பேர் சட்ட ரீதியாக மண முறிவு பெற்றுக் கொள்கிறார்கள்.
சவுதியைச் சேர்ந்த மருத்துத்துறையில் பயிற்சி பெறும் 'பாஸ்மா அபூஜனாடா' இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
"23 வயதிலேயே திருமண ஏற்பாடுகளில் எனது பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனது நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகளை கண்ணார கண்ட எனக்கு திருமணத்தைவிட கல்விதான் முக்கியமாகப் படுகிறது. படித்து பட்டம் பெற்று பணியிலிருக்கும் தம்பதியினர்தான் பிரச்னையில்லாமல் வாழ முடியும். அதனால், சுயமாக என் காலில் நிற்க எனக்கு பட்டப்படிப்பு அவசியம்!" - என்கிறார் பாஸ்மா தொடர்ந்து.
"திருமணத்துக்கு முன்பே தகுந்த கணவன்மார்களை தேர்ந்தெடுப்பது முக்கியமானது!" - என்கிறார் ஷோபியா அப்துல் காதர். 26 வயதாகும் இவர் மணமுறிவு அச்சத்தாலேயே தனது திருமணத்தை ஒத்தி வைத்திருக்கிறார். 'யாம்பு'வில் எம்பிஏ படிக்கும் இவர், "நான் தொடர்ந்து கல்வி கற்கவே விரும்புகிறேன். அப்போதுதான் எனது பெற்றோரும், உற்றாரும் திருமணப் பேச்சை எடுக்க மாட்டார்கள்!" - என்கிறார்.
'வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை' (GCC Countries) சேர்ந்த நாடுகளில் சவுதிதான் பஹ்ரைனுக்கு அடுத்ததாக அதிக விவாகரத்து பெறும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
(Source: Arab News)
(Source: Arab News)
0 comments:
Post a Comment