ஆகஸ்ட் 14 – புதன்கிழமை
‘ரபாஹ் அல் அதவிய்யா’ சதுக்கத்தில், சர்வாதிகார ராணுவத் தளபதி எஸ்தின் சிலியால் நிகழ்த்தப்பட்ட
மக்களுக்கு எதிரான கொடூர படுகொலைகள் எகிப்து மீண்டும் சர்வாதிகாரத்தை கையிலெடுக்கிறது
என்பதற்கான அடையாளம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள் அதாவது அரபு வசந்தத்தின் மலர்ச்சியை
சகித்துக் கொள்ள முடியாத எதிர் சித்தாந்தவாதிகளின் அணிவகுப்பு இது.
கெய்ரோவின் முக்கிய
பிண கிடங்கான ‘சய்ன்ஹம்’ போதிய இடவசதியின்மையால் பிணங்களால் நிரம்பி வழிகிறது. குளிரூட்டி
அறைகள், பிரதான அறைகள், சாதாரண அறைகள் என்று எங்கும் எதிலுமாய் பிணங்கள் காட்சியளிக்கின்றன.
பிண கிடங்குக்கு
வெளியேயும் ராணுவத்தால் கொல்லப்பட்பட்டோரின் சடலங்கள் மூன்று.. மூன்று பேராய் வரிசையில்
அடக்கி வைக்கப்பட்டுள்ளன. சில வெள்ளுடைகளுடனும் இன்னும் சில சவங்கள் கருப்பு பைகளிலும்,
இன்னும் சில திறந்த நிலையிலும் கிடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கும் வரிசை
அரை மீட்டர் அளவு நகர்ந்து உறவினர்களிடம் பிணங்கள் ஒப்படைக்கப்படுகின்றன.
போதிய குளிரூட்டி
வசதி இல்லாததாலும், சவங்கள் வெய்யிலில் நடுத்தெருவில் கிடத்தப்பட்டுள்ளன. உறைந்தும்,
உறையாமலும் கசிந்து கொண்டிருந்த செந்நிற குருதியைச் சுற்றி மொய்திருக்கும் ஈக்கள்..
பிணவாடை கலந்த காற்றுமாய் அந்த சூழலின் படுபயங்கரத்தால் தெரு உறைந்து போயிருக்கிறது.
முஹம்மது ரியாஸ்
– உடற்கல்வி ஆசிரியர்.. கலங்கிய கண்களுடன் அந்த பிண கிடங்குக்கு வருகிறார். அவரது கையில்..
தலையில் குண்டடிப்பட்டு பிணமாய் மருமகன்! கொல்லப்பட்ட அந்த இளைஞன் இஃவானுல் முஸ்லிமீன்
இயக்கத்தின் ஆதரவாளர் மட்டுமே! ஜனநாயகம் வேண்டி ரபாஹ் அல் அதவிய்யா சதுக்கத்தில் அமைக்கப்பட்ட
கூடாரத்தில் அகிம்சா வழியில் போராடியதே அவர் செய்த குற்றம். அந்த கருப்பு புதன்கிழமை எகிப்தின் வரலாறு காணாத
படுகொலைகளின் பட்டியலில் இடம் பெற்றவர். இனி நீண்ட வரிசையில் அவரது முறைக்காக காத்திருக்க
வேண்டும்.
அவர்களின் இறப்புக்கு மருத்துவ சான்றிதழ்.. காவலர்களின் ஒப்புகை என்று நீளும்
கட்டாயங்களால் வரிசை ஊர்வலமாய் நீண்டிருக்கிறது. இதில் சிரமமற்ற குறுக்கு வழி என்பது
ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் .. என்பதை மறைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று
உறவினர் ஒப்புக் கொண்டால்.. போதும்! எல்லா சான்றிதழ்களும் கண்மூடி திறப்பதற்குள் கிடைத்துவிடும்.
ஒருபுறம் ராணுவத்தால்
படுகொலை செய்யப்பட்டவர்கள்.. உடல் சிதைக்கப்பட்டவர்களின் உடல்களைச் சுற்றி உறவினர்கள்
சூழ்ந்திருக்க.. மறுபுறம் ஜனநாயகம் வேண்டி தெருக்களில் இறங்கி போராடுபவர்களின் வீரியம்
குறைவதாய் இல்லை.
ஆயிரமாயிரம் கணக்கில்..
இஃவானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்கள் எஃகு அரணாய் கெய்ரோவின் ரம்சஸ் சதுக்கத்தில் நிராயுதபாணிகளாய்
ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயகம் வேண்டி போராடிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம், எதிரி
நாட்டின் மீது படையெடுக்கும் தீவிரத்தோடு விமானப்படை, தரைப்படை என்று சர்வ ஆயுத பலத்தோடு
ராணுவம் மூர்கத்தனமாய் சொந்த மக்களையே காக்கை – குருவிகளைப் போல சுட்டு வீழ்த்திக்
கொண்டிருந்தது.
ராணுவத்தின் அதிகாரப்
பூர்வ அறிக்கையின்படி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை170. அதேபோல,
ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36. சிறையிலிருந்து தப்ப முயன்றவர்கள்
என்று குற்றம் சாட்டி இந்த ராணுவ என்கவுண்டர் நடத்தப்பட்டிருந்தது.
ராணுவத்தின் இந்த
தொடர் நடவடிக்கையும், கொல்லப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால்.. எங்கே உள்நாட்டு
யுத்தம் மூளுமோ என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
கடந்த புதன் அன்று
ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 பேர் மற்றும் பாதுகாப்பு படையினர்
43 பேர் என்று ராணுவத்தினரின் அறிக்கை குறிப்பிட்டாலும், இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினரோ
2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர்
குறிபார்த்து சுட்டதற்கு அடையாளமாக தலையிலும், நெஞ்சிலும், வயிற்றிலும் பட்ட குண்டுகளின்
அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்கள். அதேபோல, 4,200 க்கும் அதிகமானோர் படுகாயமுற்றிருப்பதாக
அவர்கள் கூறுகிறார்கள்.
எகிப்து இன்று
இரண்டு பிரிவாய் பிளவுபட்டிருக்கிறது.
பூரண ஆயுத தரிப்புடன்
ராணுவம், மதசார்பற்ற அதன் ஆதரவாளர்கள் ஒருபுறம்.
நிராயுதபாணிகளாய்
.. அகிம்சா வழியில்.. இஃவானுல் முஸ்லிமீன் மற்றும் இஸ்லாம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்
என்று கோருவோர் மறுபுறம்.
மதசார்பற்றவாதிகளின்
பிரதிநிதி துணைப் பிரதமர் எல்பராதி புதன் அன்று நிகழ்ந்த படுகொலைகளைத் தொடர்ந்து
.. “வன்முறை.. வன்முறையே தரும்!” – என்ற அறிவிப்போடு தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
“எதிரிதான், நான் ஏந்த வேண்டிய ஆயுதத்தை தீர்மானிப்பவன்!”- என்ற மாவோவின் வாசகங்களோடு நெருங்கிய இந்த அறிக்கையை அவ்வளவாய் யாரும் பொருட்படுத்தவில்லை.
“எதிரிதான், நான் ஏந்த வேண்டிய ஆயுதத்தை தீர்மானிப்பவன்!”- என்ற மாவோவின் வாசகங்களோடு நெருங்கிய இந்த அறிக்கையை அவ்வளவாய் யாரும் பொருட்படுத்தவில்லை.
சர்வாதிகார ராணுவம்
தொடர்ந்து தவறான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. மிருகத்தனமான பலத்தைப் கையிலெடுத்திருக்கிறது.
எகிப்திய மக்கள் தொகையில் வெறும் 30 விழுக்காடு என்று சொல்லப்படும் இஃவானுல் முஸ்லிமீன்
மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அடக்க ஜனநாயக நெறிமுறைகளைக் கையாள அது மறுக்கிறது. இந்த
அடக்குமுறைகளும், அதன் எதிர்விளைவுகளும், ஒட்டு மொத்த நாட்டையே சர்வதிகாரப் போக்குக்கு
அழைத்துச் செல்வதாக இருக்கும்.
ஜனநாயக முறைப்படி
வாக்குச் சீட்டின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி முஹம்மது மோர்ஸியை
பதவி நீக்கம் செய்து ஜனநாயகத்தை குழித்தோண்டிப் புதைக்கப்பட்ட நாளான ஜுலை -3 ம், அதைத்
தொடர்ந்து ஜனநாயகம் வேண்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராடிய போராட்டங்களை ஒடுக்க
ராணுவம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளும், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னாள் பதவி நீக்கம்
செய்யப்பட்ட கொடும் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின்
பதவி நீக்கத்தை அறவே விரும்பவில்லை என்ற செய்தியையே வெளிப்படுத்துகிறது அதாவது எகிப்தில்
ஜனநாயக நெறிமுறைகள் மலர்வதை ராணுவத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதே இதன் பொருள்.
இதைதான் யெமன்
நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற தவஃக்குல் கர்மன் தனது வார்த்தைகளால் இப்படி சொன்னார்:
“எகிப்து புரட்சியின் பேரழிவு என்பது அரபு வசந்தத்தின் படுகொலையன்றி வேறில்லை!”
களிப்பூட்டும்
அந்த சொல்லாட்சி.. அரபு வசந்தம்.. இனி எகிப்திலிருந்து விடை பெற்றுவிடும்.
மேலை நாடுகளில்
ஜனநாயகத்தின் மலர்ச்சி அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் கிடைத்துவிடவில்லை. அது மலர்வதற்கான
பல நூற்றாண்டுகள் கடந்த அதன் பாதை நெடுகிலும் குருதி மணம்தான் இன்றும் வீசிக் கொண்டிருக்கிறது.
சும்மா கிடைத்துவிடாது சுதந்திரம் என்பது இதுதான்!
அல்ஜீரியா, துனீசியா,
லிபியா இங்கெல்லாம்.. இஸ்லாமியவாதிகளுக்கும்,
மதசார்பற்றவாதிகளுக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல்கள் மூலம்
தீர்வு காண வேண்டியவர்கள் ... மேற்குலகின் பொம்மைத் தலைவர்களாய் .. போர் அரக்கர்களாய்..
குறுநில மன்னர்களாய் சிம்மாசனங்களில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த மக்களையே
கொல்லும் இவர்கள் சிறந்த தலைவர்களாகவும், கொல்லப்படும் அப்பாவி மக்களோ கலகக்காரர்களாகவும்
சித்தரிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின்
கைப் பதுமைகள்.. உல்லாச சுகபோகிகளான அரபு ராஜாக்கள் ஜனநாயக அமைப்பு எங்கே தங்கள் நாட்டிலும்
நுழைந்துவிடப் போகிறதோ என்று அவசரம்.. அவசரமாய் எகிப்தின் சர்வாதிகார அடக்குமுறை ஜெனரல்களுக்கு
ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
வளைக்குடா நாடுகள்..
அதிலும் குறிப்பாக சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூட்டாக இணைந்து
தங்கள் முடியாட்சியை தக்க வைத்துக் கொள்ள ஜனநாயகம் வேண்டி போராடிக் கொண்டிருப்போரை
அடக்கி ஒடுக்க 12 பில்லியன் டாலர்கள் தருவதாக வாக்களித்துள்ளன.
வழக்கமான உலகின்
முதல் தர ஆயுத தரகர் அமெரிக்கா தன் பங்குக்கு தரும் உதவிகள் கணக்கில் வெளிவராதவை. ஜனநாயகத்தை
ஆழக் குழித்தோண்டி புதைப்பதற்கான போனஸ் இது.
சிரியாவும் மற்றொரு
உதாரணம். அமெரிக்க கழுகும் – ரஷ்ய கரடியும் தங்களின் நவீன ஆயதச் சோதனைத் தளமாக்கிக்
கொண்டுள்ள பகுதி இது. இந்த புண்ணியவான்களின் ஆசியோடு இங்கு நடைபெறும் உள்நாட்டு யுத்தத்திற்கு
இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பல லட்சம் பேர்
அகதிகளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராக் முற்றிலும்
அழிக்கப்பட்டது. லெபனான் கந்தகமயமானது.
ஜனநாயகம் வேண்டி
அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது கடந்த புதன்கிழமை, நடத்தப்பட்ட ராணுவத்தின்
கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பிறகு, ராணுவத்தின் ஆதரவாளர்கள் கூடாராங்கள் பற்றி எரிந்து
.. அதில் சிக்கி கருகிக் கொண்டிருந்தவர்களிடம் .. ராணுவ டாங்குகளின் குண்டடிப்பட்டு
உடல் சிதைக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களிடம் “சிசி...! சிசி...!!”
- என்று அந்த படுபாதகச் செயலுக்குக் காரணமான வரலாற்று நெடுகிலும் இனி தூற்றப்படும்
சர்வாதிகாரி ராணுவ ஜெனரலின் பெயரை முழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த கொடியவனின் செயலை பாராட்டவும் செய்தார்கள். எகிப்தின் அடுத்த பிரதமர் பொறுப்புக்கு
பொருத்தமானவர் என்று புகழ்ந்தார்கள். “ஆஹா..! மற்றொரு அப்துல் நாசர்!”- என்று புகழாரம்
சூட்டினார்கள்.
இதேபோல, கொடும்
சர்வாதிகாரி அப்துல் நாசரின் மகள்களில் ஒருவர், “30 மில்லியன் எகிப்தியர்களின் சார்பாக,
சிசி.. எகிப்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்!” – என்று மன்றாடி கடிதம்
எழுதியுள்ளார்.
நகர் முழுவதும்
நாசரின் அடுத்த வாரிசாக ராணுவ ஜெனரல் சிசியின் படம் தொங்கவிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு படம் நாசரின்
கல்லறை மீதும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு சிறுவன் நாசரைப்
பார்த்து சல்யூட் அடிப்பதாக மற்றொரு படம்.. அதுதான் இளவயது சிசி என்று பரபரப்பூட்டப்படுகிறது.
இப்படிப்பட்ட முட்டாள்தனங்களும்,
மூர்கத்தனங்களிலும் மூழ்கியிருக்கும் மக்களிடம் அரபு வசந்தம் மலருமா? மலர்ந்தாலும்
நிலைத்திருக்குமா?
“எகிப்தில் ராணுவம்
இல்லை ; ராணுவத்தின் நாடுதான் எகிப்து!”- என்ற மூதுரைக்கூட இன்று தூக்கலாக ஒலிக்கிறது.
எகிப்து சமூகம் முழுக்க ராணுவத்தின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. நாட்டில் பாதிக்கும்
மேற்பட்டவர்களில்... 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் ராணுவ சேவையில் உள்ளவர்கள்தான்! சர்வதேச
அளவில் பல்வேறு தொடர்பு கொண்டவர்கள். அதேபோல தனக்குத் தேவையான பட்ஜெட்டை ராணுவமே தன்னிச்சையாக
தீர்மானிக்கிறது. ராணுவத்துக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் ஆதாயமே நாட்டின்
முக்கிய பொருளாதாரமாக அங்கம் வகிக்கிறது. கடும் தேசபக்தர்கள் என்று தமக்குத் தாமே ஒரு
மாயைக்குள் சிக்கிக் கொண்டவர்கள் இவர்கள். இந்த கருத்தை வெளிப்படுத்தும் விதமாகவே மோர்சியின்
பதவியேற்பு விழாவில் சிசி எழுத்தப்பூர்வமாக அனுப்பிய கடிதமும் உள்ளது.
அப்துல் நாசர்
கொடூரமான முறையில் இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினரை அடக்கி ஒடுக்க முயன்றது போலவே, சிசியும்
அதே ரத்தப் பாட்டையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
வருங்காலத்தின்
கொடிய மாபெரும் சர்வாதிகாரி.. என்று நாசரின் சிலைக்குப் பக்கத்தில் இடம் பிடிக்க இப்போதே
அவர் தயாராகிவிட்டார்.
0 comments:
Post a Comment