NewsBlog

Wednesday, August 14, 2013

சிறப்புக் கட்டுரை:"மர்யம், ஏன் அழுதாள்?"



அது மறக்க முடியாத நாள். மெய் சிலிர்த்துப் போன நேரம். குழந்தை மர்யத்தின் கண்கள் குளமாகி தாரை தாரையாக கண்ணீர். விசும்பலும், கோபமுமாய் அவள் கேட்ட கேள்வியை வாழ்நாளில் மறக்கவே முடியாது!
அன்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் (எஸ்.ஐ.ஓ) ரமளான் நன்நாளையொட்டி ‘ஈத் மிலன் – பெருநாள்’ சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையாய் வாழ வேண்டும்; மனித நேயம் மலர வேண்டும் என்ற நோக்கத்தில் பிற சமயத்தினருக்காக அந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினராய் உள்ளூர்  தொழிலதிபர் அழைக்கப்பட்டிருந்தார்.
வாழ்த்துரை, தலைமையுரைகளுக்குப் பின் சிறப்புரை ஆரம்பித்தது. உரையின் இடையே சம்பந்தமேயில்லாமல் ஒரு கதையை அந்த தொழிலதிபர் சொல்ல ஆரம்பித்தார்:
“நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென விமானத்தில் கோளாறு. யாராவது மூவர் உடன் கீழே குதித்தாக வேண்டும். பைலட்டிடமிருந்து அறிவிப்பு வெளியானதும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அமெரிக்கர் சட்டென்று எழுந்தார். “அமெரிக்கா… வாழ்க!” – என்று முழக்கமிட்டவாறு விமானத்திலிருந்து குதித்துவிட்டார்.
அடுத்ததாக, ரஷ்யர் எழுந்து, “ரஷ்யா.. வாழ்க!” – என்று முழங்கிக் கொண்டே விமானத்திலிருந்து குதித்தார்.
மூன்றாவதாக இந்தியர் எழுந்தார். “ஜெய் ஹிந்த்!” – என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டவாறு பக்கத்திலிருந்து ஜப்பானிய பயணியை விமானத்திலிருந்து தள்ளிவிட்டார். இப்படிதான் இந்தியர்களின் மனோநிலை உள்ளது!” – என்று முடித்தார் அவர்.

- பெரும் வெடிச்சிரிப்பு அரங்கில் எழுந்தது. ஆனால், என்னுடன் வந்திருந்த எட்டே வயதான என் மகள் மர்யத்தின் கண்கள் கலங்கிவிட்டன. “ஓ” வென அழலானாள். காரணம் புரியாமல் தவித்த நான் மெதுவாய் அணைத்தவாறு அரங்கை விட்டு வெளியேறியதுதான் தாமதம்! பொங்கி அவள் அழுதது இதுவரை காணாதது. “அப்பா! அந்த ஆளூ… என் தாய் நாட்டை அவமதித்துப் பேசறாரு! நீங்களெல்லாம் சிரிச்சிட்டு ரசிக்கிறீங்களே! என் நாட்டு மக்களை அவமதித்துப் பேச அவரை யார் அனுமதிச்சது?” ரோஷத்துடன் அவள் நின்ற கோலம் நெஞ்சைவிட்டு  அகலாதது!
வீட்டை அடைந்ததும் மர்யம் தன் அழுகையை நிறுத்தவில்லை. அவளை அமைதிப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
மர்யத்தின் கண்ணீர் துளியிலும் உண்மையில் வழிந்தது தூய தேச பக்தி.
தேச பக்தியை யாருக்கும் யாரும் ஊட்ட வேண்டிய அவசியமில்லை. அது பிறந்த மண்ணோடும், அந்த மண்ணில் வீசும் காற்றோடும் இரண்டறக் கலந்து இந்த மண்ணில் தவழும் ஒவ்வொரு இந்தியனின் இரத்த நாளங்களில் ஓடிக் கொண்டிருப்பது. இதில், இந்து, முஸ்லிம், கிருத்துவர் என்ற சமய பேதங்கள் இல்லை. பேசும் மொழிகளில் வேறுபாடுகளோ, பின்பற்றும் கலாச்சார – பண்பாடுகளின் வேற்றுமைகளோ, வாழும் கொள்கைகளோ பிரித்துவிடுவதில்லை.

தொன்மை வாய்ந்த ஆன்மிக பூமியான இந்தியத் திருநாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமைக் கொள்வர். அதற்காக இறைவனுக்கு நன்றியும் சொல்வர். “இது என் தாய் நாடு!” – என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவர்.
இறைநெறியின் அடிப்படையிலான ஒழுக்க விழுமியங்களை தம் வாழ்வின் உயிரூட்டமாக கருதி வாழும் முஸ்லிம்கள் தேச பக்தியில் யாருக்கும் ‘கிஞ்சித்தும்’ குறைந்தவர்களில்லை. இன்னும் சொல்லப் போனால் எல்லோரையும்விட மிகைத்தவர்களாகவே அவர்கள் இருப்பர்; மர்யத்தைப்  போலவே!




0 comments:

Post a Comment