NewsBlog

Saturday, November 2, 2013

மகளிர்: 'மகளிர் குற்றங்களுக்கு எதிராக ஜமாஅத்தின் பேரணி'

பெண்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றங்களை எதிர்த்தும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்காகவும் அக்.30-இல், கல்கத்தாவில் மாபெரும் மகளிர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மேற்கு வங்க ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி நடத்தியது. அக்.2 லிருந்து அக்.30 வரை மாநிலம் முழுவதும் பெண்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய ஜமாஅத்தின் மகளிர் அணி அந்த நிகழ்வின் நிறைவாக அக். 30 இல் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  கிட்டதட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.



மேற்கு வங்கத்து சிபிஐஎம்மின் முக்கியப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான அப்துர் ரஜாக் முல்லா பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தமது உரையில், "ஒவ்வொரு பெண்ணும் தாம் அணியும் ஆடை சம்பந்தமாக விழிப்புணர்வு பெறுவது அவசியம். இளம் பெண்கள் டீ சர்ட் - பேண்ட்டுகளை அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது நமது சமூகத்துக்கான ஆடையும் கிடையாது. பெண்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும் பெண்களின் கண்ணியத்துக்கு முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டும்!" - என்றார். மேலும், அவர், "பெண்கள் சல்வார் கமீஸ் போன்ற ஆடைகள் அணிவது மேலானது!"- என்றும் கருத்து தெரிவித்தார்.  


ஜமாஅத் மகளிர் அணியின் மாநில தலைவியான ரெஹானா சுல்தானா பேசும்போது, "மாநிலத்து முக்கிய அரசியல் கட்சிகள் பெண் கண்ணியம் மற்றும் உரிமைகள் சம்பந்தமாக அக்கறை காட்டாத நிலையில் ஜமாஅத் இந்த பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறது!" - என்றார். மேலும், அவர் தமது உரையில், "கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முன்வர வேண்டும். பெண்களின் உடலை வணிகமயமாக்கி ஆதாயம் தேடும் விளம்பரங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்!" - என்றார்.

ஜமாஅத்தின் மாநிலத் தலைவரான முஹம்மது நூருத்தீன், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் தலைவரான டாக்டர் முஹம்மது ரைஸீத்தீன், ஜமாஅத்தின் மாநில செயலாளரான அப்துர் ரபீக், மில்லி இத்தேஹாதின் செயலாளர் அப்துல் அஜீஸ், உருது பத்திரிகையாளருமான சையத் அலி போன்றோர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

பேரணியின் முடிவில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஊடக பொறுப்பாளர் மஸியூர் ரஹ்மான் தீர்மானங்களை வாசித்தார்.  



0 comments:

Post a Comment