NewsBlog

Friday, August 16, 2013

சிறப்புக் கட்டுரை: "மனசாட்சி உள்ளவர்களுக்கானது"

 


நேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களை பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள்.. தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள்.. தலை, நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளில் ராணுவத்தால் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்த கதையது

எப்படிப்பார்த்தாலும், 200 புகைப்படங்களுக்கு மேல் இருக்கும்.... நெஞ்சை அதிர வைக்கும் காட்சிகள் அவை.. என்கிறார் கெய்ரோவை மையமாகக் கொண்டு செயல்படும் புகைப்பட இதழியலாளர் முஸைப் எல்ஸாமி. கடந்த புதன் அன்று தான் எடுத்த புகைப்படங்களுக்கு காணா துயரம் என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார். இறந்தோரின் சடலங்கள் போர்வைகளால் மூடி வைக்கப்பட்ட காட்சிகள்... குற்றுயிரும் குலையுயிருமாய் சுமந்து வரப்படுபவர்கள், நான் அந்த கொடூர காட்சிகளை காண முடியாமல் தவிர்த்துக் கொண்டேன் என்கிறார் அவர் டுவிட்டரில்.


ஆம்.. எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மூர்ஸி நீக்கப்பட்டு.. ராணுவ சர்வாதிகாரி ஆட்சியில் அமர்ந்தபின் இரும்பு கரங்களைக் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அவை. கிட்டதட்ட 700 பேர் அதுவும் ஜனநாயகம் வேண்டி அறவழியில் போராடிக் கொண்டிருந்த நிராயுதபாணியானவர்கள்.. கொடூரமான முறையில் சுட்டும், எரித்தும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிமானோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் தியான்மென் சதுக்க படுகொலைகளுக்குப் பிறகு இத்தகைய கொடூரத்தை உலகம் இப்போதுதான் கண்டு கொண்டிருக்கிறது

ராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது சரியாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொல்லுவதற்கு பழக்கப்பட்டவர்களிடம் வேறு எதைதான் எதிர்பார்க்க முடியும்? புரட்சியை ஒடுக்குவதாக துப்பாக்கி ஏந்திக் கொண்டிருக்கும் மேற்கத்திய அடிமைகள்தானே அவர்கள்!


இன்று புனித வெள்ளிக்கிழமை. முஸ்லிம்கள் பெருமளவில் தொழுகைக்காக கூடும் நாள். உயிர்ச் சேதம் இன்னும் பெருமளவில் இருக்கும் என்று அச்சம் எழுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு துரதிஷ்டநாளாக இந்த சம்பவ நாள் விளங்கியது. நாவளவில் கடும் கண்டனம் தெரிவித்த கையோடு அவர் எகிப்துடனான கூட்டு ராணுவ ஒத்திகையை ரத்து செய்துள்ளார். ஆனாலும் அவர் எகிப்தில் நடக்கும் படுகொலைகளை தடுத்து நிறுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எகிப்திய ராணுவத்துக்கு ஒரு பில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கியவர் படுகொலைகளை தடுத்து நிறுத்துவார் என்பதை எதிர்பார்க்கவும் முடியாதுதான்! பிள்ளையைக் கிள்ளி விடுபவரும் அவர்தான்! தொட்டிலை ஆட்டி விடுபவரும் அன்னார்தான்!  


பெரும் முதலீடுகளில் மனித உயிர்களை பலி வாங்குவதுதான் அமெரிக்க வரலாறு என்பது நிதர்சன உண்மை.

இதுதான் நவீன தாரளமயமா?

வரலாற்றில் துயர புதனாக அமைந்துவிட்ட அந்த எகிப்து ராணுவ சர்வாதிகார வரலாறு இனி மறக்க முடியாதது. ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஸியின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தது. அவரைப் பிடிக்காதவர்கள் இதுபோலவே ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள். அந்த ஆட்சி அதிகாரம் எந்த வன்முறையையும் கட்டவிழ்த்துவிடவில்லை. அந்த ஆர்ப்பாட்டங்களை நசுக்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. நவீன பிர்அவ்னாக இருந்த முபாரக்கைகூட சட்டத்தின் முன் நிறுத்தியது. உடனுக்குடன் தண்டிக்க அத்தனை வாய்ப்பிருந்தும் அதை செய்யவில்லை. ஆனால், ஜனநாயகத்தை எட்டி உதைத்து ராணுவத்தை ஆட்சியில் ஏற்றியவர்கள் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு இந்த அமரத்துவ உயிர் பலிகளே சாட்சி! ஜனநாயகம் வேண்டி நின்ற இந்த அப்பாவிகள் கொல்லப்படவில்லை.. வீரமரணம் எய்தியுள்ளார்கள். அதற்கான கூலியையும் அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எனது 30 ஆண்டுக்கால பத்திரிகை அனுபவத்தில் இத்தகைய காட்சிகளை நான் காணவில்லை. கண்ட காட்சிகளையும் அச்சில் பயன்படுத்தியதில்லை. ஆனால், உலக சமூகம் மௌனமாக நின்றிருக்க அதன் தலைவராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், அதன் ஜால்ரா ஐநா மன்றமும் வாய்மூடி அமைதி காக்க.. வழக்கம் போல பேடிகளாய் அரபு ராஜாக்கள் உல்லாசங்களில் மூழ்கியிருக்க.. மனசாட்சி உள்ளவர்களுக்கானது இது.
 




0 comments:

Post a Comment