NewsBlog

Thursday, August 22, 2013

சிறப்புக் கட்டுரை: 'ரிடர்ன் ஆஃப் தி மம்மி -2, – முபாரக்..!'



"எகிப்தின் ரத்தக்களறி ஒபாமாவுக்கு ஓராயிரம் தயக்கம் தரும்!" – என்று யாராவது எண்ணினால் … அவரை விட விஷய ஞானம் இல்லாதவர் வேறு யாரும் இருக்க முடியாது! ஏனென்றால், தற்போதைய எகிப்திய அரசியல் நிலவரங்களை வழிநடத்துவது இஸ்ரேலும், அமெரிக்க காங்கிரஸில் இடம் பெற்றுள்ள அதன் விசுவாசிகளும் மற்றும் பெண்டகனுமாய் இணைந்த சக்திகள்தான்!
 
ஆம்.. சொந்த மக்களுக்கு எதிராக.. அமெரிக்க மூலதனத்தில்..  ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறது எகிப்திய ஆயுதப்படை. அரபு வசந்தம் இனி வரலாற்றில் படித்துக் கொள்ள வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
 
நிராயுதபாணியான ஆண், பெண், குழந்தைகளுக்கு எதிராக ராணுவமும், அதன் மற்றொரு பிரிவான ஆயுதப்படை காவலர்களும் அடுக்கடுக்காய் வெற்றி மேல்.. வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயக நெறிமுறைகளின் பக்கம் திரும்பும்படி அகிம்சை வழியில் போராடிவரும் மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலை வேண்டி போராடும் பலஸ்தீன மக்களை இஸ்ரேல்.. துப்பாக்கி குண்டுகளாலும், ராட்சஸ புல்டோசர் மற்றும் கவச பீரங்கிகளாலும் கொன்றொழித்து வருவதைப்  போலவே ராணுவ ஜெனரல் அப்துல் பதாஹ் அல் சிசி எகிப்திலும் சொந்த மக்களுக்கு எதிராக அதே மூர்க்கத்தனங்களை கையாண்டு வருகிறார். வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மோர்சியை அரசாள அனுமதிக்க வேண்டும் என்று போராடி வரும் மக்களை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுத்தும், கவச வாகனங்களால் நசுக்கியும் அமெரிக்க – இஸ்ரேலிய எஜமானர்களின் செல்லப் பிராணியாக தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார். சர்வாதிகாரி சிசியை எதிர்ப்போர் இப்போது சட்ட ரீதியாக பயங்கரவாதிகள்!

ரத்த வெறிப்பிடித்த கொடுங்கோலன் முபாரக்கின் ஆரதரவு பெற்ற ராணுவ பயங்கரவாதத்துக்கு சவுதி மற்றும் வளைகுடாவின் முக்கிய நாடுகள் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.

தற்போது துப்பாக்கி ஏந்தியோரின் அரசாட்சி நடக்கிறது.


அரபு உலகின் மூன்றாவது முறையாக கவிழ்க்கப்பட்ட ஜனநாயக அமைப்பு இது என்று கூட சொல்லலாம். இதற்கு முன்னர் காஸாவிலும், அல்ஜீரியாவிலும் இதேபோலத்தான் நடந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தூக்கி வீசி எறியப்பட்டார்கள். 

உலகின் கண்துடைப்புக்காக... வேறு வழியில்லாமல்... அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ‘ஜான் கெர்ரி’ "எகிப்தின் நிலைமை வருந்தத்தக்கது!" – என்று ஒற்றை வரியில் அறிக்கை விட்டார். ஆனால், இதே ஜான் கெர்ரிதான்.. எகிப்தின் முதல் ஜனநாயக அரசு கவிழ்க்கப்பட்டபோது, “ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது!” – என்ற சொல்லாடலை பயன்படுத்தி ராணுவத்தின் சதிச் செயலை மெச்சிப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமா ஜனநாயகத்தக்கு எதிரான ராணுவத்தின் சர்வாதிகாரத்தை கண்டும் காணாமலும் இருந்துவிட்டார். ஆனால், வாஷிங்டனோ ஜனநாயகம், மக்களுரிமை, மனித உரிமை என்று இடைவிடாமல் உலக நாடுகளுக்கு 'நான் ஸ்டாப்' உபதேசம் செய்து கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா கடைபிடித்துவரும் கொள்கைக்கான ஐந்து மையங்கள் இவை:

  • வெள்ளை மாளிகை
  • அரசு எந்திரம்
  • பென்டகன
  • சிஐஏ மற்றும்
  • அமெரிக்க காங்கிரஸ்
அமெரிக்காவின் மிகவும் வலிமை வாய்ந்த இஸ்ரேலிய ஆதரவு அறிவு ஜீவிகள் அமெரிக்க காங்கிரஸீக்கு தரும் நெருக்கடிகள்தான் எகிப்தில் பிரதிபலிக்கின்றன. நிதியுதவி, உணவு மற்றும் ஆயுத தளவாடங்கள் என்று இந்த சக்திகளின் கட்டளைகள்படிதான் எகிப்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடக்கின்றன.

இவற்றுள் ஆறாவதாக… இஸ்ரேல் அனைத்துச் சக்திகளின் தலைமைச் சக்தியாக ஆட்டிப்படைக்கிறது.

நடப்பு சூழல்களால்.. வெள்ளைமாளிகை எகிப்துக்கு வழங்க இருந்த எஃப்-16 ரக போர் விமானங்கள் மற்றும் எகிப்து நாட்டுடனான வழக்கமான போர் ஒத்திகைகள் தள்ளிப்போட்டுள்ளன. 

இந்த உத்திரவுகளுக்கு சூத்திரதாரி பென்டகன். எகிப்தின் 4,40,000 ஆயுதப்படையினரும் உண்மையில் பென்டகனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்கள் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால்… எகிப்தின் ஆயுத தளவாடங்களை தீர்மானிக்கும் சக்தி பென்டகனிடம் மட்டுமே உள்ளது. அத்தோடு ராணுவத்துக்கான நிதியுதவி, பயிற்சி, நவீன தளவாடங்கள் இவற்றுக்கான உதிரிபாகங்கள் அத்தோடு ராணுவத்தின் பதவி உயர்வுகள் என்று பென்டகனே தீர்மானிக்கிறது. அதனால் எகிப்தின் ராணுவ ஜெனரல்கள் அத்தனைப் பேரும் வாஷிங்டன் உறையினுள் இருக்கும் வாட்களைப் போன்றவர்கள்தான்!

எகிப்தின் நடப்பு நிகழ்ச்சிகள் … 'ரிடர்ன் ஆஃப்தி மம்மி -2,' முபாரக் விடுதலை உட்பட அமெரிக்காவின் விருப்பப்படியேதான் நடக்கிறது.

ஜனநாயகம் வேண்டி தற்போது உயிர் தியாகம் செய்து கொண்டிருக்கும் மக்களின் கூக்குரல்களை சட்டை செய்வோர் வெள்ளைமாளிகையில் யாரும் இல்லை.

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக பேயாட்டம் போட்ட கொடும் சர்வாதிகாரி முபாரக்கை ஆட்சிபீடத்தில் முட்டு கொடுத்துக் கொண்டிருந்ததும் அமெரிக்காதான்! அந்தக் காலக்கட்டத்தில் அரங்கேறிய கொடிய சித்திரவதைகள், மரணதண்டனைகள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இவற்றுக்குக்கும் காரணமாக இருந்ததும் அமெரிக்காவும் அதன் ஆளும் வர்க்கமும்தான். சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி அதிகாரத்தை மேற்கத்திய ஊடகங்கள் பவ்வியமாக கண்டும் காணாமலும் இருந்ததன் காரணமும் இதுதான்!


முபாரக்கின் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல சர்வாதிகாரி முபாராக்கின் மறு மீட்சியான தற்போதும் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மீண்டும் எகிப்தின் இருட்டுச் சிறைகள் அப்பாவி மக்களின் மரண ஓலங்களால் நிரப்பப்படும். இடைவிடாமல் தொடரும் சித்திரவதைகளால் மனித இதயங்கள் மரத்துப் போகும். 

எகிப்து இனி ஆயிரமாயிரம் ராணுவ சக்தி கொண்ட பேரரசாக… அமெரிக்காவின் மத்திய கிழக்கின் சிற்றரசாக.. அடியாளாக.. மீண்டும் வரலாற்றில் பதிவு பெறும். புதிய சர்வாதிகாரி ராணுவ ஜெனரல் சிசியின் நெஞ்சு, எகிப்து மக்களின் குருதியில் தோய்த்தெடுக்கப்பட்ட அமெரிக்க சபாஷ் மெடல்களால் தோரணம் கட்டிக் கொள்ளும்.

வழக்கம் போல முஸ்லிம் உலகில் அமெரிக்காவின் ஜனநாயக மாயை எள்ளி நகையாடப்படும். மத்திய கிழக்கு முழுவதும் ஜனநாயகம் மலர வேண்டும் என்று திருவாய் மலர்ந்த ஒபாமாவுக்கு உலகில் கிஞ்சித்தும் மதிப்பிருக்காது. 

ஜனநாயகப் போர்வைக்குள்ளிருக்கும் ஒபாமா போன்ற சர்வாதிகாரிகளுக்கு மனசாட்சியின் உறுத்தல்கள் எழு வாய்ப்பில்லை.  அப்படியே உறுத்தினாலும் இஸ்ரேலும், அமெரிக்க காங்கிரஸை அடக்கியாளும் இஸ்ரேலின் அனுதாபிகளும், பென்டகனும் கொடுக்கும் நெருக்கடியால் எல்லாமே மறந்து போகும். எகிப்தும், வாஷிங்டனின் விரலசைவுக்கு ஆடும் அதன் ராணுவப் படையினரும்.. மத்திய கிழக்கின் அமெரிக்க துதிப்பாடும் ராஜாங்கமாகவே இருக்கும்.

0 comments:

Post a Comment