NewsBlog

Thursday, January 9, 2014

நடப்புச் செய்தி:'மிகைத்துவரும் மனித உரிமை மீறல்கள்!'




தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடை பெற்று வருகின்றன. சமீபத்தில் நீலாங்கரை அடுத்த கானத்தூர் காவல் நிலையத்தில் ஹுமாயுன் என்பவரை விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்று கொளுத்தி விட்டு தானே எரித்துக் கொண்டார் என்று திசை திருப்பிய சம்பவம் நடந்தது.

இதை காவல் துறை தமிழகத்தில் தொடர்ந்து நடத்தி வரும் மனித உரிமை மீறல்களின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும். வெறும் சமய ரீதியான சாயத்தை இதற்கு பூச வேண்டியதில்லை.

'15 வயதுள்ள மைனர் பையனை காவல் நிலையத்தில் விசாரிக்க கூடாது!' -  என்று இளஞ் சிறார்கள் சட்டம் கூறுகிறது. அதை மீறி சட்டத்தை காப்பற்றுகிறேன் என்று சுட்டு விளையாடி இருக்கிறார் ஆய்வாளர் புஷ்பராஜ்.

இந்த வழக்கில் இடை நீக்கம் மட்டும் போதாது தொடர்ந்து சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு, சம்பந்தப் பட்ட காவல்துறையினரின் சம்பளத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடர வேண்டும்!"- என்கிறார் வழக்குரைஞர் ஜைனுல் ஆபிதீன்.

வழக்குரைஞர் ஜைனுல் ஆபிதீன்.

இந்நிலையில், சிறுவன் தமிம் அன்சாரி சுடப்பட்ட சம்பவத்தை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்தது. 

கூட்டமைப்பு தலைவர்களிடம் ஆணையர் ஜார்ஜ் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். குளோபல் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்த சிறுவன் அன்சாரி  உயிர் பிழைத்து விட்டாலும் துப்பாக்கி சுடப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. சிறுவனின் தாயார் சபீனா பானு மற்றும் பெரியம்மா ரசியா பானுவையும் சந்தித்து சோகமே உருவாக இருந்தார்கள். 

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு

விதவை தாய் சபீனா பானுவின் கண்ணீர் துடைக்கபடுமா? நஷ்ட ஈடு வழங்க படுமா? காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டு தண்டனை பெறுவரா? 

சிறுவன் தமிம் அன்சாரி விரைவில் நலம்பெற்று விதவை தாயை கண்கலங்காமல் காப்பாற்ற இறைவன் அருள்புரிய பிரார்த்திப்போமாக!

0 comments:

Post a Comment