மிகவும் சாதுர்யமாக தஞ்சையின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே புதன் அன்று திறந்துவிட்டீர்கள்; ஆக, தங்களுக்கு வாழ்த்துக்கள்!
இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 -ஆம், ஆண்டு நடைபெற்ற போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகதான் இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளதாகவே நினைவு. அதாவது மோடி ஆளும் குஜராத்தில் 2002 இல். முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது நினைவாக குல்பர்காவில் நினைவிடம் அமைக்கப்பட்டது போன்றதொரு இனப்படுகொலையைச் சுட்டும் நினைவு முற்றம்தான் இதுவும்.
இலங்கையில் தமிழ் இன மக்கள் பட்ட துன்பங்களை விளக்கும் வகையில் முழுவதும் கருங்கற்களான வடிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலகின் பல பகுதிகளில் தீக்குளித்த உயிர் நீத்த தமிழர்களின் சிற்பங்கள், நெஞ்சை நெகிழச் செய்யும் ஓவியங்கள் மற்றும் தழிழறிஞர்களின் ஓவியங்கள் என்று ஒரு ஒட்டு மொத்த வரலாற்றை அதுவும் சோக வரலாற்றை உள்ளடக்கிய காலப்பெட்டகம் அது.
இதையே கொஞ்சம் பெயர்களையும். ஊர்களையும், காலத்தையும் மாற்றிப் பாருங்களேன்!
- முள்ளிவாய்க்காலுக்கு பதிலாக குஜராத்
- ராஜபட்சேவுக்கு பதிலாக நரேந்திர மோடி
- தமிழ் இனப்படுகொலைக்கு பதிலாக முஸ்லிம் இனப்படுகொலை
- 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நெஞ்சை உருக்கும் படுகொலைகளுக்கு பதிலாக குஜராத் மாநிலம் முழுவதும் அதற்கும் சற்றும் குறையாமல் 2002 -இல், நடந்த நெஞ்சை உலுக்கும் படுகொலைகள்
- என்று எதில் நீங்கள் வித்யாசம் கண்டீர்கள்?
முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலைகள் செய்தவர்களின் வாரிசுகள் அதாவது ராஜபட்சேவின் சேனைப்பரிவாரங்கள் இந்த விழாவுக்கு நீங்கள் அழைத்திருக்கிறீர்கள் தெரியுமா? அழைத்ததும் அல்லாமல் அவர்களுக்காக வக்காலத்தும் அல்லவா வாங்கியிருக்கிறீர்கள்? என்ன கொடுமை இது?
என்ன தமிழ் இனக்காவலருக்கு புரியவில்லையா?
அய்யா ஒன்றுமில்லை.. தாங்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பதற்கு அழைத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் இவர்கள் எல்லாம் ராஜபட்சேவின் சேனைப்பரிவாரங்கள் போன்ற தூய இனவாதிகள்தான்! ஆனால், பெயர்கள்தான் இங்கே மாறி உள்ளன அதாவது நரேந்திர மோடியின் சங்பரிவார பாஸிச இனவாதிகள் இவர்கள்.
ஒரு நிர்பந்தமான சூழலில் உங்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே தவிர்த்திருக்க முடியும். ஆனால், நீங்கள் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு ஒப்ப பதில் அளித்தீர்கள்.
பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி, "இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்தது போலவே, பாஜக ஆளும் குஜராத்தில் 2002 - இல், சிறுபான்மை முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் நினைவாக குல்பர்காவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் போன்றவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது முரண்பாடில்லையா?" என்பதாகும்.
ஆனால், அதற்கு நீங்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? இதோ: "இது தேவையற்ற கேள்வி. ஏற்கனவே பலமுறை பதிலளிக்கப்பட்டுவிட்டது. இது, தமிழர்களின் நிகழ்ச்சி என்பதால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமானவர்களையும், துணைபோனவர்களையும் தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர்!"
அப்படியானால், குஜராத் இனப்படுகொலைகள் சரி என்கிறீர்களா? கொடும் இனவாதியான மோடியின் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறீர்களா?
உங்களின் இந்த நிலைப்பாடு ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் நெஞ்சை குத்தி கிழித்திருக்கிறது தெரியுமா உங்களுக்கு?
ரணங்கள் எல்லோருக்கும் பொதுவானவைதான்! வலியும் எல்லோருக்கும் ஒன்றுதான்! நினைவுகளின் வேதனைப் பொதிகளும் சமமானவைதான்!
உங்களின் பார்வையின் வீச்சின் கோளாறுகளை எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது அந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில்.
தேவையற்ற கேள்வி உங்களுக்காயினும், துடைத்தெறிய முடியாத கோரங்கள் சிங்கள வெறியர்களால் தமிழினத்துக் இழைக்கப்பட்டது போலவே முஸ்லிம் இனத்துக்கும் குஜராத்தில் சங்பரிவாரங்களால் இழைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் பக்கத்தில் நின்று பாருங்கள்! எல்லா கேள்விகளும் விடைகள் தேவையானவையாகிவிடும்!
0 comments:
Post a Comment