NewsBlog

Tuesday, November 19, 2013

நடப்புச் செய்தி: 'கொலைக்காரர்களுக்கு ஒரு பாராட்டு விழா!'



முசாபர் நகரில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொடிய மதவெறி வன்முறையைத் தூண்டிவிட்டு 63 பேரின் உயிரைப் பறித்து ஆயிரக்கண்கானோரை அகதிகளாக்கிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.

ஆக்ராவில் நடைபெறவுள்ள நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணியில் மோடியின் கரங்களால் மதவெறியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிப்பது என்று பாஜக முடிவு செய்துள்ளது. அரசியல் அரங்கில் இது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும் பிஜேபியின் பிரதம வேட்பாளர் தேர்வும் கட்சியில் அதிக  கொலைகள், வன்முறைகள் செய்தோர் என்பதன் அடிப்படையில்தான் என்பது மோடியின் தேர்வே நிரூபித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது முசாபர் நகர். சமீபத்தில் முசாபர் நகரில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிகப்பெரும் மதவெறி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் 20 ம் தேதி துவங்கி பல நாட்கள் நீடித்த இந்த வன்முறையில் 62 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. படுகொலை மட்டுமின்றி, முசாபர் நகரிலும், அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலும் சிறுபான்மை மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; கால் நடைகள் கொல்லப்பட்டன; அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டன.


பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகளும் கூட இதில் தப்பவில்லை. இந்தக் கொடுமைகளின் விளைவாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வீடுகளை இழந்து இன்றைக்கும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், தங்களது சொந்தப் பகுதியிலேயே அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த முகாம்களிலும் உணவின்றி, குடிநீரின்றி துன்ப துயரங்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளை பல்வேறு குழுக்கள் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தகைய பின்னணியில் முசாபர் நகர் வன்முறைகள் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான 'சங்கீத் சோம்' மற்றும் 'சுரேஷ் ராணா' ஆகியோர் ஆவர்.

முசாபர் நகரில் வன்முறையைத் தூண்டும் விதமாக திட்டமிட்டு ஒரு போலி வீடியோவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பச் செய்து, பெருமளவில் வன்முறைத் தீயை பரவச் செய்தவர் சங்கீத் சோம். அது மட்டுமின்றி அவர் அப்பகுதியில் அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறித்தனமான முறையில் பேசி வன்முறையைத் தூண்டி விட்டவர்.


இந்தக்குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுவதில் முன்னின்றவர் சுரேஷ் ராணா. நீண்ட நாட்களுக்கு பிறகே இவர் லக்னோவில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் வந்துள்ளனர்.

முசாபர் நகர் மதவெறி வன்முறை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தலை மனதில் கொண்டு மோடியை முன்னிறுத்தி தொடர்ச்சியாக மதவெறி வன்முறைகளை தூண்டிவிடுவதற்கான ஒரு துவக்கமே என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை உறுதி செய்யும் விதமாக, முசாபர் நகர் மதவெறி வன்முறை குற்றவாளிகளான மேற்படி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் மோடியின் கரங்களால் பாராட்டு விழா நடத்துவது என்று பாஜக முடிவு செய்துள்ளது. இதை லக்னோவில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக், செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேற்கண்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ''மோடி போன்ற உலகப் புகழ் பெற்ற தலைவர்களால் பாராட்டுப் பெற இருப்பது கர்வம் கொள்ளச் செய்கிறது!'- என்கிறார் வகுப்பு கலவரங்களுக்கு காரணமான ராணா.

நமது நாடு எதை நோக்கி செல்கிறது? நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது பலத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

மேலும் கட்டுரைகள் படிக்க:

http://mrpamaran.blogspot.in/2013/11/blog-post_5439.html
http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_6992.html
http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_1916.html
http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_18.html
http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_9733.html
http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_5227.html
http://mrpamaran.blogspot.in/2013/09/blog-post_18.html
http://mrpamaran.blogspot.in/2013/09/blog-post_17.html

0 comments:

Post a Comment