1996 ஆம் ஆண்டு நவம்பர் 1,2,3
ஆகிய தேதிகளில் பீகார் தலைநர் பாட்னாவில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின்
(SIO) வட இந்திய அளவிலான மாநாடு நடைபெற்றது.
“அறியாமையிலிருந்து… பேரறிவை நோக்கி..” – என்பது மாநாட்டின் மையக் கருத்தாகும். அந்த
மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க நான் சென்றிருந்தேன். அப்போது அந்த இளைஞர்களின் கட்டுப்பாட்டையும்,
ஒழுங்கையும், இறையச்சத்தையும், பிரச்னைகளை ஆழ அகலத்துடன் வாதிக்கும் திறமையையும் கண்டபோது,
“ஒளியிழந்த நாட்டின் உதய ஞாயிறுகள்!” என்னும் பாரதி வரிகள் நினைவுக்கு வந்தன. எஸ்ஐஓவின்
அன்றைய அகில இந்தியத் தலைவர் ‘மலிக் முஃதஸிம்
கானை சந்தித்து கண்ட நேர்காணலின் முக்கியப் பகுதி இது:
கேள்வி: பத்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடத்தப்படும் இது போன்ற மாநாடுகளால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறீர்கள்?
பதில்: 1986-இல், அகில இந்திய
மாநாடு பெங்களூரில் நடந்தது. அது அமைப்பின் ஆரம்ப கட்டம். அமைப்பை வலுப்படுத்துவதற்கும்,
பரவலாக்குவதற்கும், மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும் இத்தகைய மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் எங்கள்
செய்தியை சமர்பிக்கவே இத்தகைய கூட்டங்களை கூட்டுகின்றோம். இது போன்ற மாநாடுகளால் மனித
இனத்தின் அமைதி, முன்னேற்றம், ஈடேற்றம் இஸ்லாத்தின் மூலமே சாத்தியம் என்று திட்டவட்டமாக
எடுத்துரைக்கின்றோம். இதனால் நல்ல பலன் கிடைத்ததை பெங்களூர் மாநாடு நிரூபித்தது. நாடு
முழுக்க செய்தி பரவியது. கூடவே நாட்டின் பல பகுதிகளில் எஸ்ஐஓவின் புதிய கிளைகள் ஏற்பட்டன. அமைப்பு வலுவான சக்தியாய்
வளர்ந்தது. அதற்கு பிறகு வட இந்திய மாநாடு இப்போது நடைபெறுகிறது. இங்குதான் இந்திய
முஸ்லிம்களில் 60 விழுக்காடு பேர் வசிக்கின்றனர். முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் எங்கள்
செய்தி பெரிய அளவில் பரவவே இந்த ஏற்பாடு.
கேள்வி: இதுவரை எஸ்ஐஓ சாதித்தது
என்ன?
பதில்: நிறைய சொல்லலாம். ஆனாலும்
அது சுயதம்பட்டம் ஆகிவிடுமோ என்று விளம்பரப் படுத்தப்படுவதில்லை. இன்றைய இந்தியாவில்
கல்வி அமைப்பு, சமூக அமைப்பு, அரசியல் அமைப்பு எல்லாமே சீர்குலைந்துள்ளன. இந்தச் சீர்க்குலைவு
மாணவர்கள், இளைஞர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கிறது. வன்முறை, ஆபாசம், போதை மருந்துக்களுக்கு
அடிமைப்படுதல் என்று பல ஒழுக்கக் கேடுகளுக்கு மாணவர்கள் ஆளாகி வருகின்றனர். சமூகப்
பொறுப்பின்மை, இலட்சியப் போக்கின்மைகளுக்கு அவர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சூழலில்
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒழுக்க மாண்புகள் மேலோங்கவும், அவர்கள் கல்வியில்
சிறப்புற்று விளங்கவும், தத்தமது திறமைகளை வெளிப்படுத்தவும், சமூக நல்லிணக்கம் மலரவும்
எஸ்ஐஓ முயன்று வருகின்றது. இதற்காக கடுமையாக உழைக்கிறது. கொடுமைகளையும், தீமைகளையும்
தடுக்கப் பாடுபடுகிறது. உலக அழகிப் போட்டிகள் போன்ற ஆபாசங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதற்காக எதிர்ப்பு ஊர்வலங்களையும் நடத்தினோம். இன்று எஸ்ஐஓ இளைஞர்கள் வரதட்சணைக்கு
எதிராக குரல் எழுப்புகிறார்கள். பல முக்கிய சந்தர்பங்களில் எஸஐஓ மகத்தான பங்கு வகித்தது.
ஷரீஅத் பாதுகாப்பு போராட்டத்தில் எஸ்ஐஓ முன் வரிசையில் நின்றது. பாபரி மஸ்ஜித் மற்றும்
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பிரச்னைகளில் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புகிறோம். இப்படிச்
சொல்லிக் கொண்டே போகலாம்.
கேள்வி: இன்று எஸ்ஐஓ எதிர்நோக்கியுள்ள
சவால்கள் என்ன?
பதில்: கல்வியின்மை, வேலையின்மை,
வகுப்புவாதம், நமது பண்பாடுகளைச் சீரழிக்க முயலும் செய்தி ஊடகங்களின் போக்கு, சமூக
அநீதிகள் போன்ற பலதரப்பட்ட பிரச்னைகள் சவலாய் நம் முன் உள்ளன.
கேள்வி: சில ஆயிரம் இளைஞர்களை
வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய நாட்டில் எப்படிச் செயல்படப் போகிறீர்கள்?
பதில்: நாங்கள் மிகப் பெரிய சக்தி
என்று எப்போதுமே சொன்னதில்லை. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். ஓர்
அறை நிறைய இருக்கும் இருட்டை ஒரு சின்ன மெழுவர்த்தியின் ஒளி விரட்டி விடுகிறதல்லவா?
அதுபோலவே, நாம் தூய உள்ளத்துடன் செய்யும் சிறிய முயற்சிகளுக்குக் கூட இறைவன் பெரும்பலன்களைத்
தருவான்!
கேள்வி: எந்த முஸ்லிம் நாட்டிலிருந்து
இந்த மாநாட்டிற்கு நிதி உதவி கிடைத்தது?
பதில்: (சிரிக்கிறார்) இது தவறான
.. ஆதாரமற்ற கருத்தாகும். எங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிதியை நாங்களே பகிர்ந்து
கொள்கிறோம். இந்த நாட்டில் நல்ல காரியங்களுக்கு நிதி திரட்ட எந்தக் குறையும் இல்லை
என்றே கருதுகின்றேன். எங்கள் உறுப்பினர்கள், அனுதாபிகள் மற்றும் பொது மக்கள் என்று
பல தரப்பினரும் இப்பணியில் பங்கு கொள்கின்றனர்.
கேள்வி: ஆர்எஸ்எஸ் போல எஸ்ஐஓ வும்
ஷாகாக்கள் (ஆயுத பயிற்சி வகுப்புகள்) நடத்துகிறதா?
பதில்: நாங்கள் அது போன்ற எந்தப்
பயிற்சியையும் அளிப்பதில்லை. அதற்கான செயல்திட்டமும் எங்களிடம் இல்லை. நம் தாயகமாம்
இந்தியத் திருநாட்டில் இறையச்சத்தின் அடிப்படையல் ஒரு சமூக அமைப்பை.. மறுமலர்ச்சியை
கொண்டு வர விரும்புகின்றோம். அது கருத்துப் பரிமாற்றம், செய்திப் பகிர்வு மூலமே சாத்தியம்
என்றும் நம்புகின்றோம். இந்தச் சமுதாயப் புரட்சியில் ஏழ்மையும், வறுமையும் ஒழிய வேண்டும்;
மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும்; சமூக நீதி மலர வேண்டும்; சத்தியம் மேலோங்க
வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.
இதற்கு ஆயுதப் பயிற்சியோ, ஷாகாக்களோ தேவையில்லை. வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது எங்களின் திடமான நம்பிக்கை. எங்களின் அழைப்பும், செய்தியும், கண்ணோட்டமும் பரந்தது; உலகளாவியது. அப்படியிருக்க.. எஸ்ஐஓ வையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு என்றே கருதுகின்றேன். எங்கள் அழைப்பு மனிதர்களை ஒன்றுப்படுத்துவது. ஆனால், ஆர்எஸ்எஸ்ஸினதோ மக்களைப் பிரிவினைப்படுத்துவது! ஆக இந்த இரண்டு அமைப்புகளின் நோக்கம், செயல்பாடு மற்றும் வழிமுறைகளில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
(சமரசம், ஜனவரி 1-15, 1997 பிரசுரமானது)
இதற்கு ஆயுதப் பயிற்சியோ, ஷாகாக்களோ தேவையில்லை. வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது எங்களின் திடமான நம்பிக்கை. எங்களின் அழைப்பும், செய்தியும், கண்ணோட்டமும் பரந்தது; உலகளாவியது. அப்படியிருக்க.. எஸ்ஐஓ வையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு என்றே கருதுகின்றேன். எங்கள் அழைப்பு மனிதர்களை ஒன்றுப்படுத்துவது. ஆனால், ஆர்எஸ்எஸ்ஸினதோ மக்களைப் பிரிவினைப்படுத்துவது! ஆக இந்த இரண்டு அமைப்புகளின் நோக்கம், செயல்பாடு மற்றும் வழிமுறைகளில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
(சமரசம், ஜனவரி 1-15, 1997 பிரசுரமானது)
0 comments:
Post a Comment