NewsBlog

Saturday, October 5, 2013

விருந்தினர் பக்கம்: 'ஜெயிலராகலாம் முதலாளி!'


ஒரு கால் வந்தது. 'ஸார் ஷேர் ட்ரேடிங் பண்றீங்களா?' என்று ஒரு பெண் குரல். 

"சப் புரோக்கரா இருக்கேன். இந்த கம்பெனியே நல்லா போய்ட்டு இருக்கு" - என்று சொல்லி நழுவப் பார்த்தேன். ஏனெனில், தினப்படி சராசரியாக ஒரு ஐந்து காலாவது எனக்கு இப்படி வந்துவிடும்.

அவர்கள் கம்பெனியில் நல்ல சர்வீஸ் இருப்பதாக சொல்லி என்னைப் போன்ற சப் புரோக்கர்ஸ், ட்ரேடர்ஸைக் கேன்வாசிங் செய்வதுதான் வேலை. பேசுவது பெரும்பாலும் பெண். 

 சில தினங்கள் கழித்து மறுபடியும் அந்த பெண்ணே அழைத்தாள்.
"சார் ஷேர் ட்ரேடிங்..."

"ஏற்கனவே பேசியிருக்கீங்கனு நினைக்கிறேன். இப்ப ஒண்ணும் ஐடியா இல்லங்க..பிஸ்னஸ் வேற ரொம்ப டல். ஜனவரி வரட்டும்!" -என்றேன்.

"சார் ஒரே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க சார்.. டார்கெட் பிரஷர். ஜனவரில கூட ட்ரேட் பண்ணலாம். பட் இப்பவே ஓபன் பண்ணிக்குங்க"

"இங்கப் பாருங்கம்மா.. ட்ரேட் பண்ணாம எதுக்குமா ஐடிலா ஒரு அக்கவுண்ட்?"

"சார் ப்ளீஸ்.. சேலரி ஹோல்ட் பண்ணிடுவாங்க சார்! தீபாவளிக்கு சேலரி வர்றதே கஷ்டமாகிடும்"

ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் எக்ஸிகியூடிவ் மாதிரி அவள் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். தூரத்து சொந்தக்காரன் நம்பர் கிடைத்தவுடன் போன் பண்ணித் தன்னை ஞாபகப்படுத்திக் கொண்டு ஒரு மாதத்தில் திருப்பிவிடுவதாகச் சொல்லி கை மாற்றாக இரண்டாயிரம் கேட்பவளைப் போல் மாறிவிட்டாள்.

எனக்கும் தவிர்ப்பதற்காகச் செய்யும் பிகு குறைந்துவிட்டது. அவளை எண்ணிப் பாவமாக இருந்தது. 

"உங்களுக்கு எவ்ளோ சேலரி?"- என்றேன்.

"ஐந்து புது அக்கவுண்ட்டும் ஐம்பதாயிரம் பிசினஸும் செய்தால் பத்தாயிரம் சம்பளமாம். இல்லாவிட்டால் பர்செண்டேஜ் படி சம்பளம் பிடிக்கப்படும்!' 

நினைத்துப் பாருங்களேன். மாதத்தின் முதல் வாரம் சம்பளம் முழுசாக வருமா என்ற சந்தேகத்திலேயே மாதம் முழுதும் வேலை பார்க்க வேண்டும்.

எத்தனையோ தனியார் கம்பெனிகள், target not achieved என்ற பெயரில் சம்பளமே கொடுக்காமல் அடிமைகள் போல பலரை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். கேட்டால் டார்கெட் இல்லையென்றால் ஓபி அடித்துவிடுவார்கள் என்று பதில் சொல்வார்கள். ஓபி அடிப்பதால் வருகிற லாஸைக் கம்பெனி சிடிசியில் சேர்க்க வேண்டும். அதுவும் ஒரு அங்கம் என்று கணக்கில் வைத்துத் தான் லாப நட்டத்தைப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் குற்றவாளி.... ஒரு நிரபராதி.. கதை தான் மார்கெட்டிங்கிற்கும். வேலை உண்டு சம்பளம் இல்லை என்பதை விட வேலையே இல்லை என்பது மிகுந்த சவுகரியத்தையும், நிம்மதியையும் தருமில்லையா? நிஜத்தில் டார்கெட் என்று வைப்பதனால் அந்த டார்கெட்டுக்காக ஏதாவது காமாசோமா கிளையன்டை, இந்தப் பெண் என்னை கன்வெர்ட் செய்ததைப் போல, கொண்டுவரத் தான் வாய்ப்பிருக்கிறது.

"டார்கெட் ரீச் பண்ணாட்டியும் பரவாயில்ல... டம்மி டார்கெட் வேண்டாம்!"- என்று சொல்பவன் தான் சரியான பாஸ். 

அதைவிடுத்து ஒரு பலஹீனமானத் தருணத்தில் சம்பந்தமில்லாதவரிடம் சம்பளத்திற்காகக் கெஞ்சும்படியான ஒரு வேலைச் சூழலை ஒரு கம்பெனி தருமென்றால் அதன் முதலாளியை ஜெயிலர் என்று அழைக்கலாம். 

- சிவகுமார் அசோகன்

0 comments:

Post a Comment