NewsBlog

Tuesday, January 28, 2014

விருந்தினர் பக்கம்: 'ஆனைகளுக்கும் அடி சறுக்கும்!'


“தலைவர்கள் சித்தாந்தப் பின்னணியில் இருந்து உருவாகிறார்களா? அல்லது மக்கள் கூட்டத்திலிருந்து உருவாகிறார்களா” - என்னும் தலைப்பில் 26.01.2014 அன்று நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆழி செந்தில்நாதன், திருமுருகன், கிழக்குப் பதிப்பகம் பத்ரி, குமரேசன் ஐயா, ஓவியா, கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் ராமசாமி, கடற்கரய், அரவிந்த நீலகண்டன் என ஏகப்பட்ட பிரபலங்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் தரப்புக் கருத்துகளை அழகாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார்கள்.

ஆனால் கோபிநாத் உட்பட அனைவரும் ஒரே ஓர் இடத்தில் சறுக்கி விழுந்துவிட்டார்கள்.

“தலைவர்களுக்கு முகராசி தேவையா?” எனும் கேள்விக்கு ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் "தேவை!" - என்றே கூறினர்.

இந்தப் பதிலை அவர்கள் கூறும்போது அவர்கள் அனைவரின் உள்ளங்களிலும்
எம்ஜிஆரின் முகம் நிச்சயமாக நிழலாடியிருக்கும்.

கலாப்பிரியா அதை வெளிப்படையாகவே சொன்னார். முகராசி காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது என்றும் ‘முகராசி’ என்று ஒரு திரைப்படமே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இந்திய வரலாற்றிலேயே இந்த முகராசி எனும் கற்பிதம் எம்ஜிஆருக்கு மட்டும்தான் பொருந்தியது. அது ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகள் விதிகள் ஆகா.

மற்றபடி உலக வரலாறு நமக்குக் கூறுவது தலைவர்களுக்கு முகராசி என்பது பெரிய விஷயமல்ல என்பதுதான். 

  • உலக மக்களால் தலைவராகக் கொண்டாடப்பட்ட நெல்சன் மண்டேலா சாதாரணமானவர்தான். அவருக்கு அப்படியொன்றும் முகராசி இல்லை.
  • அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் முகராசிக்காரர் அல்லர்.
  • தேசிய அளவில் பார்த்தால் காந்திஜிநல்ல பேச்சாளர்கூட அல்லர். முகராசிக்காரரும் அல்லர்.
  • தமிழகத்தில் காமராஜர், அண்ணா போன்ற மகத்தான தலைவர்களை எடுத்துக் கொண்டாலும்பெரிய அழகர்கள் அல்லர்.

இவர்களுக்கு எல்லாம் மக்களின் பேராதரவு கிடைத்ததற்குக் காரணம் இவர்களுடைய தன்னலமற்ற உழைப்பும் முன்வைத்த சித்தாந்தங்களும் முன்னெடுத்த போராட்டங்களும்தாமே தவிர முகராசி அல்ல.

விதிவிலக்காக ஒரே ஒரு எம்ஜிஆருக்குக் கிடைத்த ‘முகராசி’ எனும் கற்பிதத்தைத் தலைமையின் பொதுப் பண்பாகக் குறிப்பிட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த இடத்தில் அறிஞர் பெருமக்கள் எல்லாருமே சற்று சறுக்கி விழுந்து விட்டார்கள்..!

- சிராஜுல் ஹஸன்
பொறுப்பாசிரியர்,சமரசம்' 
சிராஜுல் ஹஸன்

0 comments:

Post a Comment