“அம்மா!”
கூப்பிட்டதாக நினைத்துனேயொழிய, பிறந்து இரண்டே நாளான குழந்தை எப்படி பேசும்?”
ஆனால், என் அம்மா திரும்பிப் பார்த்தது என்னவோ உண்மை. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அவளது சேலையின் முந்தானை சிக்கிக் கொண்டதால்.. அதை விடுவித்துக் கொள்ளவே அம்மா திரும்பிப் பார்த்திருக்கிறாள்.
புடவையை விடுவித்துக் கொண்டே என் பக்கமாக பார்த்த அம்மா கண்ணீர் சிந்தினாள்.
அந்த அமாவாசை இரவில் மழை பொழிந்து கொண்டிருந்ததும் நல்லதாய் போயிற்று. நடு இரவை தாண்டும் முன்பே அந்த தெரு வெறிச்சோடிப் போனது; தவறு செய்ய நினைப்போர்க்கு வசதியாய்.
நாங்கள் இறங்கி வந்த கார் ‘ஹெட்லாம்ப்’ வெளிச்சம் சரியாக குப்பைத் தொட்டியை நோக்கிப் பாய்ந்ததால்.. அம்மாவின் கண்களிலிருந்து உடைந்த வளையலாய் கண்ணீர் வழிவதைக் காண முடிந்தது. லேசான காற்றில் பக்கத்திலிருந்த தூங்கு மூஞ்சி மரத்தின் இலைகளிலிருந்து மழைத் துளிகள் என் மீது விழுந்தன. அதைக் கண்டதும் அம்மா பதறிப் போய் மழை நீர் என் மீது விழாமல் தடுத்துக் கொண்டாள்.
குப்பைத் தொட்டியின் அடியில் நிம்மதியாக, அமைதியாக.. வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த சுண்டெலி பயத்தால்.. எகிறி குதித்து என் மீது பாய்ந்து எங்கோ மறைந்து போனது.
அந்த அதிர்ச்சியால் கண்ணை அகல விரித்து அம்மாவைப் பார்த்தேன்.
“என்னடா.. செல்லம்?” – என்பதைப் போல அம்மாவின் இமைகள் பட்டாம் பூச்சியாய் படபடத்தன.
“அம்மா! நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டுமம்மா!”
அவளுடைய கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.
“அம்மா! அந்த உதவியைக் கேட்பதற்கு முன் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமம்மா!”
அம்மா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அழகாய், அமைதியாய் இருந்த சூழலைக் கலைத்துக் கொண்டு குளிர்ந்த காற்று வீசியது. வேகமாக வீசிய காற்று இருட்டையும் வெட வெடக்க வைத்தது. விக்கி.. விக்கி அழுது கொண்டிருந்த அம்மாவின் குரல் காற்றுடன் கலந்து அந்த நடு இரவில் விநோத சப்தத்தை எழுப்பியது.
ஊரைவிட்டு ஒதுக்குப் புறமாய் இருந்த அந்தப் பகுதி மின் தடையால், முக்காடிட்டுக் கொண்டு மூலையில் அமர்ந்திருக்கும் விதவைக் கிழவியைப் போன்றிருந்தது.
காரின் ஹெட் லாம்புகள் அணைந்தும், எரிந்தும் அம்மாவை சீக்கிரம் வந்துவிடும்படி எச்சரித்தன. அணைந்து அணைந்து எரியும் அந்த வெளிச்சத்தில் கருப்பு புடவையுடன் அம்மா போட்டோ ‘நெகடிவ்’ போலத் தெரிந்தாள்.
“அம்மா! ஏனம்மா இப்படி அழுகிறாய்? இப்போது எவ்வளவு அழுதும் என்ன லாபம்? சில யுகங்களாய் இந்த விதை ஒரே மாதிரியாய் விழுகிறதம்மா. நீ எப்போதும் ஒரே விதமாய் … ஒரே விஷயத்தில் மோசம் போய்க் கொண்டிருக்கிறாய்.
குந்தியைப் பார்த்து இன்னொரு குந்தி, அவளைப் பார்த்து இன்னொரு சாந்தி. இவர்களைப் பார்த்தும்.. இன்னும் சிலர் ஏன் படிப்பினை பெற மறுக்கிறார்கள்? மறுபடியும் மறுபடியும் அதேவிதமாய் அதே தேனொழுகும் வார்த்தைகளில் எதற்கு ஏமாந்து போகிறார்கள்?
“உன்னை எங்கேயோ பார்த்ததைப் போலிருக்கே!”- என்ற வார்த்தையுடன் தொடங்கும் மோசடி அது.
“உன் பெயர் ரொம்பவும் அழகாய் இருக்கு. உன் பெயரைவிட நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்!”
“உன்னைப் பார்க்காமல் ஒரு நொடியும் என்னால் இருக்க முடியாது!”
“நீ இல்லாமல் வாழ்க்கையே இல்லை!”
“என் படிப்பு முடிந்ததும் என் அப்பாவிடம் சண்டைப் போட்டாவது.. அவர் சம்மதிக்கா விட்டால்.. வீட்டை விட்டு வெளியேறியாவது உன்னை மணந்தே தீருவேன்!”
“யார் தடுத்தாலும்.. நம் திருமணம் நின்றுபோக அனுமதிக்க மாட்டேன்!”
“ஏய்.. எப்படியிருந்தாலும் நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்தானே? ஒரே ஒரு..”
“…………………………................................................. “
“உன்னை கண்டிப்பாய் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியும் நீ நம்பவில்லை இல்லையா? இனி உன்னுடன் பேசமாட்டேன் … போ..!”
“உன் அழகு என்னை பித்தனாக்கிவிட்டது!”
“நம் திருமணம் நடப்பதற்குள் நான் பைத்தியக்காரனாகி விடுவேனோ!”
“ஒரே.. ஒருமுறை.. ஒரே ஒரு முறை.. சம்மதிக்க மாட்டாயா?”
“பயம் எதற்கு? என்னை நீ நம்பவில்லையா?”
“உனக்கு அப்படி சென்டிமென்டாக இருந்தால்.. கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டால் போச்சு!”
எப்போதும் இதே வசனங்களுடன்.. இதே வார்த்தைகளுடன் நீ எப்படிதான் மோசம் போகிறாயோ? மீண்டும்.. மீண்டும் இன்னொரு கர்ணன் எப்படிதான் பிறக்கிறானோ?
அம்மா! ஒரு நிமிட உங்கள் ஆவேசத்திற்காக.. இன்பத்திற்காக.. உணர்வுகளுக்காக.. மன இச்சைகள் குதிரையில் சவாரி செய்ததால்.. இன்னொரு கர்ணனாக வாழ்க்கையை ஆரம்பித்து.. அநாதை, அபலை, அப்பன்பேர் தெரியாதவன், விபச்சாரி மகன் என்ற பட்டங்களுடன் வாழ்க்கைச் சிறையின் கைதியாய் கிடந்து.. கிடந்து செத்து.. செத்துப் பிழைத்து..
இன்னும் ஹோட்டல்களில் டீ கப்புகளை கழுவி, டேபிளைத் துடைத்து, உடைந்த டீ கப்புகளுக்காக அடிபட்டு.. உதைப்பட்டு.. தையற்காரரிடம் காஜா – பட்டன் தைத்து, பெரிய மனிதர்களின் காலைப் பிடித்து பூட் பாலீஷ் போட்டு, கார் கண்ணாடிகளின் தூசு துடைத்து, அழுக்குத் துணியானாலும் என்னை நான் விற்றுக் கொண்டு, கொள்ளையனாய், கொலைக்காரனாய், இருட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு.. ம்.. ஏனம்மா.. நீ இப்படி மீண்டும் மீண்டும் மோசம் போய் இன்னொரு கர்ணனை உலகில் கொண்டு வருகிறாய்? நாளை உன்னுடைய அழகான வாழ்க்கைக்காக இன்று என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறாய்?
“நீ இங்கிருந்து சென்றுவிடும் அடுத்த நிமிடத்திலிருந்து என்னைக் கண்டெடுத்து மீட்கும் மனிதனை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்..
அம்மா! எல்லோருக்கும் கர்ணனுக்குக் கிடைத்ததைப் போல ஒரு ராதையம்மா கிடைப்பாளா .. அன்புடன் வளர்த்து ஆளாக்குவதற்கு? ஒருவேளை அதிர்ஷ்டவசமாக அப்படி கிடைத்தாலும் எனக்கு நினைவு தெரியும்வரை பரவாயில்லை! அதனபிறகல்லவா என் கதை ஆரம்பிக்கும்!
பள்ளிக்கூடம் சென்றால்..
“உன் அப்பா – அம்மா உன்னை பெற்ற சொந்த அப்பா – அம்மா இல்லையாமே!”
“நீ குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டாயாமே!”
“பாவம்! உன்னைப் பெற்றவள் எங்கிருக்கிறாளோ?”
ஏதாவது விசேஷங்களுக்குச் சென்றால்..
“இந்தப் பையனைத்தானே குப்பைத் தொட்டியிலிருந்து நீங்கள் எடுத்து வளர்த்தது?”
“உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகும் இவனை உங்கள் சொந்த மகனாய் சமமாய் நடத்துவது உங்கள் பெருந்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும்”
என்னை.. என்னை வளர்க்கும் ராதையம்மாவை விரட்டி விரட்டி இம்சை செய்யுமே இந்த சமூகம்.. இவற்றையெல்லாம் புறக்கணித்து என்னை என்னதான் கவனித்துக் கொண்டாலும் என் இதயம் ஓட்டில் பதுங்கிக் கொண்ட நத்தையாக அல்லவா இருக்கும்! நான் வெளியே வலம் வராதவாறு உலகம் என்னை அணு அணுவாய் குத்திக் கொல்லுமே!
சரி போகட்டும்! அதன் பிறகாவது எனக்கு நிம்மதி கிடைக்குமா?
“எல்லாம் பிறந்த வழியைப் போலத்தான்! எவளோ பெத்துப் போட்டது! இவனோட புத்தியும் அப்படிதானே இருக்கும்!”
“காதுகளிரண்டையும் பொத்திக் கொண்டு எவ்வளவு நாளம்மா நான் வாழ்வது?
ஒரு கணம் உங்கள் சுகத்துக்காக.. ஒரு ஜீவன் வாழ்க்கை முழுவதும் அநாதையாக வாழ்வது எவ்வளவு சிரமமானது என்று கொஞ்சம் யோசித்துப் பாரம்மா!
இந்த அநாதை ஓர் ஆணாக இருக்கும்போதே இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றால்.. இன்னும் பெண்ணாக இருந்துவிட்டால்.. அந்த வாழ்க்கை நாய்கள் கிழித்துப் போட்ட துணியைப் போல் அல்லவா இருக்கும்!
இனியாவது விழித்துக் கொள்ளம்மா! இனி எப்போதும் ஆணிடம் ஏமாற மாட்டேன் என்று என் மீது சத்தியம் செய்யம்மா!”
பலாத்காரமாகவோ அல்லது ஏமாற்றப்பட்டோ ஒரு பெண், பிள்ளையைப் பெற்றுக் கொண்டால்.. அவளை வாழ்க்கையின் இறுதி எல்லைக்கே விரட்டியடிக்கும் சமூகத்தின் போக்கு சீக்கிரம் மாறாதம்மா. அதனால், முதலில் நீ மாற முயற்சி செய்!
இக் குழந்தையை நான்தான் பெற்றேன். இதை நானே வளர்த்து ஆளாக்குவேன். சமுதாயம் என் மீது வீசும் கற்களைச் சட்டை செய்யேன்!” – என்று உறுதியுடன் இரு அம்மா.
ஒரு குந்தி ஒரு கர்ணனை தைரியமாக வளர்க்க ஆரம்பித்தால் இன்னொரு குந்தி இன்னொரு கர்ணனை தன் குழந்தைதான் என்று உரத்துச் சொல்லுவாள். சிறிது.. சிறிதாக இந்த சமுதாயத்தின் வாயை மூட வைக்கலாமம்மா!
அம்மா! உனக்குத் தெரியுமா? இந்த சமுதாயத்திற்கு மறதி அதிகம் என்று? தன் விரல் சுட்டிக்காட்ட மற்றொரு நல்ல ‘ஆள்’ கிடைத்தால்.. சட்டென்று முந்தைய ‘ஆளை’ விட்டுவிடும். நான்றாக யோசியம்மா..!
அம்மாவிடம் மனம்விட்டு நான் அந்யோன்யமாக பேசிக் கொண்டிருந்தபோது,
“பாம். பாம்..” – என்று காரின் ஹாரன் ஒலித்தது. அது பத்தாவது முறையோ என்னவோ.. கணக்கில் வைத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் வந்த காரில் அமர்ந்து கொண்டு அம்மாவுக்காக காத்திருந்தார் தாத்தா. அம்மா என்னை விட்டு விட்டு இன்னும் திரும்பாததால்.. ஹாரனை ஒலித்துக் கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய கண்கள் கவலையாய், பயத்துடன் காரின் பக்கமும்.. குப்பைத் தொட்டியின் பக்கமும் மாறி மாறி பார்த்தன.
அம்மா! தாத்தா.. இதைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளதோ இல்லையோ.. அதனால் உன் தந்தை என்றே சொல்கிறேன். அம்மா உன் தந்தையார் கூப்பிடுகிறார். புறப்படம்மா.. ஆனால், நீ புறப்படும்முன் எனக்கொரு உதவி செய்துவிட்டு போம்மா!
அம்மா புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தவாறு என்னைப் பார்த்தாள் கடைசியாக..
“அம்மா! இந்த குப்பைத் தொட்டியின் பக்கத்திலிருக்கும் அதோ அந்த பெரிய பாறங்கல்லை எடுத்து என் தலை மீது போட்டுவிடம்மா!
ப்ளீஸ்..! எனக்கு இந்த ஒரே ஒரு உதவியை செய்துவிட்டு போம்மா!
விக்கி.. விக்கி அழுது கொண்டிருந்த அம்மாவுக்கு என்னவானதோ தெரியவில்லை. குப்பைத் தொட்டிக்குள் குனிந்து என்னை தூக்கிக் கொண்டு மார்போடு அணைத்துக் கொண்டாள். அதன்பிறகு விறுவிறு என்று காரை நோக்கி நடந்தாள்.
அதற்குள் வானமே இடிந்து விழுவதைப் போல இடி இடித்தது. தட்.. பட் டென்று மழைத்துளிகள் பூமியை துளைத்தெடுப்பதைப் போல் கொட்டின.
சோ வென்று மழை பிடித்துக் கொண்டது.
நான் மழையில் நனையாதவாறு சர்வ ஜாக்கிரத்தையுடன் முந்தானையால் போர்த்தி மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு அம்மா நடந்தாள்.
தெலுங்கில்: வி.பிரதிமா.
தமிழில் : இக்வான் அமீர்
(சமரசம், மே 16-31, 1996 இல், பிரசுரமான சிறுகதை)