பன்னாட்டு மருந்து நிறுவனங்களின்
பண வெறிப்பிடித்த பேராசையின் அசல் முகம் காட்டும் ஆவணப்படம்: 'Fire in the Blood'
ஆப்பிரிக்கா நாடுகளைச்
சேர்ந்த ஏழை - எளியோர்க்கு மருந்து விற்பனைக்கு இல்லை. ஏனெனில் நினைத்துப் பார்க்க
முடியாத அதிக விலைக் கொடுத்து அந்த ஏழைப்பாழைகளால் உயிர்க்காக்கும் 'எயிட்ஸ்' மருந்தை
வாங்கி பயன்படுத்த முடியாது. மருந்து தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தவை
மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும்தான். "ஏழையாய் பிறந்ததே தவறு! உனக்கு மருந்தில்லை!"
- என்றன மனசாட்சியே இல்லாமல் அவை. மலிவு விலையில் எச்ஐவி மருந்தை விற்க
முடியுமானாலும், பணத்தாசை அப்படி அவர்களை செய்ய விடவில்லை.
ஆப்பிரிக்காவில்
நடக்கும் இந்த அவலம் இந்தியர் ஒருவரின் மனதைப் பிழிந்தெடுத்தது. பிப்.6, 2001 இல், 'எச்ஐவி'யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
மூன்றாண்டுகளுக்கான சிகிச்சை மருந்துகளை ஆண்டுக்கு 300 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது சுமார் 22 ஆயிரம் ரூபாய்க்கு மலிவு விலையில்
விற்க அவர் முன்வந்தார். இதே மருந்தை மேற்கத்திய பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் 12 ஆயிரம் டாலருக்கும் அதிகமாக அதாவது சுமார் 6 லட்சத்திலிருந்து
10 லட்சம் ரூபாய் வரை விற்றுக் கொண்டிருந்தன.
"அந்த நேரம் ஆப்பிரிக்காவின் 2 ஆயிரம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு மருந்து தேவைப்பட்டது. அது ஒரு சவாலாகவும் எங்களுக்கு இருந்தது. ஆனால், இன்றோ 8 மில்லியனுக்கும் அதிகமானோரை உயிர்க்காத்த திருப்தி ஏற்படுகிறது!" - என்கிறார் புன்னகையுடன் 'யூஸீஃப் கவாஸா ஹமீது 'பிஸினஸ் டுடேக்கு' அளித்த பேட்டியில்.
இப்படி உயிரின் மதிப்பறிந்து மலிவு விலைக்கு
மருந்துகளை விற்று பல ஆயிரக் கணக்கான உயிர்களைக் காத்தவர் சிப்லா பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின்
தலைவர் யூஸீஃப் ஹமீத் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஃபயர் இன் தி
பிளட்' ஆவணப்படம், தற்போது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் முக்கிய நாடுகளின்
மக்களவைகளில் திரையிடப்படுகிறது. இந்தியாவில், யூடியூபிலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக இந்த ஆவணப்படத்தின் காணொளியைக் காணலாம்.
பன்னாட்டு நிறுவனங்கள் பேராசையின் விகாரமான அசல் முகம் கொண்டவை என்பதைக் காட்டுகிறது 'ஃபயர் இன் தி பிளட்'. ஆவணப்படம்.
0 comments:
Post a Comment