NewsBlog

Saturday, August 17, 2013

சிறப்புக் கட்டுரை: எகிப்து: 'தூக்கிலேற்ற வேண்டிய ராணுவ ஜெனரல்கள்'



 சொந்த மக்களுக்கு எதிராக எகிப்திய கொடுங்கோல் ராணுவம் நிகழ்த்திய கொடூர கொலைகளுக்கு உலகம் முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், ராணுவத்தின் அடிவருடிகளாக உலகம் முழுக்க உள்ள எகிப்தின் தூதர்கள் வெட்கமில்லாமல் ராணுவத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காக்கிச் சீருடை சர்வாதிகார பயங்கரவாதிகளிடம் வேறு எதைதான் எதிர்ப்பார்க்க முடியும்? இந்த நிலைப்பாட்டின் வாதங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்த மோர்ஸியை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அறப்போராட்ட வழியில் போராடும் மக்களை துப்பாக்கி முனைகளும், பீரங்கி வாகனங்களும் அடக்கி ஒடுக்கப் பார்ப்பதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. எகிப்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனங்களை நாகரீக சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது.


கொடூர விலங்குகள்கூட தன் வேட்டைகளிடம் கருணையைக் காட்டுகின்றன. ஆனால், எந்தக் குற்றமும் செய்யாமல் மண்ணில் வீழ்த்திய ராணுவத்தின் அடக்குமுறை கறைப்படிந்த வரலாறாய் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கத்தான் போகிறது. நிலமெங்கும் வழிந்தோடிய குருதி வெள்ளம் ஒரு காலும் வற்றாது! ஆம்.. வரலாறு நெடுகிலும் அதன் கொடூர நெடி வீசிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ராணுவம் அரசாளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டது. அதுபோலவே இதற்கு காரணமான ராணுவ ஜெனரல்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. இது ஒன்றுதான் எகிப்திய அரசியல் அமைப்பை சீர் செய்வதாக இருக்கும்.


தற்போதைய எகிப்திய அரசியல் நிலவரங்களை விமர்சிப்பவர்கள்.. குழப்புபவர்கள் சில வாதங்களை முன் வைக்கிறார்கள். அவற்றில் முக்கியமானவை இந்த மூன்று வாதங்களாகும்.

முதல் வாதம்:

எகிப்தில் மீண்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு... மீண்டும் மூர்ஸியை அதிபராக அரசாட்சி செய்ய அனுமதித்தால்.. அல்-காயிதா வலுப்பெற்று மக்கள் உரிமைகள் நசிந்து போகும்.

இரண்டாவது வாதம்:

தற்போது நிகழ்ந்த மனித உயிரிழப்புகளுக்கு இஃவானுல் முஸ்லிமீன் என்றழைக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால்.. அவர்கள்தான் பெண்களையும்... குழந்தைகளையும் மனித கேடயமாக பயன்படுத்தி உயிரிழப்புக்குக் காரணமானார்கள்.

மூன்றாவது வாதம்:

தற்போது நிகழ்ந்துள்ள ராணுவ நடவடிக்கையின் உயிரிழப்புகள் குறித்து இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் மிகைப்படுத்தி சொல்கிறார்கள்.

இந்த வாதங்களில் கடுகளவு உண்மையும் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். எகிப்தியர்கள் ஜனநாயக மறுமலர்ச்சிக்காக உயிரைப் பணயம் வைத்து அகிம்சை வழியில் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்தாமல் முதலில் நாம் மதிக்க வேண்டும்.

மோர்ஸி சிறந்த நிர்வாகி அல்ல. அவரது அரசும் சிறந்ததல்ல என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், பெரும்பான்மை மக்களால் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்ஸி இப்போதும்கூட எகிப்தின் அதிபர்தான்! ஆட்சி – அதிகாரம் செய்ய முழு உரிமை உடையவர்தான்! எந்த வாக்குகள் மூலாக அவர் அரசு அதிகாரத்தில் அமர்ந்தாரோ அதே ஜனநாயக வழியிலான வாக்குச் சீட்டுகள் மூலமாக அவரை பதவி நீக்கம் செய்வதே சரியானது. யாருக்கெல்லாம் அவரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் அதே ஜனநாயக வழியில் மக்கள் ஆதரவைத் திரட்டி வாக்குகளாக மாற்ற வேண்டும். 


ஆனால், தற்போது இவையெல்லாம் நடக்கவில்லை. மாறாக மோர்ஸியை எதிர்த்து தேர்தல்களில் தோற்றுப் போனவர்கள் ராணுவத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு சதியில் ஈடுபட்டார்கள். சொந்த சகோதர.. சகோதரிகளையே கொன்றொழித்து வரலாற்றில் கறைப்பட்டுப் போனார்கள். இம்மையில் இழந்தது மட்டுமல்லாமல்.. மறுமையில் நிரந்தரமான பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். 

கிட்டதட்ட நாற்பதாண்டு காலமாய் எகிப்தியர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு சர்வாதிகாரம் அரசாண்டது. இந்நிலையில்தான் ஒட்டு மொத்த மக்களின் அறவழிப் போராட்ட எழுச்சியால் கொடுங்கோல் முபாராக் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். செயற்கரிய செயலைச் செய்த அதே மக்கள் அதே ஜனநாயகப் பாதையில் மோர்ஸியை வீழ்த்த நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்?


மோர்ஸியின் மீதோ.. அவரது அரசாங்கத்தின் மீதோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், கருத்து வேறுபாடுகளுக்கு கொடுக்க வேண்டிய வடிவங்கள்.. அதற்கான தீர்வுகள் வாக்குச் சீட்டுகள் மூலமே நிகழ்த்தியிருக்க வேண்டும். மாறாக, துப்பாக்கி முனைகளிலும், பீரங்கி குண்டுகளிலும் தீர்வுகளை தேடிச் செல்லக் கூடாது.

மோர்ஸியின் ஆட்சி அதிகாரத்தில்.. அல்-காயிதா வளர்ச்சியுறும், தலையெடுக்கும் என்பது எவ்வித முகாந்திரமும், அடிப்படையும் இல்லாத வாதமாகும். அல்-காயிதா, மேற்குலகைவிட .. இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பை தனது முதல் எதிரியாக கருதுவதே உண்மை.

இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் பெண்களையும், குழந்தைகளையும் கேடயமாக பயன்படுத்துகிறது என்ற வாதமும் நகைப்புக்குரியது.

தங்கள் நாட்டில் ஜனநாயகம் நிலைப்பெற வேண்டும் என்பதற்காக ஆண்ளைப் போலவே எகிப்திய பெண்களும் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதும், ஜனநாயகம் வேண்டி முழக்கமிடுவதும் செயற்கையான ஒன்றல்ல. 

சர்வாதிகாரி முபாராக் ஆட்சியில் அந்த கொடியவனை ஆட்சி அதிகாரத்திலிருந்து கீழிறக்க ஆண்களுக்கு நிகராக பெண்கள் போராடியதை உலகம் அதற்குள் மறந்திருக்காது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு போராட்ட களத்துக்கு வர முடியும் என்பதும் எதார்த்தமல்ல. குடும்பம்.. குடும்பமாக அவர்கள் அறவழிக் களத்தில் நிற்பதே உண்மை.

உண்மையில் ராணுவம்தான் இந்த சூழலை மிக கவனமாக .. எச்சரிக்கையாக கையாண்டிருக்க வேண்டும். நிராயுதபாணியான மக்களை குறிப்பார்த்து.. துப்பாக்கி விசைகளை கண்மூத்தனமாக இயக்கி.. ராட்சஸ டாங்குகளை அவர்கள் மீது ஏற்றி பெரும் கொடூரத்தை அரங்கேற்றியது ராணுவம்தான்.  இதை தவிர்த்து அறப்போராளிகளின் வழியிலேயே அவர்களை விட்டிருக்கலாம். இதுவே புத்திசாலித்தனமான முடிவாக இருந்திருக்கும்.


அறவழியில்.. நீதிக்கான போராட்டம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். போராட்டக்காரர்கள் ஒருகாலும் எதிரிகள் இல்லை. தங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று பொறுப்புகளை தாங்களாகவே ராணுவத்திடம் ஒப்படைத்திருப்பவர்கள். சொந்த தாய் மண்ணின் மக்கள். ஆனால், மிருகத்தனமான ராணுவத்தின் நடவடிக்கை இவை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டது. 

அரக்கத்தனமான ராணுவ நடவடிக்கைகள் குறித்தும்.. உயிரிழந்தோர் குறித்தும் மிகைப்படுத்தப்படுகிறது என்ற வாதமும் நகைப்புக்குரியது. 

ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பில்லாதது. பாதுகாக்கப்பட வேண்டியது. தனி மனித உயிரிழப்பே பெரும் சோகத்துக்குரியாதாக இருக்கும்போது, நூற்றுக் கணக்கான கூட்டுக் கொலைகள் என்பது நாகரீக சமூகத்தின் தீராத களங்களாகும். 

ஆனால், எகிப்திய ராணுவம் மக்களை காக்கை – குருவிகள் போல தலையில், மார்பில், வயிற்றில் என்று குறிபார்த்து சுட்டுத் தள்ளியது. ராட்சஸ டாங்குகளை மக்கள் மீது ஏற்றி கூழாக்கியது. அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கூடாரங்கள் மீது எரிகுண்டுகள் வீசி உயிருடன் எரித்தது. மசூதியில் தஞ்சமடைந்த பெண்கள், குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் மசூதியை கொளுத்தியது. கொடுங்கோலன் முபாரக்கூட செய்யத் தயங்கிய அத்தனை அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டது.

இன்று ராணுவத்துக்கு நிழலாய் இருந்து உதவி செய்து கொண்டிருக்கும் முர்ஸியின் எதிர்பாளர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். ராணுவத்துக்கு சிரம்பணியாத ஒவ்வொருவரும் இதேநிலையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்று முர்ஸியின் ஆதரவாளர்கள்; நாளை முர்ஸியின் எதிர்பாளர்கள். 

நவீன உலகில் அரக்கத்தனத்திற்கு ஒருபோதும் இடமில்லை.  ஒவ்வொரு பிரச்னையையும், ஜனநாயமுறைக்கு உட்பட்டு வன்முறையில்லாமல் எதிர்கொள்ளபட வேண்டியவைதான்.

இத்தனை உயிரிழப்புகளுக்குப் பின்னும் இஃவானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்களுக்கு ஜனநாயக முறையில் அமைதி வழியில் போராட எல்லா உரிமைகளும் உண்டு. இந்த எல்லையைத் தாண்டும்போது, சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் காப்பது நாட்டின் காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு கட்டாயம் பொறுப்புண்டு. 

ஆனால், உரிமைக்காக போராடுவோரின் குரல்வளையை நசுக்குவதும், நிராயுதபாணியான அப்பாவி மக்களை கொல்வதும் மனித இனத்துக் எதிராக இழைக்கும் அநீதியாகும்.

1 comment:

  1. itharkkuellammulakaranamullacaravutiyakaninaikkum america than .

    ReplyDelete