அமெரிக்க காங்கிரஸ் சபையில் ஒலித்த அந்த சிறுமி மற்றும் சிறுவனின் குரலின் குமுறல் அறை நிறைய அடைப்பட்டிருந்த அந்த அமெரிக்க ராஜதந்திரிகளின் மனசாட்சியை நிச்சயமாகவே உலுக்கியிருக்கும். "உங்களைப் போலவே எங்களையும், சரிசமமாக நடத்துங்கள்!" அன்றாடம் தலைக்கு மேல் சுமந்துவரும் சோகங்களை கொட்டித் தீர்த்தார்கள் அண்ணன் தங்கையுமாக அவர்கள்!
ஆளில்லாத 'ட்ரோன்' விமானங்கள் மூலமாக அமெரிக்கா தொடுத்துவரும் தாக்குதல்களால் தனது அன்புக்குரிய பாட்டியை பறிகொடுத்த பேத்தியின், பேரனின், தனது அன்பான தாயை இழந்த மகனின் சோகங்கள் அங்கே வார்த்தைகளால் குழைந்தெடுக்கப்பட்டு அமெரிக்ககர்கள் முன் வைக்கப்பட்டன.
பாகிஸ்தானின் கிராமப்புறத்து ஆசிரியரான ரபீக்குர் ரஹ்மான் தனது 67 வயது தாயை ஆளில்லாத ட்ரோன் விமானத் தாக்குதலால் பறிகொடுத்த தனது மகள் மற்றும் மகனுடன் நீதி கேட்டு அமெரிக்க பயணம் மேற்கொண்டவர். 'மை நேம் ஈஸ் கான்! ஐ ஆம் நாட் டெரரிஸ்ட்' படத்தின் கதாநாயகனின் நீதிக்கான பயணம் போலவே அமைந்த பயணம் அது.
ரபீகுர் ரஹ்மான் தனது 13 வயது மகனான ஜுபைர் மற்றும் 9 வயதான மகள் நபீலாவுடன் 30.10.2013 அன்று கேபிடல் ஹில்லுக்கு சென்றடைந்தார். ரேபான் ஹவுஸ் அலுவலகத்து மாளிகையில் நடந்த இந்த சந்திப்பை குடியரசு கட்சியைச் சேர்ந்த புளோரிடாவின் ஆலன் கிரே சன் ஏற்பாடு செய்திருந்தார்.
2012, அக்.24 மோமினா பீவி வடக்கு வஜீரஸ்தானின் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது மனம் இன்னும் சில நாளில் எதிர்படவிருக்கும் பண்டிகையை பேரன், பேத்திகளோடு உற்சாகமாக கொண்டாடும் நினைவுகளில் லயித்திருந்தது. இந்த நேரம்தான் அவரது அத்தனை கனவுகளையும் குலைத்து தலைக்கு மேலாக பறந்த ட்ரோனின் குண்டு அவரை எரித்து கொன்றது.
ஈதை உற்சாகமாக கொண்டாட கலர் கலரான கனவுகளுடனிருந்த ஜுபைர் தனது அன்புக்குரிய பாட்டியை பட்டப்பகலில் பறிகொடுத்து ஓராண்டு கடந்தபின்னும் இன்னும் அந்த சோகத்திலிருந்து அவர் வெளிப்பட்டதாக தெரியவில்லை. கார் மேகமாய் வானத்திலிருந்து இறங்கிய அந்த கந்தக நெடிகளின் வாசனையை அவரால் இன்னும் மறக்க முடியவில்லை. அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் அவர் பயத்தால் உறைந்து போகிறார்.
"ட்ரோன் குண்டுவீச்சுகளால் தங்கள் சொந்த - பந்தங்களை இழந்த பல குடும்பங்கள் எனக்குத் தெரியும். ட்ரோன்கள் பிரச்னைக்கு சரியான தீர்வு அல்ல. இது ஒரு காலும் பிரச்னையை தீர்க்க உதவாது அந்த குடும்பத்தாரைப் போலவே நானும் வழிமொழிகிறேன்!" - என்கிறார் வருத்தத்துடன் ரஹ்மான்.
ட்ரோன் குண்டு வீச்சுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அமெரிக்கா சென்று வழக்காடி வந்த பாகிஸ்தானின் வழக்குரைஞர் ஷாஜாத் அக்பருக்கு 2011 லிருந்து விசா மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment