ஜெர்மனி உலகின்
தலைசிறந்த தொழில்நுட்ப திறன் கொண்ட நாடு. புகழ்பெற்ற பென்ஸ், பிஎம்டபியூ, சய்மன்ஸ்
போன்ற வாகனங்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய நாட்டில்
மக்கள் மிகவும் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருப்போம். "..நானும்தான்
அப்படி நினைத்திருந்தேன்!" - என்கிறார் அண்மையில் ஜெர்மனி சென்று வந்த நண்பர். ஆனால், 'தான்
கண்டதோ எல்லாம் நேர் மாற்றமாகவே இருந்தன!'- என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அவர். பெர்லினுக்கு அடுத்தப்படியாக ஜெர்மனியின் பெரு நகரமான 'ஹாம்பெர்கில்' தமக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறார் இதோ கேளுங்கள்:
“ஹாம்பெர்க்'கை நான்
அடைந்தபோது, அங்கு பணிபுரிந்து வந்த நண்பர் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி
ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு சென்றபோது.
உணவகம் வெறுமையாக இருந்ததைக் கண்டேன். ஓரிடத்தில் இளம் தம்பதி இருவர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அதுவும் மிகவும் எளிமையாக ஓரிரு உணவு வகைகளுடன்.
எனக்கு வியப்பாக
இருந்தது. இன்னும் சற்று தள்ளி ஒரு மேசையில் சில முதிய வயதினர் உணவருந்தி கொண்டிருந்தனர்.
அவர்கள் கேட்ட உணவு வகைகளை சர்வர் பறிமாறுவதும், அதை அவர்கள் துடைத்தெடுத்தாற்போல,
வழித்து சாப்பிடுவதும் பிறகு அடுத்த உணவு வகைக்கு ‘ஆர்டர்’ கொடுப்பதுமாய் இருந்தார்கள்.
அதற்குள் எங்களுக்கான
ஆர்டர் உணவு வகைகள் வந்துவிடவே நானும் நண்பர்களும் சாப்பிட ஆரம்பித்தோம். இந்த நிகழ்ச்சியைத்
தொடர்ந்து ஏராளமான பணிகள் இருந்ததால் நாங்கள் சீக்கிரமாக உணவருந்திவிட்டு அங்கிருந்து
புறப்படலானோம்.
நாங்கள் ஆர்டர் கொடுத்த உணவு வகைளில் கணிசமானவை பயன்படுத்த
முடியாமல் மேசையில் மீந்துவிட்டன.
மேசையைவிட்டு புறப்படும் நேரத்தில் யாரோ எங்களை அழைக்கும் சத்தம் கேட்டது.
உணவகத்தின் ஒரு
பகுதியில் அதுவரை உணவருந்தி கொண்டிருந்த அந்த முதிய வயது பெண்மணிகள் எங்களை காட்டியவாறு
உணவக உரிமையாளரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து எங்களின் அருகே வந்த அவர்கள் சுமாரான
ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தார்கள். அவர்கள் பேசியதிலிருந்து எங்களால் புரிந்து கொள்ள
முடிந்தது, “நாங்கள் எங்கள் மேசையில் மிச்சம், மீதியாக வைத்திருந்த உணவுப் பொருட்கள்
சம்பந்தமாக அவர்கள் கோபத்துடன் இருந்தார்கள்!- என்பதுதான்.
“நாங்கள் ஆர்டர்
கொடுத்து பணமும் செலுத்திவிட்ட அந்த உணவுப் பொருட்கள் சம்பந்தமாக இவர்கள் ஏன் கேள்வி
எழுப்ப வேண்டும்? ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்”
எங்களில் ஒருவர்
இதை வாய்விட்டே கேட்டும் விட்டார்.
நாங்கள் அங்கிருந்து
புறப்படவிருக்கும்போது, மீண்டும் எங்களை வழிமறித்த அந்த முதிய வயது பெண்கள் செல்போனில்
யாரையை கூப்பிட்டு ஏதோ சொல்வது புரிந்தது.
அடுத்த சில நிமிடங்களில்
மிடுக்காய் சீருடை அணிந்த ஒருவர் அங்கே வந்தார். சமூகக் காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்
கொண்டார். நடந்ததை விசாரித்தார். எந்தவித தயவுதாட்சண்யமும் இல்லாமல் 50 யூரோ அபராதம் கட்டும் படி எங்களைப் பணித்தார்.
அதற்குள் அங்கு வந்த எங்களுக்குத் தெரிந்த உள்ளுர்வாசி ஒருவர் 50 யூரோ அபராதத்தைக்
கட்டிவிட்டு அதிகாரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார்.
அந்த அதிகாரியோ,
கொஞ்சமும் கடுமை மாறாமல் சொன்னார்: “உங்களுக்குத் தேவையானவற்றை வரவழைத்து உண்ணுங்கள்.
பணம் உங்களுடையதுதான்! ஆனால், அத்யாவசியப் பொருட்கள் அதாவது ஆதாரப் பொருட்கள் சமூகத்துக்கு
சொந்தமானவை. உலகின் பல பகுதிகளில் லட்சக் கணக்கானோர் இந்த அத்யாவசியப் பொருட்கள் இல்லாமல்
தவிக்கும் போது இவற்றை நீங்கள் வீண் விரயம் செய்வதை அனுமதிக்கவே முடியாது!”
நாங்கள் அனைவரும்
வெட்கத்தால் தலை குனிந்தோம்.
வளம் வாய்ந்த அந்த
நாட்டு மக்களின் செரிவு மிக்க சமூக சிந்தனை எங்களைப் பெரிதும் கவர்ந்தது.
உண்மைதான் பணம் நமதானாலும், அத்யாவசிப் பொருட்களின் உரிமையாளரோ தேவையுள்ளோர்தான்!
0 comments:
Post a Comment