NewsBlog

Tuesday, August 6, 2013

விருந்தினர் பக்கம்: "பூரண இஸ்லாமியன் ; பூரணத்துவமான மனிதன்..!"



"இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார்.

கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
2003 ஆம், ஆண்டு தினமணி ரம்ஜான் மலரில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'பிரச்சனை குர்ஆனில் இல்லை நம்மிடம் தான்' என்ற பொருள்பட, 'வெறுப்பதற்கு ஏதுமில்லை!'' - என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இது.....
இதனை சுஜாதா இஸ்லாமியருக்காக எழுதவில்லை. பூமியில் பிறந்த எந்த ஒரு மனிதனும் அவசியம் படிக்க வேண்டிய விஷயமாகத் தான் இதைக் கருதுகிறேன்.  கருத்துச் செறிவில் 100 பக்கங்களுக்கு விஸ்தாரமாகச் சொல்ல வேண்டியதை சுஜாதா சில பாராக்களில் சொல்லிவிட்டார்.  

உலகில் எந்த ஒரு மதத்திற்கும் சற்றும் குறைவில்லாத வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட மார்க்கம் இஸ்லாம்.  இது ஒன்று தான் குறை என்று எதையும் சுட்டிக் காட்ட முடியாதது இஸ்லாம். அந்த மார்க்கம் சொல்லும்படி நடக்கும் மனிதன் பூரண இஸ்லாமியன் என்று சுருக்குவதைவிட பூரணத்துவமான மனிதன் என்று விவரிக்க வேண்டும்.
பதினைந்து வயதிலிருந்து இஸ்லாமிய நண்பர்களிடம் எனக்கிருக்கும் பழக்கம், எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் எண்ணங்கள் வார்த்தைகளுக்குத் தொலைவில் இருக்கிறது.  சுய ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு ஆகிய இரண்டின் செயல் வடிவம் தான் ரம்ஜான் நோன்பு.  தஞ்சையில் கீழவாசல் என்ற ஒரு பகுதி இருக்கிறது. பெரும்பாலும் இஸ்லாமியர் வசிக்கும் பகுதி. இங்கே வசிக்கும் இஸ்லாமியரல்லாத சில பேர் கூட ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். இருக்கும் இடம் ஏற்படுத்திக் கொடுத்தப் பழக்கம் என்று இதைச் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது

இஸ்லாமியர்களுடன் பழகப் பழக அந்த மார்க்கத்தின் சிறப்புகள் எந்தத் தன்னுணர்வும் இன்றி நம் மூளைக்கு உறைத்துவிடும்.  தங்கம் மாதிரி போலி இருக்கலாம். ஆனால் தங்கத்தில் போலி கிடையாது. அதைப்போல இஸ்லாத்தில் கெட்டவர்கள் என்று தனியாக யாரும் கிடையாது. அசல் இஸ்லாமியர் நல்லவர். இஸ்லாம் என்றாலே இறைநிலை எய்துதல் என்று தான் பொருள் கொள்கிறேன். நாம் எந்த மதத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமே இல்லை. இந்த மதத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம். ரம்ஜான் பண்டிகை வரவிருக்கிற இந்த நேரத்தில் இதை மத நல்லிணக்கக் கட்டுரை என்பதைவிட மன நல்லிணக்கக் கட்டுரை என்ற வகையில் புரிந்து கொண்டால் மகிழ்வேன்.

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

சிவக்குமார் அசோகன்.








0 comments:

Post a Comment